Thursday 10 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 20

இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்சி. 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர், கேபி சுந்தராம்பாள். இசை ரசிகர்களின் நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும் பெயர். சிறு வயதில் இருந்தே கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சுந்தராம்பாளின் பாடலை கேட்க ஊரே கூடுவது வழக்கம். கோயில் விழாவில் பாடி வந்த அவர், சொந்த ஊரான கொடுமுடியில் இருந்து உறவினர் வீடு இருந்த  கரூருக்கு ரயிலில் செல்லும் போதும் பாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை ரயிலில் நாடக நடிகர் ஒருவரின் கவனத்தில் பட்டு நாடக துறைக்கு வந்தார்.


9 வயதிலேயே இலங்கை, தமிழ்நாடு என நாடக குழுக்களுடன் சுற்றி வந்த அவர், நாடக இடைவேளை சமயத்தில் என்டர்டெய்னராக பாட ஆரம்பித்து, பின்னாளில் வேடங்கள் போட  துவங்கினார். அவரது வள்ளி திருமணம், நல்ல தங்காள், கோவலன் போன்ற நாடகங்கள் எல்லாம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கூடவே, கேபி சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, 1927ம் ஆண்டில் நிஜத்திலும் தம்பதியானார்கள்.



இருவருமே மிக தீவிரமான சுதந்திர போராட்ட தியாகிகள். நாடகங்களின் நடுவே தேசபக்தி காட்சிகளை சேர்த்ததோடு சுதந்திர வேட்கையூட்டும் பாடல்களையும் தனியாக பாடி  வெளியிட்டனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இசை ஆல்பம் போட்ட பெருமை இவர்களையே சேரும். சுந்தராம்பாளை போலவே, கிட்டப்பாவின் குரலும் எட்டுக்கட்டை சுருதியை கொண்டது. இருவரின் பாடல்களுக்கு மக்களிடம் அவ்வளவு மவுசு. 


யார் கண்பட்டதோ அற்ப ஆயுளிலேயே கிட்டப்பா காலமானார். 1933ம் ஆண்டில் அவர் இறந்தபோது வயது 28. கேபிஎஸ் வயது 25. அதன்பிறகு நடிப்பதை துறந்து வெள்ளை கதராடை, நெற்றி நிறைய விபூதி என தவ வாழ்க்கையில் புகுந்தார், கேபி சுந்தராம்பாள். இந்த சமயத்தில்தான், நந்தனார் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது. அவர் மறுக்க, தயாரிப்பாளரோ விடாப்பிடியாக நெருக்க, கடும் நிபந்தனைகளை சொல்லி தவிர்க்க பார்த்தார், கேபிஎஸ்.



எந்த ஆணுடனும் ஜோடி சேர மட்டேன். சம்பளமாக ஒரு லட்சம் வேண்டும். இது மாதிரியான நிபந்தனைகளையும் ஏற்றார் தயாரிப்பாளர். அந்த அளவுக்கு நாடகம், சுதந்திர போராட்டம் மூலமாக புகழ் பெற்றிருந்தார்,  கேபிஎஸ். நந்தனார் படத்துக்காக 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார், சுந்தராம்பாள். அப்போது தங்கம் விலை சவரனுக்கு 13 ரூபாய். 


நந்தனாரில் ஆண் வேடமிட்டு நடித்த கேபிஎஸ், தனது 30 ஆண்டு திரை வாழ்க்கையில் சொற்ப எண்ணிக்கையிலேயே படம் நடித்தாலும் வெண்கலக் குரலால் என்றென்றும் நிலைத்திருக்கிறார். தமிழ் மூதாட்டி அவ்வையார் என்றால் கேபி சுந்தராம்பாள் முகம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். அவ்வையார், மணிமேகலை, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார் என தான் நடித்த படங்களில் தனது பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.



திருவிளையாடல் படத்தில் முருக கடவுளுடன் விவாதம் செய்து, "ஞானப் பழத்தை பிழிந்து..." என பக்தி ரசத்தை பாடலில் பிழிந்து தந்த கேபிஎஸ், அடிப்படையில் ஒரு முருக பக்தை. "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...!" பாடல் தொடங்கி மகாகவி காளிதாஸ் படத்தில் "சென்று வா மகனே செனறு வா, அறிவை வென்று வா மகனே வென்று வா...", "காலத்தில் அழியாத காவியப் பொருள் என்று...", காரைக்கால் அம்மையார் படத்தில் "தக தக தக தக தகவென ஆடவா... சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடவா.." என சிவ தாண்டவ பாடல், திருமலை தெய்வம் படத்தில் "ஏழுமலை இருக்க எமக்கென்ன மனக்கவலை..." என கேபிஎஸ் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழழியாத காவிய கீதங்கள்.


கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிலப்பதிகார கதையை அடிப்படையாக கொண்டு தயாரித்த 'பூம்புகார்' படத்தில் சமண துறவி கவுந்தியடிகளாக நடித்திருப்பார். கோவலனுடன் படகு பயண காட்சியில், "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்...", என்ற பாடலும் "தப்பித்து வந்தானம்மா, தனியாக நின்றானம்மா.." பாடலும் மனித வாழ்க்கையை சொல்பவை. 

தீவிர ஆன்மிகவாதியான இவர், பூம்புகார் படத்தில் "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது..." என்ற வரிகளையே, விடாப்பிடியாக நின்று "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது..." என கருணாநிதியை மாற்ற வைத்ததாக கூறுவது உண்டு.

பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவான சத்திய மூர்த்தி தான் கேபி சுந்தராம்பாளுக்கும் அரசியல் குரு. இந்தியா சுதந்திரம் பெறும் முன்னும் சரி. பின்னும் சரி. காங்கிரஸ்  கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர். இதனாலேயே, சுதந்திரம் கிடைத்ததும் சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர் ஆனார். 



ஆம் 1951ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்திருக்கிறார், கே.பி.சுந்தராம்பாள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து பேரவைக்குள் நுழைந்த முதல் திரை பிரபலம் இவர்தான். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களால் மதிக்கப்பட்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: