Wednesday, December 21, 2016

வெற்றியை நோக்கி ... 1

வாங்க பழகலாம்

இது போட்டி நிறைந்த உலகம். உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் போட்டி நிலைமையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டாம். பரப்பளவில் பெரியதாக உள்ள நாடுகளில் கூட மக்கள் தொகை குறைவாகவே இருக்கிறது. ஆனால், குறைவான பரப்பளவு, நிறைவான மக்கள் என இந்தியா திண்டாடுகிறது. இப்படித்தான் பலருடைய கருத்துகளும் உள்ளது. மனித சக்தி என்ற மகத்தான வலிமை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு மனித சக்தி இந்தியாவில் இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையும் வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதால் சிந்தனை சக்தியும் நிறைந்து நிற்கிறது. இதை கருத்தில் கொண்டே, சர்வதேச நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து கடை விரிக்கின்றன என்பது தனிக்கதை.

எனவே, இந்த அளவுக்கு பெரிய அளவிலான கும்பலாகவும் தனித்த சிந்தனைகளுடனும் இருக்கும் ஒரு நாட்டில் வெற்றியாளராக வலம் வர வேண்டுமானால் நாம் தனித் திறமையை வித்தியாசமான முறையில் வெளிக்காட்டுவது மிக அவசியம். அது வெறும் அறிவுத் திறனை மட்டும் சார்ந்தது கிடையாது. வாழ்வியல் திறனை மேம்படுத்துவதிலும் இருக்கிறது. இதையே அனுபவ அறிவு அல்லது வெளி உலக அனுபவம் என அழைக்கின்றனர். அதாவது, பழகும் திறமை முக்கியமானது. அதனால் தான், ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே வளாக தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பலரும் இந்த திறமையாலேயே தேர்வாகின்றனர். மற்றவருடன் எளிதில் பழகும் திறன் உடையவர்களை அனைவருமே விரும்புவார்கள். அடுத்தவரை கவரும் பேச்சாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் இந்த திறமை இயல்பாகவே வாய்க்கும். பழகும் திறனில் கனிவான பேச்சும் கலந்தால் தேனோடு கலந்த தெள்ளமுதாகி விடும். இனிமையான சொல்லும் கனிவான பேச்சும் எதிரில் இருப்பவரை நம் வசப்படுத்தும். கனி இருக்கும்போது காயை யாராவது விரும்புவார்களா?

அப்படிப் பழகும்போது நம்மை விட சிறியவர்களையும் மரியாதையாக நடத்துவது சிறந்தது. 100 வயதை எட்டும் ஒருவர், சந்திக்கும் அனைவருமே வயதில் அவரை விட சிறியவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரு நிலையிலும் அனைவரையும் மரியாதையாக அணுகுவது சிறந்தது. தனது 90 வயதை கடந்த நிலையிலும் சிறிய குழந்தையை கூட, ‘வாங்க, உட்காருங்க’ என அழைத்தவர், ஈவேரா பெரியார். அதனால் தான், அவர் இன்றும் என்றும் பெரியாராக இருக்கிறார். இதையே, ‘கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்’ என கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.

காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. நேற்று முன்தினம் தான் புதிதாக பிறந்தது போல இருந்த இந்த ஆண்டின் ஓட்டம் முடிந்து எதிரில் புத்தாண்டு தயாராக நிற்கிறது. மனித வாழ்வும் தொடர் ஓட்டம் போலத்தான். அதில் குறுக்கிடும் அனைவருமே நமக்கு தேவை. நம்மை நாடி வரும் ஒவ்வொருவரும், நமக்காக ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பை உடுத்துக் கொண்டே நம்மை தேடி வருகின்றனர். எனவே, வாங்க பழகலாம் என பழகி வைப்பது முன்னேற்றத்துக்கான முதல் அடியாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு வாயில் கதவை தட்டுகிறது. கதவை திறந்து பார்த்தால் துதிக்கையில் பூமாலையை ஏந்தியபடி பிரமாண்டமான யானை கூட நிற்கலாம். அதை வரவேற்பதும், வரவேற்கும் முறையுமே நமது வாழ்க்கை ஓட்டத்தை நிர்ணயிக்கிறது.

எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல மாலையுடன் காத்திருக்கும் யானையை வரவேற்க செல்லும்போது கையில் தீப்பந்தம் ஏற்றியபடி வாயில் கதவை திறந்தால், அது யார் தவறு?

நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதவை கூட எதிர்காலத்தில் நிஜமாக கூடும். உதாரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன் பேஜர் என்ற ஒரு கருவி இருந்தது. வெறும் எஸ்எம்எஸ் தகவலை மட்டுமே அது அளிக்கும். நம்மில் பலருக்கும் அது மங்கலாக நினைவில் வரலாம். பேஜர் புழக்கத்தில் இருந்தபோது அதில் தமிழில் தகவல் வருவதே அதிசயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், இன்றைய செல்போன் உலகம் குறித்து யாராவது கற்பனையில் கூறியிருந்தால் அவரை ஒரு மாதிரியானவர் என்று தான் பரிகசித்து இருப்போம். ஆனால், செல்போன் வளர்ந்து ஆன்ட்ராய்டு, ஐ பேட் என பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. உள்ளங்கையில் உலகம் அடங்கி விட்டது. இது இன்னும் வளரலாம். நம்மால் நம்ப முடியாத அதிசயங்கள் கூட நடக்கலாம்.

இந்த இடத்தில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் சற்று பொருத்தமாக இருக்கும். உலகையே கதி கலங்கச் செய்த பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போர்னபார்ட் காலத்தில் தான் நீராவி என்ஜின் முதலில் வடிவமைக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் என்பவர் நெப்போலியனை சந்தித்து, ‘காற்றை கிழித்து படகை செலுத்தும் சக்தி அந்த என்ஜினுக்கு உண்டு’ என்பதை அவரிடம் விளக்கிக் கூற அனுமதி கேட்டு காத்திருந்தார். காற்றின் போக்கிலேயே படகுகளையும் கப்பல்களையும் கடலில் செலுத்திய காலம், அது. அதனால், காற்றை எதிர்த்து படகு செலுத்த முடியும் என்பதை நெப்போலியன் துளியும் நம்பவில்லை. அதை கண்டு பிடித்து விளக்கம் கூற வந்தவரையும் முட்டாள் என்றே நினைத்தார். எனவே, ‘முட்டாள்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என பதிலளித்து ராபர்ட் புல்டனை சந்திக்க மறுத்து விட்டார்.
அந்த கணத்தில் மட்டும், ராபர்ட் புல்டனை மாவீரன் நெப்போலியன் சந்தித்திருந்தால் வரலாற்றின் போக்கு மாறி இருக்கும். கிழக்கு நோக்கி தரை மார்க்கமாக ஆட்சி விஸ்தரிப்பில் முனைந்த நெப்போலியன், மேற்கு நோக்கி கடல் பயணம் செய்திருப்பார். அப்படி சென்று இருந்தால் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அவரிடம் மண்டியிட்டிருந்திருக்கலாம். பிரெஞ்சு ஆதிக்கமே உலகில் வியாபித்திருக்கலாம். பிரிட்டிஷ் மேலாதிக்கம் என்ற ஒன்று உலகில் தலை தூக்காமலே போய் இருக்கலாம்.

பழக வந்த ஒரு நண்பனை நெப்போலியன் உதாசீனம் செய்ததால் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவு காணவில்லை. தோல்வியையே கண்டிராத நெப்போலியன், ரஷ்யாவின் வாட்டர்லூ பகுதியில் தோல்வியின் கசப்பை ருசித்தார். எனவே, நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு  அவசியம் தேவை. வாங்க பழகலாம் என ஒவ்வொருவருடனும் கை குலுக்குங்கள்.


(வெற்றிப் பயணம் தொடரும்...)
Post a Comment