Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 20

உற்சாக மனநிலை    

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாளில் காலையில் இருந்தே ஏமாற்றமும் தோல்வியும் தொடர்ந்தால் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? ‘காலங்காத்தால யாரு முகத்துல முழிச்சோமோ’ என்ற எண்ணம் மெதுவாக மனதுக்குள் துளிர் விடும். பிறர் மீது பழி போடுவதை விடுத்து உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். காலையில் எழுந்ததும் மனதுக்குள் சோம்பலும், உற்சாகமின்மையும் குடி கொண்டால் அந்த நாள் எப்படி அமையும்?

ஒரு நாளின் தொடக்கத்தில் உற்சாகமான மனநிலை அமைந்தால் தான் அந்த நாளில் வெற்றி முழுமையாகும். ஒரு மனிதனை வெற்றியாளராக மாற்றுவதில் உற்சாகமான மனநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மனம் சோர்ந்திருக்கும் சமயத்தில் உற்சாகம் தரும் துள்ளல் இசையை கேட்டால் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும். எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பவரையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பவரையும் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

விளையாட்டு, வர்த்தகம், கல்வி, சமூகம், அரசியல், திரைப்படம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நம்பர் ஒன் சாதனையாளர்களை உற்று நோக்கினால் ஒரு ஒற்றுமை புலப்படும். அவர்கள் அனைவருமே சோர்வு என்பதே அறியாமல் தானும் உற்சாகமாக இருந்து தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் கலையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிகச் சிறந்த என்டர்டெய்னர்களுக்குத்தான் எப்போதுமே மவுசு.

விற்பனைத் துறைகளில் வெற்றிகரமாக உள்ளவர்களிடம் இத்தகைய உற்சாகம் எந்நாளும், எந்த நேரமும் குடிகொண்டு இருப்பதை காண முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் அந்த துறையில் ஜொலிக்க முடியாது. உற்சாகமான சூழ்நிலையை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்வதையும் காணலாம்.

அதனாலேயே, சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒவ்வொன்றிலும் இதுபோன்ற விற்பனை பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவிலான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். கூட்டத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரி அல்லது வெளியில் இருந்து முக்கிய சொற்பொழிவாளர் யாரையாவது அழைத்து வந்து உற்சாகமூட்டும் கருத்துகளை பேசச் செய்வார்கள். மனதுக்குள் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும் வேலையிலும் அதன் விளைவாக நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும்.

வெற்றியை உருவாக்கிக் கொள்ள மிகுந்த செயல்திறன் தேவை. செயல்திறன் மிக்க மனிதனாக இருப்பதற்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வது மட்டுமே போதுமானதல்ல. அறிந்து கொள்வது, செயல் திறன் இரண்டுமே மிகவும் அவசியம். அறிந்து கொண்டதை செயலாக்கி காட்டுவதற்கு உற்சாகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதுபோல வெற்றிக்கு உற்சாகம் மிகவும் முக்கியம். மனதுக்குள் உற்சாகம் வடிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எதிர்மறை எண்ணம். அந்த எண்ணம் தோன்றிய மறுகணமே உற்சாகம் காணாமல் போய்விடும். வாய்ப்புகளால் உருவாவது அல்ல. தானாகவே, புறத் தூண்டலால் ஏற்படுவதுதான் உற்சாகம்.

ஒரு பிரபலமான சோப் உற்பத்தி நிறுவனப் பொருட்களின் விற்பனையில் சில நாட்களாக மந்தமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த முக்கியமான விற்பனைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விற்பனை மந்தமானது குறித்து விவாதம் ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் கூறினார்கள். ‘மாற்று நிறுவனத்தின் போட்டி பலமாகி விட்டது’, ‘மக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டது’, ‘நம்முடைய உற்பத்தி பொருளுக்கு இன்னும் அதிக விளம்பரம் தேவை’ - இப்படி பல்வேறு யோசனைகள் அந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

உடனே, நிறுவனத்தின் முதலாளி எழுந்து அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறினார். பின்னர், நிறுவனத்தில் கேன்டீன் நடத்துபவரை அழைத்து வந்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேண்டீன்காரருக்கு இந்த கூட்டத்தில் என்ன வேலை? என நினைத்தனர். ஏற்கெனவே, அந்த நிறுவனம் நட்டத்தில் செல்வதாக வதந்திகள் கிளம்பி இருந்ததால், நம்முடைய முதலாளிக்கு ஏதோ ஆகி விட்டது என்றே அவர்கள் கருதினர்.

சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர், மெதுவாக முதலாளி பேசத் தொடங்கினார். ‘நம்முடைய நிறுவனத்தில் முன்பு இருந்த கேன்டீன் உரிமையாளர், தகுந்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறிச் சென்று விட்டார். தற்போது, புதிதாக கேன்டீன் உரிமையை இவர் எடுத்திருக்கிறார். இவருக்கு முந்தைய நபருக்கு வழங்கியது போல இவருக்கு நிறுவனத்தில் இருந்து மானியத் தொகை வழங்குவதில்லை. கேன்டீன் நடத்தும் இடத்துக்கு கூட வாடகை வசூலிக்க தொடங்கியுள்ளோம். ஆனாலும், இவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. நகருக்குள்ளும் புதிதாக ஒரு கேன்டீன் திறந்திருக்கிறார். எப்படி? அதற்கு காரணம் என்ன? இப்படி கேள்விகளை எழுப்பிவிட்டு அவரே பதில் கூறத் தொடங்கினார்.

“பழைய கேன்டீன் உரிமையாளர், குறிப்பிட்ட நேர அளவில் மட்டும் தான் திறந்து வைத்திருந்தார். நமது நிறுவனத்தில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உற்பத்தி நடைபெறுகிறது என்பதும் 16 மணி நேரம் வரை ஊழியர்கள் பணியாற்றுவதும் அனைவருக்கும் தெரியும். இதை சரியாக புரிந்து கொண்டு கேன்டீன் நேரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார், இந்த புதிய உரிமையாளர். மனதுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த சமயத்தில் எந்த பொருள் தேவை என்பதை கணித்துக் கொண்டு செயல்படுகிறார்.

இப்போது, உங்களுடைய பிரச்சினைக்கு வருகிறேன். உங்களுடைய விற்பனைக் குறைவுக்கு நீங்கள் தெரிவித்த காரணங்கள் எதுவுமே பொருத்தமானவை அல்ல.  நமது நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பத் தொடங்கி விட்டீர்கள். அதனால், உங்களுக்குள் உற்சாகம் குன்றி விட்டது. அதுதான் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம்.

அந்த எண்ணத்தை முற்றிலுமாக துடைத்து எறியுங்கள். இன்றில் இருந்து தினமும் குறைந்தது 5 ஆர்டர்களாவது பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விடாப்பிடியாக இருந்து சாதித்தீர்கள் என்றால் விற்பனை அதிகரிக்கும். நிறுவனத்தின் லாபமும் தானாகவே ஏறு வரிசையில் அமைந்து விடும்”

இப்படி மிக நீளமான உரையை முதலாளி முடித்த மறுகணமே வந்திருந்தவர்களின் மனதுக்குள் உற்சாக ஊற்று சுரக்கத் தொடங்கியது. அதன்பிறகு, அந்த நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

ஏற்கெனவே கூறியது போல, உற்சாகம் என்பது புறத்தூண்டல்களால் வருவது. அத்தகைய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனதுக்கு பிடித்தமான வேலையில் சேர்ந்து பணியாற்றுவது, எப்போதுமே உற்சாகத்துடன் இருக்கும் மனிதர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, மற்றவருக்கு உதவி செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது, நேர்த்தியான ஆடை அணிவது போன்றவை உற்சாகத்தை தானாகவே வரவழைக்கும் காரணிகளில் சில.

மனதுக்குள் உற்சாக வெள்ளம் கரை புரளத் தொடங்கினால் தானாகவே வெற்றியை நோக்கி அது நம்மை இழுத்துச் செல்லும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: