Tuesday, June 23, 2015

ருசிக்கிறது .... காக்கா முட்டை

 
இரண்டு மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள், தாய், பாட்டி, ஒரு ரயில்வே கலாசி இப்படி உயிருள்ள 5 கேரக்டர்களும் பீட்ஸா, நிலக்கரி என உயிரற்ற இரண்டு கேரக்டர்களும் மட்டுமே பிரதானமாக இருந்தால் எப்படி இருக்கும்? தமிழில் இப்படியொரு படம் வெளியானால் நிச்சயமாக ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுவார்கள். அதில் வேறுபட்டு நிற்கிறது ‘காக்கா முட்டை’.

இந்தியாவின் 4 பெருநகரங்களில் ஒன்றான சென்னையின் மைய பகுதியில் கூவம் கரையோரம் தகர கொட்டகை குடிசைகளின் நிழலில் வசிக்கும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை கண்முன்னே விவரிக்கிறது, ‘காக்கா முட்டை’. சென்னை மாநகருக்குள்ளேயே இது போன்ற மக்களும் இருக்கிறார்கள் என்பதை சென்னையிலேயே உள்ள உயர் வகுப்பினர் கண்டிப்பாக அறிந்திருக்க மாட்டார்கள்.

‘கோழி முட்ட விக்கிற வெலைக்கு அத ஒன்னால அவங்களுக்கு வாங்கி குடுக்க முடியுமா?’
‘இல்லாதபட்டவங்க வூட்டு பக்கத்துல இம்மாம் பெரிய கடய தொறந்து வச்சிருக்கான் பாருங்க.. அந்த கட மொதலாளிய ஒதைக்கணும்’
இப்படி படம் நெடுகிலும் ‘சுருக்’ ‘நறுக்’ வசனங்கள்.

ஒருமுறையாவது பீட்ஸாவை (விலை ரூ.299) ருசி பார்க்க ஆலாய் பறக்கும் சிறுவர்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் குறும்புத்தனம் மிகுந்தவை.
பீட்ஸா டெலிவரி எடுத்து வருபவரை வழி மறித்து பீட்ஸாவை திறந்து பார்த்து வாசத்தை நுகர்ந்து அனுபவிப்பது... 45 பி பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து உலகையே வென்றது போல ஆனந்தத்தில் மிதப்பது... பணக்கார சிறுவன் தரும் மீதி பீட்ஸாவை சப்புக் கொட்டியபடி கண்ணில் பரவசம் நிறைந்து பார்ப்பது... என வறுமைக்கு வாக்கப்பட்ட 10 வயது சிறுவனை தனது கண்களிலேயே கொண்டு வந்து நிறுத்துகிறான், சின்ன காக்கா முட்டை.

சரக்கு ரயிலில் இருந்து விழும் நிலக்கரியை எடுத்து விற்பதால் மட்டும் ரூ.300 சேர்க்க முடியாது என்பதால் டாஸ்மாக் கடையில் விழுந்து கிடப்பவரை காசு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு விடுவது... சிக்னல்களில் பிட் நோட்டீஸ் போடுவது... சாதாரண நாயை கொண்டு போய் ரூ.25 ஆயிரத்துக்கு விலை பேசுவது... என சின்ன காக்கா முட்டையுடன் சேர்ந்து பெரிய காக்கா முட்டையின் அலப்பறைகள் தொடருகின்றன.

பீட்ஸா கடைக்குள் நுழைய புது டிரஸ் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட பிறகு, அதை பெற சிட்டி சென்டர் போவது... ஷாப்பிங் மால் எதிரில் மிரண்டு போய் நிற்பது... வாசலில் தந்தையுடன் பானி பூரிக்கு சண்டை போடும் சிறுவர்களிடம் தங்கள் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து டிரஸ்சை வாங்கி வருவது... அதை நகர பேருந்திலேயே அணிவது.. என இரண்டு காக்கா முட்டைகளின் அலப்பறைகள் அன்லிமிட்.

‘அப்போ பீட்ஸா சாப்பிட்டே தீரணுமுன்னு முடிவு பண்ணிட்டீங்க...’ என்று கேட்டபடியே அவர்களுக்கு வழி காட்டும் ரயில்வே கலாசி பழரசம். சிறுவர்களின் பீட்ஸா ஆசையை அறிந்து தோசை மாவில் தக்காளி, கொட மிளகா தூவி பீட்ஸா போல செய்து தரும் ஆயா. இருவரும் அந்த சிறுவர்களுக்கு நல்ல துணை. நடிப்பில் அந்த சிறுவர்களுக்கு இணை.

‘பசங்கள அடிக்கக் கூடாதுன்னு ஒரு பாலிசியாவே வச்சிருக்கேன்... வெறுப்பேத்தாத...’ என கூறும் தாய், தனது மகனை யாரோ ஒருவர் அடிப்பதை டிவியில் பார்த்து கண்ணில் வழியும் நீரை துடைத்தபடியே டிவியை அணைப்பது சோக கவிதை.

ஒருவழியாக புது டிரஸ் அணிந்து கையில் 300 ரூபாயும் வைத்துக் கொண்டு பீட்ஸா சாப்பிட சென்றால் காவலாளியும் கண்காணிப்பாளரும் அடித்து விரட்டுவதால் கண்ணீருடன் வீடு திரும்புகின்றனர், சிறுவர்கள். பாட்டி இறந்து கிடக்கிறார். இறுதி சடங்குக்கு சிறுவர்கள் சேர்த்து வைத்த ரூ.300 உபயோகமாகிறது. பாட்டிக்கு தலைமுழுகும்போது புது டிரஸ், பீட்ஸா மீதான ஆசை இரண்டையும் தலை முழுகுகின்றனர்.

இதற்கிடையே, பீட்ஸா கடையில் சிறுவர்களை அடிக்கும் காட்சி வைரலாகி டிவி, இணையம் என பரவி கடைக்கு நெருக்கடி ஏற்படுவதும் பிரச்சினை பெரிதாகுமோ என கடை முதலாளி அச்சமடைவதும் அதே நேரத்தில் இது எதையுமே அறியாமல் கூவம் ஆற்றில் பழரசத்துடன் தவளை பிடிக்கும் சிறுவர்கள்.

இவர்களை வைத்து டிவிக்களில் நடைபெறும் சூடான (?) விவாதங்கள், கூவம் கரையில் நின்றபடி தொகுப்பாளினியின் நேரடி ரிப்போர்ட் என சமூகத்தின் அனைத்து எல்லைகளையும் போட்டு தாக்குகிறார், இயக்குநர். சிறுவர்களைப் பற்றி தொகுப்பாளினி லைவ் ரிப்போர்ட் தரும்போது அவரை அந்த சிறுவர்கள் கடந்து செல்வதை கூட கவனிக்காமல் உச்சஸ்தாயில் பேசிக் கொண்டு இருப்பதும்... அந்த சிறுவர்களும் அதை பார்த்தபடியே செல்வதும்.... யதார்த்தம்.

மீடியாக்களின் பரபரப்பால் பீட்ஸா உரிமையாளரே அந்த சிறுவர்களை அழைத்து பீட்ஸா ஊட்டி ‘சமூக சேவகராக..(?)’ மாறுவதோடு எல்லாம் முடிகிறது.

ஆனால், அந்த சிறுவர்களின் வாழ்க்கை...? மீண்டும் நிலக்கரி பொறுக்குவது.. சிறையில் தந்தை, பாத்திரம் பாலீஸ் போடும் வேலைக்கு செல்லும் தாய் என இயல்பு வாழ்க்கை தொடருகிறது.

உலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரத்தால் நடுத்தர, மத்திய தர பிரிவினரே அல்லாடும் இன்றைய சூழலில், அதைப்பற்றி மட்டுமே அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாடம் காய்ச்சிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சமூகத்தின் கவனத்துக்கு ‘காக்கா முட்டை’ சுட்டிக்காட்டி இருக்கிறது.

சோகத்தை பிழிந்து கண்ணீரில் சாறு வடித்து வழங்காமல் அவர்களின் வாழ்வியலில் கூடவே பயணித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கூறுவது, ‘காக்கா முட்டை’யின் சிறப்பு.

= வை.ரவீந்திரன் 
Post a Comment