Thursday 4 June 2015

தமிழ் காப்பியங்களில் திருக்குறள்







முக்காலமும் பொருந்தும் கருத்துகளை கூறும் கதை இலக்கியங்களை காப்பியம் என்று தமிழில் கூறுவது உண்டு. தமிழ் இலக்கியம் வழங்கியுள்ள ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளும் கூட முக்காலமும் பொருத்தமானவையே.

ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். இந்த காப்பியங்களும் போற்றி மகிழ்ந்த இணையில்லா இலக்கியமாக பொய்யா மொழியாம் திருக்குறள் இருக்கிறது. அரசியல், நிர்வாகம், பணி, சமுகம், வாழ்க்கை, இல்லறம், துறவறம் என அனைத்திலும் எக்காலத்துக்கும் பொருந்தும் அறிவுரைகளை 7 வார்த்தைகளுக்குள் ஈரடியாக வழங்கிய பொய்யாமொழி புலவர் வள்ளுவரின் கருத்துகள் ஒவ்வொன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மனித வாழ்வுடன் பொருந்திச் செல்வது வியப்பிற்குரியது.  

அதனால் தான், காலங்களை வென்று தேசங்களை கடந்து வள்ளுவரின் புகழ் வானோங்கி நிற்கிறது. பெஸ்கி என்ற இத்தாலிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வள்ளுவர் மீது கொண்ட பற்றால் தனது பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக் கொண்ட அதிசயமும் அதனால் நிகழ்ந்ததே. அது மட்டுமல்ல அவரே, லத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்க்கவும் செய்தார். அதன் தொடர்ச்சியாக, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறளின் பெருமை உயர்ந்துள்ளது. இப்படி உலகத்தோரை தன் பால் ஈர்த்த திருக்குறளுக்கு தமிழின் தொன்மை புலவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இருந்திருக்கிறது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு தமிழ் புலவர்களும் திருக்குறளை அப்படியே தங்களுடைய இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சில சோறு மட்டும் இங்கு நாம் பதம் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம் என வாழ்க்கையை பகுத்து கூறிய வள்ளுவரின் திருக்குறள்களில் ஒன்று, பத்தினிப் பெண்ணின் வியத்தகு ஆற்றலை வியந்து கூறுகிறது.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

அதாவது தெய்வத்தைக் கூட வணங்காமல், தனது கணவனை மட்டுமே காலையில் வணங்கி எழும் பெண், ‘பெய்’ என்று வானத்தை நோக்கி கட்டளையிட்டால் அந்த மழையும் கூட விண்ணை கிழித்துக் கொண்டு உடனே பெய்து விடும் என்பது இந்த குறள் மூலமாக வள்ளுவர் கூறும் கருத்து.  

இந்த குறளை, அப்படியே தன்னுடைய சிலப்பதிகார காப்பியத்தில் எடுத்து பயன் படுத்துகிறார், இளங்கோவடிகள்.



“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்”



என்ற சிலப்பதிகார வரிகளின் மூலமாக கணவனை தெய்வமாக வணங்கும் பத்தினிப் பெண்ணை, அந்த தெய்வமே வணங்கி கை தொழும் சிறப்புடையவள் என்று வள்ளுவர் வழி நின்று தெரிவிக்கிறார், இளங்கோவடிகள்.

இதே திருக்குறளை மணிமேகலை காப்பியமும் வேறு வழியில் எடுத்துக் கூறுகிறது. அந்த காப்பியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனார்,



“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”  



என்று திருக்குறளையும் வள்ளுவரையும் ஒருங்கே பாராட்டி மகிழ்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை என நின்று விடாமல் கம்பர் எழுதிய ராமாயண காவியத்திலும் மிகப் பொருத்தமான இடங்களில் ஆங்காங்கே திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகள் பயணம் செய்கின்றன.  

தான் நடத்த உள்ள வேள்விக்கு பாதுகாப்பு பணிக்காக ராமர், லட்சுமணரை கானகம் நோக்கி விசுவாமித்திர முனிவர் அழைத்துச் செல்கிறார். அப்போது, பயணச் சோர்வு தெரியாத வண்ணம் பல்வேறு கதைகளை ராம, லட்சுமணருக்கு முனிவர் கூறுகிறார். அவர்கள் சென்ற வழியில், ஒரு யாகசாலை தென்படுகிறது. உடனே, அது பற்றி ராம சகோதரர்கள் இருவருக்கும் விசுவாமித்திரர் விளக்கி கூறுகிறார். அதை,

“தங்கள்நா யகரின்தெய்வம் தவம்பிறி திலவென் றெண்ணும்

மங்கைமார் சிந்தை போலத் தூயது மற்றுங் கேளாய்

எங்கள்நான் மறைக்குந்த தேவர் அறிவிற்கும் பிறர்க்கு மெட்டாச்

செங்கண்மா லிருந்து மேனாள் செய்தவஞ் செய்த தன்றே”  



என்று கம்ப ராமாயணம் கூறுகிறது.

அதாவது, ‘கணவனே தெய்வம், அவருக்கு செய்யும் தொண்டே தவம் என கருதி வாழும் கற்புடைய பெண்களின் (தெய்வம் தொழாஅள் கொழுற்றொழு தெழுவாள்) சிந்தனையைப் போல மிகவும் தூய்மையானது இந்த யாக சாலை. இத்தகைய தூய்மையான யாக சாலையில் முன்னொரு காலத்தில் திருமால் அமர்ந்து தவம் செய்திருக்கிறார்’ என்று ராம, லக்குவரிடம் விசுவாமித்திரர் கூறுவதாக கம்பர் எழுதி வைத்துள்ளார்.

இது மட்டுமல்ல, மேலும் பல திருக்குறள் கருத்துகளையும் மிக அழகாக ராமாயணத்தில் ஆங்காங்கே கையாண்டிருக்கிறார், கம்பர்.
அதில் ஒன்று.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”  =  என்ற திருக்குறளின் கருத்து.


தாய்க்கு பதிலாக ராமரின் தந்தை தசரத சக்கரவர்த்தி வாயிலாக இந்த திருக்குறள் வெளிப்படுகிறது. எப்படி? முதுமை பருவம் எட்டிப் பார்த்ததால் தனது மூத்த மகன் ராமனுக்கு மகுடம் சூட்ட அயோத்தி மன்னன் தசரதன் முடிவு செய்கிறான். இது குறித்து அரசவையில் சூழ்ந்துள்ள அறிஞர்கள், முனிவர்கள், மூத்தோர்களிடம் அறிவுரை மற்றும் ஆலோசனை கேட்கிறான்.

அதற்கு அவர்கள், “இந்த மண்ணில் பிறந்த ஆண்மகன்களில் மிகச் சிறந்தவன், நல்லவன், ஆற்றல் மிக்கவன் ராமன். அவன் கரம் பிடித்த ஜானகியோ பெண்களில் சிறந்தவள். குடிமக்களுக்கு நெல்லோ, நீரோ உயிர் அல்ல. அவர்களை ஆளும் மன்னனே உயிர். அந்த அனைவருக்கும் அமிர்தமாய் ராமன் இருப்பான். அவனே மணிமுடி தரிக்க சிறந்தவன்” என்று கூறுகின்றனர்.

அதைக் கேட்ட தசரதன் மனம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது, என்பதை கம்பர் விளக்குகிறார் பாருங்கள்,



“மற்றவன் சொன்ன வாசகங் கேட்டலும், மகனைப்

பெற்ற அன்றினும், விஞ்ஞகன் பிடித்த அப்பெருவில்

இற்ற அன்றினும், எறிமழு வாளவன் இழுக்கம்

உற்ற அன்றினும் பெரியதோர் உவகைய னானான்‘’

தன் மகனைப் பற்றிய ஆன்றோர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதற்கு முன்பு  பெற்றிருந்த அனைத்து வகையான இன்பங்களை விட மிகப்பெரிய இன்பத்தை தசரதன் அடைகிறானாம். அதற்கு முன்பு அவன் பெற்ற இன்பங்கள் எவை? நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த தசரதனுக்கு ராமன் உள்ளிட்ட 4 குழந்தைகள் பிறந்ததும் பெருமகிழ்ச்சி உண்டானது. அதன்பிறகு, விசுவாமித்திரரின் யாக சாலையை காப்பாற்றியதோடு, மிதிலை நகரில் சிவ தனுசு என்னும் மாபெரும் வில்லை உடைத்த ராமன் வீரம் கேட்டு அடுத்த மகிழ்ச்சி தோன்றியது. இந்த மகிழ்ச்சிகளை விடவும் மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை ஆன்றோர் கூறிய வார்த்தைகளை கேட்டதும் தசரதன் பெற்றதாக அந்த பாடல் கூறுகிறது.

அதாவது, ஈன்ற பொழுதை விட ஒரு தாய் எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைவாளோ அதுபோலவே தந்தையும் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைவார் என திருக்குறள் வழி நின்று எடுத்துரைக்கிறார், கம்பர். பல தலைமுறைகளை கடந்தும் கூட தலைமுறை இடைவெளி இல்லாமல் இனி வரும் சந்ததிக்கும் தேவையான அறிவுரைகளை போதித்து அவற்றை ஈரடியில் பொதிந்து வைத்துள்ள வள்ளுவரின் கருத்துகளை மாபெரும் கவிஞர்களான கம்பரும், இளங்கோவடிகளும், சீத்தலை சாத்தனாரும் அப்படியே கையாண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அந்த சிறப்பை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்வது அவசியம்.

= வை.ரவீந்திரன் 

No comments: