Sunday 5 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -21

 இந்திரா காந்தி கொல்லப்பட்டு சரியாக 60 நாட்களுக்குள் 1984 டிசம்பர் இறுதி வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நடந்த அந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு மாநில தொகுதிகளில் 10ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தியின் அனுதாப அலையில் மற்ற கட்சிகள் காணாமல் போயின.

ஜனசங்கத்தில் இருந்து மாறிய பிறகு, பாஜக போட்டியிட்ட அந்த முதல் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற தேசிய கட்சிகளின் நிலையும் அப்படியே. ஆனால், இந்திரா காந்தி அனுதாப அலையிலும் கூட,  ஆந்திராவில் என்டி ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களை வென்று, அகில இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்தது. 



சுதந்திர இந்தியாவில் மாநில கட்சி ஒன்று இரண்டாம் இடத்தை பிடித்தது அதுவே முதன்முறை. தற்போதைய மக்களவையில் அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 39 என நான்காவது, மூன்றாவது பெரிய கட்சிகளாக இருப்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். இதற்கு என்டிஆர் தான் முன் உதாரணம்.


இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அந்த அனுதாப அலையும் சேர்ந்தது. 'எம்ஜிஆர் ஃபார்முலா' அடிப்படையில் உருவான அதிமுக காங்கிரஸ் கூட்டணி, வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் இந்த கூட்டணி வென்றது. மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37ஐ (அதிமுக -12, காங்கிரஸ் - 25) இந்த கூட்டணி கைப்பற்றியது. இரண்டு இடங்களை மட்டுமே திமுக பிடித்தது.

நாடாளுமன்ற தேர்தலுடன், 1984 டிசம்பர் 24ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 195 இடங்களை (அதிமுக 132, காங்கிரஸ் 61, குமரிஅனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2) அதிமுக கூட்டணி வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகி ஹாட்ரிக் சாதனை படைத்தார் எம்ஜிஆர். இந்த ஹாட்ரிக் சாதனை எம்ஜிஆருக்கு முன்னும் பின்னும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. நேரடியாக தேர்தல் களம் காணாமல், அமெரிக்காவில் இருந்தபடியே இந்த சாதனையை படைத்தார், எம்ஜிஆர்.



இப்படியாக தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பல அதிசயங்களை ஏற்படுத்தியது, 1984ம் ஆண்டு தேர்தல். அப்போது, இந்தியாவின் இளம் பிரதமராக அறியப்பட்ட ராஜீவ்காந்தி, தொழில்நுட்பம் உட்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டியதோடு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதை கட்டாயமாக்கும் 'பஞ்சாயத் ராஜ்' சட்டத்தையும் கொண்டு வந்தார். 

ஆனால், 1989ல் நடந்த அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்திய ஆட்சி முறையிலும் புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை வை.ரவீந்திரன்

No comments: