Thursday 31 December 2015

ஜெய்ப்பூரின் ஹவா மகால்



பள்ளிக் கூடங்களில் சரித்திர பக்கங்களை புரட்டும்போது பிருதிவிராஜ் ஜெயச்சந்திரன் என அறிமுகமான ராஜபுதன அரசர்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிழலாடிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வீரத்தை குருதியாக கொண்டு போர் குணத்தை தோலாக போர்த்தி திரிந்த ராஜபுத்திரர்களின் ராஜ்ஜியங்கள் சிதறிக் கிடந்தாலும் அவற்றின் கலவையாக ஜொலிக்கிறது இன்றைய ராஜஸ்தான் மாநிலம்.

கரிசல் காட்டில் தொடங்கி ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு அடையாளத்தை தாங்கி நிற்கிறது. அதுபோல ராஜபுத்திரர்களின் வீர பூமியான ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரின் அடையாளம் இளஞ்சிவப்பு நிறம். முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்கள் இந்தியாவில் பல உண்டு. அவற்றில் தலை சிறந்த நகரங்களில் ஜெய்ப்பூருக்கு தனி இடம் உண்டு.




ஜெய்ப்பூரின் சிறப்புக்கான முழு பெருமையும் மகாராஜா சவாய் ஜெய் சிங்கையே சேரும். ராஜஸ்தானின் கச்வாகா கிளான் என்ற பகுதியை 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சவாய் ஜெய்சிங். கி.பி.1727ம் ஆண்டில் ஜெய்ப்பூரை  திட்டமிட்டு உருவாக்கியவர் அவரே. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விசித்திரமானவை என்பதில் அபார நம்பிக்கை கொண்டவர். கலை உணர்வு மிகுந்தவர். ஒவ்வொரு நொடியையும் சித்திரமாக வடித்து வைக்க முடியாது. ஆனால், காலப்பேழையில் வாழ்க்கைச் சுவடுகளை பதித்து வைக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனாலேயே ஜெய்ப்பூரை வடித்த கையோடு காலத்தால் அழியாத மாளிகை ஒன்றையும் கட்ட விரும்பினார். அதன் விளைவாக உதயமானது தான் ஜெய்ப்பூர் ஜோகிரி பஜார் பகுதியில் விண்ணுயர எழுந்து நிற்கும் ஹவா மகால். ஆனால் திட்டம் மட்டுமே அவருடையது. அந்த மாகாலை கட்டும் பணிகள் தொடங்கும் முன் இந்த மண்ணை விட்டு அவர் மறைந்து விட்டார்.

அடுத்ததாக பட்டத்துக்கு வந்த அவரது மகன் சவாய் பிரதாப் சிங் கனவு மாளிகையை தொடர்ந்தார். எனினும் ஹவா மகால் பணியை முழுமையாக நிறைவேற்றியது ஜெய்சிங்கின் பேரன் சவாய் மதோசிங். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் 1799ம் ஆண்டு ஹவா மகால் முழு உருவம் பெற்றது. மதோசிங்குக்கு உறுதுணையாக இருந்த கட்டிடக் கலைஞர் பெயர் லால் சந்த் உஸ்தாத். ராஜபுதன கட்டிடக் கலையும் முகலாய கட்டிடக் கலையும் ஒன்று சேர்ந்த கலவையாக எழுந்தது இந்த ஹவா மகால்.



 கிருஷ்ணர் மீது மதோசிங்குக்கு மிகுந்த பக்தி. அதனாலேயே ஹவா மகாலின் முகப்பு பகுதியை கிருஷ்ணர் தலையில் அணிந்திருக்கும் கிரீடம் போலவே வடிவமைத்தார்.
 
ராஜஸ்தானுக்கே உரித்தான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற மணல் கற்களால் இந்த 5 அடுக்கு மாளிகை கட்டப்பட்டது. இந்த அழகு மாளிகையில் வசித்தவர்களும் அழகிகளே. ஆம். ராஜபுத்திர  அரசிகளும் இளவரசிகளும் இந்த மாளிகையில் தான் இருந்தனர். அன்னிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் வருவதை ராஜபுத்திரர்கள் அனுமதிப்பது இல்லை. ஆனாலும், நகரின் அன்றாட நிகழ்வுகளை வேடிக்கை பார்ப்பது விழாக் காலங்களில் நகர மக்களை ரசிப்பது என சின்ன சின்ன ஆசைகள் அந்த பெண்களுக்கும் இருக்கத்தானே செய்யும்.  

அதற்காகவே, ஹவா மகாலின் 5 தளங்களிலும் சிறிது சிறிதாக 953 ஜன்னல்கள் அமைக்கப்பட்டன. இன்றும் கூட ஹவா மகால் முகப்பில் அவற்றை காண முடிகிறது. இவற்றில் சில மர ஜன்னல்கள். அந்த ஜன்னல்களில் பிரத்தியேகமான திரைச் சீலைகள் பொருத்தப்பட்டு அதன் வழியாக ஜெய்ப்பூர் நகரத்தையும் நகர மக்களையும் ராஜபுத்திர இளவரசிகள் பார்த்துள்ளனர். ராஜஸ்தான் கடுமையான வெப்ப பூமி. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாறுமாறாக எகிறும். அதனால், உப்பரிகையில் இருந்த அரச குல பெண்களுக்கு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அந்த திரைச் சீலைகள் இருந்தன. இன்றைய காலங்களில் கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டுவதை போன்ற தொழில்நுட்பம், அது என்றும் கூறலாம். 




சிவப்பு நிற கிரில்கள், ஜன்னலுக்கு உள்ளே குவிந்த மண்டபம், ஸ்தூபி என விரிந்து நிற்கும் இந்த மகாலுக்கு மற்றுமொரு சிறப்பு என்னவெனில், பொன் மற்றும் வெள்ளி கலந்த கல் வேலைப்பாடு அலங்கார வளைவு. இது, முகலாய கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. வளைந்த மேற்கூரை தூண்கள் மற்றும் பூங்கா போன்றவை ராஜபுத்திரர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றி நிற்கின்றன.

ஹவா மகால் போலவே, பதேபுர் சிக்ரி நகரில் அமைந்துள்ள பஞ்ச் மகால் அமைந்துள்ளது. ஹவா மகால், பஞ்ச் மகால் இரண்டுமே பேலஸ் ஆப் விண்ட்ஸ் (காற்றின் அரண்மனை) என அழைக்கப்படுகின்றன. ஹவா மகாலின் பிரமிடு போன்ற கோபுரமானது முன்பகுதி என்றாலும் அதன் வழியாக உள்ளே செல்ல முடியாது. பக்கவாட்டு பாதை வழியாக நுழைந்து ராயல் சிட்டி பேலஸ் வழியாகத்தான் அதனுள் செல்ல முடியும்.

ராயல் சிட்டி பேலஸுக்கும் தனி வரலாறு உண்டு. ராயல் சிட்டி பேலஸ் என்ற அந்த அரண்மனையை கட்டியவர், ராஜா ஜெய்சிங். ஓய்வெடுக்க அவர் மிகவும் விரும்பிச் செல்லும் இடங்களில் இந்த அரண்மனைக்கு முதல் இடம் உண்டு. பிங்க் சிட்டிக்கு 2 நூற்றாண்டுகளாக அழகூட்டி வரும் ஹவா மகால், நகரின் முக்கிய பகுதியான படி சவுபத் சந்திப்பில் அமைந்திருக்கிறது. 

= வை.ரவீந்திரன்

No comments: