ராஜஸ்தான் தலைநகர்
ஜெய்ப்பூரில் இருந்து ஏறக்குறைய 600 கி.மீட்டர் தொலைவில் அமைதியாக ஓய்வு எடுக்கும்
ஜெய்சல்மீர் நகரம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி தார் பாலைவனம் அருகே அமைந்துள்ள இந்த நகரம், ஒரு
காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்
குதிரை மீதேறி உலகை வலம் வந்த மாவீரர்களில் பலரும் இந்தியாவுக்குள் நுழைந்தது,
இதன் வழியாகத்தான். அதனாலேயே ஆப்கானிஸ்தான், எகிப்து, ஆப்பிரிக்கா, பெர்சியா, அரேபியா
போன்ற மேற்கு திசை நாடுகளை இந்தியாவுடன் இணைத்து வைக்கும் பாசச் சங்கிலியாகவும்
மாறியது. இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது வெளிநாடுகளில் இருந்து
பொருட்களை தருவிப்பது என மிக முக்கிய வணிக கேந்திரமாக 5 நூற்றாண்டுக்கு முன் மிக
பிசியாக செயல்பட்டிருக்கிறது, இந்த நகரம்.
இந்த பெருமை எல்லாம் உலக
அளவில் கடல் வழி பயணங்கள் அதிகரிக்கும் வரை மட்டுமே. ஆங்கிலேயரின் கடல் வழி
பயணத்துக்கு பிறகு, 15ம் நூற்றாண்டு முதல் ஜெய்சல்மீரின் பெருமையை இன்றைய மும்பை
தட்டிப் பறித்துக் கொண்டது.
ஜெய்சல்மீர் என்ற நகருக்கு
பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர், 11ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜபுத்திர அரசர்களில்
பட்டி வம்ச அரசரான ராவ் ஜெய்சல். அவர் தான், 1156ம் ஆண்டில் ஜெய்சல்மீர் கோட்டையை
கட்டி எழுப்பினார். ஆரம்பகாலத்தில் அந்த கோட்டை மட்டுமே ஜெய்சல்மீர் கோட்டை என
அவர் பெயரால் அழைக்கப்பட்டது. நாளடைவில் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளும் சேர்ந்து
ஜெய்சல்மீர் நகராகி விட்டது. இன்றும் கூட, நகரின் கம்பீரமே இந்த கோட்டை தான்.
தார் பாலைவனத்தின் திரிகுடா
மலை மீது மஞ்சள் மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை, கருங்கல்லாலான
வெளிப்புற சுவரை கொண்டது. அதற்கு அடுத்து வளைந்து நெளிந்த செல்லும் 2 மற்றும் 3ம்
அடுக்கு சுவர்கள் உள்ளன. இந்த பகுதியில் தான் கொதிக்கும் எண்ணெய், தண்ணீர்
ஆகியவற்றை கொண்டு ராஜபுத்திரர்கள் அகழி அமைத்துள்ளனர். மகாராஜா ஜெய்சல் காலத்தில்
10க்கும் உட்பட்ட கொத்தளங்கள் மட்டுமே கோட்டையில் இருந்தன. தற்போதைய, 99
கொத்தளங்களில் பெரும்பாலானவை பின்னாளில் கட்டப்பட்டவை.
காலை நேர ஒளியில் தங்க
நிறத்தில் ஜொலிப்பதாலேயே அது தங்கக் கோட்டை எனப்படுகிறது. தங்க நிற கோட்டையும்
தங்க நிற மணலாலும் சூழப்பட்டிருப்பதால் தங்க நகரம் என்று ஜெய்சல்மீர்
அழைக்கப்படுகிறது. பாலைவனத்தின் அருகே மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை,
இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்ததாலோ என்னவோ இதன் சரித்திரமும் போர்களாலும் மனித
உயிர் பலிகளாலும் பின்னி பிணைந்திருக்கிறது. ஜோத்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற
ராஜபுத்திர அரசர்கள் முதல் முகலாயர், ஆங்கிலேயர் என நீடித்து இன்றைய பாகிஸ்தான்
வரை பல்வேறு போர்களை இந்த நகரம் சந்தித்துள்ளது.
ஜெய்சல்மீரின் யுத்த
சரித்திரத்தை முதலில் எழுதியவர் அலாவுதீன் கில்ஜி. 13ம் நூற்றாண்டில் கோட்டையை
கைப்பற்றிய அவர் வசம், 9 ஆண்டுகள் இந்த கோட்டை இருந்தது. அவருடைய முற்றுகையின்போது
கோட்டைக்குள் இருந்த ராஜபுத்திர பெண்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது
நெஞ்சை உருக்கும் சரித்திர தகவல். அதன்பிறகு, 1541ம் ஆண்டில் நடந்த உக்கிரமான போரில்
ஜெய்சல்மீர் கோட்டையை முகலாய பேரரசர் ஹுமாயுன் கைப்பற்றினார்.
இந்த யுத்த சப்தம்,
நூற்றாண்டுகளை கடந்து இன்னமும் ஜெய்சல்மீரில் எதிரொலித்து வருகிறது. கடந்த 1965
மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்தியா & பாகிஸ்தான் இடையிலான போரில் முக்கிய
போர்த்தலமாக இருந்தது, ஜெய்சல்மீர் தான்.
அடிக்கடி போர் மூளும் பூமி
என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர் ஜெய்சல் அறிந்திருந்தாரோ என்னவோ?
அதனால்தான், கோட்டைக்குள்ளேயே மக்களையும் தங்க வைத்திருந்தார், ஜெய்சல். இன்றளவும்
அது தொடருகிறது. ஆம். சுற்றுலா தலமாகி விட்டதால் ஜெய்சல்மீர் நகரம் விரிந்து
பரந்தாலும் ஜெய்சல்மீர் கோட்டைக்குள் இன்றும் 4 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இவர்கள் எல்லாம், ஜெய்சல்
காலம் தொட்டு கோட்டையில் சேவகம் செய்த வம்சாவளியினர்.
பாலைவன வெயிலுடன் அழுக்கேறிய
மஞ்சள் நிறத்தில் பழமையை பூசியபடி தகதகவென ஜொலிக்கும் இந்த கோட்டையினுள் உள்ள
மக்கள் தொகையை போலவே, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து
வருகிறது. தற்போதையை ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 5 லட்சம்.
கோட்டையின் கம்பீரத்தையும்
ஆயிரம் ஆண்டுகளை கடந்த பழமையையும் ரசித்து பார்த்து திரும்பினால் அதி நவீன டிஜிடல்
கேமராவில் ஒருவர், கோட்டையை படமாக்கிக் கொண்டிருந்தார். இணைக்க முடியாத வெவ்வேறு
இரு காலகட்டங்களை இணைக்கும் புள்ளியாக ஜெய்சல்மீர் இருப்பதை உணர முடிகிறது.
= வை.ரவீந்திரன்
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment