Sunday 5 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 22

ஒன்றே கால் ஆண்டு இடைவேளைக்கு பின், மீண்டும் தமிழ் சினிமா பொக்கிஷத்தில் பவளங்களை தேடுவோம். அதை மங்களகரமாக துவக்கலாமா? 

திருமணம் போன்ற விசேஷ வீடுகள் என்றாலும் கோயில் விழாக்கள் என்றாலும் மைக் செட் கட்டியதும் முதலில் ஒலிப்பது இவரது குரல்தான். 'விநாயகனே வினை தீர்ப்பவனே...' தொடங்கி இவரது ஏராளமான பக்திப் பாடல்களை பெரும்பாலானோர் கேட்டிருப்போம். அவர்தான் சீர்காழி கோவிந்த ராஜன். பெயரை கேட்டதுமே அவரது கணீர் குரல் காதில் ஒலிப்பதை தவிர்க்க முடியாது. கூடவே அவரது ஆன்மீக பிம்பமும் மட்டுமே. 


இசைக் கல்லூரியில் படித்து கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்த சீர்காழி கோவிந்த ராஜனுக்கு சென்னை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழியில் பிறந்த கோவிந்த ராஜனை பக்தி பாடல்கள் பாடுபவர்கள் வரிசையிலேயே அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் பின்னணி பாடகர், நடிகர் என உலா வந்தவர். 

அவரது சினிமா வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம். தனது 19வது வயதில் பாட ஆரம்பித்த அவர், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1954. படம் "பொன் வயல்". கல்கி கதையை அடிப்படையாக கொண்டு அன்றைய பிரபல நடிகர் டிஆர் ராமச்சந்திரன் தயாரித்த இந்த படத்தில் மூன்று பாடல்களை பாடினார் சீர்காழி.

1950-களில் ஆரம்பித்து 1980-கள் வரை 35 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் சீர்காழி கோவிந்த ராஜன். இவரது கணீர் குரல் பல நடிகர்களுக்கு ஒத்துப் போகாத நிலையிலும் கூட எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், ஜெமினி, எஸ்எஸ்ஆர் என முன்னணி நடிகர்கள் துவங்கி நாகேஷ் போன்றவர்கள் வரை குரல் கொடுத்திருக்கிறார்.


எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் குரல் நிரந்தரமாகும் வரை, சீர்காழி கோவிந்தராஜன் தான் நிறைய படங்களில் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். நல்லவன் வாழ்வான் படத்தில்  'குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா..',  'சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்...', நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல்..., சக்கரவர்த்தி திருமகள் படத்தில் மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போகப் போக மாறுது.. 

அதே படத்தில் என்எஸ் கிருஷ்ணனுடன் சேர்ந்து லாவணி வகையிலான டைப்பில் பாடிய 'உலகத்திலே மிக பயங்கரமான ஆயுதம் எது..' மாதிரியான பாடல்கள் எவர்கிரீன்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... என்பது போன்ற எம்ஜிஆர் பாடல்களை கேட்கும்போது டிஎம்எஸ் குரல் போலவே எம்ஜிஆருக்கு அரசியல் அடித்தளம் அமைத்துத் தந்தது இவரது குரலும் தான் என்றே தோன்றும். 

எஸ்எஸ்ஆருக்காக பாடிய 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்...' மாதிரியான பாடல்கள் காதல் கீதங்களில் சாகா வரம் பெற்றவை. ரம்பையின் காதல் படத்தில் பாடிய, 'சமரசம் உலாவும் இடமே..' நீர்க்குமிழி படத்தில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' போன்ற  பாடல்கள் மனித வாழ்க்கை பற்றிய வரிசையில் அழியாத இடம் பிடித்ததாகும். 

டிஎம்எஸ், ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், டிஆர் மகாலிங்கம், லீலா, ஜிக்கி, சுசீலா, எல்ஆர் ஈஸ்வரி, பானுமதி, மனோரமா என இவர் இணைந்து பாடிய பாடகர் பாடகிகள் ஏராளம். 

சந்திரோதயம் படத்தில் நாகேஷுக்காக பாடிய 'காசிக்கு போகும் சன்னியாசி...', 'ஒம் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு...', 'ஏபிசிடி படிக்கிறேன் ஈஎப்ஜிஎச் எழுதுறேன்..., இப்படியாக காதல் காமெடி சோகம் என தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்த ராஜன்  பாடிய பாடல்கள் ஏராளம். 

பிரபல பின்னணி பாடகர்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை, இவரது சினிமா கிராஃபும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் சீர்காழி கோவிந்த ராஜன், நடிகரும் கூட...


அவரை நடிகராக அறிமுகம் செய்தவர் ஆன்மிக இயக்குநர் ஏபி நாகராஜன் (திருவிளையாடல் படத்தில் நக்கீரராக வருவாரே அவரே தான்). அந்த படம் 1967ல் வெளியான கந்தன் கருணை. அந்த படத்தில் சீர்காழி கோவிந்த ராஜனுக்கு நக்கீரர் வேடம். அதில் அவர் பாடி நடித்த 'அறுபடை வீடு கொண்ட திரு முருகா...' பாடலை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. 

அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி, தசாவதாரம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.


1972ல் வெளியான அகத்தியர் படத்தில் கதையின் நாயகன் அகத்தியர் அவரே தான். குறு முனி வேடத்தில் அவர் நடித்து பாடிய, உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்... பாடல் அமரத்துவம் பெற்றது. 

பத்மஸ்ரீ, டாக்டர், இசைமாமணி என 35 ஆண்டுகளில் நிறைவான புகழை வென்ற சீர்காழி கோவிந்த ராஜனால் எமனை வெல்ல முடியவில்லை. அவரது 55 வயதிலேயே காலம் அவரை அழைத்துச் சென்று விட்டது. 

ரங்காராவ், டிஎஸ் பாலையா, என்எஸ் கிருஷ்ணன் வரிசையில், புகழ் உச்சத்தில் இருந்தபோது ஐம்பதுகளிலேயே விண்ணுலகம் சென்று விட்டார், சீர்காழி கோவிந்த ராஜன்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: