Wednesday 15 May 2019

நாடாளுமன்ற தேர்தல் 23

ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி சந்தித்த நாடாளுமன்ற தேர்தல், 1989 நவம்பரில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ராஜீவின் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. 1984 தேர்தலில் 400க்கு மேல் வென்ற காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 195 இடங்களே கிடைத்தது. தனது சொந்த செல்வாக்கில் சந்தித்த ஒரே தேர்தலில், ராஜீவ் தோல்வியடைந்தார் என்ற வரலாறை, இந்திய தேர்தல் களம் தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை பெற்ற கட்சி காங்கிரஸ்தான். தமிழகம், ஆந்திரா என தென் மாநிலங்கள், வழக்கம்போல காங்கிரசுக்கு கை கொடுத்திருந்தன. ஆனால்,  ஆட்சியமைக்க 272 பேர் தேவை.

மறுபுறம் ராஜீவுக்கு எதிராக அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதாதளம் 142 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வென்றது. அந்த கூட்டணியின் முக்கிய பங்காளியான தெலுங்கு தேசம் 2 இடத்தில்தான் வென்றது. திமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்த போதிலும், 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ஜெயலலிதா தலைமையில் ஒன்று சேர்ந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வென்றது. திமுக அணியில் நாகை தொகுதியில் வலது கம்யூனிஸ்ட் மட்டும் வென்றது.

கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் 89 இடங்களை பிடித்தது. இது தவிர மார்க்சிஸ்ட் 34 உட்பட இடதுசாரி கட்சிகளும் கணிசமான இடங்களை பிடித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய முன்னணி கூட்டணியின் தலைவரான விபி சிங்கை பிரதமராக தேர்வு செய்தன. தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்தது. சுதந்திர இந்தியாவில் முதலாவது சிறுபான்மை அரசு இதுதான். பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்த அரசும் இதுதான்.



150க்கு சற்று அதிகமான எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த  விபி சிங் அரசுக்கு பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தபடி ஆதரவை அளித்தன. அந்த வகையில் பாஜக மற்றும் கம்யூனிஸ்டுகளை ஒரே புள்ளியில் இணைத்த ஒரே அரசும் விபி சிங் அரசுதான். தேசிய முன்னணியில் இருந்த எல்லா கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளித்தார், விபி சிங். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க துணை பிரதமர் பதவி, ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான தேவிலாலுக்கு கொடுக்கப்பட்டது.



ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மாநிலங்களவை திமுக உறுப்பினராக இருந்த முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கினார். அவர்தான் திமுக சார்பாக பதவியேற்ற முதலாவது மத்திய அமைச்சர். 1977ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றதை இங்கே நினைவில் கொள்ளலாம். 

இப்படியாக பாஜக, இடதுசாரி ஆதரவோடு 1989 டிசம்பர் 2ம் தேதி பதவியேற்ற விபி சிங் அரசு, அடுத்த ஓராண்டு கூட முழுமையாக நிலைக்கவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. அதற்குள் பல அரசியல் அதிர்ச்சிகளும் குழப்பங்களும்...

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: