உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவை
பெருமையாக கூறினாலும் இந்திய மக்களின் மனநிலையானது இன்னமும் மன்னராட்சி காலத்தில்
இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. அது, தனி நபர் ஆராதனை. தமிழகம், பீகார், உத்தரபிரதேசம்,
ஆந்திரா, மகராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்காளம் இப்படி ஒவ்வொரு
மாநிலமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அரசியல் கட்சி தலைவர் என்னும் தனி நபரை சார்ந்தே
தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தேசிய அளவிலும் இதுவே பிரதிபலிக்கிறது. அதனாலேயே, நேரு,
இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா என மிக சாதுர்யமாக நாடறிந்த
குடும்பத்தை காங்கிரஸ் கட்சியினர் காலம் காலமாக முன்னிறுத்தி வருகின்றனர். தலைவரை
மட்டுமே பார்த்து மக்கள் வாக்களிக்கின்றனர் என்ற சூட்சும வித்தையை அறியாததால்
காங்கிரஸ் தாண்டி வேறு கட்சிகள் மத்திய ஆட்சியில் நிலைக்க முடிவதில்லை. காங்கிரஸ்
கட்சி மீது மக்களின் வெறுப்பு அதிகமாகும்போது வேறு தலைவர் யாரும் கிடைக்காமல் பல
கட்சிகள் இணைந்த ஒரு அரசை அரியணையில் மக்கள் அமர்த்தினால் எண்ணற்ற பிரதமர்கள்
உருவாகி விடுகின்றனர்.
மொரார்ஜி மற்றும் சரண்சிங் (1978-80) தொடங்கி வி.பி.சிங்
மற்றும் சந்திரசேகர் (1989-91) என தொடர்ந்து குஜ்ரால் மற்றும் தேவகவுடா (1996-98)
வரை அதுதான் நிகழ்ந்தது. அதை பார்த்து வெறுத்துப்போன மக்கள் வேறு வழியின்றி
காங்கிரஸையே அரியணையில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறு கட்சிகளால் ஆட்சியில்
நிலைக்க முடிவதில்லை என்பதே இதுவரை நீடிக்கும் உண்மை.
அதில், வாஜ்பாய் விதிவிலக்கு. பா.ஜனதா கட்சியில் அசைக்க
முடியாத தலைவராக அவர் இருந்ததாலேயே அவரால் 7 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி செய்ய
முடிந்தது. இந்த கணக்கீடுகளை மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார், நரேந்திர மோடி.
தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்ததில் இருந்து அவரது நடவடிக்கைகளும் இதையே
உணர்த்துகின்றன. 272+ என்ற கோஷத்தை முன்வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கினார்.
பின்னர்,உத்தரபிரதேசம், பீகார் போன்ற பா.ஜனதாவுக்கு முக்கியத்துவம் இல்லாத
மாநிலங்களில் கூட 90 சதவீதம் வரை பாஜக வெற்றி பெற்றதில் இருந்து தேசிய அரசியலில்
தனது நிரந்தர கணக்கை தொடங்கி விட்டார்.
பா,ஜனதா தலைவர் பதவிக்கு தனது நம்பிக்கைக்குரிய தளபதி
அமித் ஷாவை கொண்டு வந்தார். பிரதமராக பதவி ஏற்றபோது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற
வாஜ்பாய் காலத்து சீனியர்களை மத்திய மந்திரி சபையில் இருந்து ஓரங்கட்டினார்.
ஜெட்லி, சுஷ்மா, ராஜ்நாத் சிங் போன்ற சிலரை வேறு வழியின்றி மந்திரி சபையில்
சேர்த்துக் கொண்டாலும் வேறு வகையில் அவர்களை கட்டம் கட்டும் நடவடிக்கை அமோகமாக
தொடங்கி விட்டது.
அத்வானியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் கட்சியின்
மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான சுஷ்மா மீது லலித் மோடி
விவகாரம் பூதாகரமாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதே லலித் மோடியின் சமீபத்திய
அறிக்கை ஏவுகணையோ ஜெட்லி மீது திரும்பி இருக்கிறது. இப்படி சீனியர் தலைகளை குறி
வைத்து அம்பு விடும் அரசியல் சர்ச்சையில் மோடி மவுனம் சாதித்து வருகிறார். மேல்சபை
எம்பியாக இருக்கும் அருண் ஜெட்லி, விரைவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து
வென்றால் மட்டுமே மந்திரி பதவியில் தொடர முடியும் என்பதும் கவனிக்கத்தக்கது.
கட்சிக்குள் தன்னை விட சீனியராக உள்ள ஒவ்வொருவரையும்
ஏதேனும் ஒரு வகையில் மட்டம் தட்டி அமுக்கி வைக்கும் பணி ஜரூராக நடைபெறுகிறது. அதே
நேரத்தில், பா.ஜனதாவின் ஆதார சக்தியான ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா தலைவர்களிடம்
இது போன்று செயல்படாமல் அவர்களை பக்குவமாக கையாள்கிறார். இதை உணர்ந்ததாலேயே, ஜனாதிபதி
பதவி கனவில் இருந்து வரும் அத்வானி கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.
ஜனாதிபதி பதவிக்கு கலாம் வருவதை விரும்பாமல் பிரதீபா
என்ற தன்னுடைய தீவிரமான விசுவாசியை சோனியா எப்படி கொண்டு வந்தாரோ அதேபோல மோடியும்
செய்வார் என அத்வானி கருதியதாலேயே ‘அவசர நிலை காலம்’, ‘நெருக்கடி நிலை’ என ஏதேதோ கூறி
விட்டு கடைசியில் வடிவேலு பாணியில் ‘நான் என்னை சொன்னேன்’ என்று கூறுகிறார். சுருங்க
கூறினால் காங்கிரஸ் என்றால் நேரு குடும்பம் நினைவுக்கு வருவது போல பாஜக என்றால்
மோடி என்ற நினைவு வர வேண்டும் என்பது மோடியின் இந்த காய் நகர்த்தல்களுக்கு
அர்த்தம்.
இது ஒருபுறம் இருக்க ஆட்சி நிர்வாகத்திலும் இதுவரை எந்த
குற்றச்சாட்டுகளையும் மோடி மீது சுமத்த முடியவில்லை. செல்பி எடுக்கிறார், வெளிநாடு
செல்கிறார் என்பதைத் தாண்டி வேறு எதையும் கூற முடிவதில்லை. நிலம் கையகப்படுத்தும்
சட்டம் போன்ற சில சறுக்கல்களை கூட எதிர்க்கட்சிகளால் பெரிய அளவுக்கு
பிரச்சினையாக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியோ
மாநகராட்சி கவுன்சிலர் போல டெல்லி துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டம்
நடத்துகிறார்.
இடதுசாரிகளோ மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா என மாநில
அளவில் முடங்கி விட்டனர். கேரளத்தில் பாஜக வளர்ந்து விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.
அவ்வப்போது, 3வது அணி என்ற பெயரில் கோடைகால மேகம் போல திரண்டு வந்து காங்கிரஸ்
கட்சி மனம் குளிரும் வகையில் மழையாக பொழிந்து விட்டு கலைந்து செல்லும் மாநில
கட்சிகளும் இன்னும் மாறவில்லை. அவற்றின் தலைவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளும்
முயற்சியில் கூட ஈடுபடவில்லை. முலாயம், லாலு, நிதீஷ் உள்ளிட்ட ஜனதா பிராண்ட்
தலைவர்களின் சமீபத்திய ‘ஜனதா பரிவார்’ முயற்சியே மிகச் சிறந்த உதாரணம்.
இப்படி கட்சி, ஆட்சி, அரசியல் என அனைத்திலும் எதிர்ப்பே
இல்லாமல் தான் நினைத்தபடியே ராஜபாட்டையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார், மோடி. அவர்,
2014 மே மாதம் பிரதமராக பதவியேற்றபோது குறைந்தது 10 ஆண்டு காலம் பிரதமர் பதவியில்
தொடர்ந்து இருப்பதாக சூளுரைத்துக் கொண்டார். அதற்கான இலகுவான பாதையை அவர் அமைத்து
வருகிறார். சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக இருக்கிறது. இது சரியா அல்லது தவறா
என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது.
ஆனால், இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்
ஏகபோகமாக (monopoly) ஒரே ஒரு கட்சி மட்டும் வலிமையுடன் இருப்பது நல்லது அல்ல.
மக்களுக்கு சாய்ஸ் வழங்குவது போல குறைந்தபட்சம் இரண்டு பெரிய கட்சிகள் வலுவாக
இருப்பதே நல்லது. கூட்டணி ஆட்சி, மத்திய அரசில் மாநில கட்சிகளின் ஆதிக்கம்
என்பதெல்லாம் சர்வதேச அளவில் இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையையே கேலிக்
கூத்தாக்கும் செயலாகவே முடியும். இதுதான், 1977, 1989, 1996 ஆண்டுகளில் இந்தியா
கற்றுக் கொண்ட பாடம்.
அந்த வகையில் பார்க்கும்போது தேசிய அளவில் மாற்று சக்தியாக
மோடி உருவாவது வரவேற்கத்தக்கது. ஆனால்... அது, அவரது வளர்ச்சியாக மட்டுமெ இருந்து
விடக் கூடாது. காங்கிரஸ் என்ற கட்சிக்கு சரியான மாற்றாக பாஜக என்ற கட்சியையும்
வளர்ப்பதே எதிர்கால ஐனநாயக இந்தியாவுக்கு நல்லது.
= வை.ரவீந்திரன்
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment