Monday, November 3, 2014

தத்தளிக்குமா? தப்பிப் பிழைக்குமா? புதிய தமாகா


தமிழக அரசியல் வானில் கூடுதலாக ஒரு கட்சி உதிக்க தொடங்கி விட்டது. ஏற்கனவே, 1996ம் ஆண்டு உதித்து 6 ஆண்டுகளில் உதிர்ந்து போன கட்சி தான். தற்போது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அப்போது, அந்த கட்சி உதயமான தருணத்தில் தமிழக மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குளத்தில் குளியல், தமிழகமெங்கும் இடங்களை வளைத்து போடுவது, ஊழல் என அதிமுக மீது மக்களுக்கு மிக அதிக அளவிலான வெறுப்பு நிலவியது. அதே நேரத்தில், திமுக மீதும் அதிக அளவில் பாசம் ஏற்பட்டு விடவில்லை. எம்ஜிஆர் காலம் தொட்டு நீடித்த வெறுப்பு அப்போதும் அடங்கவில்லை. அந்த வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலேயே 1989ம் ஆண்டு அமைந்த திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியும் இருந்தது. இப்படி இரண்டு கழகங்கள் மீதும் தமிழக மக்கள் வெறுப்பில் இருந்த சமயத்தில் தான் 1996ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. அப்போது, பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். காங்கிரஸ் மேலிட முடிவை எதிர்த்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற ஒற்றை அஜன்டாவுடன் உதித்தது தான் தமிழ் மாநில காங்கிரஸ். ஜி.கே.மூப்பனார் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் மற்றும் முக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அணி திரண்டனர். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனையும் தமாகா கைப்பற்றியது. அதிமுக கூட்டணியை எதிர்த்ததன் மூலமாக காங்கிரஸ் பாராம்பரிய மானம் மற்றும் கவுரவத்தையே அந்த கட்சி காப்பாற்றி விட்டது போன்ற பிரச்சாரமும் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு எதிரான மன நிலையில் இருந்த ரஜினிகாந்தும் மூப்பனாருக்கு ஆதரவு கரம் நீட்டினார். நடிகர் சரத்குமாரும் வாலன்டியராக பிரசாரம் செய்ய முன்வந்தார். இவ்வளவு சாதகமான சூழ்நிலை கனிந்தும் கூட, மூப்பனாரால் தமிழக அரசியலில் ஒளிர முடியாமல் போய்விட்டது.

‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்த மூப்பனாருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது, கருணாநிதியின் ராஜதந்திரம். அந்த சமயத்தில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அதனால், மூப்பனாரை தேசிய அரங்குக்கு தள்ளி விடும் வகையில் கருணாநிதியின் அரசியல் சதுரங்க மூவ் அனைத்தும் அமைந்தன. தேசிய அரசியல் என்பது மிகப்பெரிய கடலில் சுறா மீன்களுக்கு இடையே ஜீவிப்பது. இது கருணாநிதிக்கு தெரியும். ஆனால், தேசிய அரசியலில் இருந்த மூப்பனாருக்கு தெரியவில்லை. மாநில கட்சி மூலமாக தேசிய அரசியல் செய்யும் அனுபவத்தின் ஆரம்ப கட்டத்தை அப்போது தான் அவர் தொடங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் சரிபாதியை மூப்பனாருடைய தமாகாவுக்கு ஒதுக்கி விட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதியை எடுத்துக் கொண்டது, திமுக. இந்த பார்முலாப்படி திமுக=தமாகா கூட்டணி தோன்றியது. உண்மையில், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருந்தாலே ரஜினி ஆதரவோடு பெரிய வெற்றியை தமாகா பெற்றிருக்கும் அல்லது தமிழகத்தில் புதிய ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு பலத்தையாவது சட்டசபையில் தமாகா பெற்றிருக்கும். அதை கருணாநிதி அறிவார். அதனால் தான், சட்டப்பேரவை தொகுதிகளில் தமாகாவுக்கு குறைவாக ஒதுக்கினார். பாராளுமன்ற தொகுதிகளில் தாராளம் காட்டினார். இதை மூப்பனார் புரிந்து கொள்ளாதது அவரது துரதிர்ஷ்டம்

கட்சி ஆரம்பித்து சில நாட்களில் பெற்ற சைக்கிள் சின்னம், ரஜினிகாந்த் ஆதரவு, தென்மாவட்டங்களில் நடிகர் சரத்குமார், நெப்போலியன் போன்றவர்களின் இடைவிடாத தீவிர பிரசாரம், ‘றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமல சைக்கிள்’ என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் ஆகியவை இணைந்து கூட்டணியை வெற்றி முகட்டில் ஏற்றியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அறிமுகமில்லா வேட்பாளரிடம் பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். தமிழகமே சுத்தமாகி விட்டது போன்ற உணர்வு அப்போது நிலவியது. தமிழக ஆட்சியை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது, தமிழ் மாநில காங்கிரஸ்.

அதே நேரத்தில், மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்தது. இந்த சமயத்தில் தான், தேவகவுடா பிரதமரான அதிசயமும் நடைபெற்றது. ஏற்கனவே, 43 எம்பிக்களுடன் சந்திரசேகர் பிரதமரான அதிசயமும் 1990ல் இந்தியாவில் நடந்திருந்தது. அந்த வரிசையில் திமுக எம்பிக்களையும் சேர்த்தால் 40 எம்பிக்கள் ஆதரவுடனும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடனும் பிரதமர் பதவியில் மூப்பனார் அமருவதற்கான சூழ்நிலை கனிந்திருந்தது. தமிழகத்தில் ஏமாந்ததை தேசிய அளவில் அவர் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டது. தமிழன், பிரதமராகும் வாய்ப்பு கருகிப்போனது. அதற்கான காரணம், ஊரறிந்த ரகசியம். இதனால், இந்த கூட்டணி 3 ஆண்டுகள் வரையே தாக்குப் பிடித்தது. 1999ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு திமுக தாவியதால் கூட்டணி, ‘பணால்’ ஆனது.

1996ல் தானாக கனிந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ள மூப்பனார் தவறியதன் விளைவுகள், 1999 முதல் தொடங்கின. இறுதியாக, எந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி தமாகா கட்சியை 1996ல் தொடங்கினாரோ அதே அதிமுகவுடன் 2001 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ் மாநில காங்கிரஸ் கைப்பற்றியது. சில மாதங்களில் மூப்பனார் மறைந்தார். அதன்பிறகு, அந்த கட்சியின் தலைமை பதவிக்கு வந்த ஜி,கே.வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடனே தமாகாவை இணைத்து விட்டார். இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். புதிய கட்சியை தொடங்குகிறார்.

ஆனால், அப்போது தமாகாவில் இருந்தவர்கள் இப்போதும் அவருடன் இருக்கிறார்களா? 1996ல் வாய்ப்பை தவறவிட்ட வாய்ப்பை புதிதாக தொடங்கும் தமாகாவால் பெற முடியுமா?  இப்போது பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து நல்ல ஓட்டு வங்கியுடன் வலிமையாக உள்ளன. இந்த சூழ்நிலையில்,  புதிய கட்சியை கொண்டு ஜி.கே.வாசனால் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே இலங்கையில் இன அழிப்பு சமயத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவை இன்னும் தமிழக மக்கள் மன்னிக்க தயாராக இல்லை. அந்த அரசில் தான் வாசனும் அமைச்சராக இருந்தார். இதுபோல, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது கூறப்படும் ஊழல்களில் வாசனுடைய பதில் என்னவாக இருக்கும்? காங்கிரசில் இருந்து வெளியேறும் தமாகாவுக்கும் அந்த ஊழல் குறித்து பொறுப்பு உண்டா...? இல்லையா...?

இது மட்டுமல்ல, கட்சியை காங்கிரசில் இணைத்த பிறகு இரண்டு முறை ராஜ்யசபா எம்பியாக (12 ஆண்டுகள்)வும் மத்திய அமைச்சராகவும் வாசன் இருந்துள்ளார். எனவே, மத்தியில் அதிகாரத்தை காங்கிரஸ் இழந்து விட்டதால் புதிதாக மீண்டும் தமாகா உருவாகிறதா? என்ற சந்தேகமும் சாதாரண மக்கள் மனதில் தோன்றுகிறது. ஏற்கனவே, 1996 முதல் 2004 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத சமயத்தில் தான் தமாகா என்ற கட்சி இயங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கட்சி தனித்து செயல்படுமா அல்லது தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளைப் போல கிடைத்த இடங்களை பெற்றுக் கொண்டு திராவிட கட்சிகளின் கீழ் அடங்கிப் போய் விடுமா ....? இந்த கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் அளிக்கும் பதில்களை பொறுத்தே தமிழக அரசியல் ஆழியில் தமாகா தத்தளிக்குமா? அல்லது தப்பிப் பிழைக்குமா? என்று தெரியவரும்.

= வை.ரவீந்திரன் 
Post a Comment