Friday 24 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -24

எம்ஜிஆரை தோல்வியே காணாத ஹாட்ரிக் முதல்வராக வெற்றிகரமான கட்சித் தலைவராக திரையுலக வசூல் சக்கரவர்த்தியாக பலருக்கும் தெரியும். ஆனால், அவர் ஒரு வெற்றிகரமான வசூலை வாரிக் குவித்த திரைப்பட இயக்குநர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  மூன்று ஹிட் படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அதுவும் மிக நீண்ட இடைவெளிகளில்...

ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் சுமப்பவர் இயக்குநர் தான். ஆனால், நடிகர்கள் அளவுக்கு இயக்குநர்களை ரசிகர்கள் அறிவதில்லை. பல இயக்குநர்கள் வந்த வேகத்தில் காணாமல் போனதும் உண்டு. பிரபலம் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் ஹிட் தரும் இயக்குநர்கள் அபூர்வம். நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி வெற்றி பெறுவது சாதாரணம் அல்ல. அந்த திறமை எம்ஜிஆரிடம் இருந்தது. 



நடிக்க வந்து இருபது ஆண்டுகள் கழித்து, நாயகனாகி 10 ஆண்டுக்கு பின் முதல் படத்தை இயக்கினார். அதையும் பிறர் பணத்தில் சோதித்து பார்க்க விரும்பாமல் தானே தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். அதுதான் எம்ஜிஆர். எம்ஜியார் பிக்சர்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம் நாடோடி மன்னன். 1958லியே அதன் தயாரிப்பு செலவு 18 லட்ச ரூபாய். 


மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீளமான படம். கருப்பு வெள்ளை கோலோச்சிய காலத்தில் முதன் முதலாக கலர் தொழில் நுட்பம் அறிமுகம். இரட்டை வேட தொழில் நுட்பம். காங்கிரஸ் பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த சமயத்தில் படத்தின் டைட்டில் லோகோவே திமுக கொடி. இந்த துணிச்சல் தான் எம்ஜிஆர். கண்ணதாசன் வசனம், பட்டுக் கோட்டையாரின் எவர்கிரீன் பாடல்கள் என படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அறிமுகமானதும் இந்த படத்தில் தான். படத்தின் பிற்பகுதியில் சுமார் ஒரு மணி நேர கன்னித் தீவு காட்சிகள் எல்லாம் அன்றைய காலத்தில் மிக பிரமாண்டமானவை. கலர் புல்லானவை. பி.எஸ்.வீரப்பா, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என மூன்று வில்லன்கள். காமெடிக்கு சந்திரபாபு. இவர்கள் தவிர என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், பானுமதி, எம்.என்.ராஜம் என பிரபலங்களும் உண்டு. 



மிகப் பெரிய செலவில் படத்தை தயாரித்தபோது எம்ஜிஆர் சொன்ன வார்த்தைகள்.  "இந்த படம் வென்றால் நான் மன்னன். தோற்றால் நாடோடி". ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது, இந்த படம். அதற்கு முன் ஒரு கோடி வசூலித்த படம் மதுரை வீரன். இலங்கையில் கூட, 17 தியேட்டர்களில் ஓடி வசூலை வாரி குவித்தது, நாடோடி மன்னன். நாடோடி மன்னனில் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் நாடோடி மன்னனில் இருந்தாலும் எம்ஜிஆரை மட்டுமே நினைவில் கொண்டு வரும் படம் அது. 



மொத்தம் 10 பாடல்கள். செந்தமிழே வணக்கம்..., தூங்காதே தம்பி தூங்காதே... மாதிரியான பாடல்கள் எல்லாம் எவர்கிரீன். 60 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு மறு வெளியீட்டிலும் 25 நாட்களை கடந்து ஓடிய படம் நாடோடி மன்னன்.

(நாடோடி மன்னன் படத்தை 2018ல் மறுபடியும் திரையரங்கில் பார்த்து எழுதிய பதிவை இந்த லிங்கில் வாசிக்கலாம்)


http://thileeban81.blogspot.com/2018/04/blog-post.html?m=1  


நாடோடி மன்னன் வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு பின் (1973) இயக்கிய படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி தான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்பதை பதிவு செய்திருக்கிறார் எம்ஜிஆர். அந்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973ல் வெளியான இந்த படமும் மிகப் பெரிய செலவில் உருவானதுதான். இதன் தயாரிப்பாளரும் எம்ஜிஆரே. இதுவும் இரட்டை வேடம். முதல் படத்தை மன்னர் கால கதையாக எடுத்து ஹிட் கொடுத்த எம்ஜிஆர், இந்த படத்தை ஜனரஞ்சக துப்பறியும் கிரைம் கதையாக ஹிட் அடித்தார். 



தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படமும் இதுவே. ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் படமாக்கப்பட்ட படம். லதா மஞ்சுளா என 2 நாயகிகளுடன் தாய்லாந்து நாயகியையும் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். இந்த படத்தின் 11 பாடல்களுமே மறக்க முடியாத எவர்கிரீன் ரகங்கள் தான்.


சிரித்து வாழ வேண்டும்..., நிலவு ஒரு பெண்ணாகி..., தங்கத் தோணியிலே..., பச்சைக்கிளி முத்துச்சரம்..., லில்லி மலருக்கு கொண்டாட்டம்... - இந்த பாடல்கள் எல்லாம் இன்றும் கூட கேட்பவர்களை முணுமுணுக்க வைப்பவை. படத்தின் டைட்டில் ஸாங்கான நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., எம்ஜிஆர் போலவே சாகா வரம் பெற்றது. 



படத்தில் அரசியல் பேசுவதை பார்த்திருப்போம். ஒரு படமே அரசியலாக்கப்பட்டு தடைகளை எதிர் கொண்டது முதன்முறையாக இந்த படம்தான். அப்போது தான் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக ஆரம்பித்த தருணம். பட வெளியீட்டுக்கு அன்றைய ஆளும் திமுக அரசிடம் இருந்து ஏராளமான குடைச்சல்கள். போஸ்டர் ஒட்டுவதற்கு  தடை, தட்டி பேனர் வைக்க அனுமதி மறுப்பு. இதனால் படத்துக்கு ஸ்டிக்கர் பாணியிலான விளம்பரங்களை முதன் முதலில் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். அதற்கு உதவியவர் நடிகர் பாண்டு. 


இது ஒருபுறம் இருக்க, ரிலீசுக்கு பின்னும் தியேட்டர்களுக்கு படப் பெட்டிகளை கொண்டு செல்வது தடுப்பு, அப்படியே சென்றாலும் தியேட்டர்களில் மின் வெட்டு, திமுகவினரின் மிரட்டல் இப்படி பல இடையூறுகள். அது பற்றியே தனியாக எழுதலாம். இவற்றை எல்லாம் தகர்த்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஹிட் வரிசையில் சேர்ந்தது உலகம் சுற்றும் வாலிபன். 15 ஆண்டுகள் கழித்தும் தனது இயக்குநர் திறமையை நிரூபித்தார் எம்ஜிஆர். 



இதுபோல அவர் முதல்வரான ஆண்டில் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படமும் அவரது இயக்கமே. எம்ஜிஆர் ரசிகர்களாலும் அதிமுகவின் ஆரம்ப கால விசுவாசிகளாலும் இந்த படத்தையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை தலையெடுத்த நேரத்திலும் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர்.


அவருக்குள் இருந்த இயக்குநர் திறமை தான், அவரது பிற படங்களிலும் பளிச்சிட்டது. மற்ற நடிகர்களின் படங்களை விட எம்ஜிஆர் படத்தின் பாடல், காட்சி, வசனம், ஔிப்பதிவு, ஸ்டண்ட் போன்றவை வித்தியாசம் தெரியும்.  அதற்கு அவரும் காரணம்.




இந்த மூன்று படங்கள் மட்டுமில்லாமல் 1969ல் வெளியான அடிமைப்பெண் படமும் எம்ஜிஆரின் தயாரிப்பு தான். ஆனால் இயக்குநர் வேறு. இதிலும் எம்ஜிஆர் இரட்டை வேடம். நாயகி ஜெயலிதாவும் இரட்டை வேடம். தமிழ் திரைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனை இந்த படத்தில்தான் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகம் செய்தார். ஜெயலலிதா முதன் முதலில் பாடல் பாடிய படமும் அடிமைப்பெண் தான். ராஜஸ்தான் பாலைவனத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எம்ஜிஆர் சொந்தமாக வளர்த்த சிங்கம் ஒன்றும் இந்த படத்தின் சண்டைக் காட்சியில் நடித்திருக்கும். எம்ஜிஆர் தயாரித்த இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்.

ஆக.. 

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் வெற்றிக் கொடியை நாட்டியவர், எம்ஜிஆர். 

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: