16 வயதினிலே...
தமிழ் சினிமாவை முற்றிலுமாக திருப்பிப் போட்ட படம். இயக்குநராக பாரதிராஜா, நாயகியாக ஸ்ரீதேவி என மாஸ் அறிமுகங்கள் ஒருபுறம் இருக்க... ரஜினி, கமல், கவுண்டமணி, பாக்யராஜ், காந்திமதி என பின்னாளைய பிரபலங்கள் பலரையும் மொத்தமாக ஒரே படத்தின் மூலமாக ரசிகர்களிடம் சேர்த்த படம் அது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் பாலசந்தருக்கு நிகராக இந்த படத்தின் அறிமுக இயக்குநரும் வருவார் என உறுதியாக சொன்னவர், அந்த படத்தின் தயாரிப்பாளர்...
கிழக்கே போகும் ரயில்...
அதே இயக்குநருக்கு அடுத்த சூப்பர் ஹிட் படம். 1980களின் நாயகன் சுதாகர், தமிழின் எவர்கிரீன் நாயகி ராதிகா என இருவரையும் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்தார், அந்த தயாரிப்பாளர்...
கன்னிப் பருவத்திலே...
படு பயங்கர காமுக வில்லனாக நடிப்பின் மறு பக்கத்தை கே.பாக்யராஜ் காண்பித்த படம். தமிழ் சினிமாவின் அம்மா நடிகை வடிவுக்கரசி, நாயகியாக திரைக்குள் அறிமுகமான படமும் இதுதான். ஹீரோ அன்றைய பிரபல நாயகன் ராஜேஷ். இந்த படத்தையும் அவர் தான் தயாரித்தார்...
இது தவிர, 'வாலிபமே வா வா' (கார்த்திக்), 'எங்க சின்ன ராசா' (பாக்யராஜ்), 'மகாநதி' (கமல்), 'பொண்ணு புடிச்சிருக்கு' (ரேவதி) என பத்துக்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' என்ற பேனரில் தயாரித்தவர்...
அப்போதெல்லாம் படம் ரீலிசுக்கு முன் மொத்த பாடல்களுமே ஆடியோ கேசட்டாக வெளியாகி விடும். வழக்கமாக, அனைத்து படங்களுக்குமே பாடல்கள் மட்டுமே வரிசையாக ஒலிப்பதிவு செய்து கேசட் வெளியிடுவார்கள்.
ஆனால் இவர் தயாரிப்பு படங்களுக்கான கேசட்டுகள் மட்டும் வித்தியாசமாக, பெண் குரல் ஒன்று, பாடல்களை தொகுத்து வழங்கும். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் படத்தின் இயக்குநர் ஹீரோ தயாரிப்பாளர் பெயர்களுடன் படத்தின் பெயரை சொல்லி விட்டு பாடலை அறிமுகம் செய்யும் அந்த குரல். 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'எங்க சின்ன ராசா' பட பாடல் கேசட் வரை கேட்ட அந்த குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது...
அன்றைய நாளில் மிகச் சாதாரணமானவர்களாக இருந்து இன்று பிரபலங்களாக இருக்கும் பலர், இவரிடம் வாய்ப்பு கேட்பதற்காக காத்துக் கிடந்த காலம் உண்டு.
அவர்தான் 1980ஸ்களின் பிரபல தயாரிப்பாளர் 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
சில நாட்களுக்கு முன், சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் அவர் மரணமடைந்து விட்டார். சினிமா துறையில் இருந்து யாருமே எட்டிப் பார்க்கவில்லை. சமூகவலை தளங்களில் இரங்கல் பதிவுகளோடு சரி...
இதைப் பார்த்தால், ஓய்வு பெற்ற தலைமை செயலாளரும் எழுத்தாளருமான இறையன்பு எழுதிய 'நரிப்பல்' என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது...
இதுதான் இன்றைய உலகம்... அதுவும் இது கனவு தொழில் உலகம்... கேட்கவா வேண்டும்...?
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment