Friday 17 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -24

1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதன்முறையாக அமைந்த சிறுபான்மை அரசு, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே நாட்களை கடத்தியது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை விபி சிங் அறிமுகம் செய்தபோது, ஆட்சி நாற்காலியின் முதலாவது கால் ஆடத் தொடங்கியது. உயர் வகுப்பினர் அதிகமாக இருக்கும் வட மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்தது.



மற்றொருபுறம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை ஆரம்பித்தார், பாஜக தலைவர் அத்வானி. இதற்கிடையே, ஜனதா தளத்துக்குள்ளேயே தலைவர்களிடையே வேறுபாடு ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், பீகாருக்குள் ரத யாத்திரையை நுழைய விடாமல், அத்வானியை கைது செய்தார், அம்மாநில முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ். சமஸ்திபூரில் 1990 அக்டோப் 23ம் தேதி நடந்த இந்த கைதைத் தொடர்ந்து, விபி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது, பாஜக. 


இதனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைமைக்கு ஆளானது, விபிசிங் அரசு. பதவியேற்ற ஓராண்டுக்குள் நவம்பர் 7ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சியை பறி கொடுத்தது, இந்தியாவின் முதலாவது சிறுபான்மை கூட்டணி அரசு. ஏற்கனவே உரசிக் கொண்டிருந்த சந்திரசேகர், 64 எம்பிக்களுடன் ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி சமாஜ்வாடி ஜனதா என்ற கட்சியை தொடங்கினார்.

இவரது கட்சி ஆட்சியமைக்க, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது, ராஜீவின் காங்கிரஸ் கட்சி. தேவிலால் துணை பிரதமராகவே நீடித்தார். 1979ல் சரண்சிங் பிரதமரானது போலவே, பத்து ஆண்டுகள் கழித்து அதே காட்சிகள் அரங்கேறின. கதாபாத்திரங்கள் மட்டும் மாற்றம். அன்று இந்திரா, இப்போது அவது மகன் ராஜீவ். அப்போது சரண்சிங் இப்போது அவரது சீடர் சந்திரசேகர். அப்போது மொரார்ஜி பதவியிழந்து அரசியல் ஓய்வு பெற்றார். இப்போது அந்த இடத்தில் விபி சிங்.



சரண்சிங் அரசு போலவே ஆறே மாதத்தில் சந்திரசேகர் அரசும் ஆறே மாதத்தில் கவிழ்ந்தது. ராஜீவை உளவு பார்த்ததாக கூறி ஆதரவை வாபஸ் பெற்றது, காங்கிரஸ். இதனால், 1991 மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார், சநதிரசேகர். ஒன்றரை ஆண்டுகளிலேயே அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. 1991 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. 'காங்கிரசால் மட்டுமே ஐந்தாண்டு நிலையான ஆட்சியை தர முடியும்' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

இதற்கிடையே பதவியில் இருந்த ஆறு மாதத்துக்குள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்திருந்தது, சந்திரசேகர் அரசு. ஜெயலலிதா கோரிக்கையை ராஜீவின் பரிந்துரையின் பேரில் சந்திரசேகர் நிறைவேற்ற, அதற்கு ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன். இதனால் 1991 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. தமிழக தேர்தல் களத்தில் நடந்த அந்த பயங்கரம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: