Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 21

ஆறு மனமே ஆறு    


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெற்றி பெறும் எண்ணம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த மனதுக்குள் ஆறு விதமான குணங்கள் நுழைந்து விட்டால் வெற்றி என்பது அதோகதியாகிவிடும். நம் அனைவரையுமே தனது கொடூர முகத்துடன் அந்த குணங்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த ஆறும் எவை தெரியுமா? சகிப்பு தன்மை இல்லாமை, பேராசை, பழிவாங்கும் உணர்ச்சி, தற்செருக்கு அல்லது தலைக்கனம், பிறர் மீது சந்தேகம், பொறாமை.

இவற்றில் சகிப்பு தன்மை இல்லாத குணமானது உறவுகளையும், நட்புகளையும் அழித்து விடும். வாழ்க்கையில் முன்னேறவும் வெற்றி பெறவும் உறவுகளும் நட்புகளும் தேவை அல்லவா? அப்படி இருக்கும்போது இதுபோன்று நிகழ்ந்தால் துயரம் தான் மிஞ்சும். இது மட்டுமல்ல சண்டை, சச்சரவுகளும் நீடிக்கும். மாறுபட்ட சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே சகிப்பு தன்மை வளரும். அதற்கு மிக அதிகமான பயிற்சி தேவை.

பேராசை என்பது தனக்குள் வேலி அமைத்து மற்றவரை வெளியேற்றுவதில் இருந்து தொடங்குகிறது. ஆசையை மனதால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது பேராசை உருப்பெறுகிறது. செல்வம், சொத்து, பணம் என அனைத்தையும் பார்த்து அவற்றின் பின்னால் ஓடுவது பேராசையின் குணாதிசயங்கள். பேராசை அளவுக்கு மீறும்போது பழிவாங்கும் உணர்வும் ஆட்கொள்ளத் தொடங்கும்.

பழிவாங்கும் உணர்ச்சி மனதுக்குள் குடியேறத் தொடங்கினால் புகழையும், பெருமையையும் சீர் குலைக்கும். அவ்வளவு ஏன்? வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும், வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியானது அவரைக் குப்புறத் தள்ளி விடும். எனவே, அதை மனதுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பது அவசியம். 

அடுத்தவர்களின் திறமை மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையில் முன்னேற்றத்துக்கான வழியே. அடுத்தவர் மீது நம்பிக்கை இல்லாமல் போனால், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும். நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியை பெற முடியாது. அடுத்தவர் மீதான நம்பிக்கையின் வலிமையை, ‘கடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் மலையை புரட்டலாம்’ என்று பைபிள் கூறுகிறது. நம்பிக்கை ஊட்டுவது என்பது தங்கத்தால் திரி செய்து ஒளியை ஏற்றுவது போன்றதாகும். எனவே, மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்து பலன் பெறுங்கள். 

அதே வேளையில், நம்பிக்கையின்மை என்பது நாளடைவில் சந்தேக குணமாக மாறி விடும். சந்தேகம் எழும்போது தானாகவே மனதுக்குள் செருக்கு தோன்றும். தற்செருக்கு என்ற தலைக்கனம் அதிகரிக்கும்போது, ‘நான்’ என்ற வார்த்தை மிக அதிக அளவில் தோன்றும். அதுபோன்ற நபர்கள், பேசுவதிலும் எழுதுவதிலும் அந்த வார்த்தையே அதிகமாக பயன்படுத்துவார்கள். உங்களை சுற்றிலும் உள்ளவர்களில் ‘நான்’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரிக்கும் நபர்களை ஆய்வு செய்தால் நிச்சயமாக சந்தேக குணம் உடையவராகவே இருப்பார்.

பயனுள்ள ஒரு வேலையைச் செய்யும் ஒருவன் தன்னைப் பற்றியும் தன்னலம் பற்றியும் முற்றிலுமாக மறந்து விட்டால் அவனை ஒருபோதும் சந்தேகம் நெருங்காது. சந்தேகம், தற்செருக்கு எனப்படும் தலைக்கனம் அல்லது தற்பெருமை உடையவர்களால் வெற்றி என்ற இலக்கை எட்டவே முடியாது. மற்றவர்களை விடுங்கள். நீங்கள் அதுபோன்று இருக்கிறீர்களா? என்பதை முதலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகமும், தற்பெருமையும் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

சந்தேகத்துக்கு இளைய சகோதரன் பொறாமை. ஆண், பெண் என அனைத்து தரப்பினரிடமும் இந்த குணம் குடி கொண்டிருக்கும். பொறாமைக்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. அது, பல்வேறு வகைப்படும். வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் சிதறும். பொறாமை நுழைவதே தெரியாது. மனம் அல்லது மூளைக்குள் மெதுவாக பதுங்கி பதுங்கி நுழையும். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பூதாகரமாக வெளிப்படும். அது மட்டுமல்ல. குடும்ப உறவுகள் மற்றும் தொழில், முன்னேற்றம் என அனைத்தையும் அழித்து விடும்.

அதனால் தான்,
   ‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
   தீயுழி உய்த்து விடும்’
என்று திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

அதாவது, பொறாமை என்னும் பாவி குணமானது செல்வத்தை அழித்து விடும். நரகம் என்னும் தீ குழிக்குள் தள்ளி விடும் என்று எச்சரிக்கிறார்.

பொறாமை என்ற குணமானது வளர்ந்து நம்முடைய கழுத்தை நெரிக்கும் முன் அதன் கழுத்தை மிதித்து விட வேண்டும்.

சரி. மேற்சொன்ன இந்த ஆறு வகையான குணங்களை மனதுக்குள் நெருங்க விடாமல் யாரேனும் இருக்கிறீர்களா? இதற்கு நிச்சயமாக ஆம் என்ற பதில் கிடைக்காது. ஆம். என்ற பதிலை நீங்கள் கூறினால் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர். வெற்றி தேவதை மாலையுடன் உங்களுக்காக காத்திருக்கிறாள் என்று உறுதியாக கூற முடியும்.         


(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: