Saturday 26 December 2015

நினைவிலாடும் திருவாதிரை

பள்ளி நாட்களில் மார்கழி மாதத்தின் அதிகாலை பனித் தூறலில் நனைந்தபடியே, ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் குளிக்கச் செல்வோம். குளித்து முடித்து வீடு திரும்பி நல்ல உடை அணிந்து, எங்கள் ஊரின் பெரிய கோயிலுக்கு செல்வது வழக்கம்.



மார்கழி மாதம் முழுவதும் கோயிலின் மூன்று பிரகாரங்களை (தேரோடும் வீதி, சப்பரங்கள் வலம் வரும் வீதி, கோயிலின் உள் பிரகாரம்) சுற்றி வந்து தேவார திரட்டில் இருந்து பஜனை பாடல்களை பாடிச் செல்வோம். அப்படித்தான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லாம் தேவார பாடல்கள் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனார்கள். 6 மணிக்கு தொடங்கும் பஜனை ஊர்வலம், 8 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு, வீடு திரும்பி, பள்ளி பயணம் ஆரம்பமாகும்.

திருவாதிரை திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பஜனை பாடல்கள் மாறும். தேவாரம் பாடல்களுக்கு பதிலாக திருவெம்பாவை பாடல்களை பாடுவோம். ஆருத்திரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய 9வது நாள் தொடங்கி திருவெம்பாவை நோன்பு காலம் என்பதெல்லாம் பின்னாளில் அறிந்து கொண்ட தகவல்.

10வது நாளில் ஆருத்திரா தரிசனம் விழா களை கட்டும். அன்றைய தினம், இன்னும் அதிகாலையில் எழுந்து கிணறுகளில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் குளித்து விட்டு 5 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகி விடுவோம். ஆருத்திரா தரிசன தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4.30 மணி முதல் 6 மணி) அனைத்து தேவர்களும் சிவ பெருமானை தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல, சிவபெருமானை பிடிக்காத சில முனிவர்கள் ஒன்று சேர்ந்து அவர் மீது மதம் பிடித்த யானை, முயலகன் என்ற அரக்கன், உடுக்கை, தீப் பிழம்பு போன்றவற்றை ஏவி விட்டதாகவும் அவற்றை சிவபெருமான் லாவகமாக பிடித்ததோடு முயலகனை தனது வலது காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு உடுக்கை ஏந்தி, தீப்பிழம்பாக தனது செஞ்சடையை விரித்து இடது காலை தூக்கிக் கொண்டு, அந்த முனிவர்கள் முன் நடனமாடிய தினமே ஆருத்திரா தரிசனம் என்றும் கூறுவது உண்டு.

இந்த தகவல்களை எல்லாம் செவி வழியாக அரைகுறையாக கேட்டிருந்த நாட்கள் அவை. அதிகாலை 5 மணி முதல் பெரிய கோயிலின் கொடி மரம் அருகில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகும். பல்வேறு விதமான அடுக்கு விளக்குகளில் தீபாராதனைகள் (ஆரத்தி, மகா ஆரத்தி) முடிந்து திருவெம்பாவையின் 21 பாடல்களும் பாடப்படும். மார்கழி மாத பனியில், அதிகாலை வேளையில் விழித்தெழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கோயிலில் தரிசனம் காண்பது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம்.

திருவாதிரை விழா எனப்படும் ஆருத்திரா தரிசனத்தின் கூடுதல் விசேஷம் களி. கண்டங்களி என்றும் அதை கூறுவோம். சரியாக சொல்வது என்றால் சர்க்கரை பொங்கலின் சற்று மாறுபட்ட வடிவமாக அந்த பிரசாதம் இருக்கும்.
ஆருத்திரா தரிசன நாளில் சேந்தனார் என்ற தொழிலாளியிடம் சிவபெருமான் களி வாங்கி சாப்பிட்டதாகவும் அதை நினைவு கூறும் விதத்தில், ஆருத்திரா தரிசன நாளில் இறைவனுக்கு களி படைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிப் பருவம் முடிந்த பிறகு, மார்கழி பஜனைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இன்றைய நாட்களில், அந்த தரிசனத்தை முற்றிலுமாக நான் தவற விடுவதாகவே கருதுகிறேன். மார்கழி மாத அதிகாலை 4 மணியானது நள்ளிரவு நேரமாகவே தெரிகிறது.




(26/12/2015 = ஆருத்திரா தரிசன விழா)

= வை.ரவீந்திரன் 

No comments: