Friday 16 June 2023

கரகாட்டக்காரன்... நினைவுகள்...

 தமிழ் சினிமாவில் என்றென்றும் நினைவில் இருக்கும் படங்களில் ஒன்று 'கரகாட்டக்காரன்', வெளியாகி 35 ஆண்டுகளாகி விட்டது. எவ்வளவு வேகமான கால ஓட்டம். ஏழெட்டு ஆண்டுக்கு முன் வந்த 'ரஜினி முருகன்' படத்தில் கூட 'கரகாட்டக்காரன்' வாழைப்பழ காமெடி வசனம் வரும். அதுதான் அந்தப் படத்தின் காலத்தை வென்ற வெற்றி.



இன்றைய டிஜிடல் யுகம் மாதிரி, 1990களில் ஒரே நேரத்தில் எல்லா தியேட்டர்களிலும் புதிய படங்கள் வெளியாகாது. முதலில் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என படிப்படியாக ரிலீசாகி டூரிங் டாக்கீஸ் வரை வந்து சேர ஒரு வருடம் வரை பிடிக்கும். ஆனால் இந்த படம்  பஞ்சாயத்து அளவிலேயே இருந்த எங்கள் ஊரிலும் கூட முதன் முறையாக நேரடியாக ரிலீசானது. அதுவும் இரண்டு தியேட்டர்களில். ஒன்றில் முப்பது நாட்களும் மற்றொன்றில் பதினைந்து நாட்களும் ஓடியது. மொத்தம் 45 நாட்கள்.

கியூப் டிஜிடல் தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. பிலிம் சுருள் பெட்டிதான். ரெண்டு தியேட்டருக்கும் ஒரே ஓனர் என்பதால் ஒரே பிலிம் சுருள் ரெண்டு தியேட்டருக்கும் மாறி மாறி பயணம் செய்யும். அது ஒரு வித்தியாசமான சினிமா காலம். படம் பார்க்க செல்வதே திருவிழா மாதிரி தான். என்னுடைய பள்ளித் தோழன் ஒருத்தனுக்கு திருக்குறளோ, தமிழ் செய்யுளோ கூட மனப்பாடமாக தெரியாது. ஆனால் முழு படத்தின் வசனங்களையும் சீன் பை சீனாக மனப்பாடமாக சொல்லுவான். அந்தளவுக்கு 'கரகாட்டக்காரன்' மயக்கம் பட்டி தொட்டியெங்கும் பரவி கிடந்தது.

சிவாஜி கணேசன், பத்மினி நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' படத்தை எம்ஜிஆருக்கு ஏற்ற வகையில், திரைக்கதை அமைத்து அதை 1990ஸ் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி வெற்றி பார்முலா படமாக உருவாக்கினால்...

அதுதான் 'கரகாட்டக்காரன்'...

கதைப்படி பார்த்தால் சாதாரண மசாலா படம் தான். பெரிதாக ஒன்றும் இல்லை தான். ஆனால் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்பட்ட படம். அந்த அளவுக்கு சரி விகிதமாக சமைத்து சுவையும் ருசியுமாக பரிமாறப்பட்ட புல் மீல்ஸ்.

தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகர் கங்கை அமரனின் இயக்கத்துக்கும் பாடல்களுக்கும் இந்த படம் ஒன்றே மிகப் பெரும் சாட்சி. 1980, 90களில் மோகன், ராமராஜன் என பல ஹீரோக்களை தனது பாடல்களாலேயே ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இளையராஜா, இதில் தனி ஆவர்த்தனமே பண்ணி இருப்பார். 


'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட "பெட்ரோ மாக்ஸ் லைட்" காமெடிக்கு பிறகு கவுண்டமணி, செந்தில் ஜோடியை இன்று வரை நினைவு படுத்தும் 'வாழைப்பழ காமெடி'. 2கே கிட்ஸ் வரையிலும் உச்சரிக்கும் "சொப்பன சுந்தரி" என்ற பெயர். பீலா விடுபவர்களுக்காகவே சொல்லப்படும் கவுண்டமணியின் "என்னடா கலர் கலரா ரீலா விடுற..." இது மாதிரியான காலம் கடந்தும் பேசப்படும் ஸ்பெஷல் அயிட்டங்கள் கரகாட்டக்காரனில் ஏராளம்.

கிராமத்து கலைஞர்களுக்கே உரித்தான குசும்புகளுடன் கவுண்டமணி, செந்தில் மற்றும் கரகாட்ட கோஷ்டிகள் காமெடியில் பின்ன, அவர்களுக்கு இணையாக கோவை சரளாவும் கலக்க, முதன் முறையாக இயக்குநர் சந்தான பாரதி வில்லனாக மிரட்ட, ராமராஜன்- கனகா காதலுடன் காந்தமாக கவர்ந்து இழுத்தது 'கரகாட்டக்காரன்'. திரும்ப திரும்ப தியேட்டருக்கு போய் படத்தை பார்த்தவர்களும் உண்டு.


வரைந்து வைத்தது போன்ற உதடுகளும் உருண்ட விழிகளுமாக மயக்கிய கிராமத்து குமரியான கரகாட்டக்காரி கனகா, இன்னமும் மனதுக்குள் ஜில்லென பனி மழை பொழிகிறார். 

கூடவே, 

"சாமத்தில வாரேன், யம்மா சாமந்திப் பூ தாரேன். கோபப்பட்டு பார்த்தா, யம்மா வந்த வழி போறேன்..."

"மானே, மயிலே, மரகத குயிலே... தேனே நான் பாடும் தெம்மாங்கே... பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே..."

என்ற வரிகளும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது, ஆண்டுகளைக் கடந்தும்...

இன்று கரகாட்டக்காரன் வெளியான நாள் ஜூன் 16, 1989

#நெல்லை_ரவீந்திரன்

No comments: