Friday, February 17, 2017

வெற்றியை நோக்கி ... 19

தேடல் சுகமானது

இந்த உலகத்தில் நாம் பிறந்த காரணம் என்ன? எதற்காக இந்த உலகுக்கு வந்திருக்கிறோம்? எங்கிருந்து நாம் வருகிறோம்? இது போன்ற கேள்விகளை எழுப்பினால் யாருக்குமே பதில் கூற தெரியாது. மனித வாழ்க்கை என்னும் புதிருக்கு பல ஆண்டுகளாக பலரும் விடை தேடி முயன்று பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. நம்மை படைத்த படைப்பாளியான இறைவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே ஒவ்வொருவரையும் படைத்துள்ளார். அதற்காக, அந்த காரணத்தை அவனே நிறைவேற்றி முடித்து வைப்பான் என விட்டு விட முடியுமா? இந்த கேள்விகளை மனதில் சுமந்து கொண்டே பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதோ ஒன்றை அடைவதற்காக மனம் துரத்திக் கொண்டே செல்கிறது.
குழந்தைப் பருவத்தில் கையில் உள்ள பொம்மையை விட மற்றொரு குழந்தையின் கையில் இருக்கும் பொம்மை அல்லது கடையில் இருக்கும் பொம்மை அழகாக இருப்பது போல தெரியும். வளர்ந்து இளைஞனான பிறகு நல்ல வசதியும் செழிப்பான பேங்க் பேலன்சும் உள்ளவனை பார்த்து மனம் தடுமாறுகிறது. தெருவில் காய்கனி விற்பவன், அந்த வழியாக காரில் செல்லும் மனிதரை பார்த்து மனம் விசனம் கொள்கிறான். அதே நேரத்தில், அலுவலகத்தில் குளு குளு அறையில் இருக்கும் அந்த மனிதரோ வங்கி கணக்கில் மேலும் சில கோடிகளை எப்படி உயர்த்துவது என ஆர்வமாகிறார். ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த சிந்தனை ஒளிந்துள்ளது.

இதை திருப்தியின்மை என்பார்கள், சிலர். ஆனால், அதை அடுத்தகட்ட முயற்சிக்கான தேடல் என்றும் கூறலாம். இக்கரைக்கு அக்கரை பச்சை அல்லது தூரத்து பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி என்றும் கூட ஒரு சிலர் கூறுவது உண்டு. ஆனால், மகிழ்ச்சி என்பது கைக்கெட்டும் தொலைவில் எப்போதுமே இருந்ததில்லை. சராசரி மாத வருமானம் உள்ள ஒருவனுக்கு திடீரென சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் உடனே கூடுதல் தொகையை அப்படியே சேமிப்பில் அவன் போடுவதில்லை. கையில் வைத்திருக்கும் சைக்கிளை மாற்றி விட்டு பைக் வாங்கலாமா அல்லது நல்ல வசதியான வீட்டுக்கு செல்லலாமா என சிந்தனை உருவாகும். அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் தேடல் உருவாகிறது.
ஒருவனுக்கு மிக அழகான வீடு கட்டி சுற்றிலும் தோட்டம் அமைத்துக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற வீட்டை அவன் கட்டிய பிறகு, மேலும் சில செடிகளை அதில் நட்டு வைக்க ஆசைப்படுவான். பின்னர், அந்த தோட்டத்தை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வேலி அமைப்பான். அதன்பிறகு, ஒரு கார் வாங்கி அது வந்து செல்ல பாதை அமைப்பான். அந்த காரை நிறுத்துவதற்கு சிறிய ஷெட் அமைப்பான். இப்போது, தோட்டத்தின் நடுவே அவன் கட்டிய வீடு சின்னதாகி விடும். ஏராளமான அறைகளுடன் கூடிய பெரிய பங்களா போன்ற வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை மெதுவாக அவனுக்குள் குடியேறும். மனித மனதுக்குள் தேடல் குணம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சென்று சொகுசான வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறது.

ஆனால், கண்ணுக்கு தெரிந்து கைக்கு கிட்டாத வரையிலும் எந்தவொரு பொருளும் அழகு தான். அதை வேறு யாராவது பெற்று விட்டால் அதிசயமாகவே பார்ப்போம். அந்த பொருளின் மதிப்பும் பெரிதாக தெரியும். அதுவே, நம்முடைய கைக்கு கிடைத்து விட்டால் அதன் மீதான ஆர்வம் வடிந்து விடும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலைகளும் மலை முகடுகளும் பசுமையாக மிக அழகுடன் காட்சி அளிக்கும். ஆனால், அருகில் சென்றால் மரம், மண், பாறை என்று சீர் குலைந்து கிடப்பதை காணலாம். தேடல் என்பது இதுபோன்ற முடிவையும் தரலாம். இந்த உலக வாழ்க்கையை துறந்து ஆன்மிக பாதையில் செல்லலாம் என முடிவெடுத்தால் அப்போதும் எந்த வழியை தேர்வு செய்வது என்ற தேடலுடன் கூடிய வினா எழும்பும். 

மனித வாழ்க்கை என்பது தேடல் இருக்கும் வரை தான் ருசிக்கும். அதே நேரத்தில் தேடல் மட்டுமே வாழ்க்கையாகி போய் விடக் கூடாது. அங்கு அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் மேலோங்கி நிற்கும். அதனால் தான், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ துரத்திச் செல்வது போல மனிதன் ஓடிக் கொண்டு இருக்கிறான். அந்த ஓட்டமானது குழப்பத்துடன் இருந்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்காது. குழப்பத்துடன் கூடிய ஓட்டத்தை விட தெளிவான சிந்தனையுடன் கூடிய நடைபயணமே சிறந்தது. இதன் காரணமாகவே, தன்னம்பிக்கை தொடர்பான வகுப்புகளில் எல்லாம் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுய சார்புடன் வளர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். அதற்கு, திருப்தியுடன் கூடிய தேடல் அவசியம்.

(வெற்றி பயணம் தொடரும்…)
Post a Comment