Friday 23 December 2016

வெற்றியை நோக்கி - 2

கற்பனை கோட்டை கட்டுவோம்


இந்த உலகில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம், எழுதும் பேனா, சமையல் அடுப்பு, செல்போன், படிக்கும் கல்வி நிலையம் என அந்த பட்டியல் மிக நீளமானது. அனைத்துக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? கற்பனை. ஆச்சரியமாக இருக்கிறதா? பேனாவுக்கும் கற்பனைக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். சமையல் அடுப்புக்கும் கற்பனைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இருக்கிறது. நம் கண் முன்னே காட்சி தரும் ஒவ்வொரு பொருளுமே ஏதோவொரு மனிதனின் மூளையில் உதித்த கற்பனையின் நிஜக்காட்சிகள் தான். கற்பனை இல்லாவிட்டால் இந்த உலகில் எதுவுமே கிடையாது. சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஆகாய விமானம் என்பது முதலில் ஒரு மனிதரின் கற்பனையில் உதித்ததே. அதற்கு, அவனுக்கு உந்து சக்தியாக இருந்தது பறவை இனம். பறவையை சாதாரண கோணத்தில் பார்க்காமல் தேடலுடன் கூடிய கற்பனை கோணத்தில் பார்த்ததால் ஆகாய விமானம் பிரசவித்தது.

பல ஆயிரம் மக்களை சுமந்து கொண்டு பல நூறு கி.மீ தொலைவு ஓடும் ரயிலும் ஏதோ ஒரு மனிதரின் கற்பனையில் தான் முதலில் ஓடியது. அந்த பெட்டிகளின் வடிவமைப்பு, என்ஜின்களின் வகை என ஒவ்வொன்றும் வெவ்வேறு தனி மனிதனிடம் உதித்த கற்பனைகளே. இன்றும் கூட அரண்மனை போன்ற சொகுசு பெட்டிகள், டபுள் டெக்கர், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என புதுப்புது ரயில்கள் அறிமுகமாகின்றன. அதுவும் மனித கற்பனை வளத்தினால் விளைந்த கனிகளே.

உலகில் உள்ள வைரச் சுரங்கங்களும், தங்கச் சுரங்கங்களும், நிலக்கரி சுரங்கங்களும் ஒரு காலத்தில் சாதாரண மண் தரைகளே. தன்னுடைய காலுக்கு கீழே புதையல் இருக்கலாமோ என்ற கற்பனை, யாரோ ஒருவர் மனதில் உதித்ததாலேயே நிலத்தை ஊடுருவி தோண்டும் பணியை மனிதன் துவக்கினான். அந்த தேடல் தான் வைரச் சுரங்கமாகவும் தங்கச் சுரங்கமாகவும் மாறி நிற்கிறது.

சிந்தனையை கற்பனை சுரங்கமாக வைத்திருந்தால் புதிய யோசனைகளின் ஊற்றுக்கண்ணாக மாறும். சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் உபயோகம் மிகுந்த பொருட்கள் உருவாகும்.

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற தனி மனிதன் கற்பனை காணாமல் இருந்திருந்தால் இன்று பேசும் படக் கருவி முதல் பல்வேறு பொருட்களும் அதன் பரிணாம வளர்ச்சியினால் விளைந்த நவீன தொழில்நுட்ப கருவிகளும் நம்மை வந்து சேர்ந்திருக்காது. கிரகாம்பெல் கற்பனையில் நீண்டநாட்களாக மணி அடித்துக் கொண்டிருந்த தொலைபேசி என்ற கருவியை அவர் நிஜமாக்கி காட்டியதால் தான் இன்றைய கால கட்டத்தில் விதவிதமான செல்போன்கள் நமக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பயன்களை அள்ளித் தருகின்றன. எனவே, கற்பனை என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியம். உதாரணமாக ஒரு கதையை கூறலாம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். ராமு, சோமு என்பது அவர்களின் பெயர்கள். அவர்களின் தேர்வு எண்கள் கூட அடுத்தடுத்தே அமைந்திருந்தன. இதனால், ஒவ்வொரு தேர்வின்போதும் ராமுவின் தேர்வு தாளை பார்த்து எழுதுவதையே வழக்கமாக வைத்திருந்தான், சோமு. அது, ஓவிய தேர்வாக இருந்தால் கூட. ராமு எந்த ஓவியத்தை கற்பனையில் வரைகிறானோ அதையே சோமுவும் காப்பியடிப்பது வழக்கம். சோமுவின் வழக்கம் மாறவில்லை. பள்ளிப்பருவம் முடிந்தது. ஆண்டுகள் உருண்டோடின.

வளர்ந்து பெரியவனான சோமு வேலை தேடியபோது ஒரு ஜெராக்ஸ் கடையில் தான் பணி கிடைத்தது. ராமுவோ, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் எக்சிகியுடிவ் அளவுக்கு உயர்ந்தான். அவனுடைய கற்பனை கலந்த வரைபடங்களுக்கு கடும் கிராக்கி என்பதால் நிறுவனம் சார்பாக பல்வேறு வெளிநாடுகளையும் அவன் வலம் வந்தான். இது வெறும் கற்பனை கதை அல்ல. கற்பனை திறன் இருந்தால் மட்டுமே மனித வாழ்வில் ஜொலிக்க முடியும் என்பதை கூறும் கதை.   

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். வேலை தேடுபவராக இருக்கலாம். ஏதாவது ஒரு துறையில் பணியாற்றுபவராக இருக்கலாம். இல்லத்தரசியாக இருக்கலாம். மாணவராக இருக்கலாம். மிகப்பெரிய தொழிலதிபராக கூட இருக்கலாம். உங்களுக்கான கடமையில் கற்பனைத் திறனும் கலந்து இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியானது, தனித்துவமாக இருக்கும்.

இதனால் தான், சிறிய வயதிலேயே மாணவர்களை கனவு காணுங்கள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஊக்கப்படுத்தினார். கற்பனையின் மற்றொரு வடிவம் தான் கனவு. ஏதாவது ஒன்றை தொடர்ந்து கற்பனை செய்து பார்த்தால், அதை நிஜமாக்க வேண்டும் என்ற உத்வேகம் மனதுக்குள் எழும்.

தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், கல்வி, அறிவியல், விண்வெளி, கணினி என ஒவ்வொரு துறையும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்னும் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அடிப்படை காரணம், அந்த துறை சார்ந்துள்ளவர்களின் கற்பனை திறன். வெற்றி என்ற சாதனையை அடைய துடிக்கும் ஒவ்வொருவருக்கும் கடமையுடன் கூடிய தேடல் நிறைந்த கற்பனைத் திறன் அவசியம்.

(வெற்றிப் பயணம் தொடரும்...)

No comments: