சிலருக்கு நிறைய துறைகளில் நிறைய விஷயங்கள் தெரியும். அதன் அடி நாதம் வரை அலசி பார்க்கவும் முடியும். ஆனால் அவர்களால் தனக்கு தெரிந்ததை மிக எளிமையாக மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியுமா என்றால் சந்தேகம். ஆனால், எழுத்தாளர் சுஜாதா விதிவிலக்கானவர்.
உண்மையான பெயர் ரங்கராஜன். சென்னை எம்ஐடி-யில் படித்த என்ஜினீயர். முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நண்பர். அறிவியல், வானியல், இயற்பியல், எழுத்து, தமிழ் இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் கரை கண்டவர். மனைவி பெயரில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்து விட்டது. 100க்கும் அதிகமான நாவல்கள், 250க்கும் அதிகமான சிறுகதைகள் ஏராளமான கட்டுரைகள் என எழுதியவர்.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் எல்லாம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தவை. பின்னாளில் நாவலாகவும் திரைப்படமாகவும் மாறியவை. கணையாழி புத்தகத்தின் கடைசி பக்க கட்டுரைகளே, தனி தொகுப்பாக ரசனைக்குரியது.
சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்தால் எந்த அளவுக்கு அவர் எதிர் காலத்தை துல்லியமாக கணித்திருக்கிறார் என்பது புரியும். அறிவியல் புனைவு கதைகளுக்கு அவருக்கு நிகர் அவர்தான். கம்ப்யூட்டர் பற்றி பரவலாக அறியாத காலத்திலேயே கம்ப்யூட்டர் என்னென்ன செய்யும் என சொன்னவர். இன்றைய மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் ரோபோக்களையும் அந்த நாளின் அவரது கதைகளில் பார்க்கலாம். உலகை அச்சுறுத்தும் கிருமிகளையும் கூறியவர்.
அறிவியல் கதை, பிரபஞ்சம் பற்றிய கதை, அரசியல் கதை, துப்பறியும் கதை, கூடவே கிராமத்து மனிதர்களை பற்றிய கதை என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடியவர். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் உதாரணம். எதை தொட்டாலும் அதை விரிவாக அலசி எளிதாக விளக்கி சொல்பவர்.
கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்தில் தமிழே கிடையாது, ஆங்கிலம் தான். ஆனால் தமிழில் எப்படி எழுதலாம் என்பதை சொல்லி அதற்கு கோட் உருவாக்குவது வரை ஆலோசனை சொன்னவர். இப்போது தமிழிலேயே செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் எழுதுவதற்கு நன்றி சொல்ல வேண்டியவர்களில் அவரும் ஒருவர்.
கமல் நடித்த பழைய 'விக்ரம்' படம் இவரது கதைதான். அதில் இவர் சொன்ன ஏவுகணை தான் இன்றைய நவீன ஏவுகணையான டொமோஹாக்.
எழுத்தாளர் சுஜாதாவை கதாசிரியர் சுஜாதாவாக சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாலச்சந்தர். ரஜினிக்கு 'காயத்ரி', 'ப்ரியா', 'நினைத்தாலே இனிக்கும்', 'சிவாஜி' படங்கள். கமலுக்கு 'விக்ரம்', 'இந்தியன்' படங்கள். இயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ரோஜா', 'உயிரே' படங்கள். இயக்குநர் சங்கரின் 'எந்திரன்', 'முதல்வன்', 'அன்னியன்' படங்கள். இப்படி தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்கள் சுஜாதாவின் கைவண்ணம் தான். இவரது வசனங்கள் தான்.
என்ஜினீயர் ரங்கராஜனாக சுஜாதா படைத்த முக்கிய சாதனை இன்று உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் வரை பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். ஈவிஎம் மெஷின்களை முதன் முதலில் வடிவமைத்து அதை அறிமுகப்படுத்திய குழுவில் இவர் முதன்மையானவர்.
என்ஜினீயராக, எழுத்தாளராக, சினிமா கதாசிரியராக தனக்கு தெரிந்த அனைத்தையும் பாமரருக்கு புரியும்படி சொல்லத் தெரிந்த திறமைசாலியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3...
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment