Wednesday 10 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -16


1977 பொதுத்தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். 1977 மார்ச்சில் அவருடன் சரண்சிங், ஜெகஜீவன் ராம் இருவரும் துணை பிரதமரானார்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரபல தலைவரான ஜெகஜீவன் ராம், கடைசி நேரத்தில் இந்திராவிடம் இருந்து ஜனதா கட்சிக்கு வந்திருந்தார். அவர், கடந்த ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்த மீராகுமாரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 


மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது, அப்போது புழக்கத்தில் இருந்து வந்த அந்தக்கால 1000, 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும்  செல்லாததாக அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த மறு ஆண்டில் 1978 ஜனவரியில் இந்த அறிவிப்பு வெளியானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முன்னோடி மொரார்ஜி தேசாய் தான்.



ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஜனதா தலைவர்களுக்குள் கருத்து மோதல் வெடித்தது. இதற்கிடையே 1978ல் கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்பியாகி இருந்தார் இந்திரா காந்தி. அதே நேரத்தில் ஜனதா தலைவர்களின் மோதலால் ஆட்சி கலகலக்க தொடங்கியது. இடதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் வலதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் இடையே தொடங்கிய கருத்து வேறுபாடானது வெவ்வேறு வடிவங்கள் எடுத்தது.


தலைவர்களுக்குள் எழுந்த அதிகார போட்டியின் விளைவாக 64 எம்பிக்களுடன் கட்சியை உடைத்தார் சரண்சிங். இதனால் 1979 ஜூலை 19ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மொரார்ஜி தேசாய். ஜூலை 28ல் புதிய பிரதமரானார் சரண்சிங். ஒவ்வொரு கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு நின்ற அவருக்கு அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்தன. எனினும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


கடைசியில், எந்த இந்திராவுக்கு எதிராக ஒன்று திரண்டு ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதோ அந்த இந்திராவிடமே சென்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டார் சரண்சிங். ஆனால்,  இந்திராகாந்தி ஆதரவு தர மறுத்ததால் ஐந்தரை மாதத்திலேயே சரண்சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1980 ஜனவரியில் இந்தியாவின் 8வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.



இதற்கிடையே, பதவி விலகிய மொரார்ஜி தேசாய் அரசியலுக்கு முழுக்கு போட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஜனதா கட்சியை நிறுவிய ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன் உடல்நலக் குறைவால் ஓதுங்கி விட்டார். ஜனதா கட்சியின் தலைவர்களுக்கிடையிலான மோதலால், சுதந்திரமடைந்த நாளில் இருந்தே ஏகபோகமாக ஆட்சி செய்து வந்த காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் மூன்றே ஆண்டுகளில் கருகிப் போனது.


ஜனதா கட்சிக்குள் ஐக்கியமான பலவேறு கட்சிகள் வெளியேற தொடங்கின. சில கட்சிகள் பெயர்களை மாற்றி புது அவதாரம் எடுத்தன. அதில் ஒன்றுதான் பாஜக. 1977 தேர்தலுக்கு முன் ஜனதாவில் ஜனசங்கமாக நுழைந்த அந்த கட்சி 1980ல் பாஜகவாக மாறியது. இதற்கிடையே சரண்சிங் தலைமையில் ஒரு ஜனதா கட்சி, சந்திரசேகர் (பின்னாளில் இந்திய பிரதமராக இருந்தவர்) தலைமையில் மதசார்பற்ற ஜனதா கட்சி என இரண்டாக பிரிந்தது ஜனதா. 



இப்படியான அரசியல் சூழலுடன் 1980 பொதுத்தேர்தல் நெருங்கியது. தமிழகத்தை பொருத்தவரை  சரண்சிங் தலைமையிலான ஜனதா கட்சியுடன் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி அமைத்தது. எதிரணியில் இந்திராவையும் அவரது எமர்ஜென்சி கால கொடுமையையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்த கருணாநிதி தலைமையிலான திமுக, இந்திராவின் காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி அமைத்தது. தேசிய அளவில் இந்திராவுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் பிளவுபட்ட நிலையிலேயே சந்தித்த 1980 பொதுத் தேர்தலில் மக்களின் முடிவானது ஒரு தகவலை சொல்லியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: