Friday 5 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -15

இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியால் வழக்கத்தை விட ஓராண்டு தள்ளி நடைபெற்ற இந்தியாவின் 6வது பொதுத் தேர்தலில் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான, அரசியல் வரலாற்று திருப்ப முடிவுகளை மக்கள் தந்தனர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு உருவான ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்றது. திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கூட்டணியுடன் அதன் பலம் 345. ஜனதா கட்சி சார்பாக பிரதமர் பதவியை ஏற்றார் மொரார்ஜி தேசாய். இந்தியா சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகள் கழித்து முதன் முதலாக காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் இந்திய பிரதமரானார்.


அதே நேரத்தில், ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெறும் 153 இடங்களில் மட்டுமே வென்றது. உ.பி. மாநிலம்  ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியே 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தவர் ராஜ்நாராயணன்.இவர்,  முந்தைய தேர்தலில் இந்திராவின் எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்தவர். பதவியில் இருக்கும் பிரதமரே தோல்வியடைந்த வரலாறை இந்திய ஜனநாயகம் பதிவு செய்து கொண்டது.



இதுமட்டுமல்ல, எமர்ஜென்சியில் இந்திராவுக்கு வலதுகரமாக இருந்த அவரது இளையமகன் சஞ்சய்காந்தி, அமேதி தொகுதியில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார். சஞ்சய் காந்தியை தோற்கடித்தவர் ரவீந்திரன் பிரதாப்.

உ.பி., மேற்கு வங்கம், டெல்லி, பீகார் என வட மாநிலங்கள் எல்லாம் காங்கிரசை மிகக் கடுமையாக விரட்டியடித்த நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம் என தென் மாநிலங்கள் மட்டும் இந்திரா பின்னால் நின்றன. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி 189 இடங்களை பெற்றிருந்தது. இதில்,  கட்சி ஆரம்பித்து முதலாவது தேர்தலை சந்தித்த அதிமுக மட்டும் 19 இடங்களில் வென்றிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பிறகு மொரார்ஜி தேசாய் அரசுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தது அதிமுக. பலாப்பழனூரார், சத்தியவாணி முத்து என இருவர் அதிமுக மந்திரிகளாகினர். இதன் மூலம் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாதவர்களை, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரிகளாக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார் எம்ஜிஆர். மொரார்ஜி தேசாயின் இந்த மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை மந்திரியாக வாஜ்பாயும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக அத்வானியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த மூன்றே மாதங்களில், இந்திரா காந்தியால் கலைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களை மொரார்ஜி அரசு நடத்தியது. தமிழகத்தில் 1977 ஜூன் 10ம் தேதி நடந்த இந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 முனைப் போட்டிக்கு இடையே ஆட்சியை கைப்பற்றியது, எம்ஜிஆரின் அதிமுக. 144 இடங்களை அதிமுக கூட்டணி வென்றது. தனித்து போட்டியிட்ட இந்திரா  காங்கிரஸ் 32 இடங்களையும் 9 ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக 48 இடங்களையும் பெற்றன.

இதற்கிடையே, கூட்டுக்கலவையான மத்திய ஜனதா அரசுக்குள் தலைவர்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு, மற்றொரு அரசியல் குழப்பத்தை நோக்கி இந்தியாவை இழுத்துச் சென்றது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: