Thursday, 15 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -52

 'அமைதிப்படை' அமாவாசைன்னா இன்னைக்கு வரை சத்யராஜ் பெயர்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனா, அதுக்கு பின்னால முன்னால பக்கத்திலன்னு எல்லா பக்கமும் இருந்த ஒரே ஆளு மணிவண்ணன் தான்.  ரெண்டு பேருமே ஆரம்ப கால நண்பர்கள்.



 1979ல் பாரதிராஜாகிட்ட கதாசிரியரா, அசிஸ்டண்ட் இயக்குநரா உதவியாளரா சேர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு முதன் முதலா 1982ல் மணி வண்ணன்  இயக்கிய படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. மோகன், சுகாசினி, ராதா நடிச்ச அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதுக்கு அப்புறம் இளமை காலங்கள் 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'கனம் கோர்ட்டார் அவர்களே', 'முதல் வசந்தம்', 'புது மனிதன்,' 'தெற்கு தெரு மச்சான்'-ன்னு மணிவண்ணன் இயக்குன படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். 

மொத்தம் 50 படங்கள் இயக்கம். அதில் சரி பாதி அவரது நண்பர் சத்யராஜ் நடிச்சது. 1982ல் ஆரம்பிச்சி 'அமைதிப் படை', 'நாகராஜ சோழன் எம்.ஏ. வரை 2013 வரை முப்பது வருஷத்துக்கு மேல படங்களை இயக்கியவர் மணிவண்ணன். சிவாஜி கணேசனையும் இயக்கி இருக்கிறார்.

ஆரம்பத்திலருந்தே 'கல்லுக்குள் ஈரம்', 'நிழல்கள்' மாதிரி சில படங்கள்ல குட்டி குட்டி வேஷத்தில நடிச்சிருக்காரு. ஆனா முழு நீள வில்லனா பெரிய கேரக்டரில அவர் நடிச்ச படம் 'கொடி பறக்குது'. அதில் ரஜினிக்கு வில்லன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அந்த படத்தில மணிவண்ணனுக்கு டப்பிங் குடுத்தவர், பாரதிராஜா.



அதுக்கு அப்புறம் இயக்கத்தோட கூடவே நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு மணிவண்ணன். அப்பிடி அவர் நடிச்ச படத்தோட மொத்த எண்ணிக்கை 400ஐ தொடும்.

சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, அர்ஜுன், பார்த்திபன், விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடிச்ச பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. 

அப்பா, வில்லன், துணை கதாபாத்திரம்னு எல்லாவற்றிலும் கலந்து கட்டி துவம்சம் பண்ணியவர், மணிவண்ணன்.  20 ஆண்டு கால தீவிர நடிப்பு வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட அவரது நடிப்பு சோடை போனது கிடையாது. அரசியல் நக்கல் நையாண்டி வசனங்களை பேசிய துணிச்சல்காரர். 

அதே நேரத்தில், 'உள்ளத்தை அள்ளித்தா', 'சூரிய வம்சம்', அவ்வை சண்முகி, 'முறைமாமன்' மாதிரி பல படங்களை பார்த்தால் முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்திருப்பார். ரெண்டு முறை தமிழக அரசின் சிறந்த காமெடியன் விருதையும் வாங்கி இருக்கிறார், மணிவண்ணன்.



'கோகுலத்தில் சீதை' போன்ற பல படங்களில்  தந்தை வேடத்துக்கு மிக பொருத்தமானவரா பார்க்கலாம். 'கொடி பறக்குது' மாதிரியே பல படங்கள்ல கொடூரமான வில்லனாவும் மணிவண்ணனை பார்க்கலாம். சத்யராஜ், கவுண்டமணியோடு இவரும் சேர்ந்து விட்டால் அன்லிமிட் லூட்டிக்கு 100 சதவீதம் கேரண்டி.



கதாசிரியர், டைரக்டர், அப்புறம் நடிகரா பார்த்தால் காமெடியன், வில்லன், குணச்சித்திரம்னு எல்லா விதத்திலயும் தமிழ் சினிமாவ கலக்கின மணிவண்ணனுக்கு பல பாடல்கள்ல நடிக்கிற வாய்ப்பும் உண்டு. அப்பிடி மணிவண்ணன் பாடுற எல்லா பாடல்களிலயும் இசையமைப்பாளர் தேவாவோட குரல் மிக பொருத்தமா இருக்கும் மணிவண்ணனே பாடுற மாதிரி இருக்கும்.



தமிழ் சினிமா மிக சீக்கிரமா இழந்த ஜாம்பவான்கள்ல மணிவண்ணனும் ஒருத்தர். 30 வருஷத்துக்கு மேல சினிமாவில இருந்த அவர் 50 பிளஸ் வயசிலேயே மறைந்தது தமிழ் திரைக்கு பெரிய இழப்பு.

#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 10 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -51

 ஒரே ஒரு சூரியன்தான் பகலுக்கெல்லாம்... 

ஒரே ஒரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்...

ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்...

எத்தனையோ பேர் வந்தாலும் சென்றாலும் மக்களின் மனம் எப்போதும் திறமையின் பக்கம்தான். அதுவும் இரண்டு மூன்று தலைமுறையினரை கட்டிப் போடும் திறமையும் அதிர்ஷ்டமும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஆண்டவனின் அருளை முழுமையாக பெற்ற கோடிகளில் ஒருவருக்கே அது கை கூடும். அவர்களில் ரஜினியும் ஒருவர்.

1975ல் தொடங்கிய சினிமா இன்னிங்ஸ், 'அண்ணாத்த' கடந்தும் விறுவிறுப்பு குறையாமல் போகிறது. ஒரு தனி மனிதனை நம்பி 600 கோடி ரூபாயை முதலீடு செய்வது (2.0) எல்லாம் எளிதாக கடந்து செல்லக் கூடிய சாதாரண விஷயமல்ல.

கிட்டத்தட்ட நான் பிறந்த ஆண்டில்தான் ரஜினியின் சினிமா அறிமுகமும். 'கெட்ட பய சார் இந்த காளி'ன்னு தொடங்கியதில் இருந்து

 '16 வயதினிலே' 'மூன்று முடிச்சு' 'அவள் அப்படித்தான்' என 1980களில் பல படங்களில் வரிசையாக தொடர்ந்த ரஜினியின் வில்லத்தனமான நடிப்பு... சந்திரமுகி வேட்டையன்,  எந்திரன் சிட்டி ('ம்மே...') வரை சூடு குறையாமல் இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 'பாட்ஷா' மாணிக்கத்தின் உக்கிர பார்வை வீச்சு முழு நேர வில்லன் நடிகர்களிடம் கூட எதிர்பார்க்க முடியாதது. இன்றளவும் ரஜினியின் அலட்டல் இல்லாத வில்லன் நடிப்புக்கு நிரந்தர ரசிகன் நான். 

அது ஒரு புறம் இருக்க தம்பிக்கு எந்த ஊரு, தில்லு முல்லு, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் இப்படியாக சந்திரமுகி சரவணன் வரை பல தசம ஆண்டுகளை கடந்தும் கலகலப்பூட்டும் ரஜினியின் நகைச்சுவைக்கு ஈடு இல்லை.

ஆதர்ச நாயகனுக்கு சாமான்ய ரசிகன் தொடங்கி  வெறித்தனமான ரசிகர்கள் வரை இருப்பது வழக்கம். ஆனால், ரஜினியை 1980களின் குழந்தைகள் தொடங்கி 2010களின் குழந்தைகளும் கூட ரசிப்பதை அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது. 

எந்த ஒரு மனிதரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது சர்வ நிச்சயம் கிடையாது. ஆனால்,  பெரும்பாலான திரைப்பட ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது இந்த 70 வயது காந்தம்.

இன்று வரை அவரை ஆராதிக்கும் ஆரம்ப கால ரஜினி ரசிகர்களை, பேரன் பேத்தி எடுத்தவர்கள் என போகிற போக்கில் விமர்சிப்பவர்கள், அரை நூற்றாண்டை எட்டியும்,  அவரது 'கிரேஸ்' குறையவில்லை என்பதை கவனிக்க தவறியவர்கள். 

எஸ்பி முத்துராமன், மகேந்திரன், கலைஞானம் போன்ற இயக்குனர்களிடம் நடித்தவர்... சங்கர், முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜூக்கும் நடிக்கிறார். விஜயகுமார், சிவகுமார்,  முத்துராமன், நம்பியார் போன்றவர்களுடன் நடித்தவர்... விஜய் சேதுபதியுடனும் நடிக்கிறார்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென்ட், வண்ணப்படம், 35 எம்எம், 70 எம்எம் சினிமாஸ்கோப், 3டி முப்பரிமாணம், அனிமேஷன் என சினிமாவின் அனைத்து தொழில் நுட்பத்திலும் நடித்துள்ள ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருக்கும்.



அரசியலில் ரஜினி வருகை எப்படி இருக்கிறதோ? ஆனால், 1994, 1996, 2017, 2020 ஆண்டு எதுவாக இருந்தாலும் சினிமா வசனங்களை தவிர்த்து பொது வெளியில் ரஜினி உதிர்க்கும்  வெறும் நாலு வார்த்தைகள் கூட, (அவருக்கு ஆதரவோ, விமர்சனமோ எதுவாயினும்) நான்கு நாளைக்கு வைரலாகி கிடக்கிறது.

ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது தொடங்கி... 

சிஸ்டம் சரியில்ல... நகர்ப்புற நக்சலைட்...  ஒரு நிமிஷம் தலை சுத்திப் போச்சி... 

இதெல்லாம் அதற்கு உதாரணம். அதுதான் ரஜினி என்ற காந்தத்தின் மார்கண்டேய மந்திரம்.

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 5 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -50

 பெயர்...

இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவோ புதைந்து கிடக்கிறது. நம்பர்கள் கூட, சில வேளைகளில் அடையாள பெயர்களாகி விடும்.  பூனை என்ற பெயரை சொன்னால் யானையின் உருவம் கண் முன்னே  வருவதில்லை. ஆனால், அந்த இரண்டுக்குமே அதுதான் தங்கள் பெயர் என தெரியுமா? 

அதே நேரத்தில் பெயர் என்றால்  இவ்வளவுதான் என்றும் ஒதுக்கி விட முடியாது. 

சில பெயர்கள் மரியாதை தரும். சில பயத்தை தரும். இன்னும் சில சில என்னவெல்லாமோ மனதுக்குள் தரும். சிலருக்கு தங்களுக்கு சூட்டிய பெயரே பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படித்தான். ஏனென்றால் இந்த பெயர் மிகவும் பெக்குலியரானது. 

இந்த முகநூலை எடுத்துக் கொண்டாலே, தசம ஆண்டுக்கும் மேலான அனுபவத்தில், இந்த பெயரை தசம எண்ணிக்கை அளவு கூட பார்த்ததில்லை. நேரிலும் கூட, என் பெயரையே கொண்ட பத்துக்கும் குறைவானவர்களையே பார்த்திருக்கிறேன்.


இப்படியான பெயரிலேயே ஒரு நடிகர் இருக்கிறார். 1980ஸ் சினிமா ரசிகர்களுக்கு அவரை நன்றாகவே தெரியும். அன்றைய நாளின் ஹீரோக்களுக்கு நிகராக படங்களில் நடித்தவர், ரவீந்தர் என்ற ரவீந்திரன். 

சென்னை மற்றும் புனேயில் சினிமா படிப்பு முடித்து முழு வாழ்க்கையையும் இன்று வரை சினிமா மற்றும் மீடியாவுக்கே அர்ப்பணித்தவர். சுமார் 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அதில், பாதிக்கு மேல் மலையாளம், அடுத்ததாக தமிழ். தமிழில் முதன் முதலில் ரவீந்திரன் அறிமுகமான படம் டி.ராஜேந்தரின் 'ஒரு தலை ராகம்'. படம் முழுவதும் ஹீரோவோடு கல்லூரி மாணவராக டிஸ்கோ டான்சராக வருவார். டிஸ்கோ ரவீந்தர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.


ஆமாம். அவர் அருமையான டான்சர். 1980களில் டிஸ்கோ டான்ஸ் உச்சத்தில் இருந்தபோது அதன் அடையாளம் ரவீந்திரன். அதாவது அன்றைய பிரபுதேவா. அப்போதெல்லாம் படங்களின் வெற்றிக்கு பாடல்கள் தான் பெரிய பக்கபலம். கேசட்டாக ஆடியோ வடிவிலும், திரைப்படத்தில் விஷுவலாகவும் இருக்கும். அதனால் படங்களில் நிச்சயம் கிளப் டான்சுடன்  பாடல் இருக்கும். அதனாலேயே ரவீந்திரனுக்கும் ஹீரோ போலவே படங்களில் பாடல் இருக்கும்.



'ஒருதலை ராகம்' படத்தில் "அட மன்மதன் ரட்சிக்கனும் இளம் மங்கையர் பாவைகளே.."

'வாழ்க்கை' படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு..."

'ரங்கா' படத்தில் "அழகான பட்டுப் பூச்சி ஆடை கொண்டது..."

'ராம் லட்சுமணன்' படத்தில் "வாலிபமே வா வா, தேன் சுவையே தா தா..."

'தங்க மகன்' படத்தில் "வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா..."

இப்படி ரவீந்திரனின் டான்ஸ் பாடல்களை நிறைய சொல்லலாம்.  


சிவாஜி கணேசனுடன் 'வாழ்க்கை' படத்தில் அவரது மகனாக, நம்பியாரின் மருமகனாக, சில்க் ஸ்மிதா ஜோடியாக நடித்திருப்பார். இது போலவே, ரஜினியுடன் 'ரங்கா', 'போக்கிரி ராஜா', 'தங்க மகன்', 'அடுத்த வாரிசு', கமலுடன் 'சகலகலா வல்லவன்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'ராம் லட்சுமண்' சத்யராஜுடன் 'விடிஞ்சா கல்யாணம்' என முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார். பெரும்பாலும் நெகடிவ் ரோல்கள். 

ஹீரோவாகவும் ஒன்றிரண்டு படங்களில் ரவீந்திரன் நடித்திருக்கிறார். டி.ராஜேந்தரின் 'வசந்த அழைப்புகள்' படத்திலும் இவர்தான். அதில் டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தருக்கு ஜோடி.


1980களின் துவக்கத்தில் ஏராளமான படங்களில் உஷா நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அந்த படத்தில், 

"அட நீல சேல பறக்கையில, மால வேள மயக்கயில மச்சான் இங்க வாடி புள்ள..."

"கிட்ட வாடி ஆச புள்ள எட்டு நாளா தூக்கமில்ல...முத்து முத்து ஜாதி முல்ல..."

பாடல்களில் உஷாவோடு செம டான்ஸ் போட்டிருப்பார் ரவீந்திரன்.

சுமார் பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்த ரவீந்திரன், சமீபத்திய சிவகார்த்திகேயனின் 'காக்கிச்சட்டை', சத்யராஜின் 6'2" என ரீ என்ட்ரி கொடுத்தார்.

மலையாளத்தில் இப்பவும் மீடியா அண்ட் ஈவன்ட் மேனேஜ்மன்ட், டி.வி. சேனல்களில் சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரிங், சினிமா சம்பந்தமான வகுப்பு, கருத்தரங்கம் என பிசியாகவே இருக்கிறார். பெரிய அளவிலான சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கிறார், ரவீந்திரன்.

பெயராலும் டான்சாலும் என்னை கவர்ந்த நடிகர்.

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 1 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -49

 டைரக்டர் டச்...

டைரக்டர் டச்னு சொல்லுவாங்க அது இவருக்காகவே வந்த வார்த்த. 

மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே  சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா தெறமைய தவிர வேறென்ன..?


கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' மாதிரியான கிரைம் திரில்லருக்கு இவருதான் அஸ்திவாரம். 'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?

ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'பாமா ருக்மணி' வர இவருக்கு இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. 'மவுன கீதங்கள்'தான் இவரோட மொத சொந்த குரல் படம். அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...

அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம்தான். 



1980களில் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு ஹீரோவா பேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் வராது...

இவரு ஒரு ரூட்டுன்னா, டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம். அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர்கள் உண்டு. 

'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விசேஷங்க'... இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம். தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் தாவணிக் கனவுகள்னு சொல்லுவாங்க...

ரஜினியோட நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.

இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியா ஹீரோயினாக்கி அழகு பாத்தவர்.

நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே  இவரு ஒருத்தரு தான். 

அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.

ஆர்.பாண்டிய ராஜன், பார்த்திபன் இவரோட சிஷ்யங்கன்னா பாத்துக்கோங்க.. படத்தில சூப்பரா ரசிகர்கள கவருத மாதிரி ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு கார்டு போடுறது இவரோட ஸ்டைல். இவரோட திரைக்கதையை பார்த்து அமிதாப் பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'

இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட. 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசை இவர்தான்...! அந்த படத்தில "பச்ச மலை சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டு இவர் பாடுனதுதான்...!

தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்கு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக்காய், சின்ன வீடு மாதிரி   நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர். 

எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான். 

எம்ஜிஆர மாதிரியே இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு. என்னையே 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு..

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர், பத்திரிகையாசிரியர் பாக்யராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் (ஜனவரி 7) வாழ்த்துகள்...

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 30 April 2023

அறிந்த பொக்கிஷம் அறியாத பவளங்கள் -48

தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய திறமையாளர்களில் இவரும் ஒருவர். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் இப்படி ஏதாவது ஒன்றில் சாதனை படைத்தாலே அவர்களை கொண்டாடி தீர்ப்போம். ஆனால், இவர் இந்த மூன்றிலுமே ஏராளமான ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர். கூடவே, தான் இயக்கிய படங்களுக்கு கதாசிரியர். பாடகர், பின்னணி குரல், நடிப்பு என்றும் பன்முகம் உண்டு.


அவர் தான் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் தம்பி. இளையராஜா கூடவே திரையுலகுக்கு வந்த கங்கை அமரன் பற்றி நிறைய எழுதலாம்.

1977ல் வெளியான '16 வயதினிலே' படத்தின் "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே..." பாடலும் இவர்தான். அஜித்தின் 'மங்காத்தா' படத்தின் "விளையாடு மங்காத்தா..." பாடலும் இவர்தான்..


1980ஸ் ஹிட்டான 'கோழி கூவுது' படம் இவர் இயக்கம் தான். 1990ஸ் ஹிட்டான 'கரகாட்டக்காரன்' இயக்கமும் இவர்தான்.


1970ஸ் இறுதியில்  துவங்கி பாடலாசிரியராக இவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடும் ரகம்...

"பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு தேதி வந்தாச்சி..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா..."

"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை..."

"வெத்தல வெத்தல வெத்தலயோ..."

"பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்..."

"என் இனிய பொன் நிலாவே..."

"ஆசய காத்துல தூது விட்டு.."

"காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே..."

"சிறு பொன்மணி அசையும் விழி... பொன்மணி தாள லயம்..."

"புத்தம் புது காலை பொன்னிற வேளை..."

"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..."

"போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..."

இவை எல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களின் சாம்பிள்கள். ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' விஜயகாந்தின்  'அம்மன் கோவில் கிழக்காலே' மாதிரி சில படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர்தான். 



1977 துவங்கி 2kஸ் படங்களான 'மங்காத்தா' படத்தில் "விளையாடு மங்காத்தா...", "இது எங்க பலே லக்கா..." பாடல்களையும்  'கோவா' படத்தில் ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில்..." பாடலும் 'சென்னை 28' படத்தில் "சரோஜா சாமா நிக்காலோ..." பாடலும் கங்கை அமரன் தான். தலைமுறைகளை கடந்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர்.


அடுத்ததாக, இசையமைப்பாளர் என எடுத்துக் கொண்டால், 1979ல் வெளியான 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை' படம்தான் இவரது முதல் இசை. சுமார் 75 படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். 

"பொன்மானத் தேடி நானும் பூவோட வந்தேன்..." பாடலின் எங்க ஊரு ராசாத்தி இவர் இசை தான்.



கமலின் 'வாழ்வே மாயம்' படத்துக்கு இவர் தான் இசை. இதை இளையராஜா இசை என்றே ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். பாக்யராஜின்  'சுவரில்லாத சித்திரங்கள்', 'மவுன கீதங்கள்', ராமராஜனின் 'நம்ம ஊரு நல்ல ஊரு'. பிரபுவின் 'சின்னத் தம்பி பெரியத் தம்பி', 'என் தங்கச்சி படிச்சவ'. 

அப்புறம் 'அத்தமக ரத்தினமே' ("அள்ளி அள்ளி வீசுதம்மா... அன்பை மட்டும் அந்த நிலா நிலா..." பாடல்) இப்படி இவர் இசையமைத்த ஹிட் படங்களை வரிசைப் படுத்தினால் ஆச்சரியமூட்டும்.

சுமார் 70 படங்களுக்கு கங்கை அமரன்  இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால 1980ஸ் படங்களுக்கு இசை உதவி இவர்தான். 



அடுத்ததா பார்த்தால், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இதுக்கும் மேல அவர் பல சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநரும் கூட. சுமார் 20க்கும் அதிகமான படங்களை இயக்கி இருக்கிறார், கங்கை அமரன்.

1982ல் வெளியான பிரபு, சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி நடித்த 'கோழி கூவுது' படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம்.  முதல் படமே சூப்பர் ஹிட். தமிழ் திரையுலகின் அழிக்க முடியாத சாதனை காவியமான 'கரகாட்டக்காரன்' படமும் இவர் இயக்கியதுதான். 

ராமராஜனுக்கு மட்டும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'வில்லுப் பாட்டுக்காரன்', 'செண்பகமே செண்பகமே' என சுமார் பத்து படங்களை கங்கை அமரன் இயக்கி இருக்கிறார்.



பிரபு நடித்த ஹிட் படமான 'கும்பக்கரை தங்கய்யா', விஜயகாந்தின் 'கோயில் காளை' (இந்த பட பாடல்கள்  ஹிட்) படங்களும் கங்கை அமரன் இயக்கியவைதான். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு கதாசிரியரும் பாடலாசிரியரும் கூட இவரேதான்.

இது தவிர, பாக்யராஜின் ஆரம்ப கால படங்களில் அவருக்கு கங்கை அமரன் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இது போலவே, "பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...", "வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாடி என நாக ரத்தினமே..." என பாடகராகவும் கங்கை அமரன் பாடிய பாடல்களை நிறைய சொல்லலாம்.


சினிமாவில் தனக்குத் தெரிந்த எல்லா துறையிலும் பாதம் பதித்து ஜொலிக்கும் அமர் சிங் என்ற கங்கை அமரன், 1977ல் துவங்கி அவரது வாரிசுகளான வெங்கட் பிரபு,  பிரேம்ஜியின் இன்றைய படங்கள் வரையிலும் ஹிட் அடித்து வருகிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 28 April 2023

தண்ணீர் போல் வாழுங்கள்

இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாதது தண்ணீர். டைனோசர் இல்லை. மம்முத் இல்லை.  ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முன் வள்ளுவர் எழுதிய விசும்புல் துளி என்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது.

இந்த உலகில் எதனுடனும் தயங்காமல் சேருவது தண்ணீர். செம்புலப் பெயல் நீர் என தமிழ் இலக்கியம் சொல்லுகிறது. விண்ணில் இருந்து தூய்மையாக விழுந்தாலும் மண்ணில் மாசாவதை பற்றி கவலை படுவதில்லை. கழிவு நீர் வாய்க்காலில் முகம் கோணாமல் கலக்கிறது. 

ஆறுகளில் நிறைந்து ஓடினாலும், குறைவாக ஓடினாலும், உப்பு கடலில் கலந்தாலும் தன்னையே மாற்றி கொள்கிறது. வீழ்ச்சியை கூட மகிழ்ச்சியுடன் செய்வது தண்ணீர் மட்டும்தான். மனிதனுக்கு சிலிர்ப்பை தருவதும் அதுவே.

ஒவ்வொரு மனிதனும் தனது அந்தரங்கத்தை தண்ணீரிடம்  முழுமையாக காண்பிக்க தயங்குவதில்லை. அந்த ரகசியத்தை ஒருபோதும் பிறரிடம் தண்ணீர் சொல்லுவதில்லை. இந்த உலகமே தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. ஆனாலும் அதன் குணம் எக்காலத்திலும் மாறியது கிடையாது.

அதனால் தான், மனிதனை புனிதப் படுத்துவதற்கு பல்வேறு மதங்களிலும் நீரையே பயன் படுத்துகின்றனர். புனித நீர், புண்ணிய நதி, பரந்து விரிந்த கடல், சிறு குழந்தை கொட்டி மகிழும் விளையாட்டு பொருள், அருவெறுப்பான சாக்கடை எதுவாக இருந்தாலும் எதற்காக பயன் படுத்தினாலும் தன்மை மாறாத தண்ணீரைப் போலவே நாமும் இருப்போம்.



Saturday, 8 April 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -47

80ஸ் மோகனையும் எஸ்.என். சுரேந்தரையும் பற்றி பேசியதுமே இவர் நினைவையும் தவிர்க்க முடியவில்லை. 1980களில் வெளியான படங்களில் பெரும்பாலும் காதல் காவியங்கள்தான். அதனால் ரொமான்டிக் ஹீரோக்களும் அதிகம். அவர்களில் மோகனுக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர் இவர். இன்றைய சிவகார்த்திகேயன், விமல் மாதிரி... அவர்தான் சுரேஷ்.



எடிட்டிங், டான்ஸ் இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தவர் சுரேஷ். நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட. ஆனால், நடிகராகி விட்டார். 1981ல் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' படம் தான் நடிகராக அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு பள்ளிக்கூட பிளஸ் டூ மாணவன் வேடம். அப்போது சுரேசுக்கு 20 வயது கூட ஆகவில்லை.



உண்மையில், பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படம் தான் இவரது அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், சந்தானபாரதி படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்டு விட்டதால், பாரதிராஜாவின் படத்தில் நடிக்கவில்லை. இதனால் தான், நவரச நாயகன் கார்த்திக்கை இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.


'பன்னீர் புஷ்பங்கள்' பட வெற்றிக்கு பிறகு அடுத்த ஆண்டே கங்கை அமரன் இயக்கத்தில் பிரபுவுடன் சுரேஷ்  நடித்த 'கோழிகூவுது' செம ஹிட். தபால்காரர் ராமகிருஷ்ணனாக சுரேஷ் வருவார். அவருக்கு ஜோடி விஜி. பிரபுவுக்கு சில்க்ஸ்மிதா. அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படும் ரகம்.

அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காதல் நாயகனாக வலம் வந்தார் சுரேஷ். நதியா, ரேவதி... இவருடைய வெற்றி ஜோடிகள். 'உன்னை நான் சந்தித்தேன்', 'பூக்களை பறிக்காதீர்கள்', என இந்த ஜோடிகளின் ஹிட் படங்கள் ஏராளம்.


'வெண்ணிற ஆடை', 'காதலிக்க நேரமில்லை' படங்களின் பிரபல  இயக்குநர் ஸ்ரீதர், இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தயங்கி நிராகரித்தார். ஆனால், 1985ல் அவரே 'உன்னைத் தேடி வருவேன்' படத்தில் சுரேஷை நடிக்க வைத்தார்.


நடிகர் சுரேஷ் மிக மிக உயரமானவர். சுமார் ஆறு அடி உயரம். அதனால் டூயட் பாடும்போதெல்லாம் முழங்காலை லேசாக வளைத்தபடியே ஆடுவார். அதுவும் உயரம் குறைந்த நதியா, ரேவதி போன்றவர்களுடன் எல்லாம் அவர் நடித்தது வேற லெவல். அதே நேரத்தில் 80ஸ்களில் டிரெண்டிங்கில் இருந்த டிஸ்கோ டான்சை மிக அருமையாக ஆடிய நடிகர்களில் சுரேஷும் முக்கியமானவர்.

 'அபூர்வ சகோதரிகள்' படத்தில் "ரோஸி மை நேம் இஸ் ரோஸி...", "என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை..." பாடல்களை சொல்லலாம். அந்த படத்தில் சுரேஷுக்கு ஜோடி ஊர்வசி. நம்பவே முடியாத அளவில் 'முந்தானை முடிச்சி' ஊர்வசி செம்ம கிளாமரா நடிச்சிருப்பார். அந்த டிஸ்கோ நடன பாடல்களுக்கு இசை பப்பிலஹரி. இந்தி இசையமைப்பாளர். 1980களில் இளையராஜா உச்சத்தில் இருந்ததால் பிற மொழி இசையமைப்பாளர்கள் பலர் வந்தனர். ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரிலால், வரிசையில் பப்பிலஹரியும் ஒருவர்.

1980களில் துவங்கி தமிழில் சுமார் 100 படங்களில் சுரேஷ் நடித்திருக்கிறார். எல்லா படங்களுமே  ரொமான்டிக் வேடமாவே வந்ததால் போரடித்து, 1990களின் துவக்கத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அங்கு வெரைட்டியான ரோல்களில் நடித்த சுரேஷ், அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களும் தயாரித்திருக்கிறார்.

நம்மில் பலரும் சுரேஷ் என்ற பெயரை நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து நண்பர்களாவது இருப்பார்கள். ஆனால், 2கே கிட்ஸுகளுக்கு இந்த சுரேஷ் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கான தகவல் இது...

அஜித்தின் 'அசல்' படத்து வில்லன்... விஜயின் 'தலைவா' படத்தில் ஆஸ்திரேலிய ஓட்டல் ஓனர் கம் போலீஸ் அதிகாரி... இவரேதான்.



1990களில் தெலுங்கு பக்கமா போன சுரேஷ்,  சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு திரும்பி வில்லன், குணச்சித்திரம் என நடித்ததோடு சின்னத்திரைகளிலும்  தலை காட்டி வருகிறார்.

பதிவின் ஆரம்பத்தில் சுரேஷை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என சொன்னோம் இல்லையா..? அதுதான் இந்த பதிவின் நிறைவு தகவல். 'ஆசை' படத்தில் அஜித் பேசும் குரல் இவருடையது தான். இதுபோல நாகார்ஜுனா நடித்து ஹிட்டான 'ரட்சகன்' போன்ற சில படங்களுக்கும் அவருக்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்தான்...

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 30 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -46

ஒரு நடிகரையே சூப்பர் டூப்பர் ஹீரோவாக்கிய குரல், இவருடையது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், நடிகர் இப்படி பன்முக கலைஞரான இவர், இளைய தளபதி விஜயின் தாய்மாமன். அவர்தான் எஸ்.என்.சுரேந்தர். 

சிறு வயதிலேயே குழந்தை பாடகராக பாடல்களை பாடியிருக்கிறார். 1960களின் ஹிட்டான 'பாமா விஜயம்' படத்தில் வரும் "வரவு எட்டணா செலவு பத்தணா..." பாடலில் வரும் குழந்தை குரல் இவருடையதுதான்.


சினிமாவில் நடிகராகவோ, பின்னணி பாடகராகவோ மாற வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் பின்னணி குரல் கொடுப்பவராகி விட்டார். சீயான் விகரம் கூட, முதலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதன் பிறகு தான் நடிகரானார் தெரியுமா?

கன்னடத்தில் இருந்து டப்பிங் செய்து தமிழில் வெளியான, 'அதிசய மாப்பிள்ளை' என்ற படத்தில்தான் சுரேந்தர் முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு, 'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தார். இதுதான் அவர் டப்பிங் பேசிய முதல் தமிழ் படம். ஆதன் பிறகு, பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக 600 படங்களில் முன்னணி ஹீரோக்கள் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு எஸ்.என்.சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். 

'மைக்' புகழ் நடிகர் மோகனுக்கு முற்றிலுமாக இவரது இரவல் குரல்தான். ஆனால், மோகனின் முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே', படத்தின் ஹீரோவான நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனுக்குத்தான் எஸ்.என். சுரேந்தர் குரல் கொடுத்திருப்பார்.

டி.ராஜேந்தரின் 'ரயில் பயணங்களில்' படத்தில் ஹீரோ ஸ்ரீநாத்துக்கு, 'ஒரு தலை ராகம்' சங்கருக்கு... 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்குக்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் விஜயகாந்துக்கு, 'ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் ரகுவரனுக்கு... 1980ஸ் டிஸ்கோ டான்சரான நடிகர் ரவீந்தர் என சுரேந்தர் குரல் கொடுத்த நடிகர்கள் பட்டியல் ஏராளம். 'அந்நியன்' படத்தில் விக்ரமின் தந்தையாக வரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணுவுக்கும் இவரது குரல்தான்.

தமிழ் சினிமாவில் 1980களின் பெரும்பாலான அறிமுக நடிகர்களுக்கு முதலில் இவரது குரலைத்தான் பயன் படுத்தி இருக்கிறார்கள். 

ஆனால், இவரது குரல் என்றாலே மோகன் தான் நினைவுக்கு வருவார். (எனக்கும் கூட மோக் பற்றி எழுதியதுமே இவர் நினைவுக்கு வந்ததால் தான் இந்த கட்டுரை) 1981ல் 'கிளிஞ்சல்கள்' படம் துவங்கி 1987 வரை 75 படங்களுக்கு மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். படங்களில் மோகன் தான் வசனம் பேசுவதாகவே ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இவரது குரல் கன கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

மென்மையான ரொமான்டிக்கான,  வார்த்தைகளுக்கு வலிக்காத மென்மையான குரல் எஸ்.என்.சுரேந்தருக்கு. கண்களை மூடியபடி கேட்டால், 1990ஸ் படங்களில் நடிகர் விஜயின் குரல் போலவே இருக்கும். அவரது தாய்மாமன் இல்லையா? 


விஜயுடன் 'நாளைய தீர்ப்பு', 'பிரியமுடன்', 'நெஞ்சினிலே' மாதிரியான சில படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் நடித்திருக்கிறார். 'சென்னை 28' படத்திலும் தலை காட்டியிருக்கிறார்.

டப்பிங் குரல் கொடுப்பதை தாண்டி, எஸ்.என். சுரேந்தர் மிக அருமையான பின்னணி பாடகர். நான்கு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். இவரது காதல் டூயட் பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடுபவை.


"மா மரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா..."

"பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே..."

"கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா..."

"தனிமையிலே ஏஏஏ ஒரு ராகம்.. " 

"தேவதை போலொரு பெண் ஒன்று வந்தது இங்கே..."

"மாலை என் வேதனை கூட்டுதடி..."

இவை எல்லாம் சாம்பிள்தான்.. 


விஜய்க்காக 'தேவா', 'ஒன்ஸ்மோர்', 'விஷ்ணு', 'மாண்புமிகு மாணவன்', 'காதலுக்கு மரியாதை' என பல படங்களில் பாடி இருக்கிறார். அதில் சில...

"பூவே பூவே பெண் பூவே.. என் பூஜைக்கு..."

"ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..."

"சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா பாட்டு வரும்..."


பின்னணி பாடகர் ஒருவர் பாடல்களையும் பாடிக் கொண்டு, படங்களில் பின்னணி குரலும் கொடுத்துக் கொண்டு தனது குரலாலேயே தமிழ் சினிமாவுக்கு உச்ச நட்சத்திரமாக ஒருவரை அடையாளப்படுத்தியவர், எஸ்.என்.சுரேந்தர் ஒருவராகத்தான் இருக்கும்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 8 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -45

சினிமா என்றாலே வெவ்வேறு விதமான மயக்கம் தான். வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்றோ வாணி ஜெயராமுக்கும் சுசீலாவுக்கும் வேறுபாடு அறியாமலோ 1990களின் தேவா பாடல்களை இளையராஜா என்றோ நினைத்து பலரும் மயங்குவதுண்டு. அப்படித்தான் 1980களின் இவரது பல பாடல்களை இளையராஜா என்றே நினைப்போம். ஆனால் இவர் இளையராஜாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகுக்கு வந்தவர். அவர்தான் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.



தமிழின் மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தியிடம் தான் இவரும் சங்கரும் இசை படித்தனர். பிறகு, எம்.எஸ்.வி. தனியாக இசையமைத்தபோது அவரிடம் உதவியாளர்களாக சேர்ந்தனர். சங்கர் கணேஷ் இரட்டையர்களை தனியாக இசையமைப்பாளராக்கியவர் கவியரசர் கண்ணதாசன். அவர் தயாரித்த 'நகரத்தில் திருடர்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் நின்று போனது. அதன் பிறகு சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 'மகராசி' படத்துக்கு அவர்களை கண்ணதாசன் சிபாரிசு செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகன் ரவிச்சந்திரனுக்கு உடல் நல குறைவால் படம் தள்ளிப் போக, நாயகியான ஜெயலலிதாவும் தேவரிடம் இவர்களுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்.

காரணம், திரைக்கு வரும் முன்பே ஜெயலலிதாவின் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாட்டிய நாடகப் பணிகளில் சங்கர் கணேஷ்  இருந்திருக்கின்றனர். நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக போயஸ் தோட்ட இல்லத்துக்கும் சென்றதால் அறிமுகம். பல தடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 'மகராசி' படம் 1967ல் வெளியானது. 

அதன் பிறகு ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற இரண்டாம்கட்ட நாயகர்களின் படங்களில் இசையமைத்த இவர்களுக்கு 1971ல் எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில், "உனது விழியில் எனது பாடல்...", "சித்திரச் சோலைகளே..." "தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு..." என அனைத்து பாடல்களுமே ஹிட்.  இதுபோல 1972ல் வெளியான எம்ஜிஆரின் 'இதய வீணை' படத்துக்கும் (காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்... பொன்னந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு... மாதிரியான ஹிட் பாடல்கள்) இவர்தான் இசை. அப்போதிருந்தே எம்ஜிஆருடன் கணேஷூக்கு நல்ல பழக்கம்.

1970களில் நிறைய படங்களுக்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இதற்கிடையே சங்கர் மரணமடைய, சங்கர் கணேஷ் என்ற இரட்டை பெயரிலேயே கணேஷ் தொடர்ந்து இசையமைத்தார். தமிழ் ரசிகர்களிடம் அவரை அடையாளம் காட்டிய படம், 1977ல் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு'. தேவர் தயாரித்த அந்த படத்தில் "பருத்தி எடுக்கையில என்ன பல நாளும் பாத்த மச்சான்...", "ஆத்துல மீன் பிடிச்சி..." பாடல்கள் இன்றளவும் ஹிட்...

கமலுக்கு 'நீயா', 'மங்கம்மா சபதம்'. ரஜினிக்கு 'தாய்வீடு', 'ரங்கா', 'ஊர்க்காவலன்'. பாக்யராஜுக்கு 'கன்னிப் பருவத்திலே', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'எங்க சின்ன ராசா'. விசுவுக்கு 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'வீடு மனைவி மக்கள்' என தொடங்கி 1990களின் ஆரம்பம் வரை 15 ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்திருக்கிறார் கணேஷ். 

சில்க் ஸ்மிதா அறிமுகமான 'வண்டிச்சக்கரம்' படத்தின் இசையமைப்பாளரும் கணேஷ் தான். அந்த படத்தில் எஸ்பிபி பாடிய "வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட..." பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ரகம். 

இதே டைப்பிலான 'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் டிகேசி நடராஜன் பாடிய, "என்னடி முனியம்மா ஒன் கண்ணில மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..." பாடலும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த பாடல்தான்.

1950, 1960களில் பிரபலமான பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜாவை திரும்ப அழைத்து வந்து "செந்தாமரையே செந்தேன் இதழே..." பாடலை பாட வைத்து ஹிட்டாக்கினார்.



"செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..."

"உத்தரவின்றி உள்ளே வா, உன்னிடம் ஆசை கொண்டேன் வா..."

"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..."

"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..."

"பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம்..."

"மேகமே மேகமே பால் நிலா காயுதே... தேகமே தேயினும்..."

"ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு..."

"மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..."

"ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்..."

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது..."

"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட..."

"ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்..."

"பட்டுக்கோட்டை அம்மாளே பாத்துப்புட்டான் நம்மாளே..."

"மாசி மாசம் தான் சொல்லு சொல்லு... மேள தாளம் தான்..."

"மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்  மண்ணில் இறங்குது ஆகாசம்..."


இப்பிடி ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் சங்கர் கணேஷின் ஹிட் பாடல்கள் ஏராளம். 1980களின் வானொலிகளில் இளையராஜாவுக்கு இணையாக இவர் பாடல்கள் ஒலிப்பது வழக்கம்.

1980களில் 'டிஸ்கோ டான்ஸ்' மிக  பிரபலமாக இருந்தபோது 'டிஸ்கோ டான்சர்' இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்த எடுத்த 'பாடும் வானம்பாடி' படத்துக்கும் இவர்தான் இசை. நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நாயகனாக நடித்த இந்த படத்தில் அனைத்து டான்ஸ் பாடல்களுமே ஹிட்.

எம்.எஸ்.வி.யிடம் இருந்தபோது 'கலாட்டா கல்யாணம்' மாதிரி ஒரு சில படங்களில் கணேஷ் பாடியும் இருக்கிறார்.  இது போலவே 1980 வரை சில படங்களிலும் கணேஷ் நடித்திருக்கிறார். 'ஒத்தையடி பாதையிலே' படத்தின் ஹீரோ இவர்தான். அதில் கே.ஜே.யேசுதாஸ் குரலில் "செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா நான் விக்கிப் போறேன் தாகத்தில நில்லம்மா..." ன்னு டூயட் பாடலும் கணேஷுக்கு உண்டு.

1986ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் தபாலில் அனுப்பிய குண்டு வெடித்ததால் கணேஷின் கை விரல்கள் சிதறியதோடு வலது கண் பார்வையும் பறி போனது. இன்று வரை கையில் உறையுடனும் கருப்பு கண்ணாடி அணிந்தபடியும் கணேஷ் இருப்பதற்கு இதுதான் காரணம்.

குண்டு வெடிப்பால் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அப்பலோவில் சிகிச்சை பெற்ற கணேஷுக்கு முழு உதவியும் செய்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். எம்ஜிஆரை தனது தெய்வம் என்றுதான் கணேஷ் சொல்வார். அவரது படத்துக்கு இசையமைத்ததில் இருந்தே கணேஷூக்கு எம்ஜிஆருடன் நல்ல பழக்கம். ஆரம்ப கால அதிமுக காரர் என்றே கணேஷை சொல்லலாம். 

ஐந்து ஆண்டுகள் கழித்தும் கணேஷை வெடிகுண்டு தாக்குதல் துரத்தியது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் ஸ்ரீபெரும்புதுரில் கொலை  செய்யப்பட்டபோது அங்கு நடந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவரது இசைக் கச்சரிதான். மனித வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் மேடையில் இருந்தார்.

1980க்கு பிறகு திரைப்படம், இசைக் கச்சேரி மட்டுமே என இருந்த கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆயிரம் படங்களில் சுமார் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். உடலை ஒட்டி பிடித்தபடி டைட்டான சட்டை, கழுத்து கைகளில் நகைகள், 1960, 70களில் பிரபலமாக இருந்த நறுக்கு மீசை, இதுதான் இசையமைப்பாளர் கணேஷின் அடையாளம்.



இவரது மகனும் நடிகர் தான் சன், விஜய் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ இவரது மகன் தான்.

இசையமைப்பாளர் கணேஷுக்கு மார்ச் 4ல் 80ஆவது பிறந்த நாள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 2 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -44

1980களில் ரஜினி, கமலுக்கு செம டஃப் கொடுத்த நடிகர் இவர். இவரது பாதி படங்களுக்கு மேலாக சில்வர் ஜூப்ளி ஹிட் ரகங்கள். இன்று வரை பலரது இரவு தாலாட்டு கீதமாக நிச்சயம் இவரது படப் பாடல்களும் இருக்கும். நடிகர் மோகன். 'மைக்' மோகன் என செல்லமாக அழைப்பார்கள். 



கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இன்று வரை (35 ஆண்டுகளாக படம் எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும் கூட) இருப்பவர். 

கர்நாடகாவில் சாதாரணமா ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்க, அப்படியே அங்கிருந்து மோகனை சினிமாவில் அறிமுகம் செய்தவர், இயக்குநர் பாலு மகேந்திரா. 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? கமல். அடுத்த நான்கைந்து ஆண்டுகளிலேயே நமக்கு போட்டியாக மோகன் படங்கள் இருக்கும் என கமல் நிச்சயமாக அப்போது நினைத்திருக்க மாட்டார்.



கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்கில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்கான, தூர்ப்பு வெல்லே ரயிலு' என வலம் வந்த மோகனை தமிழுக்கு 1980ல் அழைத்து வந்தவர், இயக்குநர் மகேந்திரன். 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகம் செய்தார். இந்த படத்திலும் அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான ரோலில் நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே ஹிட்.

முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின்  "பருவமே புதிய பாடல் பாடு..." பாடலில் இருந்து மோகனின் வெற்றிக் கணக்கு  தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோகனே கதாநாயகனாக நடித்து வெளியான 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை' இரண்டும் அதிரி புதிரி ஹிட். இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. இந்த படங்களை இப்போது பார்த்தாலும் அறிமுக நாயகன் மாதிரியே தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஹிட் ரகம் தான்.  குறைந்தது 175 நாட்களை தாண்டின. 



1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கேமரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் ரிலீசான வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.



அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை

என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர். 

பாரதிராஜாவின் அறிமுகமான நடிகர் சுதாகர், தமிழில் தவற விட்ட இடத்தை மோகன் கச்சிதமாக பிடித்துக் கொண்டார். மோகன் நடித்த படங்களில் பைட் ஸீன் எதுவுமே இருக்காது. மசாலா படமாகவும் இருக்காது. ஆனாலும், மோகன் படங்களுக்கு திருவிழா கூட்டம் போல மக்கள் குவிந்தனர்.



அப்பாவித்தனமாக முகத்துடன் உருகி உருகி காதலிப்பது, மைக்கை பிடித்துக் கொண்டு நிஜ பாடகர் போலவே பாடி நடிப்பது என கலக்கியதால் மைக் மோகன் ஆனார்.

இப்படி ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக  'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.



வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக',  'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே'  'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன  பட்டியலுக்குள் அடங்காது. 

இது போலவே,


"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்..."

"இளைய நிலா பொழிகிறது..."

"வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்..."

"பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..."

"ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே..."

"தேவதாசும் நானும் ஒரு சாதிதானடி.."

"பாடவா உன் பாடலை..."

"தேவன் தந்த வீணை அதில் தேவி உந்தன் கானம்..."

"சங்கீத மேகம் தேன் சிந்தும் வானம்..."

"தென்றல் வந்து என்னைத் தொடும் சத்தமின்றி முத்தமிடும்..."

"கண்மணி நீ வர காத்திருந்தேன்..."

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது..."

"இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்..."

"வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்..."

"நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா..."

"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..."

"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ..."

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா..."

"ஊரு சனம் தூங்கிடுச்சி ஊதக் காத்தும் அடிச்சிடுச்சி..."

"வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..."

"மலையோரம் வீசும் காத்து மனசோரம் பாடும் பாட்டு கேட்குதா.."


இதெல்லாம் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டும் மோகன் ஹிட்ஸ்களில் வெகு சில. 1980களின் காதலர்களுக்கு மோகன் பாடல்கள் தான் காதல் கீதங்கள்.  

தமிழ் சினிமாவை இப்படி பலவிதமாக கலக்கிய நடிகர் மோகன் தனது சொந்தக் குரலில் படங்களில் பேசவில்லை. மைக்கை அடையாளமாகவே வைத்து மேடை பாடகராக நடித்து ஹிட் கொடுத்த மோகனுக்கு படங்களில் குரல் கொடுத்தவர் ஒரு பாடகர். அவர்தான் இளைய தளபதி விஜயின் தாய் மாமாவும் அன்றைய பிரபல பினனணி பாடகருமான எஸ்.என்.சுரேந்தர். 

மோகன் நடித்த தமிழ் படங்களில் 70%க்கும் அதிமானவை சுரேந்தர் குரல் தான். 1981ல் 'கிளிஞ்சல்கள்' துவங்கி 1987ல் வெளியான 'கிருஷ்ணன் வந்தான்' படம் வரை சுரேந்தர் குரல் தான் மோகனுக்கு. ஆனால் டப்பிங் குரல் என்பது கூட  ரசிகர்களுக்கு தெரியாத வகையில் மிக அருமையாக நடித்திருப்பார் மோகன். பாடலுக்கு எஸ்பிபி...! வசனத்துக்கு எஸ்.என்.சுரேந்தர்...!

முதல் படத்தில் இருந்தே வசனம் பேசுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த மோகன் 'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. மோகன் குரலே நன்றாக இருப்பதால் அவரையே பேச சொல்லுங்கள் என  கருணாநிதி சொன்னதால் அந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் மோகன் பேசினார்.

இதற்கிடையே, எஸ்.என்.சுரேந்தரும் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்த, கூடவே திரை வட்டாரத்தில் மோகனின் உடல் நிலை குறித்து வதந்தியும் பரவ, மோகனின் திரையுலக வாழ்க்கை இறங்கு முகமானது. 

அதன்பிறகு இப்போது வரை அவ்வப்போது தமிழில் மோகன் தலை காட்டினாலும் 1980களின் மோகன் தான் ரசிகர்களின் மனதில் என்றென்றும் ததும்பி நிற்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்