Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 17

இலக்கு நோக்கிய பயணம்

இந்த உலகில் அனைத்துக்குமே ஒரு இலக்கு உண்டு. வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றால் கூட, அதுவும் ஒரு இலக்கு தான். வெளியூர் பயணம், இன்ப சுற்றுலா என ஒவ்வொன்றும் ஒரு இலக்கை நோக்கிய நகர்தலாகவே இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இந்த இலக்கு என்ற வார்த்தையானது, ஒட்டு மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். அது, நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்ற இலக்கு. உலக மனிதர்களில் 90 சதவீதம் பேர், எந்தவித இலக்கையும் நிர்ணயிக்காமல் தான் வாழ்கின்றனர்.

ஒரு மனிதன், தன்னுடைய இலக்கை தேர்வு செய்வதில் இரண்டு வகையான காரணங்கள் குறுக்கீடு செய்யும். ஒன்று, பொருளாதார ரீதியிலானது. மற்றொன்று, உளவியல் ரீதியிலானது. இதில் உளவியல் ரீதியிலான சவால்களை எதிர் கொள்வது மிகவும் முக்கியம். குத்துச் சண்டை போட்டிக்கு தயாராகும் வீரரை நீங்கள் உற்று நோக்கினால் ஒன்று புரியும். தனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் வலிமையாக்கும் பயிற்சியை அவர் மேற்கொள்வார். அதுபோல, குதிரையை நாம் கவனித்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான நடை, ஓட்டம் என தனித்தனி பாணியுடன் இருக்கும். பந்தயம், தடை தாண்டுதல், பயணம், வண்டி இழுத்தல் என ஒவ்வொரு பணிக்கும் வேறு வகையான பயிற்சிகள் குதிரைக்கு அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் இலக்கை நோக்கிய மனித பயணத்துக்கும் பொருந்தும். இலக்கு, வெற்றி என்றதும் அனைவருடைய நினைவிலும் பணம் மட்டுமே பிரதானமாக வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை. மிகப்பெரிய செல்வந்தராகி விட்டால் போதும், வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டதாக நாம் கருதுகிறோம். அதுவும் ஒரு வகையான வெற்றி என வைத்துக் கொண்டாலும் அனைவருமே செல்வந்தராவது என்பது அரிதான ஒன்று.

பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் வழக்கமாக ஒரு கேள்வியை எழுப்புவது உண்டு. ‘வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆனதும் என்னவாக ஆசைப்படுகிறாய்?’. இந்த கேள்விக்கு டாக்டர், என்ஜினீயர், வக்கீல் என்ற ரெடிமேடான பதில்கள் எப்போதுமே கைவசமாக மாணவர்கள் வைத்திருப்பார்கள்.

அந்த பருவத்தை தாண்டிய பிறகு, அந்த மாணவன் அல்லது மாணவியிடம் அதே கேள்வியை கேட்டால் அடி மனதில் உள்ள லட்சியத்தை கண்டிப்பாக அடையாளம் காட்டி கூறுவார்கள். அது தான், உண்மையான இலக்கு அல்லது இலட்சியம். அதில் அலட்சியமாக இருப்பது சரியானது அல்ல. அதை அடைவதற்கு தினமும் 5 முறையாவது அதை மனதுக்குள் நினைத்துப் பார்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதை பார்க்கும் விதத்தில் எழுதியும் வைத்துக் கொள்ளலாம். மேலும், லட்சியத்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டு வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வறுமையில் வாடிய நெப்போலியன், தனக்குள் ஒரு லட்சியத்தை வகுத்து கொண்டதாலேயே பிரான்ஸ் தேசத்தின் சர்வாதிகாரியாக முடிந்தது. இளம் வயதில் செய்தித் தாள்களை வீடு வீடாக போடும் பேப்பர் பாயாக இருந்த எடிசனும், அப்துல் கலாமும் தங்களுக்குள் லட்சியத்தை வகுத்துக் கொண்டதாலேயே பார் போற்றும் விஞ்ஞானியாக ஜொலிக்க முடிந்தது. இலக்கு இல்லாத வாழ்க்கை பயணம் என்பது பழுதான சுக்கானுடன் நடுக்கடலில் அலையும் கப்பலை போன்றது. சுக்கான் சரியாக இல்லாமல் கடலுக்குள் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சுற்றி முழு எரிபொருளையும் அந்த கப்பல் இழந்து விடும். உண்மையில் கரைக்கு செல்லும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக அந்த கப்பலில் எரிபொருள் இருந்தாலும் சுக்கான் பழுதானதால் அனைத்துமே வீணாகப் போகும்.

இதுபோலவே, பள்ளி படிப்பு முடிந்ததும் அடுத்த இலக்கு என்ன? என்பதில் நோக்கம் இல்லாமல் பல்வேறு விதமான பாதைகளில் மனம் சென்றால் கவனம் சிதறும். இலக்கை வடிவமைக்க முடியாமல் திணற நேரிடும்.  அதன் விளைவு. இலக்கை நோக்கிய பயணத்தில் முழுமையான ஆற்றல் கிடைக்காமல் பலவீனம் ஏற்படும். அதே நேரத்தில், திரும்ப திரும்ப ஒரே வகையிலான பயிற்சியை அளிக்கும்போது இலக்கை நோக்கி நம்முடைய மனம் பயணம் செய்யும். இதற்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை கூறலாம்.

மகாபாரதம் என்றதும் வில்லாளன் அர்ச்சுனன் தான் முதலில் நினைவுக்கு வருவான். அவனைப் பற்றிய கதைதான் இது.  அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்டவர்கள் மற்றும் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் இளம் வயதினராக இருந்தபோது அவர்கள் அனைவருக்கும் வில்வித்தை கற்று கொடுத்தவர், துரோணாச்சாரியார். வில்வித்தை பயிற்சி முடிந்த ஒரு நாளில் மாணவர்களான கவுரவ, பாண்டவர்களுக்கு வில்வித்தை தேர்வு நடத்த துரோணாச்சாரியார் முடிவு செய்தார். அனைவரையும் ஒரு மாமரத்தின் கீழ் அழைத்து வந்தார். முதலில் துரியோதனனை அழைத்து அந்த மரத்தின் குறிப்பிட்ட கிளையில் தொங்கும் மாம்பழத்தை அம்பு எய்தி வீழ்த்துமாறு கூறினார்.

அதற்கு முன், மாம்பழம் தெரிகிறதா? என துரோணர் கேட்டார். தெரிகிறது என துரியோதனன் பதிலளித்தான். அது மட்டுமல்ல. அவர் அடுத்தடுத்து கேட்ட ஒவ்வோரு கேள்விகளுக்கும், மரம் தெரிகிறது; கிளை தெரிகிறது; மாமரத்தில் பழம் அருகில் உள்ள இலைகள் தெரிகின்றன; என ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அம்பை எய்துமாறு குரு துரோணர் உத்தரவிட்டார். துரியோதனன் அம்பை எய்தான். ஆனால், துரியோதனன் விட்ட அம்பானது மாம்பழத்தை வீழ்த்தவில்லை. வேறு திசை நோக்கி பயணித்தது.

அடுத்ததாக அர்ச்சுனனை அழைத்தார், துரோணர். துரியோதனனிடம் கேட்ட அதே கேள்விகளை திரும்பவும் அர்ச்சுனனிடமும் கேட்டார். அனைத்து கேள்விகளுக்குமே 'இல்லை’ என்ற பதில் மட்டுமே திரும்பத் திரும்ப அர்ச்சுனனிடம் இருந்து வந்தது. உடனே, ‘உனக்கு என்ன தான் தெரிகிறது?’ என துரோணர் கேள்வி கேட்டபோது, ‘மாம்பழத்தை தாங்கி நிற்கும் காம்பு மட்டும் எனது கண்ணுக்கு தெரிகிறது’ என அர்ச்சுனன் பதிலளித்தான். அம்பை எய்யுமாறு குரு துரோணர் உத்தரவிட, மிகச்சரியாக மாம்பழத்தை வீழ்த்தியது, அர்ச்சுனன் விட்ட அம்பு.

மாம்பழம் வீழ துவங்கியதுமே தன்னுடைய வில்லை தரையில் கீழே போட்டு விட்டு ஓடோடி சென்று மாம்பழம் தரையில் விழாதவாறு தனது மடித் துணியை விரித்து பிடித்தான். பின்பு, அதை தனது குரு துரோணருக்கு காணிக்கையாக அர்ச்சுனன் அளித்தான்.

இது தான் இலக்கை நோக்கிய தெளிவான பயணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனது இலக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதே சிந்தையுடன் இருந்ததாலேயே காலத்தை வென்ற வில்லாளனாக அர்ச்சுனன் விளங்குகிறான். எனவே, நம்முடைய இலக்கை மிகச் சரியாக வகுத்து வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணம் செய்வோம். அதற்கு முன், நம்முடைய இலக்கு நன்மை பயப்பதாகவும் அடுத்தவருக்கு தீங்கிழைக்காததாகவும் இருப்பதையும் உறுதி செய்து கொள்வோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: