Thursday 31 December 2015

பாலைவன அதிசயம்



சுற்றுலா செல்ல கண்ணை கவரும் பல்வேறு இடங்கள் இருந்தாலும் பாலைவனம் என்பது வித்தியாசமான அனுபவத்தை தரும் பகுதி. அந்த பெயரை உச்சரிக்கும்போதே உதடுகளுடன் ஒட்டி வருவது, ஒட்டகம். கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீரால் சூழ்ந்துள்ள கடலில் பயணம் செய்ய கப்பல், எந்த அளவுக்கு அவசியமோ. அதுபோலவே, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் துகள்களால் நிறைந்து கிடக்கும் பாலைவனத்தில் பயணிக்க ஒட்டகம் அவசியம். அதனாலேயே, பாலைவன கப்பல் என்ற பெயர், அவற்றுக்கு உண்டு.



ஆடுகளையும் மாடுகளையும் மட்டும் பார்த்து பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விசித்திரமானதாகவும் விந்தையானதாகவும் தெரிகிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கு பிராந்தியத்தில் கூட்டம் கூட்டமாக ஒட்டகங்கள் சுற்றித் திரிகின்றன. ஜெய்சல்மீரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள தார் பாலைவனத்தை சுற்றிக் காட்டும் சுற்றுலா வாகனமாகவே ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. பாலைவன மணல் பரப்புக்குள் மெதுவாக சுமந்து செல்வது, வண்டியில் சொகுசாக அமர வைத்து இழுத்துச் செல்வது என விதம் விதமாக சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்துகின்றன.

பனி, மழை, கோடை என பருவநிலை மாற்றங்களின்போது 5 முதல் 10 டிகிரி வரையிலான வெப்ப மாறுபாட்டையே நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால், 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபாட்டை தாங்கும் சக்தி படைத்த அதிசய விலங்கினம் ஒட்டகம். முன், பின் கால்களை மடக்கிக் கொண்டு பாலைவன மணலில் ஓய்வெடுக்கும்போது அதுவும் ஒரு மணல் குன்றாகவே தோற்றமளிக்கிறது. மணல் என்னும் தோழியுடன் கைகோர்த்து அலைந்து திரியும் பாலைவனக் காற்றினால் உருவாகும் புழுதியால் பாதிப்படையாத சுவாச அமைப்புடன் உலவும் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது புதிய அனுபவம். 



ஒட்டகத்தின் முதுகில் நாம் ஏறியதும் மடக்கி வைத்திருக்கும் முன் கால்கள், பின் கால்களை ஒவ்வொன்றாக அது விரித்து எழுந்திருக்க தொடங்குகிறது. அப்போது, தலை குப்புற முன்னோக்கி விழுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே வேகத்தில் பின்னோக்கியும் செல்லத் தொடங்குவதால், ஒட்டகம் முழுமையாக எழுந்து நிற்பதற்குள் நம்முடைய அடிவயிற்றில் இருந்து அச்சப் பந்து உருண்டு தொண்டைக் குழியில் வந்து நிற்கிறது. அதன் பின், அசைந்தபடியே நடக்கத் தொடங்கியதும் வியர்க்கத் தொடங்கி விடுகிறது. ஆனாலும், அந்த திரில் அனுபவத்துக்காகவே ஒட்டகத்தில் சவாரி செய்யலாம்.

வறண்ட பூமியில் வண்ணமயமான வாழ்க்கையை சுவிகரித்த ராஜஸ்தான் மக்களுக்கே உரித்தான அடர் சிவப்பு நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம், பாலைவனத்தின் அடையாளம். வண்ணமயமான அலங்காரத்தில் இருந்தாலும் முகத்தில் உணர்ச்சியற்று துக்கத்தை தேக்கியபடியே தோற்றம் அளிக்கின்றன. இயற்கையாகவே அசைவ உணவு வகைகளை பெரும்பாலான ராஜஸ்தான் மக்கள் தொடுவதில்லை. அதனால், ஒட்டகம் பிரியாணிக்கு இடமில்லை. மாறாக, ஒட்டகத்தை குடும்ப உறுப்பினராக பாவித்து கொண்டாடுகின்றனர், பாலைவன பூமியின் விவசாயிகள்.
பாலைவன பகுதியில் பயிரிடும் வித்தையை அரசு கற்றுக் கொடுத்தாலும் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அச்சாணியாக இருப்பது ஒட்டகங்களே. 




ஜெய்சல்மீரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜோத்பூருக்கு சாலை வழி பயணம் மேற்கொண்டால் வழி நெடுகிலும் ஒட்டகங்களை கூட்டமாக காணலாம். ஆடு, மாடுகள் போல சாலைகளின் குறுக்கே மேய்ச்சலுக்காக உலாவுகின்றன.

பொக்ரானில் இருந்து ஜோத்பூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள அகாலே என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 40 நாட்களுக்கு ஒட்டகச் சந்தை நடைபெறுகிறது. குதிரைச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல மிகப்பெரிய அளவிலான இந்த சந்தையில் லட்சக்கணக்கில் ஒட்டக வியாபாரம் களை கட்டுகிறது. வயது, பல்லின் உறுதி ஆகியவற்றை பொறுத்து ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை ஒட்டகங்கள் விலை போகின்றன. 

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போலவே ஒட்டகங்களுக்கும் மூக்கணாங்கயிறு போட்டு வண்டிகளில் பூட்டுகின்றனர். சந்தைக்கு அழைத்து வரும் ஒட்டகங்களை வால், முதுகு என ஒவ்வொரு அங்கமாக அலங்கரித்து, முடியை தினுசு தினுசாக கத்தரித்து பார்வைக்கு வைத்துள்ளனர். ஓராயிரம் பாலைவன அதிசயத்தை அகோலே கிராமத்தில் ஒரு சேர பார்க்க முடிகிறது. 



மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவையே ஒட்டகத்தின் பிறப்பிடம். இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்களும் உண்டு. இந்தியாவில் காணப்படும் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள், டிரோமடரி அல்லது அரேபியன் ஒட்டகம் வகையை சேர்ந்தவை. இவை 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை வரை வளரும். 7 அடி ஒரு அங்குலம் உயரம் வரை வளரும். மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. 49 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி) வெப்பத்தில் கூட அவற்றுக்கு வியர்க்காது. மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகள் தடிமனானவை. எளிதாக மணல் உட்புகாது. அதனாலேயே, பாலைவனத்தில் தாக்குப்பிடிக்கின்றன. 

பாகிஸ்தான், எகிப்து, துபாய், அரபு நாடுகளில் வீட்டு மிருகமாக ஒட்டகங்கள் வளர்க்கப்படுகின்றன. எனினும், ஆப்பிரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையில் ஒட்டகங்கள் உள்ளன. வேலை செய்வதற்காக மட்டுமல்லாமல் பால், இறைச்சி மற்றும் துணி, பைகள் தைப்பதற்கான முடிகளுக்காகவும் ஒட்டகம் வளர்க்கப்படுகிறது. ஒட்டகம், பாலைவனம் தவிர ஜெய்சல்மீர் நகரில் ஆயிரமாண்டு கால சரித்திர புகழ்பெற்ற ஒரு இடமும் உள்ளது. அது குறித்து அடுத்த பதிவில்...

= வை.ரவீந்திரன் 

No comments: