Friday, 7 November 2014

ஆறில் இருந்து அறுபது .....

= வை.ரவீந்திரன்





ஒரு துறையில் 50 ஆண்டுக்கு மேல் நிலைத்து இருப்பதும் சிறந்தவராக கோலோச்சி நிற்பதும் சாதாரண விஷயம் கிடையாது. வெகுஜன ரசிப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட திரையுலகில் அதை நிகழ்த்துவது என்பது இரண்டு தலைமுறைகளின் ரசிப்புத் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அதை சரியாக உணர்ந்து உலக நாயகனாக உலா வருபவர் கமல்ஹாசன்.

தனது இளமை பருவத்தில் ‘ஏக் துஜே கேலியே’, ‘மரோ சரித்திரா’, ‘மூன்றாம் பிறை’ என கமலை பல்வேறு மொழிகளிலும் ரசித்து பார்த்து தனது காதலை வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தன்னுடைய இளமை பருவ காலத்தில் கமல் திரைப்படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் கரம் பிடித்து 6 வயதில், ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம் திரையுலகில் பிரவேசித்தவர், இந்த பரமக்குடி தமிழன். மெத்த படித்த குடும்பத்தில், பல வக்கீல்களை கொண்ட குடும்பத்தில் பிறந்த கமல், பள்ளி படிப்பை தாண்டாதவர். திரையுலக பிரபலம் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட உயர்வு எப்போது கிடைக்கும் என சிந்திக்கும் நடிகர்கள் மத்தியில் தமிழ் திரையுலகையும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்துக் கொண்டு இருப்பவர்.  

பால்யம் முடிந்து பருவம் தொடங்கிய கால கட்டத்தில் நடிப்பா?, நடனமா? என்ற மயங்கி நின்று, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர். ஆனால், காலம் அவரை பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி இழுத்து வந்தது. உண்மையில், காலம், விதி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத நாத்திகர் கமல். ஆனால், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வழியில் நடப்பவர்.

அதனால் தான், நடிப்பையும் தாண்டி எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றிருக்கிறது. 16 வயதினிலே, அவள் அப்படித்தான்,  ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள் குணா,  மூன்றாம் பிறை, பேசும்படம், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அவரது படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக  அரசியலில் அங்கீகாரம் பெற நடைபெறும் முயற்சிகளை காணும்போது, தன்னை காய்த்த மரம் என அவர் நிரூபித்துக் கொண்டிருப்பது புரிகிறது.  

ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அந்த கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் கமலுக்கு உண்டு. அதனால், தான் சண்டியர் என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியபோது அந்த கதைக்கு சண்டியரை விட மிகவும் பொருத்தமான விருமாண்டி என்ற தலைப்பை அவரால் உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. உண்மையில், ‘விருமாண்டி’ என்பது தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குல தெய்வத்தின் பெயர். சண்டியர் என்பது ஊருக்குள் அடங்காமல் திரிபவர்களை குறித்த பொதுப் பெயர். எந்த ஒரு சமுதாயத்துக்கும் உரித்தான பெயர் அல்ல.

திரையுலகை தாண்டி இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு நல்ல பரிச்சயம் அனுபவம் இருந்தாலும் திரையுலகில் மட்டுமே அவரது முழுமையான அர்ப்பணிப்பு உள்ளது. இந்த உலகில் உள்ள வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் கமலின் திரை தொழில் மீதான பற்றுதலானது நல்ல படிப்பினை. ஒவ்வொரு தனி நபரும் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் மேலும் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதை கமலிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவரது, சக ஊழியர்களான திரை உலகினருக்கும் இது பொருந்தும்.

சினிமா என்பது பலருக்கும் பொழுதுபோக்கு. மிகச் சிலருக்கோ கலைப் படைப்பு. ஆனால், கலைப்படங்களை கொண்டாடும் சமுதாயத்தில் நாம் இல்லை. எனினும்,  பொழுதுபோக்கு படத்தையே கலையாக மாற்றும் வித்தையை கற்றவர் கமல். அதுபோன்ற முயற்சிகளில் கையை சுட்டுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அதை தொடருகிறார்.

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் அவரால் முடியும். ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகவும் அவரால் முடியும். இந்தியன் தாத்தா, தசாவதாரம் பாட்டி என முற்றிலுமாக தன்னை மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். அனைவரையும் போல, சாமான்ய ரசிகர்களை திருப்தி படுத்தும் மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் மகா நடிகர்.

அதனால் தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட, ‘ஏன் இன்னும் ஆஸ்கர் விருதை கமல் வாங்க முடியவில்லை’ என்று கேள்வி எழுப்புகின்றனர். கமல்ஹாசனால் மட்டுமே அத்தகைய விருதை பெற்றுத் தர முடியும் என அவர்களும் நம்புவதன் வெளிப்பாடே அது. அனைவரின் நம்பிக்கையை பெற்று ஆறில் தொடங்கி அறுபதை கடந்து பயணிக்கும் கமலின் கலைப் பயணம் தொடரட்டும்.

ஹாட்ஸ் ஆப் கமல்....

சிந்தனைக்கு....



”இந்தியா நாடு முழுவதும் வடக்கு, தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் முழுமையான சுற்றுப்பயணம் செய்தேன். ஒரு பிச்சைக்காரனையோ அல்லது ஒரு திருடனையோ என்னால் காண முடியவில்லை. அந்த நாட்டின் உயர்ந்தபட்ச நீதி நெறிமுறைகள் போன்ற சொத்தை எங்கும் நான் கண்டதில்லை. மிகச் சிறந்த கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம், ஆன்மிகம் என இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் சிலவற்றை நாம் உடைக்காதவரை அந்த நாட்டை நாம் நிரந்தரமாக ஆளுவது முடியாத காரியம் என நான் கருதுகிறேன்.

அதனால், அந்த நாட்டின் மிகப் பழமையான கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை மாற்றும் வகையிலான ஒரு திட்டத்தை இங்கு முன் மொழிகிறேன். தங்களுடைய சொந்த கல்வி முறை மற்றும் கலாச்சாரம், பாரம்பரிய ஒழுக்கம் ஆகியவற்றை விட மேலைநாட்டு ஆங்கிலேய கல்வி முறையே சிறந்தது என இந்தியர் ஒவ்வொருவரும் கருதத் தொடங்கினால் அவர்களுடைய சுயத்தையும் இயற்கையான கலாச்சார பண்பாடு போன்றவற்றை இழப்பார்கள். எவ்வாறு அவர்கள் மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு தகுந்தவாறு அவர்கள் மாறுவார்கள். தொடர்ச்சியாக அவர்களை நம்மால் எளிதாக மேலாதிக்கம் செய்ய முடியும்”

= இது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பிரபு ஆற்றிய உரை.

(பி.கு: இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை அறிமுகம் செய்தவர் தான், இந்த மெக்காலே. இந்திய கல்வி முறைக்கு மெக்காலே கல்வி திட்டம் என்ற பெயரும் உண்டு)

Monday, 3 November 2014

தத்தளிக்குமா? தப்பிப் பிழைக்குமா? புதிய தமாகா


தமிழக அரசியல் வானில் கூடுதலாக ஒரு கட்சி உதிக்க தொடங்கி விட்டது. ஏற்கனவே, 1996ம் ஆண்டு உதித்து 6 ஆண்டுகளில் உதிர்ந்து போன கட்சி தான். தற்போது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அப்போது, அந்த கட்சி உதயமான தருணத்தில் தமிழக மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குளத்தில் குளியல், தமிழகமெங்கும் இடங்களை வளைத்து போடுவது, ஊழல் என அதிமுக மீது மக்களுக்கு மிக அதிக அளவிலான வெறுப்பு நிலவியது. அதே நேரத்தில், திமுக மீதும் அதிக அளவில் பாசம் ஏற்பட்டு விடவில்லை. எம்ஜிஆர் காலம் தொட்டு நீடித்த வெறுப்பு அப்போதும் அடங்கவில்லை. அந்த வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலேயே 1989ம் ஆண்டு அமைந்த திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியும் இருந்தது. இப்படி இரண்டு கழகங்கள் மீதும் தமிழக மக்கள் வெறுப்பில் இருந்த சமயத்தில் தான் 1996ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. அப்போது, பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். காங்கிரஸ் மேலிட முடிவை எதிர்த்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற ஒற்றை அஜன்டாவுடன் உதித்தது தான் தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் மற்றும் முக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அணி திரண்டனர். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனையும் தமாகா கைப்பற்றியது. அதிமுக கூட்டணியை எதிர்த்ததன் மூலமாக காங்கிரஸ் பாராம்பரிய மானம் மற்றும் கவுரவத்தையே அந்த கட்சி காப்பாற்றி விட்டது போன்ற பிரச்சாரமும் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு எதிரான மன நிலையில் இருந்த ரஜினிகாந்தும் மூப்பனாருக்கு ஆதரவு கரம் நீட்டினார். நடிகர் சரத்குமாரும் வாலன்டியராக பிரசாரம் செய்ய முன்வந்தார். இவ்வளவு சாதகமான சூழ்நிலை கனிந்தும் கூட, மூப்பனாரால் தமிழக அரசியலில் ஒளிர முடியாமல் போய்விட்டது.

‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது, கருணாநிதியின் ராஜதந்திரம். அந்த சமயத்தில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதனால், மூப்பனாரை தேசிய அரங்குக்கு தள்ளி விடும் வகையில் கருணாநிதியின் அரசியல் சதுரங்க மூவ் அனைத்தும் அமைந்தன. தேசிய அரசியல் என்பது மிகப்பெரிய கடலில் சுறா மீன்களுக்கு இடையே ஜீவிப்பது. இது கருணாநிதிக்கு தெரியும். ஆனால், தேசிய அரசியலில் இருந்த மூப்பனாருக்கு தெரியவில்லை. மாநில கட்சி மூலமாக தேசிய அரசியல் செய்யும் அனுபவத்தின் ஆரம்ப கட்டத்தை அப்போது தான் அவர் தொடங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் சரிபாதியை மூப்பனாருடைய தமாகாவுக்கு ஒதுக்கி விட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதியை எடுத்துக் கொண்டது, திமுக. இந்த பார்முலாப்படி திமுக=தமாகா கூட்டணி தோன்றியது. உண்மையில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருந்தாலே ரஜினி ஆதரவோடு பெரிய வெற்றியை தமாகா பெற்றிருக்கும் அல்லது தமிழகத்தில் புதிய ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு பலத்தையாவது சட்டசபையில் தமாகா பெற்றிருக்கும். அதை கருணாநிதி அறிவார். அதனால் தான், சட்டப்பேரவை தொகுதிகளில் தமாகாவுக்கு குறைவாக ஒதுக்கினார். பாராளுமன்ற தொகுதிகளில் தாராளம் காட்டினார். இதை மூப்பனார் புரிந்து கொள்ளாதது அவரது துரதிர்ஷ்டம்

கட்சி ஆரம்பித்து சில நாட்களில் பெற்ற சைக்கிள் சின்னம், ரஜினிகாந்த் ஆதரவு, தென்மாவட்டங்களில் நடிகர் சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களின் இடைவிடாத தீவிர பிரசாரம், ‘றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமல சைக்கிள்’ என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் ஆகியவை இணைந்து கூட்டணியை வெற்றி முகட்டில் ஏற்றியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அறிமுகமில்லா வேட்பாளரிடம் பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். தமிழகமே சுத்தமாகி விட்டது போன்ற உணர்வு அப்போது நிலவியது. தமிழக ஆட்சியை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது, தமிழ் மாநில காங்கிரஸ்.

அதே நேரத்தில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்தது. இந்த சமயத்தில் தான், தேவகவுடா பிரதமரான அதிசயமும் நடைபெற்றது. ஏற்கனவே, 43 எம்பிக்களுடன் சந்திரசேகர் பிரதமரான அதிசயமும் 1990ல் இந்தியாவில் நடந்திருந்தது. அந்த வரிசையில் திமுக எம்பிக்களையும் சேர்த்தால் 40 எம்பிக்கள் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடனும் பிரதமர் பதவியில் மூப்பனார் அமருவதற்கான சூழ்நிலை கனிந்திருந்தது. தமிழகத்தில் ஏமாந்ததை தேசிய அளவில் அவர் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டது. தமிழன், பிரதமராகும் வாய்ப்பு கருகிப்போனது. அதற்கான காரணம், ஊரறிந்த ரகசியம். இதனால், இந்த கூட்டணி 3 ஆண்டுகள் வரையே தாக்குப் பிடித்தது. 1999ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு திமுக தாவியதால் கூட்டணி, ‘பணால்’ ஆனது.

1996ல் தானாக கனிந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ள மூப்பனார் தவறியதன் விளைவுகள், 1999 முதல் தொடங்கின. இறுதியாக, எந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி தமாகா கட்சியை 1996ல் தொடங்கினாரோ அதே அதிமுகவுடன் 2001 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ் மாநில காங்கிரஸ் கைப்பற்றியது. சில மாதங்களில் மூப்பனார் மறைந்தார். அதன்பிறகு, அந்த கட்சியின் தலைமை பதவிக்கு வந்த ஜி,கே.வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடனே தமாகாவை இணைத்து விட்டார். இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். புதிய கட்சியை தொடங்குகிறார்.

ஆனால், அப்போது தமாகாவில் இருந்தவர்கள் இப்போதும் அவருடன் இருக்கிறார்களா? 1996ல் வாய்ப்பை தவறவிட்ட வாய்ப்பை புதிதாக தொடங்கும் தமாகாவால் பெற முடியுமா?  இப்போது பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து நல்ல ஓட்டு வங்கியுடன் வலிமையாக உள்ளன. இந்த சூழ்நிலையில்,  புதிய கட்சியை கொண்டு ஜி.கே.வாசனால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே இலங்கையில் இன அழிப்பு சமயத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவை இன்னும் தமிழக மக்கள் மன்னிக்க தயாராக இல்லை. அந்த அரசில் தான் வாசனும் அமைச்சராக இருந்தார். இதுபோல, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது கூறப்படும் ஊழல்களில் வாசனுடைய பதில் என்னவாக இருக்கும்? காங்கிரசில் இருந்து வெளியேறும் தமாகாவுக்கும் அந்த ஊழல் குறித்து பொறுப்பு உண்டா...? இல்லையா...?

இது மட்டுமல்ல, கட்சியை காங்கிரசில் இணைத்த பிறகு இரண்டு முறை ராஜ்யசபா எம்பியாக (12 ஆண்டுகள்)வும் மத்திய அமைச்சராகவும் வாசன் இருந்துள்ளார். எனவே, மத்தியில் அதிகாரத்தை காங்கிரஸ் இழந்து விட்டதால் புதிதாக மீண்டும் தமாகா உருவாகிறதா? என்ற சந்தேகமும் சாதாரண மக்கள் மனதில் தோன்றுகிறது. ஏற்கனவே, 1996 முதல் 2004 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத சமயத்தில் தான் தமாகா என்ற கட்சி இயங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கட்சி தனித்து செயல்படுமா அல்லது தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளைப் போல கிடைத்த இடங்களை பெற்றுக் கொண்டு திராவிட கட்சிகளின் கீழ் அடங்கிப் போய் விடுமா ....? இந்த கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் அளிக்கும் பதில்களை பொறுத்தே தமிழக அரசியல் ஆழியில் தமாகா தத்தளிக்குமா? அல்லது தப்பிப் பிழைக்குமா? என்று தெரியவரும்.

= வை.ரவீந்திரன் 

புதுச்சேரி விடுதலை நாள் = நவம்பர் 1

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பகுதிகள் மட்டுமே விடுதலை அடைந்தன. பிரெஞ்சியர் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை பெறும்போதே புதுச்சேரிக்கும் பிரெஞ்சியரிடம் இருந்து விடுதலை பெற கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வ.சுப்பையா போன்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் அப்போது பலனளிக்கவில்லை.

இதனால், ஆங்கிலேயரிடம் இருந்த இந்திய பகுதிகளுக்கு விடுதலை கிடைத்த பிறகு, பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் விடுதலை போராட்டங்கள் தலை தூக்கின. ஆனால், தங்களுடைய காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவோ அல்லது இந்தியாவில் இருந்து வெளியேறவோ பிரெஞ்சியருக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் தான், இந்திய சுதந்திரத்துக்கு பிறகும் கூட, 1948ம் ஆண்டு அக்டோபரில் வழக்கம்போல பஞ்சாயத்து தேர்தலை பிரான்ஸ் அரசு நடத்தியது.

இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, ‘பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுடன் முதலில் இணைந்த பகுதி சந்திர நாகூர். தற்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு மாநகராட்சியாக அந்த நகரம் உள்ளது. சந்திர நாகூரில், 1949 ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் 1951ல் அந்த நகரம் இணைந்தது.

அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடுதலை போராட்டம் வலுவடையத் தொடங்கியது. உண்மையில் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தான் புதுச்சேரியில் வலிமையான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. அதை திலகர் வழியில் நடத்தியவர் வ.சுப்பையா. அதிகார வர்க்கத்துடன் பேச்சு நடத்தி முன்னெடுத்து சென்றவர், குபேர் போன்றோர்.
அந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்க பல வழிகளிலும் பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டியது. வ.சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதாவது, புதுச்சேரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், தமிழக எல்லையான காலாப்பட்டில் இருந்த படி போராட்டத்தை தீவிரமாக நடத்தினார். இதற்கிடையே, தனது ஆளுகையில் இருந்த இந்தோசீனா (வியட்நாம்) பகுதியில் இருந்து ராணுவத்தை பிரான்ஸ் வரவழைத்தது. ஆனால், புதுச்சேரி மக்களின் விருப்பத்தை அறிந்திருந்த சுதந்திர இந்தியாவும், தனது ராணுவத்தை புதுச்சேரியை சுற்றி நிறுத்தியது. மேலும், புதுச்சேரி பகுதியை சுற்றிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தியது.

இந்த காலகட்டத்தில், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்வதற்கு தனியாக பாஸ்போர்ட் முறையும் அமலில் இருந்திருக்கிறது. இந்தியாவுக்குள் சிதறிக் கிடந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கப்பரப்புக்குள் செல்ல அந்த பாஸ்போர்ட் தேவை. அது இருந்தால் தான் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாகே, ஏனாம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இவ்வளவு கெடுபிடிகளுக்கு பிறகு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இணைவது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர், அப்போது இந்திய அரசின் பிரதிநிதியாக புதுச்சேரியில் இருந்த கேவல்சிங். தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழுர் என்ற இடத்தை வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்தனர்.

1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கு 170 பேர் ஆதரவு தெரிவித்தனர். 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி வரலாற்றின் போக்கை மாற்றிய இந்த வாக்குப்பதிவை நினைவு கூறும் வகையில் கீழுர் பகுதியில் இன்றும் கூட அதற்காக நினைவிடம் அமைந்துள்ளது. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

கீழுர் வாக்கெடுப்பு முடிந்ததும் பெரும்பான்மை கருத்து அடிப்படையில், விடுதலை ஒப்பந்தம் தயாரானது. டெல்லியில், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு ஆதிக்க பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் புதுச்சேரிக்கு விடுதலை அளிக்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது. அதன்படி, புதுச்சேரியின் விடுதலை வைரவிழா ஆண்டு இது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே புதுச்சேரிக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவும் இல்லை. முழுமையாக இந்தியாவுடன் இணையவும் இல்லை. பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பிரெஞ்சு சட்டங்கள், இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேற கால அவகாசம், பிரெஞ்சு மொழியில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பது என பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண அவகாசம் கேட்டது, பிரான்ஸ். இதனால், அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) கையெழுத்தாகவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 1956ம் ஆண்டு மே மாதத்தில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு, அந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற 6 ஆண்டு காலம் பிடித்தது. இறுதியாக, 1962ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிறைவேறியது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆட்சி பரப்பு அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) முழுமையாக அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தான், இந்தியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி வந்தது. பிரெஞ்சு சட்டங்கள் நீக்கப்பட்டு இந்திய சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஏற்கெனவே, கேரளா பகுதியில் உள்ள மாகே, ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பிராந்தியங்களும் புதுச்சேரி, காரைக்கால் போலவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவுடன் இணைய தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. எனவே, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இந்தியா உருவாக்கியது. அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த போதிலும், அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்தே ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைந்தது. பின்னர், பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டு 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரியில் முதல் சட்டப்பேரவை அமைந்தது. பிரெஞ்சியரிடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்ற பிறகு அமைந்த முதல் கூட்டம் என்பதால், தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையின் 50வது பொன்விழா ஆண்டு என குறிப்பிடலாம்.

அதே நேரத்தில் புதுச்சேரியின் விடுதலை தினம் எது? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரி அரசை பொறுத்தவரை ஆகஸ்ட் 16ம் தேதியை அதிகார மாற்ற ஒப்பந்த தினம் (De Jure transfer day) என அறிவித்து அரசு விடுமுறையும் அளித்து வருகிறது. அன்றைய தினத்தையே சுதந்திர தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், கீழுர் வாக்கெடுப்பை தொடர்ந்து, விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தான 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்றே புதுச்சேரிக்கு பிரெஞ்சியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து விட்டதால் அந்த தினத்தையே புதுச்சேரி விடுதலை தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே புதுச்சேரியில் ஒலித்து வருகிறது.

சமீபத்தில், அந்த கோரிக்கையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். கடந்த சுதந்திர தின (ஆகஸ்ட் 15) உரையின்போது ‘இனிமேல் நவம்பர் 1 விடுதலை தினமாக கொண்டாடப்படும். அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்’ என்று அறிவித்தார். எனவே, புதுச்சேரியின் விடுதலை வைர விழா ஆண்டான இந்த ஆண்டில் இருந்து நவம்பர் 1ம் தேதியும் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.

பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தான் முதன் முறையாக உண்மையான சுதந்திர தினத்தை வைர விழா ஆண்டில் புதுச்சேரி கொண்டாடுகிறது.

(தி இந்து = தமிழ் நாளிதழில் 30/10/2014 அன்று



வெளியான கட்டுரை)

= வை.ரவீந்திரன் 

அகிலம் போற்றும் பாரதம், இது இணையில்லாத காவியம்


யாராவது ஒருவர் நீட்டி முழக்கி கதை அளந்து கொண்டு இருந்தால், ‘நீ என்ன மகாபாரத கதையா சொல்கிறாய்?’ என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு மகாபாரதம் என்றால் மிக நீநீநீளளமான இதிகாச காவியம். சாந்தனு மகாராஜாவுக்கு பிறகு விசித்திர வீரியன். அவனுக்கு பிறகு, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு. அவர்களுடைய வாரிசுகள் துரியோதனன் மற்றும் தர்மர், அர்ச்சுனன். அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அவனது புதல்வன் பரீட்சித்து என 6 தலைமுறையினரைப் பற்றிய நெடிய வரலாறு, அது. அந்த வரலாற்றில் 5 தலைமுறையினருடன் வாழ்ந்தவர், சாந்தனு மற்றும் கங்கா தேவிக்கு மகனாக பிறந்த தேவவிரதன் எனப்படும் பீஷ்மர். இன்றைய தலைமுறையிடம் இவ்வளவு நீண்ட நெடிய இதிகாச கதையை படிக்கும் பொறுமையை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

அதனால்தானோ என்னவோ? டிவி சேனல்களில் அவ்வப்போது மகாபாரதத்தை நெடிய தொடராக ஒளிபரப்புகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் ‘இத் கோ மஹாபாரத் கதா’ என்ற டைட்டில் பாடலுடன் தொடர் ஆரம்பிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் அதை ரசித்து பார்க்க பெரிய கூட்டமே காத்து கிடந்தது. பின்னர், மொழி வாரி சேனல்கள் பெருகிவிட்டதால் பிராந்திய மொழிகளிலேயே மகாபாரதம் காண முடிகிறது. ஆனாலும், அதன் நீண்ட நெடிய வடிவாக்கத்தை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சலிப்பு இல்லாமலும் மக்களுக்கு தருவதில் ஒவ்வொரு சேனலும் வேறுபட்டன. அதில் ஸ்டார் குழுமத்தை சேர்ந்த விஜய், வித்தியாசமாக நிற்கிறது. ஏற்கெனவே, ஸ்டார் பிளஸ் டிவியில் இந்தியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவுற்ற மகாபாரத தொடரை கடந்த ஓராண்டு காலமாக ஸ்டார் விஜய் டப்பிங் செய்து ஒளிபரப்பி வந்தது. இதே தொடரை, மலையாளத்தில் ஏசியா நெட் சேனல் ஒளிபரப்புவதும் குறிப்பிடத்தக்கது.

எந்த இடத்திலும் டப்பிங் நெடி சிறிது கூட இல்லாமல் அசல் தமிழ் தொடர் உணர்வை அளித்தது. குறிப்பாக, கிருஷ்ணன், சகுனி, துரியோதனன் ஆகிய வேடங்களை ஏற்றவர்களின் நடிப்பு பிரமிக்கத்தக்கது. முகத்தில் சாந்தமும், கருணையும், சமயோசித சாணக்கியத்தனமும் ஒருங்கே காட்சியளித்த கிருஷ்ணரை காணும்போது உண்மையில் கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கொண்டு சதி ஆலோசனைகளை அள்ளி விடும் சகுனி கதாபாத்திரத்தை ஏற்றவரின் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. இதிகாச சகுனி கூட, இப்படி இருந்திருப்பாரா என்பது சந்தேகமே?
பீஷ்மர், துரோணர், நேத்திரங்களை இழந்த திருதராஷ்டிரர், காந்தாரி, பாஞ்சாலி, அர்ச்சுனன், அசுவத்தாமன், கர்ணன், அபிமன்யு என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருந்தனர். தமிழில் எழுதப்பட்ட டப்பிங் வசனங்களும் கூட எதுகை, மோனையோடு மிக அழகாக அமைந்திருந்தன. கீதை உபதேசம் செய்யும் காட்சிகள், மிக முக்கியமான தருணங்களில் நடைபெறும் வாக்குவாதங்கள் போன்றவற்றில் கையாளப்பட்ட வார்த்தை ஜாலங்களே இதற்கு உதாரணம். இந்த தொடரில் தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர்களுக்கும் தொடரின் அபரிமிதமான வரவேற்பில் முக்கிய பங்கு உண்டு. காட்சி அமைப்பில் சிறு பிசிறு கூட இல்லாமல் இதிகாச காலத்தை கண்முன்னே நிறுத்தியதில் ஸ்டார் விஜய்க்கு ஷொட்டு.

அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்து கங்கா தேவியின் மூலமாக மானிட பிறவியை அடைந்தவரும் ராஜநீதிகளை அறிந்தவருமான பீஷ்மரால் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களின் தவறுகளை தடுக்க முடியவில்லை. பீஷ்மர் என்ற மாபெரும் துணை இருப்பதாலேயே அஸ்தினாபுர யுவராஜன் துரியோதனனின் அட்டகாசத்தை அண்டை நாட்டு அரசர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. தனது தமையன் பாண்டுவுக்கு சொந்தமான அரசை கூட, அவனது புத்திரர்களுக்கு அளிக்க திருதராஷ்டிரனுக்கு மனம் இல்லை. அவனது புத்திரபாசம் தடுத்தது. புத்திர பாசத்தால் தனது மகன் அசுவத்தாமனுக்கு ஒரு ராஜ்ய பரிபாலனம் கிடைக்கும் என்பதாலேயே துரியோதனனை சார்ந்து இருந்து அவனது தவறுகளை குரு துரோணராலும் இடித்துக் கூற முடியவில்லை.

இப்படி இன்மைகள் அதிகரித்தபோது அரசன் வழியிலேயே குடிமக்களும் செல்வார்கள் என்பதால் ஒரு யுகத்தை அழித்து புதிய யுகம் படைத்ததாக கிருஷ்ணர் கூறுகிறார். மாபெரும் சபையில் ஒரு பெண்ணுக்கு (அதுவும் ராஜகுலத்தை சேர்ந்தவருக்கே) நேரிட்ட அவமதிப்பு தொடங்கி உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பிரம்மாஸ்திரத்தால் அழிக்கும் அசுவத்தாமன் வரை ஒவ்வொரு தவறுக்கும் தண்டனைகளை வாரி வழங்கும் கிருஷ்ணரிடம் பாஞ்சாலி கேட்கும் கேள்விகள் சிந்திக்க தூண்டுபவை.

இவ்வளவு கோரமான யுத்தம் எதற்காக? எதிரிகளாக இருந்தாலும் மிக கொடூரமாக உயிரிழந்த பிறகு அவர்கள் மீது பரிதாபமே தோன்றுவதோடு எனது தரப்பிலும் வாரிசுகளை இழந்து நிற்கிறோமே? அனைத்து லீலைகளையும் புரிபவன் நீ என்பது உண்மை என்றால், மனிதர்களின் மனதை மாற்றி இருக்கலாமே? மாபெரும் நாசகார யுத்தத்தை நிகழ்த்தியது ஏன்? இப்படி அடுக்கடுக்காக துருபத கன்னிகை பாஞ்சாலி எழுப்பும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறும் பதில், எக்காலத்துக்கும் பொருந்தும்.

‘ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் அவர்களாகவே சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரம் உண்டு. (அதில் கடவுளும் தலையிட முடியாது). ஆனால், அக்கிரமம் அதிகரித்து அதர்மம் தலை தூக்கினால் அதை ஒட்டு மொத்தமாக அழித்து புதிய யுகம் படைப்பது கடவுளின் கடமை. அதுதான், இந்த யுத்தத்தில் நடைபெற்றது. உத்தரை வயிற்றில் வளரும், உலகை எட்டிப் பார்க்காத சிசு கூட கர்ப்பத்திலேயே உயிரை இழந்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அந்த சிசுவே, ‘பரிட்சீத்து மகராஜா’வாக புதிய பாரதத்தை தொடங்குவான்’ என்பதே அந்த பதில்.

18 நாட்கள் நடைபெற்ற மகாபாரத யுத்தத்தில் காந்தார அரசன் சகுனி, அஸ்தினாபுர அரசன் துரியோதனன், திரிகர்த்த தேச அரசன் சுதர்மன், சிந்து அரசன் ஜயத்ரதன், பாஞ்சால தேச அரசன் துருபதன், மத்ரிய அரசன் சல்லியன், அங்க தேச அரசன் கர்ணன், உத்தரதேச அரசன் விராடன் என பல்வேறு தேசத்து அரசர்களும் கொல்லப்படுகின்றனர். கிருஷ்ணர் கூறுவது போல முற்றிலுமாக அனைத்து ஆட்சிகளும் துடைத்து எறியப்பட்டு புதிய ஆட்சி மலருகிறது. அக்கினியில் உதித்த பாஞ்சாலி மற்றும் நாடிழந்து நின்ற பாண்டவர்கள் மட்டுமே யுத்தத்தின் முடிவில் உயிர் பிழைத்து நிற்கின்றனர்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினால் பல்வேறு கருத்துகள் பொதிந்த தத்துவ விசாரங்களாகவே உள்ளன. கூடுமான வரை அவற்றை ஸ்டார் விஜய் சரியாக கையாண்டு இருக்கிறது. ஆங்காங்கே சில தவறுகளும் குறைகளும் (உதாரணம்=அபிமன்யு வதத்தில் கோரம், குந்தி மற்றும் காந்தாரி போன்ற மூத்த ராஜமாதாக்களின் இளமை தோற்றம்) இருந்தாலும் நிறைவு பெற்ற மகாபாரதம், நிறைவாகவே இருக்கிறது. இனிமேல், மஹாபாரதம் இல்லா இரவுப் பொழுதை நினைக்கும்போது வெறுமை கவிழ்கிறது.

‘விதியாடும் விளையாட்டில்
சதி வலையில் வீழ்ந்தனரே
தர்மம்... இங்கு பலியானதே
சதி செய்த சூழ்ச்சி தனில்
கதியின்றி போயினரே...’

‘அகிலம் போற்றும் பாரதம்
இது இணையில்லா ஒரு காவியம்
தர்ம, அதர்ம வழியினிலே
நன்மை, தீமையின் நடுவினிலே
விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’

‘கிருஷ்ணனின் மகிமையும்
கீதையின் பெருமையும்
ஒன்றாக சங்கமிக்கும்
ஒரு புண்ணிய காவியம்
மகாபாரதம்... மகாபாரதம்...’
ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.

= வை.ரவீந்திரன்  
 

Tuesday, 28 October 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...! நண்பனே...!


‘பசுமை நிறைந்த நினைவுகளே.... பாடித் திரிந்த பறவைகளே....’, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்..... நம்மை நாம் அங்கே தேடலாம்...’ இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் பள்ளிப் பருவ பால்ய கால நினைவுகள் அலை மோதுவதை தவிர்க்க முடியாது.

பாடப் புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையே மயில் இறகை மறைத்து வைத்து, அதை இருட்டு அறைக்குள் எடுத்துச் சென்று அது குட்டி போட்டுள்ளதா என்று அவ்வப்போது ரகசியமாக எடுத்து பார்த்திருப்போம். அதுபோலவே, பள்ளிக்கூட நினைவுகளையும் நினைவு பொக்கிஷத்தில் பதுக்கி வைத்திருந்து ஓய்வு நேரங்களில் அதை ரகசியமாக எடுத்து எடுத்து பார்ப்பது என்ற அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

அதுவும் பதின்மப் பருவமான டீன் ஏஜ் வயது பள்ளிக் கூட அனுபவங்களை பற்றி விவரிக்க தேவையில்லை. ஒட்டுமொத்த நினைவுகளை சுட்டுப் பொசுக்கினால் கூட அந்த நினைவுகளின் உயிர் கருகும் வாசம் சுழன்று கொண்டே இருக்கும். எனக்கும் கூட.....? அந்த நினைவுகள் அவ்வப்போது எழுந்து எட்டிப் பார்த்து விட்டு செல்வது உண்டு. அதுவும், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி வழியாக செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அதன் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். பிறந்த வீட்டில் சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்த நினைவுகளை அசைபோடும் இல்லத்தரசிகளை அப்போது நினைத்துக் கொள்வேன்.

இதுபோன்ற பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால்...? அதுவும் அந்த பள்ளியிலேயே...? நினைத்தாலே இனிக்கும் அத்தகைய நிகழ்வை, பள்ளித் தோழர்களுடன் ருசித்துப் பார்த்தேன்(தோம்). 24-10-2014 அன்று அந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்து ஏக்கப் பெருமூச்சு விட்ட அந்த தருணங்கள் அனைத்தும் நனவில், நிஜத்தில் ஈடேறியது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-1991 ஆண்டுகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதப்பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினோம். கால் நூற்றாண்டு காலத்துக்கு பிறகு பள்ளிக்குள் நுழையும்போதே உடலில் எடை என்னும் பாரம் குறைந்து மனம் மட்டும் அந்தரத்தில் இறகாக மிதந்து சென்று நினைவுகளை பள்ளியின் வான் வெளியில் கவிதை வரைந்து செல்வது பான்ற உணர்வு. உடன் படித்த மாணவர்கள் அனைவரையும் அவர்களுடைய குடும்பத்தினருடன் சந்தித்தபோது அந்த பரவச உணர்வு பன்மடங்காகி ஜிலீரிட்டது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 25 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு பாடம் எடுத்து தற்போது ஓய்வு பெற்று 70 வயதை தாண்டி நிற்கும் ஆசிரியர்கள் அனைவரையுமே நேரில் பார்த்தபோது.... அதை மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது போன்ற வார்த்தைகளுக்குள் அடைத்து விட முடியாது. இந்த உலகில் ஒவ்வொரு விநாடியும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது என்ற வார்த்தைகள் அடிக்கடி எனக்குள் தோன்றுபவை. அந்த வார்த்தைகளின் நிஜ வடிவத்தை அந்த நொடியில் உணர்ந்தேன்.

11 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் எடுத்த ஆசிரியர்களும் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் அன்றைய தலைமை ஆசிரியர் (அவருக்கு இப்போது வயது 82) என அனைவருமே எங்களைப்போல குழந்தை மன குதூகலத்துடன் வந்திருந்ததை காணும்போது ஆசிரியர், மாணவர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் திரிவேணி சங்கமம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவருமே 70 வயதை கடந்த போதிலும் எங்களை காண்பதற்காகவே சிரமம் கருதாது பள்ளிக் கூடம் வந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. அதுவும் சென்னையில் குடியேறிவிட்ட இயற்பியல் ஆசிரியர் திரு.சுகிர்தராஜ், இதற்காகவே வந்திருந்தார். இந்த சந்திப்பானது மன நிறைவைத் தருகிறது என்று மகிழ்ச்சியில் திளைத்தார் எங்களுடைய உயிரியல் ஆசிரியர் திரு. அந்தோணி ஆரோக்கியசாமி.

அன்றைய மாணவர்களாகிய நாங்கள் அனைவருமே தற்போது 40 வயதை எட்டிப் பிடிப்பவர்கள். குடு குடு கிழவனாக இருந்தால் கூட, அவரது தாயாருக்கு அவர் என்றுமே குழந்தை தான். எங்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ எவ்வளவு வயது கடந்திருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் மாணவர்கள் தானே. அதனால், 40 வயதை கடந்து விட்ட நீங்கள் அனைவரும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியரும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சாதனையாளராக மாற வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியரும், ஒவ்வொருவரும் ஏதாவது தலைமை பொறுப்பிலோ நிர்வாக பொறுப்பிலோ இருக்கலாம் என்பதால் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெய்வத்தின் துணை கொண்டு வெல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் திரு. தெய்வ நாயகம் அவர்களும் கூறிய அறிவுரைகள் அர்த்தமுள்ளவை.

‘37 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக பணியில் இருந்திருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை பத்திரிகை மற்றும் வெவ்வேறு வழிகளில் கேள்விப்படும்போது மனதுக்குள் லேசாக ஆசை துளிர் விடும். நம்முடைய மாணவர்கள் யாரேனும் இப்படி அழைக்கமாட்டார்களா என்று கருதுவேன். இப்போது, எனது ஆசை நிறைவேறிவிட்டது’ என்று வேதியியல் ஆசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெபசிங் அவர்கள் கூறியபோது எங்களுடைய மனமும் திருப்தியும் பெருமிதமும் கலந்த உணர்வில் ஆழ்ந்தது என்பது கற்பனை கலவாத நிஜம்.

தமிழ் வழிக் கல்வியை பலரும் குறை கூறும் இந்த காலத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதையும் தனது குழந்தைகள் இருவர் ஜெர்மனி, இங்கிலாந்தில் இருப்பதையும் நினைவு கூர்ந்தார், தமிழ் ஆசிரியர் திரு.ஜெயப்பிரகாஷ். அவருடைய குழந்தைகள் மூவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையை கலகலப்பாக்கி வகுப்பறையாக மாற்றிய பெருமையை எடுத்துக் கொண்டார், தாவரவியல் ஆசிரியை திருமதி.ஜெயசீலி அவர்கள். அவர் நடத்திய தாவரவியல் வினாடி வினா போட்டியில் பங்கேற்று பதிலளித்த எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பரிசுகளை அள்ளித் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக கூடியுள்ள இந்த நிகழ்வானது கூடினோம்.... கலைந்தோம்... என்று இருக்காமல் இந்த பள்ளியில் தற்போது படித்து முடிக்கும் ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவும் விதத்தில் ஒரு அமைப்பாக (அலுமினி அசோசியேஷன்) மாறுவதற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தால் நல்லது என்பது எங்களுடைய 12ம் வகுப்பு காலங்களில் பணியில் சேர்ந்து இன்றும் ஆசிரியர் பணியில் தொடரும் வேதியியல் ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், நெல்லையப்பன், வில்லியம், பாஸ்கர் ஆகியோரின் அன்பு வேண்டுகோளாக அமைந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அந்த பாதை நோக்கி இந்த பயணம் செல்லும் என்று நாங்களும் நம்புகிறோம்.

= வை.ரவீந்திரன் 

Saturday, 18 October 2014

அன்புள்ள ரஜினிகாந்த்....

அன்புள்ள ரஜினிகாந்த்....
இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னமும் தமிழக மக்களின் அன்புக்குரியவராகவே இருக்கிறார், ரஜினி. ‘16 வயதினிலே’ படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் அவரது வில்லத்தனம் கண்டு மிரண்ட தமிழ் ரசிகர்கள், பின்னாளில் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட தொடங்கியது காலம் அவருக்கு அளித்த பரிசு. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, ‘மூன்று முடிச்சு’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவே தலை காட்டிய ரஜினியின் கலைப்பயணம் சாதாரணமானது அல்ல. நடந்தவை அனைத்துமே வியத்தகு வளர்ச்சி. ஒவ்வொரு படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியதோடு அவரை திரையுலகின் ராஜாதி ராஜாவாக்கினர், தமிழக மக்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியானபோது, தமிழகமே சுறுசுறுப்பானதே. அந்த படத்தை இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் கூட எனது 10 வயது மகன் ரசித்து பார்க்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது கூட விளம்பர இடைவேளை சமயத்தில் ரிமோட்டை தேடும் அவன், ‘பாட்ஷா’ படத்தை விளம்பரங்களுடன் பார்த்ததை கண்டு வியந்தேன். இத்தனைக்கும், அவன் ஏற்கனவே சில முறை அந்த படத்தை பார்த்திருக்கிறான். அந்த படம் வெளியாகி 10 ஆண்டுக்கு பிறந்த சிறுவனை கூட கவர்ந்திழுக்கும் அந்த திரைபடத்தின் வெற்றி விழா சமயத்தில் ரஜினிகாந்த் உதிர்த்த வார்த்தைகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டன. ‘இப்போதைய ஆட்சி மீண்டும் திரும்பினால்.... இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்பதே அந்த வார்த்தைகள். அதன்பிறகு, ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று பட்டி தொட்டி எங்கும் பரவிய வாசகங்களும், அமெரிக்காவில் இருந்தபடியே ரஜினி அளித்த தொலைக்காட்சி பேட்டியும் தமிழகத்தில் அரசியல் பிரளயத்தையே ஏற்படுத்தின.

அதன்பிறகு, அவ்வப்போது அரசியலுக்கு ரஜினி வருவதாக தகவல்கள் வெளியாவதும் அந்த சமயங்களில் அவரது ஏதாவது ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்த செய்திகள் அடங்குவதும் வாடிக்கையாகி விட்டன. இப்போது கூட, அவரை சுற்றி ஒரு அரசியல் வட்டம் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறது. வயதும் அறுபதை கடந்து விட்டதால், இனி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ஒரு கூட்டம் எதிர்பார்ப்பது உண்மை. ஆனால், அதற்கு முன் சில உண்மைகளை அவர் புரிந்து கொள்வது அவசியம். 1999ம் ஆண்டு படையப்பா வெளியான பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 4 மட்டுமே (குசேலனை தவிர). அதிலும் பாபா பிளாப். இந்த நிலையில் கூட, ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு தமிழகமே கட்டுண்டு கிடக்கிறது. இதை அவருக்கான ஏகபோக ஆதரவு என்று கருதினால், அதை விட இமாலயத் தவறு எதுவும் இருக்காது.

ஏனெனில், திரையுலகம் வேறு. அரசியல் களம் வேறு. குடும்பங்கள் தொடங்கி பணி புரியும் இடங்கள் வரை எங்கெங்கும் அரசியல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசியல் துறையில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திரையுலகில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் பற்றிய தகவல்களையும் ரஜினி ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தந்தை பெரியாரால் பட்டம் சூட்டப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதா, லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் ஆகியோர் அரசியலில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். அவர்கள், ஆட்சியிலோ  அதிகாரப் பதவியிலோ அமர்ந்ததில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகப் பட்டாளத்தை வைத்திருந்த (இன்றும் வைத்திருக்கும்) சிவாஜி கணேசனால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அவர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை கூட தமிழக அரியணையில் அவரால் ஏற்ற முடியவில்லையே? அது மட்டுமல்ல. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுக (ஜா) அணியுடன் 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அவர் சந்தித்தபோது, அந்த அணிக்கு 4வது இடமே கிடைத்தது. அவரே  தொகுதியில் 3ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். எம்ஜிஆரால் கலை உலக வாரிசு என அடையாளம் காட்டப்பட்ட பாக்கியராஜ் மற்றும டி.ராஜேந்தர் ஆகியோரின் அரசியல் பயணமும் இந்த வழியில் தான் முடிந்தது.

தியாகு, வாகை சந்திரசேகர், நெப்போலியன், ராதாரவி, ராமராஜன், குமரி முத்து, தீபா, சிம்ரன், விந்தியா என திரையுலக அரசியல் பிரபலங்கள் ஏராளம். வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொது ஒற்றுமை உண்டு. அதாவது, தேர்தல் சமயங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளால் அவர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த வரிசையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் அரசியலில் குதித்தவர், விஜயகாந்த். தனித்து நின்றபோது தனியாளாக மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்றைய அரசியல் அரங்கில் அவரது நிலைமையும் நிலைப்பாடும் என்ன என்பதை ரஜினிக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கனவு தொழிற்சாலை என்னும் திரையுலகம் வேறு. மக்களின் கனவுகளை தொழிற்சாலையாக்கி லாபம் பார்க்கும் அரசியல் உலகம் வேறு.

இந்த அரசியல் சூழலில் நீந்தி கரை சேர்ந்ததோடு அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், எம்ஜிஆர் மட்டுமே. மேலெழுந்தவாரியாக பார்த்தால் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்குள் ஆட்சியை எம்ஜிஆர் கைப்பற்றியது போல தோன்றும். உண்மையில், 1950ல் தொடங்கி 27 ஆண்டு கால அரசியல் பயணத்துக்கு பிறகே அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது. முதன் முதலில் அவர் கதை நாயகனாக நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி (கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படம்) படங்கள் வெளியான சமயத்திலேயே திராவிட இயக்கத்துடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது படங்களில் காட்சிகள், நடிகர்களின் உடை, பாடல்கள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக கொள்கையை, கட்சிக் கொடியை, சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அக்கறை காட்டினார்.

திரையுலகம் மட்டுமல்ல நேரடி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் அவர் பங்காற்றினார். திமுக முன்னணி பேச்சாளர்களுக்கு இணையாக ஊர் ஊராக சென்று பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஓரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன்.. வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளும் இதை உறுதிப்படுத்துபவை. 1967ம் ஆண்டு முதலில் எம்எல்ஏ ஆனார். பின்னர், 1972லும் எம்எல்ஏ. அதன்பிறகே 1977ல் தமிழக முதல்வராக முடிந்தது. எம்ஜிஆரின் இந்த 27 ஆண்டு கால அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு ஆகியவை கவசங்களாக இருந்ததால் தான் அரசியல் களத்தில் ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.

எனவே, எம்ஜிஆர் வழியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று ரஜினிகாந்த் கருதினால் அது அவரது அறியாமையின் வெளிப்பாடாகவே அமையும். மேலும், அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட ஜென்ம விரோதிகளாக மாறும் ஆச்சரியங்கள் நடைபெறும். கூரிய வாளாக விமர்சனங்கள் பாய்ந்து வந்து இருதயத்தை அறுத்தெடுக்கும். ‘மலையாளி, அட்டைக்கத்தி வீரர்’ என்பதெல்லாம் எம்ஜிஆர் எதிர்கொண்ட விமர்சனங்களில் சில. காமராஜர் பற்றிய விமர்சனங்களை அச்சில் ஏற்ற முடியாது. பேரறிஞர் அண்ணாவை கூட தெலுங்கு நடிகை ஒருவருடன் இணைத்து பேசியது உண்டு. இதுபோன்ற விமர்சன பானங்களால் ஜெயலலிதாவும் துளைத்து எடுக்கப்பட்டார். நேற்று அரசியலுக்கு வந்த குஷ்பு வரை இந்த தனிநபர் விமர்சனங்கள் தொடருகின்றன. தமிழகத்தின் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றிய விமர்சனமும் தமிழக மக்களிடையே அவரைப் பற்றி உருவாக்கப்பட்டு இருக்கும் ஒருவித பிம்பமும் ரஜினி அறியாதது அல்ல.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரஜினி காந்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளன என்பதே உண்மை. ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர் இணைந்தால், மாற்று அணிகளில் இருந்து கிளம்பும் சரம் சரமான விமர்சன கணைகளை எப்படி எதிர்கொள்வார். 1999ம் ஆண்டில் பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தபோது ரஜினியை நோக்கி ராமதாஸ் எழுப்பிய 10 கேள்விகள் இன்னமும் விடை கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன. இதுபோல, ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக ரஜினி அளித்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலில் புகுந்தால் இவை எல்லாம் விசுவரூப விமர்சனங்களாக மாறலாம். தமிழகத்துக்கு அவர் செய்தது என்ன? என்பதில் தொடங்கி அவரது கர்நாடக பூர்வீகம் வரை அலசப்படும். நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். அதுவும் இப்போது தூசி தட்டி எடுக்கப்படும். இதற்கெல்லாம், அரசியல் ரீதியாக என்ன பதில் வைத்திருக்கிறார், ரஜினி.

எந்த வித தொந்தரவும் இல்லாமல் நடிப்பு, ஓய்வு, ஆன்மிகம், அமைதி என்று செல்லும் ரஜினியின் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த அளவுக்கு அரசியல் கை கொடுக்கும்?  என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், விமர்சனத்தை எதிர் கொள்ளும் சக்தியும் தோல்வியை கண்டு துவளாத மனப் பக்குவமும் இருந்தால் அரசியலுக்கு ரஜினி வரலாம். ஏனெனில், இது ஜனநாயக நாடு. சாதாரண மனிதனும் அரியணை ஏறலாம், ஆட்சி பரிபாலனம் செய்யலாம்.... மக்கள் ஆதரவு இருந்தால்....!

இந்த ஆதரவை பெற முடியாமல் தோல்வியை நோக்கி ரஜினியின் அரசியல் பயணம் சென்றால்.....? வனத்தில் கம்பீரமாக உலவும் சிங்கமானது, சர்க்கஸ் கூண்டிலோ உயிர்க்காட்சி சாலையின் செயற்கை வனத்திலோ உலவ நேரிடலாம். ஆனால், சிங்கம் என்பது சிங்கமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

= வை.ரவீந்திரன் 

Monday, 13 October 2014

அரசியல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் பரம பத ஆட்டம்...



எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின்போது அமைச்சராக இருந்த தற்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் அப்போது கூறிய வார்த்தைகள் பத்திரிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. அது, ‘எம்ஜிஆர் தான் நம்பர் 1. நாங்கள் அனைவருமே  பூஜ்ஜியங்கள்’ என்ற வார்த்தைகள் 1ம் எண் இல்லாவிட்டால் வெறும் பூஜ்ஜியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது அவரது கருத்து. அவருடைய அந்த கருத்து இன்றும் கூட அதிமுகவுக்கு பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். 1ம் எண் மட்டும் மாறி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர். இப்போது ஜெயலலிதா.

முதன் முதலில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற குற்றத்துக்காக தற்போது, அவரும் சிறை சென்று விட்டார். இனி, அதிமுக நிலைமை என்னவாகும்? ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னும் பாதை எந்த திசை நோக்கி செல்லும்? தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்படுமா? இப்படி விடை காண முடியாத அல்லது விடையை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் சுழன்று கொண்டு இருக்கின்றன. இந்த தருணத்தில் ஜெயலலிதாவின் 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பி பார்க்கலாம்.

கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வரும் ஜெயலலிதாவின் அரசியல் பாதை முழுவதும் வித்தியாசமானது. சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடங்கியபோது அது தொடர்பான பணிகளுக்காக வந்த ஜெயலலிதாவை அவரது விருப்பத்தை அறியாமலேயே அரசியல் இழுத்துக் கொண்டது. 1982ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மேல்சபை எம்பி என பதவிகளும் வரிசை கட்டி வந்தது. ஜெயலலிதாவின் அரசியல் பாதை ஏறுமுகமாக சென்றபோது 1987 டிசம்பரில் எம்ஜிஆர் மறைந்தார்.

அதன்பிறகு, அதிமுக மூத்த தலைவர்களுக்குள்ளேயே நடைபெற்ற தகராறுகள் அனைத்தும் அதிமுக வரலாற்றில் மட்டுமல்ல தமிழக அரசியல் சரித்திரத்திலும் கருப்பு பக்கங்கள். ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எம்ஜிஆர் உடல் இருந்த வண்டியின் மேல் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். துக்க வீடுகளில் சொந்த பகையை தீர்த்து வைக்கும் வழக்கம், அங்கும் அரங்கேறியது.

பின்னர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகம் அதுவரை கண்டிராத அளவுக்கு திமுக, காங்கிரஸ், ஜெ அணி, ஜா அணி என 4 முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் அதிமுகவின் இரண்டு அணிகளுக்குமே ஏமாற்றம் மிஞ்சியது. தமிழகத்தின் அரியணையை 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. அதே நேரத்தில், அதிமுக தொண்டர்களும், அபிமானிகளும், எம்ஜிஆர் விசுவாசிகளும் ஜெயலலிதா பக்கம் பெரும்பான்மையாக நிற்பது நிரூபணமானது. அறிமுகமே இல்லாத சேவல் சின்னத்தில் தேர்தல் களமிறங்கி 29 தொகுதிகளை கைப்பற்றினார், ஜெயலலிதா. போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழக சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார்.

ஆனால், எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வி அடைந்தார். அவர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தோல்வியை ருசித்தார். அந்த தேர்தலுக்கு பிறகு, இரண்டு அணிகளும் ஒன்றாகின. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து பேரவையில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டு தலைவிரி கோலமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார், ஜெயலலிதா.

அப்போது, அவர் எடுத்த சபதம், ‘இனிமேல் இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’. ஏற்கெனவே, 1977ம் ஆண்டில் இதே போன்ற சூழ்நிலையில் சபையில் இருந்து வெளியேறியபோது, எம்ஜிஆரும் இந்த வார்த்தைகளையே கூறி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. 

அதன்பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அவரது வயது 43. அரசியலுக்குள் நுழைந்து 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய பதவி அவரை தேடி வந்தது. இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வழி நடத்தி வந்தவர்கள், நெடுஞ்செழியன் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்டி சோமசுந்தரம் போன்ற அதிமுக தலைவர்கள். ஆனால், இளம் வயதிலேயே மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததும் கூடா நட்பு, அதிகார போதை, பக்குவமின்மை போன்றவற்றால் ஏற்றி விட்டவர்களை கழட்டி விட்டார். அதன் விளைவு தான், 20 ஆண்டுகளை கடந்து இன்றும் காலை சுற்றிய பாம்பாக மாறி கடித்திருக்கிறது. எனினும், ஜெயலலிதாவின் இந்த போக்குக்கு 1996ம் ஆண்டிலேயே தமிழக மக்கள் மிகச் சரியான தண்டனையை வழங்கினர். அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் சுகவனம் என்ற முன்பின் அறிமுகமில்லாத திமுக வேட்பாளரிடம் ஜெயலலிதா பரிதாபகரமாக தோற்றார். ‘யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பு’ என சுகவீனத்தை பார்த்து கருணாநிதி கூறிய வார்த்தைகளும் அப்போது பிரபலமானது. விமர்சனமும் செய்யப்பட்டது.  

இந்த காலகட்டத்தில் தான், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர அப்போதைய கவர்னர் சென்னாரெட்டியிடம் சுப்பிரமணியசாமி அனுமதி பெற்றிருந்தார். 1996ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு ஊழல் வழக்குகளை ஜெயலலிதா மீது பாய்ச்சினார். சென்னை மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். நாள்தோறும் அவருக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது என்பதை அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணா பட்டியலிட்டது தனிக்கதை. இப்போது, ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்று தந்துள்ள வழக்கும் அந்த சமயத்தில் தான் தீவிரமானது.  
ஆனால், வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சாமியே 1998ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணியாக இருந்தார் என்பதும் மதுரை பாராளுமன்ற தொகுதியில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார் என்பதும் இப்போதைய சூழ்நிலையை உற்று கவனிப்பவர்களால் நம்ப முடியாத உண்மை. அதுமட்டுமல்ல. இரண்டு மாத சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்ததும் மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா களமிறங்கினார். இப்போது, ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாமகவும், வழக்கின் ஆரம்பகட்டத்தில் அவருடன் கூட்டணியில் இருந்தது என்பதும் ஆச்சரியமான தகவல். அந்த தேர்தலில் 4 எம்பிக்களை வென்றதோடு மத்தியிலும் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவிகளை பெற்றது, பாமக.

1996 தோல்வி, இரண்டு மாத காலம் சென்னை மத்திய சிறையில் வாசம் என அஸ்தமனம் நோக்கி சென்ற ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி தெம்பை கொடுத்தது. அப்போது, அதிமுக மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும், அவரது அடிப்படை குணம் மாறவில்லை. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த போதிலும் கடிதத்தை ஜனாதிபதியிடம் அளிப்பதில் காலதாமதம் செய்தார். கடைசியில் 13 மாதங்களில் அந்த ஆட்சியை கவிழ்க்கவும் செய்தார். அந்த ஆட்சி கவிழ்ப்பு செயலில் அப்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் இதே சுப்பிரமணிய சாமி. 

ஜெயலலிதாவின் இத்தகைய தான் தோன்றித்தனத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார், கருணாநிதி. அதனால், மத்தியில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து 1999ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாஜக கூட்டணிக்குள் திமுக புகுந்தது. அதிமுக வெளியேறியது. அப்போது, மத்தியில் கால் தடம் பதித்த திமுக, சுமார் 15 ஆண்டு காலம் இடைவிடாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது என்பது ஊரறிந்த உண்மை. திமுகவின் இந்த ஏற்றத்துக்கு ஜெயலலிதாவே ஒருவகையில் மறைமுக காரணம். வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜகவுடன் அவர் இணக்கமாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பு திமுகவுக்கு கிட்டி இருக்காது. 

மத்தியில் கிடைத்த செல்வாக்கை தவற விட்டாலும், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூப்பனாரின் தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அப்போது, டான்சி ஊழல் வழக்கு காரணமாக அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனினும், அதிமுக வெற்றி பெற்றதும் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இதே ஓ.பி.எஸ்சிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்து விட்டு 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல்வரானார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியதால், 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் திமுக தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்பது போல, ஜெயலலிதாவுக்கு மிகச் சரியாக செக் வைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது. வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உறுதுணையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.
ஆனாலும், 1996ம் ஆண்டு தேர்தல் தோல்வியை தவிர்த்து பார்த்தால் தமிழகத்தில் அவரது செல்வாக்குக்கு எந்த பங்கமும் நிகழவில்லை. எனினும், வெற்றி, தோல்வி என்ற பரமபத விளையாட்டாகவே அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட ஆளும் அதிமுக தோல்வி அடைந்தாலும் 70 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 25 இடங்கள் தான் வித்தியாசம். அதனாலேயே, ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்பதை கூறி வந்தார், ஜெயலலிதா. அப்போதைய திமுக ஆட்சியின்போது, ஒருமுறை அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் ஜெயலலிதா சபையில் இல்லை. அதனால், அவருக்கு அந்த உத்தரவு பொருந்தவில்லை. எனவே, தனியாளாக மறுநாள் சபைக்கு சென்று திமுக மூத்த அமைச்சர்கள் அனைவரும் திணறும் அளவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி திணற வைத்தார். ஜெயலலிதா. அப்போது, அவருடைய அரசியல் மற்றும் ஆட்சி அனுபவ அறிவு வெளிப்பட்டது.


அதன்பிறகு, 2011ம் ஆண்டு சட்டப்பேரவை  தேர்தலை தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சந்தித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். வழக்கம்போல, அவருடைய குணம் வெளிப்பட்டது. கம்யூனிஸ்ட், தேமுதிக கட்சிகளுடன் பகைமை ஏற்பட்டது. 2014 தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தனியாக புறப்பட்டார். வென்றார். ஆனால், அந்த வெற்றியால் கிடைத்த பலன் என்ன? தற்போது, தமிழக அரசியலில் இன்று தனியாகவே அதிமுக இருக்கிறது. தற்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதிமுகவுக்கு எதிராக ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதிமுகவின் நிலைமை என்னவாகும்......? ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் எப்படி போகும்.......?  

வெயிட் அண்ட் ஸீ....

= வை.ரவீந்திரன். 

Friday, 19 September 2014

மோடிக்கு ஒரு கடிதம்





இந்தியாவின் பிரதமராக தாங்கள் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து விட்டன. திரைப்பட உலகில் மட்டுமே வெள்ளி விழா, வெற்றி விழா போன்றவை கொண்டாடப்படுவது வழக்கம். திரைப்படத்தை பார்த்தே வளர்ந்து வரும் சமுதாயம் என்பதால் 100 நாள் என்பது முக்கியமான தருணமாகவே தெரிகிறது. அதனால், 100 நாளை கடந்த தங்களுடைய ஆட்சிக்கு வாழ்த்துக்கள். உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் முகமே பிரகாசமாக தெரிந்தபோது மிகவும் வருத்தம் அடைந்த உள்ளங்களில் நானும் ஒருவன். அதனாலேயே, ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதுவும் தங்களைப் போன்ற ஒரு தலைவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆசைப்படியே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தை கைப்பற்றி விட்டீர்கள். இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத சாதனை. 1991ம் ஆண்டு ராஜீவ் கொல்லப்பட்ட சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியால் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. தங்களுடைய அரசியல் முன்னோடி வாஜ்பாயிக்கு கூட இந்த அளவுக்கு அபரிமிதமான வெற்றியை மக்கள் வழங்கவில்லை. ஆனால், தங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றால் அதற்கு காரணம் நீங்கள் அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் புரையோடிப் போன ஊழல்கள் தான்.

நம்முடைய மக்கள் மிகவும் நல்லவர்கள். குறிப்பிட்ட அளவுக்கு ஊழல் செய்வதை பொறுத்துக் கொள்வார்கள். அதுவே, லட்சம் கோடி, கோடி கோடி என புறப்பட்டால் எரிமலையாய் பொங்கி விடுவார்கள். காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், ஈராக்கில் உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல், இந்தியாவின் ஊழல் புகழை வானளாவ பரப்பிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க (கோல்கேட்) ஊழல் என அரசின் சாதனைகளைப் போல ஊழலும் தனியாக பட்டியலிடப்படும் அளவுக்கு நீண்டு கிடந்தது. அதைப்பார்த்து வெறுத்துப் போய் இருந்த இந்திய மக்கள் அனைவரும் எரிமலையாக பொங்கியதால் காங்கிரஸ் பொசுங்கிப் போனது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று தீர்மானித்து விட்டனர். மாநிலம் தோறும் வான் வெளியில் பரந்து சென்று நீங்கள் ஆற்றிய எழுச்சி உரையும், ஆயிரக்கணக்கான டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பில் தோன்றி அளவளாவிய அணுகுமுறையும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள். அதனால் தான், 2009ம் ஆண்டு முதல் மாற்றத்தை தேடி அலைந்த மக்களின் மனதில் சரித்திர புருஷராக தோற்றம் அளித்தீர்கள். தங்களால் அனைத்தையும் மாற்றிக் காட்ட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், நடப்பது என்ன.....?

ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு உங்களுடைய செயல்பாட்டை பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதிய முகமூடியுடன் பழைய ஆட்சியே தொடருகிறதோ என்ற சந்தேகமும் சில சமயங்களில் எழுகிறது. ஊழலுக்கு எதிரான கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த நீங்கள் இந்த 100 நாட்களில் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள். ஒருவேளை அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால், அது நீதிமன்றங்களின் தலையீட்டால் நடந்தவைகளாகத்தான் இருக்கும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து 10 மாநிலங்களுக்கு மேல் கவர்னர்களை மாற்றி விட்டீர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக மேற்கு வங்க கவர்னர் நாராயணன், கேரள கவர்னர் ஷீலா தீட்சித் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. அதன்பிறகு, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டெல்லியில் 15 ஆண்டுகள் கோலோச்சி காமன்வெல்த் விளையாட்டின்போது ஊழலில் புகுந்து விளையாடிய ஷீலாவுக்கு சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு கவர்னர் பதவியை முந்தைய காங்கிரஸ் அரசு அளித்தது. இது, ஊரறிந்த ரகசியம். தற்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷீலா தீட்சித் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மற்ற ஊழல்களும் எந்த நிலையில் இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, நடுத்தர மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ரெயில் கட்டண உயர்வு, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு என தொடரும் சுமைகளால் மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தலை மீது அழுத்தும் பாறாங்கல்லின் சுமை அப்படியே இருந்தால் பழகி விடும். அதை சற்று அசைத்து விட்டு மீண்டும் வைத்தால் வலி முதலில் இருந்து தொடங்கும். அதைத்தான் தாங்கள் செய்திருக்கிறீர்கள். சுமையை இறக்கி வைக்காவிட்டால் கூட பரவாயில்லை. அதை அசைக்கும் பணியைத்தான் செய்திருக்கிறீர்கள். வருமான வரி உச்ச வரம்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. தமிழர்களை விரோதியாக பார்க்கும் ராஜபக்சே உடன் கை குலுக்குகிறீர்கள். அது, ஆசியாவில் இந்தியாவை வல்லரசாக நிரூபிக்க எடுக்கும் ராஜ தந்திரம் என்று தங்களின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படியே இருக்கட்டும். நேபாளம், ஜப்பான், அமெரிக்கா என்று தங்களுடைய உலகளாவிய பயணங்கள் தொடருகின்றன. அப்படியே, உள்ளூரில் இருக்கும் இந்தியர்களையும் சற்று கவனத்தில் கொண்டால் நல்லது.

அதே நேரத்தில், ஊழலைக் கண்டு பொறுக்க மாட்டோம் என்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா என்று மக்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டும் நாளை கடத்திக் கொண்டு இருப்பது நியாயமா? உண்மையில், தங்களின் உரை வீச்சும் பேச்சாற்றலும் இன்னமும் கூட வசீகரமாக இருக்கிறது. இது, தங்களை தயார் படுத்தும் ஹைடெக் குழுவினரின் அதிகப்படியான திறமையாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் 60 சதவீதத்துக்கு மேலான மக்கள் இன்னமும் இதுபோன்ற ஹைடெக் வாசனையை நுகராமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்களுடைய இத்தகைய போக்கை காணும்போது 40 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா நாவலில் தேசிய தலைவராக வரும் ‘ஜீவா’ என்ற பச்சை நிற ஸிந்தடிக் கதிர்வீச்சு முப்பரிமாண பிம்பம் தான் நினைவுக்கு வருகிறது. உங்களை ஆட்டுவிக்கும் ஹைடெக் குழுவினரை புரட்சி படையினர் எனப்படும் ரவி மற்றும் மனோவாக பார்க்கத் தோன்றுகிறது.

தங்களிடம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை மக்கள் வைத்திருக்கின்றனர். அது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்துப்போவதை அவர்களால் ஜீரணிக்க முடியாது. அதன் வெளிப்பாடே இடைத் தேர்தல் தோல்விகள். டெல்லியில் எம்பி தொகுதிகளை மொத்தமாக அள்ளி எடுத்து 4 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், அங்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் தயங்குகிறீர்கள் என்றால் மக்கள் எந்த அளவுக்கு தங்களுடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை இயக்கிய பெரு முதலாளிகள் தான் அந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதை அறிந்து தங்களை முன்னிறுத்தினார்களோ என்ற சந்தேகமும் சாமான்ய இந்தியனின் இதயத்தில் துளிர் விடுவதை உங்களால் காண முடியவில்லையா?

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்பது தேசப்பிதா மகாத்மாவின் கருத்து. இன்றளவும் அதுவே நிஜம். எனவே, தங்கள் மீது எத்தகைய எதிர்பார்ப்பை சாமான்ய இந்தியன் வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மோடி என்றால் சூப்பர் ஹீரோ என்ற இமேஜ் பதிந்து விட்டது. எனவே, ஊழலுக்கு எதிராக அதிரடி சாகசங்களை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அத்துடன், கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று போதித்த காந்தியடிகள் அவதரித்த மண்ணில் பிறந்த நீங்கள், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், பள்ளிக் குழந்தைகளிடம் ஆசிரியர் தினத்தன்று நீங்கள் கூறியது போல, 2024ம் ஆண்டில் தான் தங்களை வீழ்த்துவது குறித்து அரசியல் எதிரிகள் யோசிக்க அவகாசம் கிடைக்கும். தங்களுக்கு, இன்னும் முழுமையாக நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன.

= இப்படிக்கு,
சாதாரண இந்திய குடிமகன்.

Tuesday, 19 August 2014

வெயிலோடு விளையாடி .... வெயிலோடு உறவாடி .....

வெயில்.

நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. வெயிலை சுவாசித்து வெயிலை தோழனாக பாவித்து வெயிலோடு விளையாடிய அனுபவம்  நிச்சயமாக இருக்கும். ஜன்னல் வழியே நூலிழையாக வீட்டினுள் நுழைவதும் படிக்கட்டுகளில் வழிந்து செல்வதும் வயல் வெளியில் வெளிச்சம்  பாய்ச்சுவதும் வெயிலின் பன்முகங்களில் சில முகங்கள். ஆடு மாடுகளின் முதுகில் தவழும் வெயில். சாலையில் சறுக்கி செல்லும் வாகன  முகடுகளில் மின்னல் கீற்றை ஏற்படுத்தும் வெயில் என வெயிலோடு வளர்ந்த மனிதர்கள், நாம்.

ஆனால், வெயிலுக்கு பெயர் பெற்ற பாலைவன வெயில் முற்றிலும் மாறுபட்டது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கி நிற்கும்  மூர்க்கத்தனமான வெயிலையும் அதை தாங்கி நிற்கும் பாலைவனத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் காணலாம். அங்குள்ள தார்  பாலைவனத்தில்தான் கரைகளற்று ஓடும் நதியென வெயில் பரவி நிற்கிறது. திக்கு தெரியாமல் வியாபித்து நிற்கும் வெயிலை பிரதிபலிக்கும  மணற்பரப்புடன் கூடிய தார் பாலைவனம், தனி உலகம். சூரியனுக்கு மிகவும் பிடித்த பகுதி.

அதிகாலையில் கடலில் குளித்தெழும் உதயசூரியனை கண்டு மகிழ்ந்திருப்போம். பாலைவன மணலில் விழித்தெழும் சூரியனை பார்த்து  இருக்கிறீர்களா? அதை தார் பாலைவனத்தில் காணலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தார் பாலைவனம்.  அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை 15 கி.மீ. மார்ச் மாதத்தில் கூட அதிகாலை 6 மணியை தாண்டியும் இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. இருட்டு என்றால்  குறைவான வெளிச்சம் அவ்வளவு தான். அந்த குறைந்த வெளிச்சத்திலும் பாலைவன காற்றுடன் கலந்து மணல் துகள்கள் எழுந்து நின்று  வரவேற்கின்றன.



இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிற மணல் துகள்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொலைதூரத்தில் மிக  மெல்லிய புள்ளியாக தோன்றி மெதுமெதுவாக சூரியப்பந்து விரிவடைய துவங்குகிறது. அது, பாலைவன சூரியோதயம். கடலில் குளித்தெழும்  சூரியனை போலவே பாலைவன மணலில் குளித்தெழுகிறது, சூரியன். மணலில் இருந்து எழும்பிய வேகத்தில் சில மணித் துளிகளிலேயே தனது  பெரிய கால்களால் வானத்தை நோக்கி சரசரவென ஏறத் துவங்குகிறது. காலை நேர மஞ்சள் ஒளிச் சிதறல் பட்டதும் மணல் பரப்பில் புதுப் பொலிவு  கூடுகிறது. அந்த மணலை ஆவலுடன் அள்ளி எடுத்தால் காதலனை தேடிச் செல்லும் காதலியாக ஆற்றாமையுடன் வந்து சேரும் காற்று அதை  கலைத்து விடுகிறது.

வளைந்து யெளிந்து செல்லும் காற்றின் காலடித் தடத்தை பாலைவன மணலில் தெளிவாக பார்க்கலாம். காற்றின் காலடி தடங்கள் தான் பாலைவன  மணலில் ஓவியமாகவும் அலை போன்ற கோடுகளாகவும் கிடக்கின்றன. காற்றின் மூர்க்கம் அதிகமாகும்போது ஒரு மணல் குன்றையே பெயர்த்து  எடுத்து சற்று தள்ளிச் சென்று வைக்கிறது. பாலைவனத்தில் மணல் குன்றுகளை கட்டுவதும் அழிப்பதுமாக இருக்கும் காற்றின் சேட்டையை ரசித்துக்  கொண்டிருக்கும்போதே வியர்த்துக் கொட்டுகிறது.

சுறு சுறுவென வானில் ஏறிய சூரியன், சில மணி நேரத்துக்குள் 40 டிகிரி செல்சியசில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலையே குடித்து  வளர்ந்த வெப்ப பிரதேசத்து மனிதனாக இருந்தால் கூட, அந்த வெயிலை எதிர் கொள்வது மிகவும் கடினம். பாலை வனத்தில் பகல் நேரம் என்பது  சிக்னலுக்கு காத்திருக்கும் சமயத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில் போன்றது. மணல் குன்றுகளுக்கு இடையே தோன்றும் கானல் நீர் கூட அருகில்  செல்லும் வரை நீரோடை போல காட்சியளித்து மாயாஜாலம் செய்கிறது.



பாலைவனத்தில் குவிந்து கிடக்கும் மிக நுண்ணிய மணல் துகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம். மணல் துகள்களை தன்னுள் வைத்துள்ள பாலைவனம்  ஒரு புரியாத புதிர். உள்ளே தொலைதூரம் சென்று விட்டால் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து ஆகாரமின்றி அவதிப்பட நேரிடலாம். அதை  நினைத்தால், சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தில் செல்லும் காதலர்களின் நிலைமை காட்சியாக மனத் திரையில் விரிகிறது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் என இந்தியாவின் 4 மாகாணங்கள் மற்றும் பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானின் 2 மாகாணங்களில் விரிந்து  பரவி கிடக்கும். தார் பாலைவனத்தின் தொத்த பரப்பளவு 2 லட்சம் சதுர கி.மீட்டர். தார் பாலைவனத்தை ஆரவல்லி மலை சூழ்ந்திருக்கிறது. எனினும்,  ராஜஸ்தான் என்ற பெயருடன் மட்டுமே தார் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு களம் அமைத்து தருவதும் தார்  பாலைவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

= வை.ரவீந்திரன்,
    புதுச்சேரி.