தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களை பட்டியல் போட்டால் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என நிறைய பெயர்கள் நினைவுக்கு வரும். ஆனால் வில்லி என்றால்...? சில பெயர்களிலேயே ஸ்ட்ராக்காகி நின்று விடும். அந்த ஒரு சில பேரில் ஒருவர் எம்.என்.ராஜம். 'வின்னர்' படத்தில் வடிவேலுவின் பாட்டியாக வருவாரே அவரே தான்.
"வயசானாலும் இந்த வில்லத்தனம் மட்டும் போகல'ன்னு அந்த படத்தில் வடிவேலு பேசும் டயலாக், நம்பியாருக்கு மட்டுமல்ல, எம்.என்.ராஜமுக்கும் பொருந்தும்தான். "இந்த கைப்புள்ள இப்ப எங்க இருக்கானோ? சாப்பிட்டானோ இல்லியோ"ன்னு இன்றைய மீம்ஸ் யுகம் வரை வலம் வரும் எம்.என்.ராஜம், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1949. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்த அன்றைய ஹிட் படமான 'நல்லதம்பி'யில் 10 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து அவருக்கு கிடைத்த புரமோஷன், வில்லி வேடம். அதுவும் சாதாரண வில்லி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கே வில்லி. அவரது எவர்கிரீன் சூப்பர் ஹிட்டான 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தில் காந்தா என்ற தாசிப்பெண் வேடத்தில் வில்லியாக கலக்கி இருப்பார், எம்.என்.ராஜம்.
பணக்கார பாரீன் ரிட்டர்னாக தன்னிடம் வந்து சேர்ந்து, பின்னர் தொழு நோயாளியாக மாறிப்போன எம்.ஆர்.ராதாவை மாடிப் படிக்கட்டுகளில் அவர் எட்டி உதைக்கும் காட்சிகளும், "அடியே காந்தா ... ... ... நீ கொழுத்து திரிகிறாய். நான் புழுத்துச் சாகிறேன்" என எம்.ஆர்.ராதா பேசும் வசனங்களும், ""உங்கள் மனைவியோ பருவ மங்கை, பாலுவோ பார்த்தோர் மயங்கும் பருவ வயதினன்..." என எம்.ஆர்.ராதாவிடம் அவர் பேசும் வசனங்களும் அவரது வில்லித்தனத்தின் உச்சம் பேசும். அப்போது பதின்ம வயதுதான் எம்.என்.ராஜமுக்கு. காலால் உதைக்கும் ஸீனில் நடிக்க தயங்கியபோது நடிப்புத்தான் என ஊக்கப்படுத்தி அவருக்கு தைரியம் கொடுத்தவர் எம்.ஆர்.ராதா.
சிவாஜி பத்மினி நடித்த 'தங்கப் பதுமை' படமும் அவரது வில்லித்தனத்துக்கு மற்றொரு உதாரணம். கண்களை உருட்டிக் கொண்டு வாயை ஒரு விதமாக சுளித்தபடி வில்லித்தனம் செய்யும் எம்.என்.ராஜம் நடிப்பை தற்போது 60ஐ கடந்தவர்களால் நிச்சயமாக மறந்திருக்க முடியாது. 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை வேடம் இவருக்கு.
இன்றைய டிவி சீரியல்களின் வில்லிகள் எல்லாம் இவரது லேட்டஸ்ட் வெர்ஷன்கள் தான். தமிழில் 1960களில் வெளியான ஏராளமான சினிமாக்களில் குடும்ப கதைகளின் ஆஸ்தான வில்லி எம்.என்.ராஜம் தான்.
வில்லியாக மட்டுமல்ல, குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நாயகியாகவும் நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். 'நாடோடி மன்னன்' படத்தில் மன்னராக வரும் எம்ஜிஆரின் ராணி மனோகரி இவர்தான். 'பாசமலர்' படத்தில் சிவாஜியின் ஜோடியும் இவர்தான்.
படங்களில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக இணைந்து ஆடிப் பாடி எம்.என்.ராஜம் நடித்த சூப்பர் ஹிட் எவர்கிரீன் பாடல்கள் பல உண்டு. குறிப்பாக சிவாஜியுடன் ஏராளமான பாடல்களில் ஜோடியாக ஆடிப் பாடி இருக்கிறார்.
எம்.என்.ராஜம் ஹிட் பாடல்களில் ஸாம்பிள்கள் சில...
'பாசமலர்' படத்தில் சிவாஜியுடன் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்...
'பாவை விளக்கு' படத்தில் சிவாஜியுடன் காவியமா நெஞ்சில் ஓவியமா...
கொக்கர கொக்கரக்கோ சேவலே...
'தெய்வப்பிறவி' படத்தில் காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு...
'மங்கையர் திலகம்' படத்தில் ஒருமுறைதான் வரும், கதை பல கூறும், உல்லாச புதுமைகள் கூறும் இளமை வர்ணங்கள் பலவாறு காட்டும்...
'ரத்தக் கண்ணீர்' படத்தில் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்டத்தை பார்க்கவில்லை ஆளை ஆளை பார்க்கிறார்...
'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே...
எம்ஜிஆருடன் 'திருடாதே' படத்தில் ஓ மிஸ்டர் பாலு...
எஸ்எஸ்ஆருடன் தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா...
அவ்வளவு ஏன்? வில்லன் நடிகர் எம்என்நம்பியாருடன் கூட ஜோடி போட்டு பாடி ஆடி நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். அந்த பாடல், 'மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம்பெற்ற ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...
1970களுக்குப் பிறகு தனது வயதுக்கு ஏற்ற வேடங்களுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு, கிராஜூவலாக தமிழ் சினிமாவில் தன்னை நீடித்துக் கொண்டார்.
பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி, அந்த ஒரு நிமிடம், மாங்குடி மைனர் என 1980 களிலும் அவரது திரைப்பபயணம் தொடர்ந்தது.
அதன் பிறகும் கூட 'மறுமலர்ச்சி' படத்தில் ரஞ்சித்தின் தாயார், 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் கமலின் பாட்டி, 'திருப்பாச்சி' படத்தில் த்ரிஷாவின் பாட்டி, 'மருதமலை' படத்தில் ஹீரோயினின் பாட்டி, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'...
இப்படியாக, 1950களில் ஆரம்பித்த இவரது கலைப்பயணம் தொய்வு இல்லாமல் 2k கடந்தும் நீடிக்கிறது. சின்னத்திரை தொடர்களிலும் எம்.என்.ராஜம் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம், வில்லி, நாயகி, குண சித்திரம், அம்மா, பாட்டி என எழுபது ஆண்டுகளாக நீடித்ததோடு இன்றைய மாஸ் மீடியாவான சின்னத்திரை வரையிலும் ஆரவாரம் இல்லாமல் முத்திரை பதித்த பெருமை எம்.என்.ராஜத்தை மட்டுமே சேரும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சேரும். தமிழ் திரையுலகில் வெளிமாநில நடிகைகள் கோலோச்சியபோது மதுரையில் இருந்து வந்து தமிழ்ப் பெண்ணாக கலக்கியவர், எம்.என்.ராஜம்.
இவ்வளவு பெருமைக்குரிய எம்.என்.ராஜமின் கணவரும் ஒரு திரை பிரபலம் தான். அவர் யார் தெரியுமா? அவர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்
(பவளங்கள் ஜொலிக்கும்)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment