Thursday 7 May 2015

அழுகையில் கரையும் துயரம்



கிராமங்களில் உறவினர்கள் இறந்து விட்டால் ஊரே கூடி வந்து அழுது ஒப்பாரி வைப்பது உண்டு. துக்க வீட்டின் அருகில் வரும் வரை மிக நன்றாக பேசிக் கொண்டு வருபவர்கள் கூட, துக்க வீட்டையும் உயிரற்று கிடக்கும் உறவினரையும் பார்த்த உடனேயே கதறி அழுவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். எங்கிருந்து அந்த அழுகை வருகிறது? பால்ய பருவத்தில் அந்த நிகழ்வுகளை மிரட்சியுடனேயே பார்த்திருக்கிறேன்.

உறவினர் வீடுகளில் துஷ்டி கேட்பதோடு (துக்கம் விசாரிப்பது என்பதன் எங்கள் ஊர் மொழி) அங்கு உறவை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு துணையாக இருந்து இறுதிச் சடங்குக்கு தேவையான பொருட்களை நினைவூட்டி எடுத்து வைப்பது, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து உதவுவது என எனது தாயார் எப்போதுமே முன்னால் நிற்பார். அது கிராமத்து வழக்கம். சில துக்க வீடுகளில் அவரது அழுகையையும் கண்டு நான் அச்சமடைந்திருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, எனது மனதில் நெடுநாளாக குமைந்து கொண்டிருந்த கேள்வியை எனது தாயாரிடமே கேட்டு விட்டேன். துக்க வீட்டை அடைந்ததும் அழுகை பீறிட்டு வருவது எப்படி? அதுவும் பெண்கள் மட்டும் மிகப் பெருங்குரலெடுத்து ஓ வென கதறும் மர்மம் என்ன?

இதற்கு எனது தாயார் சொன்ன பதில், இதுதான். ஒவ்வொரு மனிதருக்கும் அடி மனதில் பல்வேறு ஏமாற்றங்கள் உண்டு. சிறிய வயதில் நெருங்கிய உறவினரின் பிரிவு, மிகவும் பாசம் வைத்த ஒருவரின் திடீர் மரணம் என ஏதாவது ஒரு துக்கம் ஒளிந்து கிடக்கும். அந்த துயரத்துக்கு ஒரே வடிகால் அழுகை. அதைத்தான் துக்க வீடுகளில் வந்து கொட்டிவிட்டு மனம் லேசாகி அவர்கள்  திரும்புகின்றனர் என்றார். என் தாயார் கூட இறந்து போன அவரது தாய், தந்தையை நினைத்து அழுவது உண்டாம். இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஏன் என் மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது? காரணம் இருக்கிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகள் ஒன்றாக கூடி முதல் நாளில் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடியதும், மறுநாளில் தாலியை அறுத்து கதறி அழுது ஒப்பாரி வைத்து வீங்கிய கண்களுடன் ஊர் திரும்பியதும் செய்தித்தாள்களில் அடுத்தடுத்த நாட்களில் என் கண்களில் தென்பட்டன. அவற்றை பார்த்ததும் எனது தாயார் என்னிடம் கூறிய வார்த்தைகள் மனதுக்குள் ஒலிக்கத் தொடங்கின. 




தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆற்ற முடியாத உணர்வுகளை
ஆண்டுக்கு ஒருமுறை கூவாகம் வந்து கொட்டிச் செல்கின்றனர், திருநங்கைகள். திருமணம் என்பது கானல் நீராகிப் போன அவர்கள் வாழ்க்கையில், அரவானை கணவராக வரித்து தாலி கட்டிக் கொள்கின்றனர். பின்னர், உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சியில் விடிய விடிய ஆடிப் பாடுகின்றனர். விடிந்ததும் அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும் ஒப்பாரி வைத்து கதறி அழுகின்றனர்.

அந்த அழுகையில், மானுட சமூகத்திடம் இருந்து கிடைக்கும் அவமானம், உறவினர்களின் புறக்கணிப்பு, முகம் அறியா நபர்களின் உதாசீனம், கேலி, கிண்டல் என அனைத்தையும் கரைத்து விட்டு திரும்பிச் செல்கின்றனர்.

அதன்பிறகு....? மீண்டும் அதே அவமானம், புறக்கணிப்பு, உதாசீனம், கேலி, கிண்டல்... அடுத்த ஆண்டில் மீண்டும் திருவிழா, தாலி, ஒப்பாரி, அழுகை..... இப்படியாக தொடருகிறது அவர்களின் வாழ்க்கைப் பயணம்... கிராமத்து முன்னோர்கள் வகுத்து தந்த பாதையில்....   

= வை.ரவீந்திரன் 

No comments: