Monday 13 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -22

1984 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 3 ஆண்டுகளில் எம்ஜிஆர் மறைந்தார். இப்போது போலவே, அதிமுக பிளவுபட்டதோடு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பின்னர் கட்சி ஒன்று சேர்ந்து சின்னமும் மீட்கப்பட்டது. இப்போது போலவே அப்போதும் இந்த முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது, அன்றைய மத்திய அரசு. அதாவது ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு. இப்படியாக 1984 முதல் 1989 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் கட்சி ஒன்று சேர்ந்தது.


 (இந்த விபரங்களை எனது தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு பதிவில் பார்க்கலாம் http://thileeban81.blogspot.com/2016/04/?m=1)


அதிமுக அணிகள் இணைப்புக்கு முன்னதாக 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே நடந்த தமிழக தேர்தலில் திமுக வென்று, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல்வரானார், கருணாநிதி.


அதே நேரத்தில், 1984 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜீவ்காந்தி அரசின் மீது,  போபார்ஸ் ராணுவ பீரங்கி ஊழல் புகார் எழுந்தபோது அந்த ஆட்சியின் முடிவுரை வரையப்பட்டு, இந்தியாவின் முதலாவது பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறைக்கு முகவுரை எழுதப்பட்டது. ராஜீவ் அமைச்சரவையில் நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த விபி சிங் எழுப்பிய இந்த புகாரால் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பிரச்சார பீரங்கியாக போபார்ஸ் பேர ஊழல் மாறியது.



நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை அவையிலேயே கிழித்து எறிந்து ஆவேசமாக பேசினார், காங்கிரஸ் கூட்டணியான அதிமுகவை சேர்ந்த எம்பி ஆலடி அருணா. பாஜக, இடதுசாரிகள், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிசத் என ஏராளமான கட்சிகளும் ராஜீவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒன்று திரண்டன. இதற்கிடையே, இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதாக கூறி, ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், அங்குள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பகைத்ததால் எழுந்த கோபமும் அவர் மீது சேர்ந்தது.

ராஜீவுக்கு மாமா உறவு முறை கொண்டவரான அன்றைய பிரபல தலைவர்களில் ஒருவரான அருண் நேருவும் அவருக்கு எதிராக இருந்தார்.

இப்படியான சூழலில் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட விபி சிங், அருண் நேருவுடன் சேர்ந்து 'ஜன மோர்ச்சா' என்ற கட்சியை தொடங்கினார். பிறகு ஜனதாதளம் கட்சியுடன் இணைந்தார். மறுபுறம், ராஜீவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கினார், தெலுங்கு தேசம் தலைவர் ராமாராவ். அந்த முயற்சியின் விளைவாக தோன்றியது தேசிய முன்னணி என்ற பல கட்சி கூட்டணி.



திமுக, தெலுங்கு தேசம், அசாம் கணபரிசத், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என பல கட்சிகள் அமைத்த தேசிய முன்னணி கூட்டணியின் தலைவராக, விபி சிங் தேர்வானார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ராமாராவ். போபர்ஸ் என்ற ஒற்றைச் சொல்லே ராஜீவுக்கு எதிராக இந்திய அளவில் கட்சிகள் ஒன்று திரள வழி வகுத்தது. 1989 தேர்தலில் ராஜீவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அஜென்டாவுடன் தயாரானது, தேசிய முன்னணி கூட்டணி. அவர்கள் எதிர்பார்த்தபடியே 1989 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதன் முடிவுகள் இரு தரப்புக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தன.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: