Tuesday 3 January 2017

வெற்றியை நோக்கி … 3

விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி...

வெற்றிக் கனியை ருசித்து விட வேண்டும் என அனைவருமே விரும்புகின்றனர். ஆனால், எந்தவொரு கனியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. விதை விதைத்து, நீர் பாய்ச்சி, மரம் வளர்த்து, பூத்து குலுங்கிய பிறகே காய் விளைந்து கனியும். வெற்றிக் கனியும் அது போன்றதே.

அதற்கும் சில அடிப்படை சூட்சுமங்களும், தகுதிகளும் அவசியம். அவற்றை வளர்த்துக் கொண்டால் வெற்றி தேவதையே நேரில் வந்து வெற்றி மாலையை சூட்டுவாள். அப்படி, வெற்றி தேவதையை வரவழைக்கும் அடிப்படை தகுதிகளில் ஒன்று முயற்சி. அதுவும், விடாமுயற்சி. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்த குணம் மறைந்து கிடக்கிறது. அதை வெளிக் கொண்டு வருவதில் தான் சிறப்பு அடங்கி கிடக்கிறது.

சிறிய எறும்பு கூட விடாமுயற்சிக்கு சிறந்த உதாரணமே. வரிசையாக சென்று கொண்டிருக்கும் எறும்பு கூட்டத்தின் குறுக்கே ஏதாவது ஒரு சிறிய காகிதத்தை வைத்து தடுத்து பாருங்கள். உடனே, அது தயங்கி நிற்காது. காகிதத்தை சற்று சுற்றி வந்து புதிய பாதையை அமைத்து விடும். இதுபோல, எத்தனை இடத்தில் நீங்கள் தடுப்பு வைத்தாலும் அவற்றை தாண்டி செல்வது எறும்பின் குணம். கானகத்தில் வேட்டையாடும் மிருகங்களும், இரையாகும் மிருகங்களும் விடாமுயற்சியை தன்னகத்தை வைத்துள்ளன. அது, அவற்றின் வாழ்வாதார பிரச்சினை.

அனைவருக்குமே ஏதேனும் ஒரு பிரச்சினை துளிர்விட்டபடியே இருக்கும். மலர் பாதையிலேயே நடைபயிலும் வரம் பெற்று வந்தவர் யாரும் கிடையாது. பிரச்சினைகளையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளியக் கூடாது. பிரச்சினைகளையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளிவது அதற்கு தீர்வாக அமையாது.  உங்களுடைய திறமைகளை வளர்த்து அனுபவத்தை வளப்படுத்தும் வாய்ப்பாக அந்த பிரச்சினைகளை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். 

பூட்டுகளை தயாரிப்பவர் யாரும், வெறுமனே பூட்டுகளை மட்டும் தயாரித்து விற்பதில்லை. ஒவ்வொரு பூட்டுக்கு ஏற்ப சாவிகளையும் சேர்த்தே தயாரிக்கின்றனர். கடவுளும் அப்படியே. பிரச்சினை என்ற பூட்டை மட்டும் நம்மிடம் அவர் தருவதில்லை. தீர்வு என்ற சாவியையும் சேர்த்தே தருகிறார். ஆனால், அந்த சாவி எது என்பதை நாம் அறியாமல் இருப்பதே வெற்றிக்கு தடையாக இருக்கிறது. பிரச்சினை என்னும் பூட்டுக்கு உரிய சாவியை கண்டறிய விடாமுயற்சி அவசியம்.

சில நேரங்களில், பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாய்ப்பு கை நழுவி போகலாம். அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கண்களை குளமாக்கி நின்றால் வெற்றிப் பாதை மறைந்து விடும். தோல்விக்கு பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் மற்றொரு வாய்ப்பை, கண்ணீர் காணாமல் போகச் செய்து விடும். அதுபோன்ற சமயங்களில் தோல்வியை கண்டு துவளாமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராட வேண்டும். அதற்கு சரித்திர காலம் தொட்டு ஏராளமானோர் உதாரண நாயகர்களாக இருக்கின்றனர்.

கஜினி முகமதுவின் சோமநாதபுரம் படையெடுப்பு பற்றி வரலாற்று பாட புத்தகங்களில் படித்திருப்போம். ஒவ்வொரு முறை தோல்வியை தழுவியபோதிலும் சளைக்காமல் 18 முறை போர் தொடுத்து இறுதியில் வெற்றி பெற்ற அவருடைய சரித்திரம், விடாமுயற்சிக்கு உதாரணம். அதனால் தான் இன்றளவும் அவர் சுட்டிக் காட்டப்படுகிறார். 

அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது உலகின் அதிகபட்ச அதிகாரம் மிகுந்த பதவி. அந்த பதவியை எட்டிப் பிடித்த ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை முழுவதும் தோல்வியின் படிக்கட்டுகளில் எழுதப்பட்டதே. இளம் வயதில் தாயார் மரணம், 1831 மற்றும் 1834 ஆண்டுகளில் மாகாண தேர்தலில் தோல்வி, பணி இழப்பு, 1835ம் ஆண்டு திருமணத்துக்கு நிச்சயம் செய்த பெண் மரணம், நரம்பு தளர்ச்சி நோயால் 6 மாத மருத்துவமனை வாசம், 1838ல் சபாநாயகர் தேர்தலில் தோல்வி, 1843, 1846, 1848 ஆண்டுகளில் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, 1854ம் ஆண்டு செனட் தேர்தலில் தோல்வி, 1856ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி, 1858ம் ஆண்டு செனட் தேர்தலில் 3வது முறையாக தோல்வி இப்படி தொடர்ந்து 30 ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே எதிர்கொண்ட ஆபிரகாம் லிங்கன் சோர்ந்து விடவில்லை.  ஒவ்வொரு தோல்வியிலும் துவண்டு விடாமல் பீனிக்ஸ் பறவையாய் உற்சாகத்துடன் எழுந்து விடாமுயற்சியுடன் பணியை தொடர்ந்தார். அதனாலேயே 1860ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஒட்டு மொத்த இந்திய தேசமும் கொண்டாடும் அப்துல் கலாம் வாழ்க்கையும் விடாமுயற்சியினால் கட்டமைக்கப்பட்டதே. ராமநாதபுரத்தில் கடலோர கிராமத்தில் பிறந்து, நாளிதழ்களை வீடு வீடாக போடுவதால் கிடைத்த பணத்தைக் கொண்டு கல்வி கற்றவர். கல்லூரி படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற போதிலும் விடாமுயற்சியால் ஏரோநாடிகல் என்ஜினீயரிங் முடித்து போர் விமானி தேர்வுக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் மனம் தளராது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானி ஆனார். பல ஏவுகணைகளை கண்டறிந்தார். அத்துடன் நிற்காமல் மாற்றுத்திறனாளிகளுக்காக மிகவும் எடை குறைவாக 400 கிராம் எடையில் செயற்கை கால், இருதய நோயாளிகளுக்கு கருவி என வேறு துறைகளிலும் அவரது கண்டுபிடிப்புகள் விரிந்தன. தான் அறிந்தவற்றை மற்றவருக்கும், மாணவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது இறுதி மூச்சு வரை பள்ளி, கல்லூரி மாணவர்களை தேடிச் சென்றார். அவரது விடாமுயற்சி தான் அவரை மக்கள் குடியரசு தலைவராகவும் இந்திய தேசத்தின் தலைமகனாகவும் மாற்றியது.
தோல்வி, அடக்குமுறை, நிராகரிப்பு இவற்றால் மனம் வெதும்பி ‘விதி செய்த சதி’ என மூலையில் முடங்கி கிடந்தால் வெற்றி கிடைக்காது. விடாமுயற்சி அவசியம். ‘ஊழையும் உட்பக்கம் காண்பர்’ என வள்ளுவர் கூறுகிறார். அதாவது, விடாமுயற்சியுடன் உத்வேகம் கொண்டு உழைப்பவர்களால் விதியை புறமுதுகிட்டு ஓடச் செய்ய முடியும் என்கிறார்.

தோல்வியால் மூலையில் முடங்கி கிடந்தால் அங்கேயும் உங்களுக்கு விடாமுயற்சி பற்றிய பாடம் கற்பிக்கும் ஒரு ஜீவனை காண முடியும். அது, சிலந்தி. வீட்டுக்குள் வலை விரிக்கும் சிலந்தியின் கூட்டை நீங்கள் எத்தனை முறை பிரித்து போட்டாலும் தனது வாயாலேயே புதுப்புது வீடுகளை கட்டி குடி புகுந்து விடும். அற்ப இனமான சிலந்தியிடம் உள்ள விடாமுயற்சி கூட ஆறறிவு படைத்த மனித இனத்துக்குள் இல்லையா? இருக்கிறது. உங்களுக்குள் புதைந்து கிடக்கும் அந்த புதையலை தோண்டி எடுங்கள். வெற்றி நிச்சயம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: