Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 18

தன்னம்பிக்கை

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்’ - என்பது நம்முடைய முன்னோர் வாக்கு. மிக அழகான ஒரு ஓவியத்தை படைப்பதற்கு முன் அதை தாங்கிக் கொள்ளும் தளம் ஒன்று நிச்சயம் தேவை. அதன்படி பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி என்னும் மிக அழகான ஓவியத்தை படைப்பதற்கு சுவராக இருப்பது தன்னம்பிக்கை. இது தான், ஒரு மனிதனை வெற்றியாளராக, சாதனை மனிதராக மாற்றுகிறது.

மலையில் பிறந்து கானகத்தில் ஊர்ந்து பாறைகளில் ரணமாகி மக்களால் மாசுபடுத்தப்பட்டு செல்லும் நதியை பாருங்கள். மிகப்பெரிய அருவியாக வீழ்ச்சியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நின்று நதியாக ஓடுகிறது. கடலில் கலக்கும் வரை நதியின் ஓட்டம் நிற்பதில்லை. மேற்பரப்பில் சலசலப்பும் பயங்கர ஓசையும் எழும்பினாலும் நதியின் ஆழமான பகுதியில் நிசப்தமும் அமைதியான ஓட்டமும் நீடித்து இருக்கும். அதுதான், நதி தரும் தன்னம்பிக்கை பாடம். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம்.

ஒருவர், தனது ஆழ் மனதுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் அதுவே வெற்றி என்னும் விருட்சமாக வெளிப்படும். அடி மனதுக்குள் பயம், தோல்வி, தாழ்வு மனப்பான்மை என வளர்ந்து வந்தால் அதுவே பூமராங் போல திரும்பி வெளிப்படும். மனித உடலில் மூன்றாவது கையாக கடவுள் இணைத்திருப்பதே தன்னம்பிக்கை.

‘உங்களுக்கு வெற்றியை தருவது வேறு யாருமல்ல. நீங்கள் மட்டும்தான்’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரே விதமான படிப்பு, பயிற்சி, வேலை திறன் ஆகியவை கொண்டவர்களில் ஒருவர் மட்டும் உயர்ந்த நிலைக்கு செல்வதும் மற்ற பலரும் அவருக்கு கீழே பணிபுரிய நேருவது ஏன்? இந்த சிந்தனை உங்களுக்குள் அடிக்கடி எழுந்திருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளை நேரிலும் பார்த்திருக்கக் கூடும்.

அவ்வாறு உயர்ந்தவரை நீங்கள் உற்று நோக்கினால் அவருக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை அதாவது தன் மீதான நம்பிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதை கண்கூடாக காணலாம். முகபாவனை, நடை,  பேச்சு போன்றவற்றை கவனித்தாலே ஒருவரின் தன்னம்பிக்கையை மிக துல்லியமாக எடை போட்டு விட முடியும். ஒருவரிடம் தன்னம்பிக்கை குடி கொண்டிருந்தால் முகம் மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அது துளிர் விடுவதை காணலாம்.

பிரபல ஆலிவுட் நடிகர் ஜிம்கேரி நடித்த ‘யெஸ் மேன்’ திரைப்படத்தின் கதை இது. வங்கி ஊழியராக இருக்கும் ஜிம்கேரி வாழ்வில் எதுவுமே ருசிக்கவில்லை. அவரது மனைவி பிரிந்து சென்று விடுவார். எதிர்மறை எண்ணங்களையே மனதுக்குள் வைத்திருப்பதால் பலவித சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும். வாழ்க்கை சவால்களை சந்திக்க தைரியம் இல்லாத மனிதராக வலம் வருவார், ஜிம்கேரி.

ஒரு நாள், அந்த ஊரில் நடைபெற்ற வெற்றிக்கான வழிகள் பற்றிய ஆலோசனை வகுப்பில் அவர் கலந்து கொள்வார். அங்கு, சில அறிவுரைகள் கூறப்பட்டன. ‘எதிர்மறை எண்ணங்களை மாற்றுங்கள்’, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘சரி. செய்கிறேன்’ என்று கூறுங்கள். ‘யெஸ்’ என்ற சொல்லையே எப்போதும் நீங்கள் கூறிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையை அந்த சொல் மாற்றிவிடும்.

இந்த அறிவுரைகளைக் கேட்டதும், அதைப் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்ற சிந்தனை அவருக்குள் தோன்றும். அதை செயல்படுத்த தொடங்கியதுமே ஜிம்கேரி வாழ்க்கையில் நினைத்துப் பார்க்காத மாற்றங்கள் ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கும். புதிய உறவுகள், நட்புகள், வங்கிப் பணியில் பதவி உயர்வு, புதிய எண்ணங்கள் என வரிசையாக அவரை நாடி வரும். மிகவும் நெருக்கடியான தருணங்களில் கூட அவருடைய மனம் எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு நேர்மறை எண்ணங்களை உருவாக்கியது. அதனால், தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்தது.

‘யெஸ்’ என்ற ஒற்றை வார்த்தை, ஒருவரின் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏராளமான அபார திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அவை மிகச் சரியாக மலர்வதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. மொட்டாக இருக்கும் ஒரு மலர், ஒவ்வொரு இதழாக விரிந்து அதிகபட்சமாக இதழ்களை விரித்து முழுமையான மலராக மாறும். அதுபோல, மனித மனதும் அதிகபட்ச வளர்ச்சியை அடையும் வரை மலருகிறது. அந்த அதிகபட்ச வளர்ச்சி அல்லது எல்லை என்பது அந்தந்த மனிதனின் இயல்பு மற்றும் அதற்கு அந்த மனிதன் எந்த அளவுக்கு வேலை தருகிறான் என்பதை பொருத்தது.

உலகில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களை அடக்கி ஆளும் அனைத்து மனிதர்களும் அடிப்படையில் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தான். நீங்கள் வெற்றி பெற விருப்பம் கொண்டு, வெற்றி பெற இயலாது என கருதினால் நிச்சயமாக வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் வலிமை வாய்ந்த மற்றும் உறுதியானவர்களுக்கு வெற்றி கிட்டும் வரை போராட்டங்கள் ஓய்வதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: