Friday, November 7, 2014

ஆறில் இருந்து அறுபது .....

= வை.ரவீந்திரன்

ஒரு துறையில் 50 ஆண்டுக்கு மேல் நிலைத்து இருப்பதும் சிறந்தவராக கோலோச்சி நிற்பதும் சாதாரண விஷயம் கிடையாது. வெகுஜன ரசிப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட திரையுலகில் அதை நிகழ்த்துவது என்பது இரண்டு தலைமுறைகளின் ரசிப்புத் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அதை சரியாக உணர்ந்து உலக நாயகனாக உலா வருபவர் கமல்ஹாசன்.

தனது இளமை பருவத்தில் ‘ஏக் துஜே கேலியே’, ‘மரோ சரித்திரா’, ‘மூன்றாம் பிறை’ என கமலை பல்வேறு மொழிகளிலும் ரசித்து பார்த்து தனது காதலை வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தன்னுடைய இளமை பருவ காலத்தில் கமல் திரைப்படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

ஏவி மெய்யப்பச் செட்டியாரின் கரம் பிடித்து 6 வயதில், ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம் திரையுலகில் பிரவேசித்தவர், இந்த பரமக்குடி தமிழன். மெத்த படித்த குடும்பத்தில், பல வக்கீல்களை கொண்ட குடும்பத்தில் பிறந்த கமல், பள்ளி படிப்பை தாண்டாதவர். திரையுலக பிரபலம் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட உயர்வு எப்போது கிடைக்கும் என சிந்திக்கும் நடிகர்கள் மத்தியில் தமிழ் திரையுலகையும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்துக் கொண்டு இருப்பவர்.  

பால்யம் முடிந்து பருவம் தொடங்கிய கால கட்டத்தில் நடிப்பா?, நடனமா? என்ற மயங்கி நின்று, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர். ஆனால், காலம் அவரை பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி இழுத்து வந்தது. உண்மையில், காலம், விதி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத நாத்திகர் கமல். ஆனால், ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வழியில் நடப்பவர்.

அதனால் தான், நடிப்பையும் தாண்டி எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றிருக்கிறது. 16 வயதினிலே, அவள் அப்படித்தான்,  ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள் குணா,  மூன்றாம் பிறை, பேசும்படம், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அவரது படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமாக  அரசியலில் அங்கீகாரம் பெற நடைபெறும் முயற்சிகளை காணும்போது, தன்னை காய்த்த மரம் என அவர் நிரூபித்துக் கொண்டிருப்பது புரிகிறது.  

ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அந்த கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் கமலுக்கு உண்டு. அதனால், தான் சண்டியர் என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியபோது அந்த கதைக்கு சண்டியரை விட மிகவும் பொருத்தமான விருமாண்டி என்ற தலைப்பை அவரால் உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. உண்மையில், ‘விருமாண்டி’ என்பது தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் குல தெய்வத்தின் பெயர். சண்டியர் என்பது ஊருக்குள் அடங்காமல் திரிபவர்களை குறித்த பொதுப் பெயர். எந்த ஒரு சமுதாயத்துக்கும் உரித்தான பெயர் அல்ல.

திரையுலகை தாண்டி இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு நல்ல பரிச்சயம் அனுபவம் இருந்தாலும் திரையுலகில் மட்டுமே அவரது முழுமையான அர்ப்பணிப்பு உள்ளது. இந்த உலகில் உள்ள வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் கமலின் திரை தொழில் மீதான பற்றுதலானது நல்ல படிப்பினை. ஒவ்வொரு தனி நபரும் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் மேலும் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதை கமலிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். அவரது, சக ஊழியர்களான திரை உலகினருக்கும் இது பொருந்தும்.

சினிமா என்பது பலருக்கும் பொழுதுபோக்கு. மிகச் சிலருக்கோ கலைப் படைப்பு. ஆனால், கலைப்படங்களை கொண்டாடும் சமுதாயத்தில் நாம் இல்லை. எனினும்,  பொழுதுபோக்கு படத்தையே கலையாக மாற்றும் வித்தையை கற்றவர் கமல். அதுபோன்ற முயற்சிகளில் கையை சுட்டுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அதை தொடருகிறார்.

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா என ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் அவரால் முடியும். ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகவும் அவரால் முடியும். இந்தியன் தாத்தா, தசாவதாரம் பாட்டி என முற்றிலுமாக தன்னை மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். அனைவரையும் போல, சாமான்ய ரசிகர்களை திருப்தி படுத்தும் மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் மகா நடிகர்.

அதனால் தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட, ‘ஏன் இன்னும் ஆஸ்கர் விருதை கமல் வாங்க முடியவில்லை’ என்று கேள்வி எழுப்புகின்றனர். கமல்ஹாசனால் மட்டுமே அத்தகைய விருதை பெற்றுத் தர முடியும் என அவர்களும் நம்புவதன் வெளிப்பாடே அது. அனைவரின் நம்பிக்கையை பெற்று ஆறில் தொடங்கி அறுபதை கடந்து பயணிக்கும் கமலின் கலைப் பயணம் தொடரட்டும்.

ஹாட்ஸ் ஆப் கமல்....
Post a Comment