Sunday 18 December 2016

வெற்றியை நோக்கி … முன்னுரை

வாழ்க்கை பொக்கிஷம்..
(இந்த தொடரை வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்)

கற்கால ஆதி மனிதன் தொடங்கி நவநாகரீக மனிதன் வரை அனைவருடைய இலக்கும் வெற்றியை நோக்கியே உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் அந்த வெற்றியின் பொருள் மாறுபடலாம். பள்ளியில் பயிலும் மாணவனுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவதே வெற்றி. கம்பியில் ஆடும் கழை கூத்தாடிக்கு தட்டில் விழும் அதிகபட்ச சில்லறை காசுகளே வெற்றி. படித்த இளைஞனாக இருந்தால் நல்லதொரு வேலையை தேடி கண்டுபிடித்து சேருவதே மிகப்பெரிய வெற்றி. அப்படி ஒரு வேலை கிடைத்து விட்டால் சம்பள உயர்வு, பதவி உயர்வு என வெற்றியின் எல்லைகள் விரிவடைகின்றன. பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்கும் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் போடப்படும் தொழில் உடன்படிக்கைகளே வெற்றி.

ஆனால், இந்த வெற்றியை அடைவது மிகவும் எளிதானதல்ல. அவரவர் பார்வையில் அவரவர்களின் வெற்றி இலக்கு மிகவும் கடினமானது. பிரம்மாண்டத்தின் உச்சம். வெற்றி என்பது தனி நபருக்கு மட்டுமே சொந்தமானது. அவருடைய சொந்த முயற்சியுடன் தொடர்புடையது. ஆனால், அதற்கான பயணம் கூட்டு முயற்சியால் ஆனது. மற்றவர்களின் கூட்டுறவு இல்லாமல் பயணத்தில் வெற்றி பெறலாம் என்பது அறியாமை. எனவே, அது போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது எப்படி? அது வெற்றிக் கூட்டணியாக அமையுமா?

அதே நேரத்தில், ‘நான் தனித்துவமானவன்’ என்ற கருத்து ஒவ்வொருவருடைய மனதிலும் நிலை கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர் முதுகில் சாய்ந்து கொண்டும், பிறர் தோளில் சவாரி செய்து கொண்டும் வெற்றியை ருசிப்பது என்பது மிகவும் அவலமான ஒன்று. வாழ்க்கை முழுவதும் பிறர் ஒருவரை சார்ந்தே இருப்பது சோம்பேறிகளின் செயல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சுயமாக நின்று சவால்களை எதிர் கொள்ள தனித்திறமை வேண்டும். கூட்டணியா? தனி அணியா? 

மனிதனாக பிறந்தால் தேங்கி கிடப்பதும் சோம்பி திரிவதும் சரியல்ல. கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் கோழி போல ஒரே இடத்தில் தங்கி அங்கேயே சகலத்தையும் கழித்து துர்நாற்றத்துடன் வாழ்வது வாழ்க்கையா? குளம், குட்டை என தேங்கி கிடக்கும் நீர் நிலைகளை பாருங்கள். சல சலத்து ஓடும் நதி நீரை பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? குட்டை தேங்கியே கிடக்கும். நதி ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் நதியாக மாறுவது எப்படி?

மலை முகட்டில் நீரூற்றாக துவங்கும் நதியானது, நீர் வீழ்ச்சியாக வீழ்வது உண்டு. உடனே, அந்த நதி வீழ்ந்து விட்டதாக கருத முடியுமா? அத்துடன் அதன் சகாப்தம் முடிந்து விட்டதா? இல்லையே. வயல்களை வளப்படுத்தும் நதியாக அது ஓடவில்லையா? அந்த நீர் வீழ்ச்சியை போலவே வீழ்ச்சிக்கு பிறகும் பரபரத்து உற்சாகத்துடன் ஓடுவது எப்படி?
எதை போட்டாலும் தன்னுள் ஜீரணித்து கொள்வது மண்ணின் குணம். இலை, தழைகள் துவங்கி மனித உடல் வரை அனைத்தையுமே மட்கச் செய்து துகள்களாக மாற்றி விடுகிறது. ஆனால், அந்த மண்ணையும் வெற்றி காண்கிறது, சிறு விதை. உருவத்தில் மிகச் சிறியதாக உள்ள விதைக்கு இருக்கும் விடா முயற்சி நமக்குள் இல்லையா?
வரலாற்றில் பாடங்களாகவும் படங்களாகவும் அறிமுகமான சரித்திர நாயகர்கள் முதல் நிகழ்காலத்தில் கண் முன்னே நடமாடும் சாதனை நாயகர்கள் வரை நம்மை ஆச்சரியப்படுத்தும் மனிதர்களின் பட்டியல் மிக நீளம். எந்த வித மந்திரக்கோலாலும் அந்த பட்டியலில் அவர்கள் இடம் பிடிக்கவில்லை.  அவர்களின் சாதனை சரித்திர பின்னணி வித்தியாசமானது. அது போன்ற பட்டியலில் நமக்கும் இடம் கிடைக்குமா என எதிர் பார்க்கிறீர்களா?

வெற்றியை தேடி ஓடும் மனிதர்களுக்குள் தான் எத்தனை கேள்விகள்? ஒவ்வொரு கேள்விக்கும் ஏராளமான பதில்கள் உள்ளன. அது என்ன என்ற ஆவல் மேலிடுகிறதா? ஒவ்வொருவரும் முயற்சித்தால் சாதனை மகுடத்தை சூட்டலாம். சரியான திட்டமிடலுடன் எட்டிப் பிடித்தால் வானமும் நம் வசப்படும்.

மிகப்பெரிய தோட்டங்களும் வயல் வெளிகளும் சோலைகளும் ஒரே நாளில் உருவானவை அல்ல. வெறும் மண் தரையை பூத்துக் குலுங்கும் நறுமணம் வீசும் சோலைகளாக்கி நம்மை விழி விரிய காணச் செய்தது பாட்டாளி தோழர்களின் வியர்வையும் உழைப்புமே. அதுபோன்ற உண்மையான உழைப்பை அளித்தால் நிச்சய பரிசுடன் காலம் காத்திருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பாக இருந்தால் சாதனை சிகரத்தை எட்ட முடியும். அதற்கான படிக்கட்டுகள் ஏராளம். தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, அனுபவம், கல்வி, பொறுமை, விடா முயற்சி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த படிகளை கடந்தால் வெற்றிக் கனியை சுவைக்கலாம். தொடர்ந்து வரும் பாடங்களில் அந்த படிக்கட்டுகளை நாம் காணலாம். 

(வெற்றிப் பயணம் தொடரும்...)

No comments: