Wednesday 3 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -14

 நாட்டில் நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977 ஜனவரி 18ல் பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். "இந்திய ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை இந்த தேர்தல்" என்றார் மொரார்ஜி தேசாய். ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கினார்கள். 



தேர்தல் அறிவித்த ஐந்தே நாளில் ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஜெயபிரகாஷ் நாராயணன். ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜர் போன்ற இந்திரா எதிர்ப்பு தலைவர்களின் சிண்டிகேட் காங்கிரஸ்), ஜனசங்கம் (பழைய பாஜக), லோக்தளம், சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி என 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கலைக்கப்பட்டு ஜனதாவுக்குள் ஐக்கியமாகின. கட்சியின் சின்னம் ஏர் உழவன்.

ஜனதா கட்சியின் தலைவரானார் மொரார்ஜி தேசாய். பொதுச் செயலாளராக ராமகிருஷ்ண ஹெக்டே, செய்தி தொடர்பாளராக அத்வானி தேர்வாகினர். வாஜ்பாய், பிஜு பட்நாயக், ராஜ் நாராயண், கிவத்ராம் கிருபளானி, ஜெகஜீவன்ராம்  போன்றவர்கள் எல்லாம் ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள். இப்படி, பல்வேறு கொள்கைகள் கொண்ட தலைவர்கள் இணைந்து உருவான கட்சி ஜனதா. கலவையான சாப்பாட்டை 'ஜனதா சாப்பாடு' என அழைத்தது இப்படித்தான். 40 பிளஸ் வயதில் இருப்பவர்களுக்கு இது தெரியும்.



இந்திராவை வீழ்த்தும் ஒற்றை நோக்கோடு 10 கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சியுடன் திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தன. 1977 பிப்ரவரி 10ம் தேதியன்று ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. "சுதந்திரமா...? அடிமைத்தனமா...?" இதுதான் ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதான கோஷமாக இருந்தது.

இந்திராவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய கட்சிகளும் தலைவர்களும் திரண்ட போதிலும் இந்திராவின் இண்டிகேட் காங்கிரசுடனும் சில கட்சிகள் கைகோர்த்தன. அதில், அதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் முக்கியமானவை. அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த பிறகு சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் இதுதான்...

தமிழகத்தில் ஜனதா, திமுக ஒரு அணியாகவும் இந்திரா காங்கிரஸ் அதிமுக ஒரு அணியாகவும் களமிறங்கிய 1977 நாடாளுமன்ற தேர்தல், அதிர்ச்சி, மாற்றம், திருப்பம் என விதம் விதமான முடிவுகளை தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்.

No comments: