Thursday 30 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -25

 திராவிட இயக்கங்களின் முதல் நடிகர், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப் பேரவைக்குள் நுழைந்த முதலாவது நடிகரும் இவர்தான். இவர் எஸ்எஸ்ஆர் எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை அருகே சேடப்பட்டி தான் இவரது சொந்த ஊர். இவரது தந்தையும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரும் நண்பர்கள். எஸ்எஸ்ஆருக்கு  ராஜேந்திரன் என்ற பெயரை வைத்தவரே தேவர்தான். 



சிவாஜி கணேசனை திரையுலகுக்கு தந்த பராசக்தி படம்தான்,  இவரையும் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த 'பைத்தியக்காரன்' படத்தில் சிறிது தலை காட்டினாலும் வாய்ப்பின்றி இருந்தவருக்கு 'பராசக்தி' படத்தில் சிவாஜியின் சகோதரர்களில் ஒருவராக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வருவார். பர்மா குண்டு வீச்சில் ஒரு காலை இழந்தவராக எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். இன்றளவும் பேசப்படும் எம்ஆர் ராதா நடித்த எவர்கிரீன் மூவி ரத்தக் கண்ணீர் படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வருபவர் எஸ்எஸ்ஆர். திராவிட இயக்கத்தில் எம்ஜிஆருக்கும் சீனியர். 


ஆரம்பத்தில் டிகேஎஸ் சகோதரர்கள் நாடக கம்பெனியில் நடிப்பு தொழிலை ஆரம்பித்த எஸ்எஸ் ஆருக்கு அப்பவே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நல்ல அறிமுகம் உண்டு. 



1951 முதல் 2001 வரை 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு சொந்தக் காரரான இவர் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க படாதபாடு பட்டார். பின்னணி பாடகராக விரும்பி ஆண்டாள் என்ற படத்தில் 'இன்ப உலகில் மன்மத பூக்கள்...' என்ற ஒரு பாடலோடு முடிந்தது. அல்லி என்ற ஒரு படத்தையும் இயக்கினார். ஆனால், திரையுலகில் தத்தளித்த போதிலும் புராண கதைகளை கொண்ட படங்களில் எஸ்எஸ்ஆர் நடித்ததில்லை. 


ராமாயண கதையை முழுமையாக கூறும் என்டி ராமாராவ் ராமராக நடித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க கேட்டு இவர் மறுத்ததால் அதில் சிவாஜி கணேசன்  நடித்தார். அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் எழுதிய வசனங்களையும் மிக தெளிவாக பேசுபவர். தூய தமிழ் வசன உச்சரிப்புக்கு சொந்தக்காரர். அதனாலேயே லட்சிய நடிகர் என்ற பட்டம் இவருக்கு உண்டு. 


இவர் நாயகனாக நடித்த படங்களில் முதலாளி, குமுதம், சிவகங்கை சீமை, பூம்புகார், தை பிறந்தால் வழி பிறக்கும் போன்றவை சூப்பர் ஹிட் ரகங்கள். முதலாளி படம் தான் எஸ்எஸ்ஆருக்கு ஹீரோ அந்தஸ்து அளித்தது. அந்த படத்தில்தான் நடிகை தேவிகா (நடிகை கனகாவின் தாயார்) அறிமுகம். 



முதலாளி படத்தில் 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..., பாடல், குமுதம் படத்தில் மாமல்லபுரத்தின் பெருமை சொல்லும் 'கல்லிலே கலை வண்ணம் கண்டார்...' பாடல், தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் டைட்டில் வரிகளிலே அமைந்த பாடல் எல்லாம் தமிழின் எவர்கிரீன் வரிசை பாடல்கள்.


சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு கருணாநிதி கதை வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் இவர்தான் கோவலன். இதுபோல மருது சகோதரர்களின் சுதந்திர போராட்ட வரலாறை அடிப்படையாக கொண்ட சிவகங்கை சீமை படமும் எஸ்எஸ்ஆர் நடிப்புக்கு உதாரணம்.



கதாநாயகனாக படங்களில் நடித்தாலும் சிவாஜியுடன் மனோகரா, பராசக்தி ஆலயமணி, பச்சை விளக்கு உட்பட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆருடன் ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். ஆனாலும் முக்கிய கதாபாத்திரம் இவருக்கு உண்டு. ஆலயமணி படத்தில் சரோஜாதேவியுடன் 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா..', என்ற ஒரு பாடலே இவருக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்ததோடு எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தையும் நடத்தி அதன் மூலம் தனியாக நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். அந்த வகையில்  மனோரமாவை நடிப்புக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் எஸ்எஸ்ஆரையே சேரும். 


கருப்பு வெள்ளை காலத்துக்கு பின் நடிப்புக்கு  இடைவெளி விட்ட எஸ்எஸ்ஆர், அதன்பிறகு 1990களில் தர்மா, சரத்குமாரின் ரிஷி, சிம்பு நடித்த தம், வடிவேலு நடித்த தீக்குச்சி திரைப்படங்களிலும் எஸ்எஸ்ஆர் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு தீவிர அரசியல்வாதி.

அவரது அரசியல் பயணத்தையும் பார்க்கலாம். ஆரம்பம் முதலே தீவிர திராவிட இயக்க பற்றாளர். அண்ணாவின் மிக தீவிர ஆதரவாளர். எஸ்எஸ்ஆர் வீட்டின் கிரக பிரவேச விழாவில் தான் புதுமனை புகுவிழா என்ற வார்த்தையை அண்ணா அறிமுகம் செய்ததாகவும் சொல்வார்கள்.

முதன் முதலில் 1957 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி களம் இறங்கியபோது இவருக்கும் சீட் வழங்கினார்கள். ஆனால், தோல்வியடைந்தார். அதன் பிறகு 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் எஸ்எஸ்ஆர். அதன்படி இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதலாவது நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். முதலாவது நடிகை என்றால் கே.பி.சுந்தராம்பாள்.


 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாகவும் திமுக சார்பாக பதவி வகித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்து 1980 சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் எஸ்எஸ்ஆர் தான். இதே தொகுதியில் தான் அடுத்த தேர்தலில் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் போட்டியிட்டு அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்றார். 



திராவிட இயக்க அரசியல்வாதி, எம்எல்ஏ, எம்பி, நடிகர் மட்டுமல்ல  தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் எஸ்எஸ்ஆர் இருந்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். பழம்பெரும் நடிகை விஜயகுமாரி இவரது மனைவிகளில் ஒருவர். சென்னையில் எஸ்எஸ்ஆர் பங்கஜம் என்ற தியேட்டர் அவரது மற்றொரு மனைவி பெயரில் அமைந்தது தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: