பிரபல வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதனை பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஏராளமான ஹிட் பாடல்களின் இசையமைப்பாளர் என தெரியுமா? அவரைப் பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். குன்றக்குடியில் பிரபல சங்கீத பரம்பரையில் பிறந்தவர் வைத்தியநாதன். கர்நாடக இசைக்கலைஞரான அவரது தந்தைக்கு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், கிடார் போன்றவையும் வாசிக்கத் தெரியும். அவரிடம் இருந்து 8 வயதிலேயே வயலினை வாசிக்க கற்றுக் கொண்டார் வைத்திய நாதன்.
அதன் பிறகு, வாழ்நாள் முழுவதும் வயலினை சுமந்த குன்னக்குடி வைத்தியநாதன், பக்க வாத்திய கருவியான வயலினுக்கு தனி மரியாதையையே பெற்றுத் தந்தவர். இசைக் கச்சேரிகளில் பாடகர் நடுநாயகமாக இருக்க மற்ற இசைக் கலைஞர்கள் எல்லாம் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆனால், இவரது கச்சேரியில் வயலின் தான் நடுநாயகம். அவர் வாசித்தால் வயலின் பாடும், சிரிக்கும். குன்னக்குடி வைத்தியநாதனின் முக பாவனைக்கு ஏற்ப வயலின் இசைக்கும். அவரது வயலினை அனுபவித்தவர்களுக்கு இது புரியும்.
ஆரம்ப காலத்தில் இருந்து 3000 மேடைக் கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் குன்னக்குடி வைத்தியநாதன். பிரபல இசைக் கலைஞர்களான செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம், வலையப்பட்டி சுப்பிரமணி, சூலமங்கலம் சகோதரிகள் (கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசத்தின் பிரபலமான பாடலை பாடியவர்கள்) என கச்சேரி வாசித்திருக்கிறார் குன்னக்குடி வைத்தியநாதன். இசைக் கச்சேரிகளுடனேயே சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.
அவருக்கு சென்னையில் ஆதரவு அளித்து சினிமா என்ட்ரி கொடுத்தது சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி சகோதரிகள். இசையமைப்பாளராக அறிமுகம் செய்து நிறைய பட வாய்ப்புகளையும் தந்தவர், பக்திப் படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் (திருவிளையாடல் படத்தின் நக்கீரர்). அவர்தான் அவரது தயாரிப்பில் உருவான 'வா ராஜா வா' என்ற படத்தில் 1969ம் ஆண்டில் இசையமைப்பாளராக்கினார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளில் 20 படங்களுக்கு இசையமைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன்.
எம்ஜிஆர் ஒன்பது நாயகிகளுடன் நடித்த 'நவரத்தினம்' படத்தின் இசை இவர்தான். சிவாஜி, ஜெமினி, கே.பி.சுந்தராம்பாள், சிவக்குமார் என பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முதல் சினிமாஸ்கோப் படமான 'ராஜராஜ சோழன்' படத்துக்கும் இவர் தான் இசையமைப்பாளர்.
சீர்காழி கோவிந்த ராஜன் நடித்த 'அகத்தியர்', கே.பி.சுந்தராம்பாளின் 'காரைக்கால் அம்மையார்', திருமலை தெய்வம், திருவருள், தெய்வம், திருமலை தென்குமரி, மனிதனும் தெய்வமாகலாம், குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருகமள், தோடி ராகம்... இவை எல்லாம் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் உருவான படங்கள். இதில் தோடி ராகம் திரைப்படம் அவரது தயாரிப்பு என்பது கூடுதல் தகவல்.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த திரைப்பாடல்களில் கிட்டத்தட்ட அனைத்துமே இன்று வரை ரசிகர்களின் மனதை வசீகரிப்பவைதான்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..., குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..., மருதமலை மாமணியே முருகையா..., மதுரை அரசாளும் மீனாட்சி..., மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க..., என்னடா தமிழ் குமரா எனை நீ மறந்தாயோ..., முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே நினைத்திருந்தேன்..., உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...,
நமச்சிவாய என சொல்வோமே நால்வகை துன்பத்தை வெல்வோமே..., தக தக தகவென பாடவா சிவ சக்தி சக்தியோடு ஆடவா..., தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே... எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்துக் கூட்டி பாட வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்... இவை எல்லாம் குன்னக்குடியின் பக்தி ரசம் சொட்டும் பாடல்களில் சில.
இது மட்டுமல்ல..., கல் எல்லாம் சிலை செய்தான் பல்லவ ராஜா..., உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல நம்மை கண்ண நம்மாலே நம்ப முடியல.., இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்..., பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்..., குருவிக்கார மச்சானே நம்ம கடவுள் சேத்து வச்சானே..., காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு...,
என மற்ற பாடல்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தோடி ராகம் படத்தில் இடம் பெற்ற 'கொட்டாம் பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கில நான் ரொட்டியத்தான் திம்பனா குட்டியத்தான் பாப்பனா...' என்ற பாடல் அவரது இசையின் வேறு ரகம். அந்த பாடலை பாடியதும் அவர்தான்.
கர்நாடக இசை, வயலின், திரை இசை, பின்னணி பாடகர் என கலக்கிய குன்னக்குடி வைத்தியநாதன் பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தும் குழுவின் செயலாளராக 28 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சி மையமும் துவக்கினார்.
இசைக்காகவே வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்த குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிலும் 20 படங்களுக்கு இசையமைத்ததோடு 'திருமலை தென்குமரி' படத்துக்காக தமிழக அரசிடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றிருக்கிறார்.
(பவளங்கள் ஜொலிக்கும்)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment