Sunday, 20 November 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -36

80களில் இளையராஜாவின் ராஜாங்கம் என்றால் 90களுக்கு இவரது கானம் தான். நீண்ட தூர பயணங்களில் இவரது இசையும் கூட வழித் துணை. பலரும் இதை அறிந்திருக்க மாட்டார்கள். வாலியா கண்ணதாசனா என்ற மன மயக்கத்துக்கு நிகரானது, இந்த இசை மயக்கமும். அந்த மயக்கத்தை தந்தவர் மெல்லிசை மன்னரால் தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா.



இசையராஜாவின் இசைக்குழுவில் இசை பயணத்தை ஆரம்பித்த இவரது முதல் படம் 1986ல் வெளியான 'மாட்டுக்கார மன்னாரு'. ராமராஜனின் 'மனசுக்கேத்த மகராசா' (1989) ரசிகர்கள் மனதில் தடம் பதிக்க, 'வைகாசி பொறந்தாச்சி' படம் புகழ் உச்சிக்கு எடுத்துச் சென்றது. அப்புறம் பத்து பதினைந்து வருஷம் அடை மழைதான். ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், தேவா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த், கார்த்திக், சத்யராஜ், ஆர்.பாண்டியராஜன் படங்கள்  ஆரம்ப கால அஜித், விஜய், படங்கள் பெரும்பாலானவை தேவாவின் கைவண்ணமே.

ரஜினியின் எவர்கிரீன் மூவி பாட்ஷா ஒன்றே இவர் பெயர் சொல்லும். ரஜினி படங்களின் டைட்டில்களில் வரும் "S U P E R  S T A R  R A J N I  ரஜினி" என்ற எழுத்துக்களின் பிஜிஎம் இவரே. அண்ணாமலையில் துவக்கி வைத்தார். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இவரை கொண்டாட வேண்டும். அருணாச்சலம் போன்ற படங்களும்  இவர்தான். 



கமலுக்கு பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அவ்வை சண்முகி... இப்படி...

ரஜினிக்கு போலவே சரத்குமாருக்கு "வாராரு வாராரு அண்ணாச்சி..." பாடலை தந்ததும் தேவாதான். நம்ம அண்ணாச்சி, கட்டபொம்மன், சூரியன், ராஜபாண்டி, சாமுண்டி, நட்புக்காக, வேடன்... என சரத்தின்  மிக அதிக அளவிலான ஹிட் படங்களின் பாடல்கள் இவரின் இசையே.

ஆசை, வாலி, காதல் கோட்டை, வான்மதி, ரெட், ரெட்டை ஜடை வயசு, சிட்டிசன் என அஜித்துக்கும் குஷி, ஒன்ஸ்மோர், ரசிகன், தேவா என விஜய்க்கும் ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். இசையமைப்பாளராகும் ஆர்வம் கொண்டவராக அஜித் நடித்த முகவரி படத்தின் இசையும் இவரே. அஜித்தின் பெரும்பாலான ஆரம்ப கால ஹிட் பாடல்களின் முகவரி தேவா தான்.

'தகடுன்னா தமிழ்நாட்டுக்கே தெரியும்..'னு அடிதடி படத்தில் வரும் சத்யராஜ பத்தின பாடலுக்கும் இசை, குரல் இவர்தான்.

1975 -1990 இளையராஜாவின் பாடல்கள் வெகு பிரபலம் என்றால் 1990 -2005 தேவாவின் கானங்கள் தான் பொற்காலம்.

பொற்காலம், சோலையம்மா, தெற்கு தெரு மச்சான், பாரதி கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை மச்சான், காதலே நிம்மதி மாதிரியான 90களின் ஹிட்  படங்களின் இவரது பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் விருப்ப ரகம்

'தூதுவளை இலை அரைச்சி...,' 'அத்திப்பழம் சிவப்பா இந்த அத்த மக சிவப்பா...,' 'ஆடியில சேதி சொல்லி...' 'முத்து நகையே முழு நிலவே...' 'வைகறையில் வந்ததிந்த வான்மதி...,' 'சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது...' இவை எல்லாம்  சாம்பிள்.

பாடகராக தேவாவின் குரல் நடிகர் மணிவண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்தும். 'கோகுலத்தில் சீதை' படத்தில் "கோகுலத்து கண்ணா கண்ணா.." பாடலிலும், 'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜியுடன் பாடும் "உன்னில் என்னில் உள்ளது காதல்.." பாடலும் உதாரணம்.

"விதம் விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...", "சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா...', "அண்ணா நகரு ஆண்டாளு...," "ஒயிட்டு லெக்கான் கோழி ஒண்ணு கூவுது..."  இப்படியான பாடல்களால் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் தேவா.

இதனாலேயே கானா இசையமைப்பாளர் என்ற முத்திரையை குத்தி அவரது இசையை ஒதுக்க பார்த்தனர். டியூனை காப்பியடிப்பவர் என்றெல்லாம் கூட விமர்சித்தார்கள்.

ஆனால், அவரது தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல்... சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் இறுதிச் சடங்கில் ஒலித்தது.

இந்த நிமிடம் கூட இவரது பாடல் என தெரியாமலேயே யாரேனும் தேவ கானத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். திரை இசையின் சாம்ராட் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், கொடுத்த 'தேனிசை தென்றல்' பட்டத்துக்கு பெருமையை சேர்த்தவர்  தேவா.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன் 

Friday, 23 September 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -37

 சிவப்பு தோல் தான் நடிகைகளுக்கு சக்ஸஸ் என நினைத்த சினிமா அகராதியை தவிடு பொடியாக்கிய பெண். போதையூட்டும் விழிகளால் இரண்டு தசாப்த ரசிகர்களை கட்டிப் போட்ட கறுப்பு நிறத்தழகி. ஒற்றை  வார்த்தைக்கே 80ஸ், 90ஸ்  ரசிகர்கள்  தூக்கம் தொலைத்து கிறங்கிக் கிடந்தனர்.  அந்த வார்த்தை சில்க். தெலுங்கு விஜயலட்சுமியை மலையாளம்  ஸ்மிதாவாக்கியது. அவரை பட்டுப் போல வாரி அணைத்து சில்க் ஸ்மிதா ஆக்கிக் கொண்டது, தமிழ்.


வறுமையும் சின்ன வயதிலேயே திருமண வாழ்வில் தள்ளப்பட்டு குடும்ப பிரச்சினையும் துரத்தியதால் பிழைப்பு தேடி வந்த சில்க்கின் மொத்த பிழைப்புமே சோகம்தான். அவருக்கு காட் ஃபாதராக நடிகர் வினு சக்கரவர்த்தி இருந்த காலம் தான் கொஞ்சம் நிம்மதியாக சில்க் இருந்திருப்பார். 


தமிழ் சினிமாவில் டச்அப் கேர்ளாக இருந்த ஸ்மிதாவை 'வண்டிச் சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தவர் அவரே. நாட்டுப்புறமாக தெலுங்கு மட்டும் பேசிய விஜயலட்சுமிக்கு தமிழும் ஆங்கிலமும் நடனமும் கற்றுக் கொடுத்து நடிகையாக்கியதில் வினு சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.

'வண்டிச்சக்கரம்' படத்தில் ஸ்மிதாவின் வேடம் சாராயம் விற்கும் பெண்.  படத்தில் அவரது பெயர் சில்க்.  "வா மச்சான் வா வண்ணாரப் பேட்ட..." பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட பாடலால் பிரபலம் ஆனார். முதல் படத்திலேயே விழி மொழியாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை கட்டிப் போட்டார். சில்க்கும் ஸ்மிதாவும் சேர்ந்து சில்க் ஸ்மிதா ஆனார். அப்புறம் என்ன..? ஆடியன்ஸோட ரிப்பீட்டு... ரிப்பீட்டு....


17 வருஷத்தில் ஐந்து மொழிகளில் சில்க் நடித்த படங்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டும். ஆண்டுக்கு சராசரியாக 20 படங்கள்..! 1980களில் துவங்கி 1990களின் இறுதி வரை அவரது ஆட்டம்தான். அந்த சமயத்தில் வந்த படங்களில் எல்லாம் ஹீரோ, ஹீரோயின் மெயின் கதைன்னு ஒரு பக்கம் போகும். காமெடி தனி டிராக்கா இருக்கும்.  மொத்த படத்துக்கும் சுவை கூட்டி கல்லா கட்ட வைக்கும் அஜின மோட்டா தான் கவர்ச்சி நடனம். ரம்பா மேனகை திலோத்தமை போல சில்க், அனுராதா, ஜெயமாலினி என முக்க(ன்)னிகள் தான் அன்றைய திரை விருந்தின் உச்சம்.

1980ஸ் என்பது திரையுலகில் ரஜினி, கமல் முன்னேறத் துவங்கிய காலம். அன்றைய அவர்களின் படங்கள் எல்லாம் வசூலை வாரிக் குவித்ததில் சில்க் ஸ்மிதாவின் பங்கு மிகவும் முக்கியம். அவர்களுடன் சில்க் ஸ்மிதாவின் டூயட் ஒன்று நிச்சயம்.

 பாயும்புலி, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, தாய்வீடு, தங்க மகன், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன் இப்படி பல படங்களை சொல்லலாம். அவர்களோடு சில்க் ஸ்மிதா ஆட்டம் போட்ட "ஆடி மாசம் காத்தடிக்க...", "நேத்து ராத்திரி யம்மா...", "பொன்மேனி உருகுதே..." இன்றளவும் சுண்டி இழுக்கும் பாடல்கள்.


கதாநாயகிகளுக்கு இணையாக இருந்ததால் தான், மூன்று வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது. படத்தின் பெயரும் அவர் பெயர் தான், 'சில்க் சில்க் சில்க்'. 1983 ஒரு ஆண்டில் மட்டும் 45 படங்களில் நடித்து புதிய சாதனையையே படைத்தார் சில்க். அதே நேரத்தில் கவர்ச்சிக்குள் மட்டும் அவரை கட்டம் கட்டி விட முடியாது.


தியாகராஜன் ஜோடியாக பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை', 'நீங்கள் கேட்டவை' (அடியேய் மனம் நில்லுனானா நிக்காதடி...), பிரபு ஜோடியாக 'கோழி கூவுது' படங்களில் எல்லாம் இணை நாயகியாகவே படம் முழுவதும் அருமையாக நடித்திருப்பார். பின்னாளில் கதாநாயகிகளே கவர்ச்சி நடனங்களையும் கையில் எடுத்ததால் வாய்ப்புகள் குறைந்தாலும் சில்க்கின் கிரேஸ் ஒருபோதும் ரசிகர்களிடம் குறைந்ததில்லை.

1990களுக்கு பிறகும் அவரது கொடி பறந்தது. அவரது நடிப்பு திறமையை தெரிந்த பாக்யராஜ் தனக்கு ஜோடியா நடிக்க வைத்தார். 'அவசர போலீஸ் 100' என்ற அந்த படத்தால் எம்ஜிஆர் படத்தில் இடம் பெறும் வாய்ப்பும் சில்க் ஸ்மிதாவுக்கு வாய்த்தது.

 அப்புறம் பாண்டியராஜனின் 'பாட்டி சொல்லை தட்டாதே', பிரபுவின் 'பாண்டித்துரை' போன்ற படங்கள் எல்லாம் சேலை கெட்டப்பிலும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்தவை. சில்க் என்று சொன்னால் அந்த கிறக்கமான போதையூட்டும் கண்கள் போதாதா?


80, 90களில் இன்றைய பானை உடைத்தல் போட்டி போல, கிராமங்களில் பொங்கல்  விழாக்களில் 'மங்கைக்கு திலகமிடல்' என போட்டி வைப்பார்கள். சுவரில் ஒரு நடிகையின் படத்தை ஒட்டி வைத்து இளைஞர்களின் கண்களை கட்டி விட்டு சரியாக நெற்றியில் பொட்டு வைக்க சொல்வார்கள். அந்த போட்டிகளில் எல்லாம் தவறாமல் போஸ்டர் படங்களில் இடம் பிடிக்கும் நடிகை சில்க் ஸ்மிதா தான். அதில் அன்றைய இளசுகளுக்கு ஒரு கிக்..!

வாழ்க்கை வரலாறை மூன்று மொழிகளில் படமாக  (டர்ட்டி பிக்சர்) எடுக்கும் அளவுக்கு எவராலும் மறக்க முடியாத உச்சம் தொட்டவர் சில்க்.

1980, 90களின் முன்னணி நாயகர்கள் அனைவர் படங்களிலும் நடித்து ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட சில்க்கின் சொந்த வாழ்க்கை மிகவும் சோக மயமானது. இணையைத் தேடி என்ற மலையாள படம் மூலமாகத்தின் முதன் முதலில் திரை வாழ்க்கைக்கு சில்க் வந்தார். அவரால் நிஜ வாழ்க்கையில் இணையையும் தேட முடியவில்லை. நிம்மதியையும் தேட முடியவில்லை.

உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே வெளியில் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்திய சில்க் ஸ்மிதா, 35வது வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது சோகம்தான். அதுவே அவரது பிரச்சினைகளுக்கு இறைவன் அளித்த விடுதலையாக இருக்கலாம். 

இறந்த நாளன்று கூட சக நடிகை ஒருவருக்கு போன் போட்டு புலம்பியிருக்கிறார். தவிர, ரசிகர்களின் மனதில் எப்போதுமே அந்த இளம் சில்க் உருவம் மட்டும்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும் என  இறைவன் நினைத்திருக்கலாம். 

மறைந்து 25 ஆண்டுகளை கடந்தாலும் சினிமா ரசிகர்களால் மறக்காத முடியாத மூன்றெழுத்து மந்திரம் 'சில்க்'.

#நெல்லை_ரவீந்திரன் 

Friday, 5 August 2022

கண்களும் கவி பாடுதே... கஜோல்

 கண்களும் கவி பாடுதே... கண்ணே உன் கண்களும் கவி பாடுதே...

இந்த பாடல் வரிகள் இவருக்குத்தான் பொருந்தும். கண்களாலேயே நடிக்கும் 1990களின் கனவு கன்னி. ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்தாலும் 20 ஆண்டுகள் கழித்தும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த காந்த கண்ணழகி. அவர் கஜோல்.

மின்சார கனவு. இந்த ஒரு தமிழ் படம் மட்டும் தான் கஜோல் நாயகியாக நடித்தது.

ஸ்ட்ராபெர்ரி கண்ணே...

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா(அட சினிமா டைட்டில்)..

தங்கத் தாமரை மகளே..

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..

இப்படி அந்த படத்தில் கஜோல் நடித்த அனைத்து பாடல்களும் இன்னும் ரசிகர்கள் முணுமுணுப்பவை. 

அரவிந்த் சாமி, பிரபு தேவா, நாசர், எஸ்பிபி,  கிரிஷ் கர்னாட் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கஜோல் ஸ்கோர் பண்ணியிருப்பார், உண்மையில்  பின்னியிருப்பார். இத்தனைக்கும் சொந்த குரல் கிடையாது. ரேவதி தான் கஜோலுக்கு குரல் கொடுத்திருப்பார்.

அந்த படத்திலேயே பிரபு தேவா சொல்வது போல பெரிய மூக்கு, பெரிய கண்கள் தான். ஆனாலும் திரையில் கஜோலை பார்த்தாலே ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். 

இதனால் தான், இருபது ஆண்டுகள் கழித்தும் தமிழ் சினிமா அவரை மறக்காமல் விஐபி 2 படத்துக்காக 2017ல் மீண்டும் அழைத்து வந்தது.

1990களில் இந்தியில் கலக்கிய கஜோலை ரசிகர்களுக்கு முதலில் சேர்த்த படம் 'பாஸிகர்'. ஷாருக்கான் ஜோடி. அடுத்தடுத்து  'தில்வாலே துல்ஹனியா லேஜயங்கே', 'குச் குச் ஹோதா ஹை' என பல ஹிட் படங்களை கொடுத்த இந்த ஜோடி தான் தமிழில் கமல்-ஸ்ரீதேவியைப் போல இந்தியில் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடி.

இப்போது போல அல்லாமல் 1990களில் நெல்லை உட்பட தமிழகத்தின் முக்கிய நகர திரையரங்குகளில் இந்தி படங்களும் தமிழ் படங்களுக்கு இணையாக ரிலீசாகும். சிறு நகரங்களில் கொஞ்சம் தாமதமாக இந்தி படங்கள் வரும். சென்னையில் தேவி போன்ற பெரிய தியேட்டர்களிலேயே சில இந்தி படங்கள் 50 நாட்களை கடந்ததும் உண்டு.

பாஸிகர் படத்தை சிவகாசியிலும் தில்வாலே துல்ஹனியா லேஜயங்கே படத்தை நெல்லையிலும் சென்னையில் குச் குச் ஹோதி ஹை உட்பட ஏராளமான இந்தி படங்களை பார்த்திருக்கிறேன்.

அந்த சமயங்களில் எல்லாம் திரையரங்குகளில் பாலிவுட் படங்களை பார்த்தபோது அறிமுகமான கனவு கன்னிகளில் மனம் கவர்ந்தவர் கஜோல். 

அந்த கனவு நாயகிக்கு இன்று பிறந்த நாள்.



Tuesday, 21 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -35

சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார். ஆண் பிரபலங்களைக் கூட நாம் நினைத்து பார்த்திராத துறைகளிலும் களமிறங்கி வெற்றி கண்டவர். அநேகமாக இயக்குநரை கரம் பிடித்த முதல் கதாநாயகி அவராகத்தான் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களை பார்த்திருப்போம். ஆனால், அவர்களுக்கெல்லாம் சீனியர் நாயகி.



அவர் பானுமதி. அடிப்படையில், அவர் ஒரு தெலுங்கு நடிகை. 1939ஆம் ஆண்டு 13 வயதிலேயே தெலுங்கில் அறிமுகமாகி அடுத்த 5 ஆண்டுகளிலேயே இயக்குனர் ராமகிருஷ்ணாவை திருமணம் செய்தார். அத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தாலும் காலம் இடம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகே தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிரகாசித்தார்.



தெலுங்கில் இருந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து திருமணமான நாயகியாகத்தான் தமிழில் நுழைந்தார் பானுமதி. 



1940, 50களில் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், சித்தூர் நாகையா தொடங்கி 1960, 1970களில் கோலோச்சிய அடுத்த தலைமுறை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் என தென்னிந்திய ஜாம்பவான்களின் தேர்வாக இருந்தவர்.



நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜூனா போன்ற அடுத்த இளம் தலைமுறையினரின் படங்களிலும் நடித்த பெருமை உண்டு. இவரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. பானுமதி அறிமுகமான காலத்தில் நடிப்பவரே சொந்த குரலில் வசனம் பேசுவதோடு பாடலும் பாட வேண்டும். அதனால் ஆரம்பத்தில் இருந்தே பாடவும் செய்தார். தான் நடித்த அனைத்து பாடல்களையும் தானே பாடிய கதாநாயகியும் இவர் மட்டுமே.



நடிகை, பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர், சிறுகதை எழுத்தாளர் இப்படி 8 வித திறமைசாலி. 'அஷ்டவதானி' பட்டம் பெற்றவர். சினிமா ஸ்டுடியோ சொந்தமாக வைத்திருந்த ஒரே நடிகையும் இவர்தான். எப்போதுமே அவருக்குள் ஒரு துணிச்சல்தனம் உண்டு. அவரது நடிப்பிலேயே இதை ரசிகர்கள்  பார்க்கலாம். 



எம்ஜிஆரை திரை உலகில் ரொம்ப மரியாதையாக எல்லோரும் அழைத்த சமயத்தில் மிஸ்டர் ராமச்சந்திரன் என அழைத்த துணிச்சல்காரர். "நோ கட்டிப்பிடி ஸீன்,  நோ நெருக்கமான ஸீன்" என கட்டுப்பாடுகளை விதித்தும் கதாநாயகியாக நீண்ட நாள் கோலோச்சியவர்.



ஜெமினி நடித்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்து தயாரிப்பாளர் சக்கரபாணியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சாவித்திரி நடித்தார். அந்த தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் விதமாக 'சக்கரபாணி' என்ற பெயரிலேயே காமெடி படத்தை தயாரித்து இயக்கினார் பானுமதி. அவரது துணிச்சலுக்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த படம்  சூப்பர் ஹிட்டாகி இவரது இயக்குநர் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.



1945ல் சித்தூர் நாகையாவுடன் நடித்த 'ஸ்வர்க்க சீமா' தெலுங்கில் முதன் முதலில் இவரை அடையாளம் காண்பித்தது என்றால், தமிழில் அடையாளம் கொடுத்த படம் பி.யூ.சின்னப்பாவுடன் நடித்து 1949ல் வெளியான 'ரத்ன குமார்'. 1953லேயே இயக்குநராகவும் ஆகி விட்டார். 'சண்டிராணி' என்ற அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படத்தின் ஹீரோ என்.டி.ராமாராவ்.  



முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகையும் இவரே. படம் எம்ஜிஆரின் 'கலையரசி'. (தமிழில் வெளியான  விண்வெளி கதையம்சம் கொண்ட முதல் படமும் இதுதான்) பத்ம விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகையும் பானுமதி தான். ஆண்டு 1966.


1939 தொடங்கி 1998 வரை சுமார் 60 ஆண்டு காலம் திரை வானில் ஜொலித்த பானுமதியின் பெயரைச் சொன்னால் எம்ஜிஆர், சிவாஜி நடித்த கருப்பு வெள்ளை படங்கள்தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும்.



மலைக்கள்ளன், மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, தாய்க்குப்பின் தாரம், காஞ்சி தலைவன் என எம்ஜிஆருடன் நடித்த படங்களும்



மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, அறிவாளி, கள்வனின் காதலி என சிவாஜியுடன் நடித்த படங்களும் மனதில் நீங்காத எவர்கிரீன் ரகங்கள். தமிழில் வெளியான முதலாவது வண்ணப் படத்தின் (அலிபாபாவும் 40 திருடர்களும்) நாயகி. ஆனால் தமிழில் வண்ணப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை.


பின்னாளில் அம்மா, பாட்டி வேடங்களை போட்ட பானுமதிக்கு 1992ல் வெளியான பிரசாந்த், ரோஜா நடித்த 'செம்பருத்தி' படம் தான் தமிழில் கடைசி படம். சூட்டிங்கில் ஒரு சிங்கத்தை பார்ப்பது போல இருக்கும் என்பது நடிகை ரோஜா  கூறிய அனுபவம். அப்படியானால் இளம் வயது பானுமதியை கற்பனை செய்து பாருங்கள். 



தெலுங்கில் 1998 வரை நடித்திருக்கிறார். தமிழில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா நடித்த 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பம்மா மாட்டா பங்காரு பாட்டா'வில் மனோரமா வேடத்தில் நடித்தவர் பானுமதி.


திரையுலகைத் தாண்டி பார்த்தால் விருது பெற்ற  சிறுகதை எழுத்தாளர், இசைப் பள்ளியின் முதல்வர், நடிப்புக் கல்லூரி பேராசிரியர் என பானுமதி பெற்ற அங்கீகாரம் ஏராளம். இவ்வளவு திறமைகளையும், பெருமைகளையும் கொண்ட ஒரு நடிகையை தமிழ், தெலுங்கு மட்டுமல்ல, எந்த திரையுலகிலும் பார்க்க முடியாது என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்


Thursday, 9 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -34

தமிழ் சினிமாவில் இவரோட ஸ்டைலே தனி. பெயரை சொன்னாலே கண்ணை சிமிட்டி புருவத்தை அசைத்தபடி அழுத்தமாக பேசும் டயலாக் டெலிவரிதான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வரும்.

"ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்"

"ஏண்டாாா எடுத்தேஏஏ எதுக்குடா எடுத்தேஏஏ"

இது மாதிரியான வசனங்களும் கூடவே நினைவிலாடுவதை தவிர்க்க முடியாது. அவர்தான் அசோகன்.



நம்பியார், எஸ்.வி.ரங்காராவ் இருவரும் கலந்த ஒரு கேரக்டரில் பொருந்துவது அசோகன்.

வில்லன்களில் நம்பியார் ஒரு ரகம் என்றால் இவர் வேறு ரகம். நம்பியார் படம் என்றால் நாலைந்து சண்டையாவது இருக்கும். ஆனால், இவரோ பெரும்பாலும் நேரடியாக மோதாத புத்திசாலி வில்லன். கிளைமாக்சில்தான் மூன்று அடி அடித்துவிட்டு அதன் பிறகு அடி வாங்குவார். நம்பியாருடன் சேர்ந்து இவரும் வில்லனாக மிரட்டினால் அந்த படம் பிளாக் பஸ்டருக்கு உத்தரவாதம். எம்ஜிஆரின் 'என் அண்ணன்' அதற்கு உதாரணம்.



வில்லன் தவிர்த்து அப்பா, மாமனார், பண்ணையார், ஊர் பெரியவர் என கேரக்டர் ரோல்களிலும் எஸ்.வி.ரங்காராவ் போலவே கலக்கியவர். நல்ல குணமான ஊர் பெரிய மனிதர், ஜமீன்தார் வேடங்களுக்கு ரங்காராவ் என்றால் அதே கேரக்டர்களின் கொடூரமான பிம்பத்தில் அதகளப்படுத்தியவர் அசோகன். இதற்கு 'ரிக்சாக்காரன்' படத்தை உதாரணம் காட்டலாம்

அசோகனின் திரையுலக வாழ்க்கை மொத்தம் 30 ஆண்டுகள். தனது  மொத்த வாழ்வையும் திரையிலேயே கழித்தவர். திருச்சியின் மிக பழமை வாய்ந்த பிரபலமான  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றதும் சினிமா ஆசையில் சென்னை வந்த அந்தோணியை அசோகன் ஆக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டிஆர் ராமண்ணா. 1953ல் வெளியான அன்றைய ஹிட் படமான கேபி சுந்தராம்பாள் நடித்த 'அவ்வையார்' தான் அறிமுகம். முதல் வேடமே மன்னன் வேடம் தான்.



அன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள், வறுமை போன்ற பல்வேறு சூழலால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் நாடகங்களில் வேஷம் கட்டிய கையோடு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்திருந்தனர். அதனால் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே சினிமாவில் நிறைந்திருந்தனர். அப்படி பார்த்தால் அசோகன்தான் தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்றே கூறலாம். டைட்டில் கார்டிலேயே அசோகன் பி.ஏ என்று தான் போடுவார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்னதாக தலை காட்டிய அசோகனுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால் 1960 தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டு காலம் அவர் காட்டில் அடைமழை பெய்தது. ஆண்டெின்றுக்கு தலா பத்து படங்களுக்கு மேல் எல்லாம் நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 80  படங்கள். (இது எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகம்)



எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் அசோகன்தான் மெயின் வில்லன். அதே நேரத்தில் 'அன்பே வா' படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் முறைப் பையனாக விமான பைலட் கேரக்டரில் மிக அமைதியான ஜென்டில்மேனாகவும் அசோகன் கலக்கி இருப்பார்.



சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காத மேதை, பாதகாணிக்கை, களத்தூர் கண்ணம்மா, கர்ணன் இப்படி அசோகனின் தரமான நடிப்பை சொல்லும் படங்கள் ஏராளம்.

கூடவே, பாடியும் இருக்கிறார் அசோகன். ஜெய்சங்கரின் அறிமுக படமான 'இரவும் பகலும்' படத்தில் "இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். அத இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துடடான்...' என்ற பாடலை பாடியவர் சாட்சாத் அசோகனே தான்.

வில்லன், குணசித்திரம் என கலக்கியதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  இது சத்தியம், தெய்வ திருமகள், காட்டு ராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன்... இவை அசோகன் ஹீரோவாக நடித்த படங்களில் சில. 



நாயகன் என்றால் டூயட் பாடல்கள் இல்லாமலா..?

"மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது...", 

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்..." 

"காட்டு ராணி, உன் முகத்தை காட்டு ராணி..." 

இவை அவரது டூயட்டுகளில் சில.

'பாத காணிக்கை' படத்தில் ஊன்று கோலுடன் தோன்றி நடித்த "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..." பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்களில் ஒன்று.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில திரைப்படங்களையும் அசோகன் தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'நேற்று இன்று நாளை' தயாரிப்பாளர் இவர்தான்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலகட்டத்துக்கு பின், 1980களில் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு', 'தர்மயுத்தம்',  'தீ', 'பில்லா', 'முரட்டுக்காளை', 'சவால்', 'சங்கர்லால்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களில் சிவகுமார், ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் அசோகன் நடித்திருக்கிறார். 

'ஆனந்த ஜோதி', 'களத்தூர் கண்ணம்மா' என குழந்தை கமலுடன் நடித்த அசோகன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் ஹீரோ கமலுடனும் நடித்திருக்கிறார்.  "ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்..."னு தனக்கே உரித்தான குரலில் பூதம் வேடத்தில் கமலுடன் கலக்கி இருப்பார்.



1950களில் துவங்கி 1980கள் வரை நீடித்த அசோகனின் திரைப் பயணம் அவரது 51வயதிலேயே முடிந்து போனது. 50 வயதிலேயே மறைந்த  டி.எஸ்.பாலையா, ரங்காராவ், என்எஸ்கே போன்ற தமிழ் திரையுலக பிரபலங்களின் பட்டியலில் அசோகனும் இடம் பிடித்து விட்டார்.

பவளங்கள் ஜொலிக்கும்

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 5 June 2022

பாடும் நிலா பாலு



 தமிழை சுமந்தபடி தவழும் தென்றல் காற்றை கற்கண்டாக மாற்றிய ரசவாதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவுக்கு முதன் முதலில் குரல் தந்து அரை நூற்றாண்டாக குரலில் மாயவித்தை காட்டிய மந்திரவாதி. இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் நிறைந்திருக்கிறார், எஸ்பிபி.

நான் அறிந்தவரை எவ்வளவு சிக்கலான பாடலாக இருந்தாலும் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடியது அவர் ஒருவர்தான். எவ்வளவு உச்சஸ்தாயி போனாலும் சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. எப்படி பாடினாலும் கூடவே சிரிப்போ, சோகமோ, எள்ளலோ அசால்ட்டாக நொடியில் கொண்டு வந்து வரிகளையும் பாடும் திறமைசாலி. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதை குறிப்பிடலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும்.  'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கான 'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இந்திரன் சந்திரன் படத்திலும் ஒரு கமலுக்கு இவர்தான் குரல். தசாவதாரத்திலும் ஒரு சில கேரக்டர்களுக்கு எஸ்பிபி குரல்தான். 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொரு பாடலும் எஸ்பிபியையே எனக்கு முன்னிறுத்தும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடுவதை வேறு யாரையும் கொண்டே நினைத்துப் பார்க்கவே முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என பயணித்து இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி,  உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வி இருவருமே புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே.

சிகரம், ரட்சகன், காதலன், மின்சார கனவு இப்படி நிறைய படங்களில் நடிகராகவும், பல படங்களை தயாரித்தும், துடிக்கும் கரங்கள் (அந்த படத்தின் மேகம் முந்தானை ஆடுது தன்னாலே...  பாடல் ஒன்றே போதும் அவரது இசைக்கு) போன்ற படங்களின் இசையமைப்பாளராகவும் ஜெயித்த அவரால் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன ஒரு காரணம்: என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. இயக்குநராக இருந்தால் அதை செய்ய நேரிடும். இதுதான் எஸ்பிபி

மக்கள் நாயகன் ராமராஜன்,  மைக் மோகன் இருவருமே திரை வானின் உச்சத்தில் ஜொலித்ததற்கு எஸ்பிபி பாடல்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. இருவரின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டடித்தன.

இசையால் பாடல் வரிகள் உயிர் பெற்றாலும், எஸ்பிபி பாடியதாலேயே   அவை அமரத்துவம் பெற்று ஜீவித்து நிற்கின்றன. மகிழ்ச்சி, சோகம், காதல், பாசம், தோல்வி இப்படி ஒவ்வொருவரின் அந்தந்த சமயத்தின் எந்தெந்த உணர்வுக்கும் அவர் குரலே அருமருந்து. தூக்கம் இல்லா நீள் இரவுகளில் அவரது குரலே நல் விருந்து. நீண்ட தூர பயணங்களுக்கும் அதுவே வழித்துணை.

இன்று எஸ்பிபி பிறந்த தினம்

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 28 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -33

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத வசனங்கள் பல உண்டு. அவற்றை பட்டியலிட்டால் டாப் 10 ரகங்களுக்குள் இந்த வசனங்கள் நிச்சயமாக வரும். 

"சபாஷ்... சரியான போட்டி...", "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி...", "அண்டாக்கா கஸம் அபுக்கா குஸூம் திறந்திடு சீஸே..." இந்த வசனங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர், வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. நம்பியார் காலத்துக்கு முந்தைய அரசர் கால கதை களங்களில் அதகளம் செய்தவர்.



கம்பீரமான உருவம், அசால்ட்டான பார்வை, கணீர் குரலில் மிக அலட்சியமான வசன உச்சரிப்பு, அட்டகாசமான வில்லத்தன சிரிப்பு. இப்படி வில்லனுக்கே உரித்தான இலக்கணத்தை வகுத்தவர் இவரே. இவரது ஹஹா ஹஹா ஹஹா.. என்ற வெடிச் சிரிப்பே பயங்கரமானது. கேட்டாலே அச்சமூட்டும் ரகம்.



படத்தில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும்போது யார் ஜெயிப்பார் என்ற பரபரப்பை கூட்டும் விதமாகவே இருக்கும். இணையான வில்லன் ஒருவர் இருந்தால் தான் ஒரு ஹீரோவுக்கு சிறப்பு. அது போன்ற ஒரு வில்லன் பி.எஸ்.வீரப்பா.



கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் பிறந்து பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த பி.எஸ்.வீரப்பா, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தை பார்க்க வந்த கே.பி.சுந்தராம்பாள், இவரது நடிப்பை பாராட்ட, அவரிடமே சிபாரிசு கடிதம் பெற்று சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானார் பி.எஸ்.வீரப்பா. இவரை அறிமுகம் செய்தவர் அன்றைய பிரபல இயக்குநரான வெள்ளைக்காரர் எல்லீஸ் ஆர்.டங்கன்.


(எல்லீஸ் ஆர்.டங்கன் பற்றி அறிய...  http://thileeban81.blogspot.com/2020/08/15.html?m=1)


வீரப்பாவின் முதல் படம் 1939ல் வெளியான 'மணிமேகலை'.


இதே காலகட்டத்தில் குட்டி குட்டி வேடங்களில் தலைகாட்டிய எம்ஜிஆருடன் அறிமுகம் ஏற்பட்டு அது மிக நீண்ட கால நட்புறவாக மாறியது. நாயகனாக எம்ஜிஆர் நடிக்க துவங்கிய பின் அவருடன் ஏராளமான படங்களில் பி.எஸ்.வீரப்பா நடித்திருக்கிறார்.


தமிழின் முதல் முழு நீள கலர் படமான 'அலிபாபாவும் 40 திருடர்களும்', எம்ஜியாரின் சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்', எம்ஜியாரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி தயாரித்து இயக்கிய 'அரச கட்டளை', 'சக்கரவர்த்தி திருமகள்', 'மகாதேவி', 'மருதநாட்டு இளவரசி', 'கலையரசி', 'மன்னாதி மன்னன்', 'விக்கிரமாதித்தன்' என எம்ஜிஆருடனான பி.எஸ்.வீரப்பாவின் பட பட்டியல் மிக நீளம். 



நாடோடி மன்னனில் எல்லாம் இவர் மிரட்டியிருப்பார். "மார்த்தாண்டனாம் மன்னனாம்...", "சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை...", "நாடாம் நாடு... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..."


இந்த வசனங்களை எல்லாம் இவரது உச்சரிப்பில் கேட்பதே மிரட்டல் ரகம். இதுபோல 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் முகத்தில் முழு நீள வெட்டுத் தழும்புடன் மிக கொடூரமான திருடனாகவே வாழ்ந்திருப்பார்.



சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார், பி.எஸ்.வீரப்பா. ஜெமினியுடன் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரின் போட்டி நடனத்தின் நடுவே இவர் பேசும் வசனம் தான் தமிழ் சினிமா உலகில் சாகா வரம் பெற்ற "சபாஷ் சரியான போட்டி..." 


1960களுக்கு பின், குடும்ப கதை படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'ஆலயமணி', 'இரு துருவம்', 'ஆனந்த ஜோதி', 'மீனவ நண்பன்', 'பல்லாண்டு வாழ்க' எல்லாம் அந்த ரகங்கள் தான். அந்தந்த கால கட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுடனும் திரைப் பயணம் செய்தவர். ஆனாலும் அரசர் கதை படங்கள் தான் பி.எஸ்.வீரப்பாவின் பெயரை கூறுபவை.



எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல ரஜினி, கமலுடன் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1979) விஜயகாந்துடன் 'கரிமேடு கருவாயன்' (1986) என நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஆறு முதல்வர்களுடன் நல்ல அறிமுகம் உடையவர்.



நடிப்புடன், பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்ற பெயரில் ஏராளமான தமிழ், இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறார். 1960களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குநர் கே.சங்கருக்கு முதன் முதலில் அடையாளம் பெற்றுத் தந்த படம் 'ஆலயமணி'. சிவாஜி கணேசன் நடித்த அந்த படத்தை தயாரித்தவர், இவர்தான். இந்த படத்தை இந்தியிலும் தயாரித்தார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த ராமராஜன் இவரது அறிமுகம் தான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் துணை இயக்குநராக திரையுலகில் போராடிக் கொண்டிருந்த ராமராஜனை இயக்குநராக உயர்த்தியவர் பி.எஸ்.வீரப்பா. முதன் முறையாக ராமராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'மண்ணுக்கேத்த பொண்ணு' (1985) திரைப்படம் இவரது தயாரிப்புதான். பிரபல நடிகராகும் முன் பல வெற்றி படங்களை ராமராஜன் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த இடத்தில் கூடுதல் தகவல்.

1958 முதல் 1991 வரை ஏராளமான தமிழ், இந்தி படங்களை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருக்கிறார். அன்றைய பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இவரது நெருங்கிய நண்பர். இவரது வில்லன் சிரிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிரந்தர ரசிகர். தமிழ் திரையுலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் பி.எஸ்.வீரப்பாவின் "சபாஷ்... சரியான போட்டிக்கு..." முன் யாருமே போட்டி இல்லை என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

Wednesday, 16 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -32

தமிழ் திரையுலகில் மிக நீண்ட காலம் கலைப்பயணம் மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 1917ல் நாடக நடிகராக நடிப்புலகில் நுழைந்து, 1937ல் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அன்றைய காலத்தில் எல்லாம் பெயருடன் ஊர் பெயரை சேர்த்துக் கொள்வது திரை பிரபலங்களின் வழக்கம். விருதுநகர் கே ராமசாமி, சிதம்பரம் எஸ் ஜெயராமன், திருச்சி லோகநாதன் மாதிரியான வரிசையில் சென்னைக்கு பெருமை சேர்த்தவர். ஆம் இவரது ஒரிஜினல் பெயர், மெட்ராஸ் ஆர். ராதாகிருஷ்ணன். 



எம்.ஆர்.ராதா என்ற பெயரை சொன்னதுமே ஒரு பிம்பம் நம்முடைய  மனதுக்குள் வருமே? அது, இவரது 50  பிளஸ் வயது தோற்றம் தான். சின்ன வயதிலேயே நடிக்க வந்தாலும் 50 பிளஸ் வயதில்தான் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். காரணம், மேடை நாடகங்களுக்காகவே தன்னை ஒப்படைத்திருந்தார்.



அரசியல், கடவுள் மறுப்பு கொள்கை, துணிச்சல், சர்ச்சை, நாடகம் இப்படி பல வகைகளில் இவர் பற்றி ஏராளமாக எழுதலாம். மிகச் சிறந்த நடிகர், ஆனால் நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர். ராணுவத்தில் இருந்த இவரது தந்தை ரஷ்யாவில் உயிரிழந்த நிலையில், பத்து வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.

வீட்டில் கோபித்துக் கொண்டு, வெளியேறி  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை நடிக்க வைத்தது, ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி. பிரபல நடிகர்கள் பலருக்கும் நாடகம் அடிப்படையாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த பின் அங்கு திரும்பிச் சென்றதில்லை. ஆனால், இவர் அந்த ரகம் இல்லை.

1917ல் துவங்கிய 20 ஆண்டு கால நாடக வாழ்க்கைக்கு பின் தனது 30ஆவது வயதில் முதன் முதலில் சினிமாவுக்கு வந்தார், எம்.ஆர்.ராதா. 1937ல் அறிமுகமாகி 'ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி', 'பம்பாய் மெயில்', 'சந்தன தேவன்', 'சத்யவாணி' என சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் நாடக உலகுக்கே திரும்பி விட்டார். முழுக்க முழுக்க ஊர் ஊராகச் சென்று மேடை நாடகம் போடுவதிலேயே ஆர்வம் காட்டினார். இவரது நாடகங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகங்கள். அதில் ஒன்று தான் 'ரத்தக் கண்ணீர்'. அதை சினிமாவாக்க விரும்பினார். 



இதற்காக, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, தனது 45ஆவது வயதில் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார், எம்.ஆர்.ராதா. ஆனால், அந்த படம் பலராலும்  பாராட்டி பேசப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக பெரிய லாபம் ஈட்டவில்லை. இதனாலேயே, மேடை நாடகங்களில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார், எம்.ஆர்.ராதா. 


ஆனால், 1950களில் ரசிகர்களிடம் சினிமாத் துறை பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால், மேடை நாடக கலை தடுமாற்றத்தில் இருந்தது. இதனால் சினிமா உலகுக்கே மீண்டும் திரும்பினார்.  அவருக்கு கை கொடுத்தவர்கள் வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன். இப்படியாக 51ஆவது வயதில், தமிழ் சினிமாவில் 3ஆவது இன்னிங்சை துவக்கினார், எம்.ஆர்.ராதா. 



புதிய வளமான துவக்கத்தை ஆரம்பித்து வைத்த படம் 'நல்ல இடத்து சம்பந்தம்'. ஹீரோவான இவர் ஹீரோயின் சவுகார் ஜானகியை டார்ச்சர் செய்யும் வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ராதா காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது. எம்.ஆர்.ராதா மொத்தம் நடித்துள்ள 125 படங்களில் 90% படங்கள், இந்த காலகட்டத்தில் நடித்தவை தான்.



வில்லனாக மிரட்டுவதாகட்டும், காமெடியாகட்டும், காமெடி கலந்த வில்லனாகட்டும் எம்.ஆர். ராதாவுக்கு நிகர் அவர் மட்டும்தான். திரைப்படங்களில் பாடல்களிலும் கூட நடித்திருக்கிறார். 'இருவர் உள்ளம்' (1963) படத்தில் 'புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...' பாடல் இவர் நடிப்புதான். எம்ஜிஆர், சிவாஜியின் கருப்பு வெள்ளை கால படங்களை எல்லாம் இவர் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது.



சிவாஜியுடன் 'ஆலயமணி', 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என ஏராளம். 1962ல் வெளியான 'பலே பாண்டியா' படத்தில் சிவாஜியுடன் பாடி லூட்டி அடிக்கும் "மாமா  மாப்ளே..." பாடலை இன்றும் பார்த்து ரசிக்கலாம். எம்ஜிஆருடன் 'பெற்றால்தான் பிள்ளையா', 'குடும்பத் தலைவன்', 'பாசம்', 'நீதிக்கு பின் பாசம்' என பெரிய லிஸ்ட் உண்டு.



இந்த இடை விடாத திரை ஓட்டம், 1967ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று வாய் தகராறு ஒன்றில் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுடும் வரை தொடர்ந்தது. அந்த சம்பவத்துக்கு பின், பெரிய அளவில் எம்.ஆர்.ராதாவுக்கு படங்கள் இல்லை.  எல்லாம் முடிந்து 1974ல் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நடித்த 'சமையல்காரன்' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தாலும் சொற்ப எண்ணிக்கையிலான படங்களே வாய்த்தன. 



எம்.ஆர்.ராதா இயற்கையிலேயே கோபம் மற்றும் துணிச்சல் அதிகம் உடையவர், வித்தியாசமானவர். ஊர் ஊராக மக்களிடமே நேரடியாக சென்று 5000 நாடகங்களுக்கு மேல் போட்டிருக்கிறார். மேடை நாடக உலகின் சூப்பர் ஸ்டார் இவர் ஒருவரே. ராமாயணத்தை கிண்டல் செய்து 'கீமாயணம்' என்ற பெயரில் இவர் போட்ட நாடகம் சர்ச்சையாகி தமிழக சட்டப் பேரவையில் நாடக தடை மசோதா போடும் வரை போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசி வரிசை ரசிகர் வரை வசனம் கேட்கும் வகையில் மிக சப்தமாக வசனம் பேசுவாராம். அதற்காக வெங்காயம், பழைய சோறு என அதிகமாக சாப்பிடுவாராம். அதே நேரத்தில் தனது நாடக கம்பெனி ஆட்களுக்கு நான் வெஜ் கொடுப்பதில் நல்லவர். சமையலிலும் வல்லவர். நாடக மேடையிலேயே பைக் ஓட்டுவது, ரசிகர்களுக்கு முதுகை காட்டியபடியே 15 நிமிடம் வரை இடைவிடாமல், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் வசனம் பேசுவது என கலக்கியவர்.

முதலிலேயே சொன்னது போல் இவர் பற்றி ஒவ்வொரு வகையிலும் ஏராளமாக எழுதலாம். இறப்பதற்கு முன்பு கூட, சிங்கப்பூர் மலேசியா என நாடகம் போட்டு விட்டுத்தான் திரும்பி இருந்தார்.



திராவிட இயக்கம், குறிப்பாக பெரியாரின் கடவுள் மறுப்பு நாத்திக கொள்கையில் சமரசம் இல்லாமல் கடைசி வரையிலும் மிகுந்த பிடிப்போடு இருந்தவர் எம்.ஆர்.ராதா. குழந்தைகளுக்கு பழனி, சிதம்பரம், திருப்பதி என வைப்பது போல் தனது மகளுக்கு ரஷ்யா என பெயர் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எம்.ஆர்.ராதா மறைந்தது கூட பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியில்தான் (1979ம் ஆண்டு).

நடிகர்கள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, வாசு விக்ரம், நடிகைகள் ராதிகா, நிரோஷா... இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசுள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 6 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -31

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் 55 ஆண்டு காலம் சத்தமே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த ஒருவர் தான் இன்றைய நமது பவளம். பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிற்கும் அவரை நகைச்சுவை நடிகராகத்தான் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவரது கலையுலக பின்னணி ஆச்சரியங்களின் குவியல். 

விருதுநகரை பூர்வீகமாக கொண்ட வி.கே.ராமசாமிக்கு சின்ன வயது முதலே நடிப்பில் ஆர்வம். ஆனால், அவரது குடும்பம் வியாபார குடும்பம் என்பதால் அதை கவனிக்கச் சொல்ல, வீட்டை விட்டு பலமுறை வெளியேறி நாடக குழுக்களில் வேஷம் கட்டி இருக்கிறார். தந்தையும் உறவினர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் அவருக்கு அணை போட முடியவில்லை. தனது சொந்த அண்ணனின் நாடக கம்பெனி தொடங்கி அன்றைய பிரபல நாடக குழுவான பாய்ஸ் கம்பெனி வரை பலவற்றில் நடித்திருக்கிறார், வி.கே.ராமசாமி.

ஒரு முறை, நாடகத்தில் கள்ளச் சந்தை வியாபாரி (1940, 1950களில் பெரு வியாபாரிகள், பண்ணையார்கள், செல்வந்தர்கள் எல்லாம் உணவு தானியங்களை பதுக்கி விற்பது போன்ற கதைகள் தான் அதிகமாக நாடகங்கள், சினிமாக்களாவது சகஜம்) வேடத்தில் 60 வயது பெரியவராக நடித்திருந்தார். அந்த நாடகத்தை பார்த்து இம்ப்ரஸாகிப் போன தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அந்த நாடகத்தை சினிமாவாக்க விரும்பி பேச்சு நடத்தியபோது, யாரோ ஒரு பெரியவர் தான் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறார். கடைசியில் மிக சிறு வயது பையன் என்பதை அறிந்து ஆச்சரியமாகிப் போயிருக்கிறார், ஏ.வி.எம். அந்த பையன் வி.கே.ராமசாமி.



அப்படியே 'நாம் இருவர்' என்ற பெயரில் அந்த நாடகத்தை படமாக தயாரித்தபோது பிளாக் மார்க்கெட் சண்முகம் என்ற அந்த 60 வயது வேடத்துக்கு வி.கே.ராமசாமியையே நடிக்க வைத்தார் ஏவிஎம். இதுதான் வி.கே.ராமசாமியின் முதல் திரைப்பட அறிமுகம். அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்த அந்த படம் வெளியான ஆண்டு 1947. தனது முதல் அறிமுக படத்திலேயே 60 வயது கேரக்டரில் நடித்த வி.கே.ராமசாமிக்கு அப்போது வயது வெறும் 21 தான். 


அதன் பிறகு 55 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது, அவரது திரைப் பயணம். ஆனால், சின்ன வயதுக்கேற்ற தோற்றத்தில் அவர் நடித்ததே இல்லை. தமிழ் திரையுலகில் டி.எஸ்.பாலையா, ரங்காராவ் இவர்கள் இருவரைப் போலவே வி.கே.ராமசாமியும் பருவ வயதிலேயே முதுமை வேடங்களை ஏற்று அதையே தொடர்ந்தவர்.



'நாம் இருவர்' படத்தை தொடர்ந்து எம்.என்.நம்பியார் ஹீரோவாக நடித்த 'திகம்பர சாமியார்'. சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' என தொடர்ந்து வயதான பண்ணையார், கள்ளச்சந்தை வியாபாரி மாதிரியான வேடங்களே அவரை பின் தொடர்ந்து வந்தன. ஆனாலும் சலிக்கவில்லை. பண்ணையார், கள்ளச் சந்தை என்றால் வில்லத்தனம் வேண்டாமா? அப்படித்தான் அன்றைய கொடூர வில்லனாகவும் வி.கே.ராமசாமி நடித்தார்.



1960களுக்கு பின் நகைச்சுவை பிளஸ் குணச்சித்திரத்துக்கு மாறினார். அந்த வி.கே.ராமசாமி என்ற பிம்பம்தான் இப்போது வரை அனைவரின் மனதிலும் இருக்கிறது. குணச்சித்திர வேடத்துக்கு மாறிய பின் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா என 1960களின் திரை பிரபலங்களுக்கு தந்தை அல்லது மாமனாராக வெளுத்து வாங்கி இருப்பார். சிலவற்றில் நகைச்சுவை, சிலவற்றில் சோகம், அவ்வப்போது வில்லன் கோஷ்டி என பலவித கேரக்டர் ரோலில் கலந்து கட்டி அடித்திருப்பார்.



நாகேஷ், மனோரமா, சோ மாதிரியான நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் காலத்திலும் காமெடியில் ஈடு கொடுத்திருப்பார். அடுத்த தலைமுறை நாயகர்களான கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், பாண்டிய ராஜன் என 1980, 1990களிலும் மாதவன், சிம்பு என 2000த்திலும் தொடர்ந்து நின்று விளையாடியவர். 1947ல் அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கத்துக்கு தந்தையாக நடித்தவர், 2000ம் ஆண்டுகளில் குஷ்பூவுக்கு தந்தை, ஜோதிகாவுக்கு தாத்தா என நடித்திருக்கிறார் என்றால் பாருங்கள்.



பட்டிக்காடா பட்டணமா, வீரபாண்டிய கட்டபொம்மன், மாட்டுக்கார வேலன்,  தர்மத்தின் தலைவன், கல்யாண ராமன், வருஷம் 16, அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, டும் டும் டும் என வி.கே.ஆரின் 55 ஆண்டு கால படங்களின் லிஸ்ட் மிக நீளம்.


'மாட்டுக்கார வேலன்' படத்தில் "ஊருக்குள்ள நான் எவ்ளோ பெரிய வக்கீல். நான் செத்துப் போயிட்டேன்னு எவ்ளோ சின்ன செய்தியா போட்டிருக்கான்னு..."  அவர் பேசுற ஸ்டைலே தனி. வசனங்களும் கூட, சில ஸீனுக்கு ஏற்றவாறு அவரே சேர்த்துக் கொள்வதும் உண்டாம்.



1960களில் அடித்த அதே லூட்டியை 1980, 1990களில்  'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் அப்பா வேடத்திலும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் ஜனகராஜுடன் சேர்ந்து பலான படத்தை வீட்டில் ஸ்கிரீன் போட்டு பார்க்கும் பெரிய மனுஷன் கேரக்டரிலும்  'அரங்கேற்ற வேளை'யில் பிரபு -ரேவதியுடன் சேர்ந்து கலக்கும் நாடக கம்பெனி ஓனர் வேடத்திலும் அப்படியே பார்த்து ரசிக்கலாம். அதுதான் வி.கே.ராமசாமி. 'அருணாச்சலம்' படத்தில் ரஜினியின் வில்லன்களில் ஒருவர்..! 'வேலைக்காரன்' படத்தில் ரஜினிக்கு தாத்தா...!



ஆரம்ப கால நாடக நடிகர் என்பதால் அவரது குரல் மிகவும் தனித்தன்மையாக இருக்கும். அதோடு அவரது டயலாக் டெலிவரி முறையும் தனித்துவமானது. அதுதான் அவரது ஸ்பெஷல். நடிகர் மட்டுமல்ல, கதாசிரியர் தயாரிப்பாளர் என்ற வேறு பல முகங்களும் வி.கே.ராமசாமிக்கு உண்டு.

பிற்கால பிரபலங்கள் பலருடன் அவர்களது ஆரம்ப காலத்திலேயே அறிமுகமும் நட்பும் இருந்தது. அதில் சூப்பர் ஹிட் புராண படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் ஒருவர். அவருடன் இணைந்து 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்துக்கு கதாசிரியரும் வி.கே.ராமசாமி தான். அப்படியே, பின்னாளில் தனியாகவும் 15 படங்களை தயாரித்திருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர்,  வி.கே. ராமசாமி. அதற்கு முன் இரண்டு முறை திரையில் நுழைந்து சோர்ந்து போன எம்.ஆர்.ராதா நாடகங்களுக்கே திரும்பிய நிலையில், 1950களில் நாடகங்கள் நொடிந்து போக தொடங்கின. அவரது 'ரத்தக் கண்ணீர்' படமும் கமர்சியலாக சரியாக போகவில்லை. இந்த சமயத்தில் தான் 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் எம்.ஆர்.ராதாவுக்கு புது பாதையை வி.கே.ராமசாமி. அந்த படத்தின் கேரக்டர்தான் எம்.ஆர். ராதாவின் அக்மார்க்காகி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிசியான நடிகராக இருந்தார். இப்படியாக  வி.கே.ராமசாமி மூலம்  மூன்றாவது இன்னிங்சை எம்.ஆர்.ராதா தொடங்கியபோது அவரது வயது 51. ஆனால் வி.கே.ஆர். வயது 32.

சிவாஜி-பிரபு, முத்துராமன்- கார்த்திக், சிவகுமார்- சூர்யா என அடுத்தடுத்த தலைமுறைகளை பார்த்து 55 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த அவரை, "சினிமாவில் பிழைக்கத் தெரியாத மனிதர்..." என அவரிடமே சிவாஜி சொல்வாராம். உண்மையும் அது தான். 1960களின் பிற்பகுதியில் தான் ஓரளவுக்காவது வி.கே.ராமசாமி பிழைக்கத் துவங்கினார் என்பதே நிஜம்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்