சாகர சங்கமம் @ சலங்கை ஒலி, சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து, சங்கரா பரணம்... இந்த மூன்று படங்கள் போதும், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பெயரை காலத்துக்கும் திரையுலகம் பேசிக் கொண்டிருப்பதற்கு.
நடனம் மீது பெரு விருப்பம் கொண்டு வெறியாய் சுற்றும் ஒரு கலைஞனுக்கு உதவும் பெண். அவளுடனான காதல், அந்த காதலில் தோல்வி, நடனத்தை வணிகமாக்கிய சமூகத்தின் மீது வெறுப்பு, இறுதியில் போதையில் மூழ்கி வாழ்வை முடிக்கும் கதைதான் 'சலங்கை ஒலி'.
1980களின் காதல் இளவரசனையும் காதல் இளவரசி ஜெயப்பிரதாவையும் அப்படி காட்டி இருப்பார் இயக்குநர் கே.விஸ்வநாத். "இது மவுனமான நேரம்..." பாடலே போதும்...
படத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு காட்சிகளில் வலம் வரும் "ஓம் நமச்சிவாயா..." பாடலும் அதில் வரும் "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்..." என தொடங்கி வரும் வரிகளும் சலங்கை ஒலியோடு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
திருமணமாகிப் போன தனது காதலி, வயதுக்கு வந்த மகளுடன் இருப்பதை அறிந்து காண செல்லும் காதலன்... அவன் வரும் போது விதவை கோலத்தில் தன்னை பார்த்தால் வேதனைப் படுவானே என நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வரும் காதலி... அப்படி வரும் போது மழையில் அவளது குங்குமம் கரைய அதை கையால் மறைத்து தடுக்கும் காதலன்...
"தகிட தகிட தகிட தகிட தம் தானா..." இது பாடல் அல்ல... காதல் காவியம்.
1980களில் விதவைக்கு பொட்டு வைப்பது, மறுமணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அதிலும் சினிமாக்களில் அது போன்ற காட்சிகளை எல்லாம் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்று கமர்சியலான வெற்றியை தரும் என்பதெல்லாம் நிச்சயம் கிடையாது. நாயகன் நாயகியை மணம் ஆனவர்களாக காண்பித்தாலே ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தவர், இயக்குநர் கே விஸ்வநாத்
அதற்கு சாட்சி சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து. சலங்கை ஒலியில் சிவன் பாடல் பிரபலம் என்றால் இதில் ராமன் பாடலும் சீதா கல்யாணமும். மன வளர்ச்சி குறைந்த ஆட்டிசம் குறைபாடு கொண்ட நாயகன். ஒரு மகனுடன் வாழும் விதவைப் பெண், நாயகி. கிராமம், வீடு என சுற்றிலும் கொடுமைகளை அனுபவிக்கும் அந்த விதவைக்கு கோயிலில் சீதா கல்யாண வைபவம் நடக்கும் போது தாலியை கட்டி விடுவான் நாயகன். கிராமத்தாரின் எதிர்ப்புகள் சூழ, பல போராட்டங்களுக்கிடையே நாயகனை குணமாக்கி விட்டு ஒரு குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டு அந்த பெண் இறந்து போவார். இதுதான் கதை.
முழுவதும் பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் முதல் காட்சியே மனைவி நினைவாக துளசியை வைத்து பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நாயகன், கடந்த கால நினைவுகளில் மூழ்குவதாகத்தான் படம் தொடங்கும்.
முந்தைய படத்தில் சிறந்த நடன கலைஞராகவும் இந்த படத்தில் சரியாக குதிக்கக் கூட தெரியாத ஆட்டிசம் நபராகவும் கமலை வாழ வைத்திருப்பார், கே.விஸ்வநாத். பிரபல நாயகியாக இருந்தாலும் துணிச்சலாக இளம் விதவையாக, ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்த ராதிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
கே.விஸ்வநாத்தின் இந்த இரண்டு படங்களுமே ஓராண்டுக்கு மேல் தெலுங்கில் ஓடி வசூலை குவித்து அப்படியே தமிழ் பேசியவை. இரண்டுக்குமே எஸ்.பி.பி. கூடுதல் பலம். 'சிப்பிக்குள் முத்து'எல்லா பாடல்களுமே அவர்தான். தமிழில் அந்த படத்தில் கமலுக்கு டப்பிங்கும் எஸ்பிபி தான்.
இசைப் படைப்பான 'சங்கரா பரணம்' எல்லாம் விஸ்வநாத்தை போலவே சாகாவரம் படைத்தவை. அந்த படத்தில் யாருமே அதுவரை அறிந்திராத சோமயாஜுலுவை (இது நம்ம ஆளு பாக்யராஜின் மாமனார்) பட்டை தீட்டியிருப்பார்.
இயக்குநரை கடந்து நடிகராக கே.விஸ்வநாத்தை தனுஷின் 'யாரடி நீ மோகினி' தான் நினைவுக்கு வரும். அதற்கு முன் 'காக்கைச் சிறகினிலே...' படத்தில் பார்த்திபனின் (வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி வருமே) வளர்ப்பு தந்தையாக படம் முழுதும் வாழ்ந்திருப்பார், கே.விஸ்வநாத். நடித்தது மாதிரியே தெரியாது.
1960களிலேயே சினிமாவுக்கு வந்தாலும் தாமதமாகவே ஜொலித்த கே.விஸ்வநாத் வெற்றி இயக்குநராக மட்டுமல்ல... அப்பா வேடங்களுக்கு ஏற்ற சிறந்த குணசித்திர நடிகராகவும் கொண்டாடப்பட வேண்டியவர்.
பத்மஸ்ரீ தாதா சாகேப் பால்கே விருது வரை வென்ற அவர் 90 வயதை கடந்து நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்.
அதுவும் அவரது 'சங்கரா பரணம்' படம் வெளியான நாளின் நள்ளிரவில் தான் மறைந்திருக்கிறார். இசை உள்ளளவும் சங்கராபரணமும், சங்கராபரணத்துடன் விஸ்வநாத் பெயரும் வாழ்வாங்கு வாழும்.
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment