Monday 22 April 2019

நாடாளுமன்ற தேர்தல் 17

 கருத்து வேறுபாடு, அதிகார போட்டிகளால் இந்தியாவின் முதலாவது கூட்டணி அரசு, முழுமையாக கரை சேராமல் பாதியிலேயே கவிழ்ந்தது. 1977ல் பதவிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வந்தது. 1980 ஜனவரியில் நடந்த அந்த தேர்தலின்போது, 1977ல் பிரதமராக இருந்தபோதே  ரேபரேலி தொகுதியில் தோல்வியடைந்த அனுபவத்தை இந்திரா காந்தி மறக்கவில்லை. அதனால்,  தென்னிந்தியாவையே தனது பாதுகாப்பு பிரதேசமாக பார்த்தார்.

1978 இடைத்தேர்தல் மூலமாக கர்நாடகாவின் சிக்மகளூருவில் வென்ற அவர், 1980ல் ஆந்திர மாநிலம் மேடக் தொகுதியை தேர்வு செய்தார். முந்தைய தேர்தலில் பலமாக இருந்த எதிர்க்கட்சிகள் இந்த முறை சிதறிக் கிடந்தன. 85 வயதை எட்டிய மொரார்ஜி தேசாயும் களத்தில் இல்லை. ஆனாலும் சரண்சிங், சந்திரசேகர் என 1980 தேர்தல் களம் சூடாகவே தகித்தது.



தமிழகத்தில் 1977 தேர்தலில் ஜனதாவுடன் இருந்து இந்திராவை மிகக்கடுமையாக விமர்சித்த திமுக 1980ல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அதுவும் காங்கிரசுக்கு 22 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. எம்ஜிஆரின் செல்வாக்கு வளர்ந்ததே இதற்கு காரணம். அதே நேரத்தில் நெருக்கடி நிலையின்போதே இந்திராவுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் சரண்சிங்கின் ஜனதா அணியில் சேர்ந்திருந்தார்.

மிகவும் பரபரப்பான இந்த தேர்தலில் இந்திராகாந்தி எதிர்பார்த்தபடியே தென் மாநிலங்கள் அவரை கைவிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் அதிகார போட்டியை பார்த்து வெறுத்துப் போயிருந்த இந்திய மக்களுக்கு இரும்பு பெண்மணியாக  இந்திரா காந்தி தெரிந்தார். அவரது நெருக்கடி நிலை கால அனுபவங்களை மூன்றே ஆண்டுகளில் மறந்து அவரையே மீண்டும் கொண்டாடினார்கள். ஏகபோக வெற்றியை ருசித்தது காங்கிரஸ். அகில இந்திய அளவில் 374 இடங்களை காங்கிரஸ் வென்று மீண்டும் பிரதமரானார் இந்திராகாந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி 37 இடங்களை பெற்றது. இதன் விளைவு அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் வெப்பம் கூட்டியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: