Monday, November 10, 2014

வதந்தியால் வீழ்ந்த துய்ப்ளக்ஸ்


 = வை.ரவீந்திரன்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றிய வரலாறு எழுதும்போது ராபர்ட் கிளைவ் பெயரை எழுதாமல் நிறைவு பெறாது. அதுபோல, பிரெஞ்சு ஆட்சி பற்றி எழுதினால் ஒருவரை தவிர்க்கவே முடியாது. அவர், துய்ப்ளக்ஸ். இந்தியாவுக்குள் இருந்த பிரெஞ்சு காலனி பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். இந்தியாவுக்குள் வணிக நோக்கில் நுழைந்த மேலை நாட்டவர்களில் பிரெஞ்சியரும் உண்டு. அதற்காக, ‘பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி’ என்ற வணிக நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதில் பணி புரிவதற்காக 1731ல் தனது 35வது வயதில் இந்தியாவுக்கு வந்தார் துய்ப்ளக்ஸ்.

தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்திர நாகூர் என்ற மாநகரம், அப்போது பிரெஞ்சியர் வசம் இருந்தது. அங்கு தான் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அதன் இயக்குநராக 10 ஆண்டு பணிபுரிந்த துய்ப்ளக்ஸ் திறமையை பார்த்து இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக பிரான்ஸ் மன்னர் நியமித்தார். இதையடுத்து, காலனி ஆதிக்க தலைநகரான புதுச்சேரியில் 1942ம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றார்.

துய்ப்ளக்ஸ் பதவியேற்றபோது தற்போதைய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் செயின்ட் லூயி என்ற பிரமாண்டமான கோட்டை இருந்தது. அதுவரை கவர்னர் ஜெனரலின் ஆளுகை அலுவலகமாகவும் தங்கும் இடமாகவும் அந்த கோட்டை இருந்தது. துய்ப்ளக்ஸ் வந்த பிறகு, கவர்னருக்கென தனி மாளிகை உருவாக்கினார். அது தான், இன்றளவும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் மாளிகையாக செயல்படும் ராஜ்நிவாஸ். துய்ப்ளக்ஸ் காலத்துக்கு பிறகு சென்னையில் இருந்து வந்த ஆங்கிலேய படைகளால் அந்த கோட்டை சின்னா பின்னமாக்கப்பட்ட போதிலும், ஆளுநர் மாளிகை மட்டும் மீண்டும் எழுந்தது.

இந்தியா முழுவதையும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட துய்ப்ளக்ஸ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயருடன் அடிக்கடி போர் நேரிட்டது. அதில் முக்கியமான போராக சென்னை போரை கூறலாம். தளபதி மாகே லாபுர்தனே தலைமையில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பெரிய கடற்படை ஒன்று 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று சென்னையை கைப்பற்றியது.  அப்போது பிரெஞ்சு படையிடம் அடி பணிந்த ஆங்கில படையின் தளபதியாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இது மட்டுமல்ல மேற்கில் செஞ்சி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, தக்காணம் என துய்ப்ளக்சின் வெற்றியால் பிரெஞ்சு ராஜ்ஜியம் மேற்கு நோக்கி விரிவடைய தொடங்கியது.

ஆனால், திருச்சி, ஸ்ரீரங்கம் என தெற்கு நோக்கி சென்ற அவருடைய படைகள் தோல்வியை ருசிக்க தொடங்கின. அதற்கு காரணமாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இதற்கிடையே, துய்ப்ளக்ஸ் அடைந்த வெற்றிகள் குறித்த செய்திகளை விட தோல்வி பற்றிய செய்திகளும் அது தொடர்பான வதந்திகளும் மிக வேகமாக பிரான்சுக்கு இறக்கை கட்டி பறந்தன. இதனால், அவரை பதவியில் இருந்து பிரான்ஸ் அரசு 1754ம் ஆண்டு நீக்கியது. அவரையும் நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. இந்தியாவில் துய்ப்ளக்சின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஆதிக்கப் பகுதிகளில் தனது புகழை நிலைநாட்டி விட்டு தனது 60வது வயதில் நாடு திரும்பினார்.

துய்ப்ளக்ஸ் ஆட்சி காலம் முழுவதும் அவருக்கு துபாசாகவும் (மொழிபெயர்ப்பாளர்) வர்த்தக ஆலோசகராகவும் இருந்தவர், அனந்தரங்க பிள்ளை(1709-1761). அவர், 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகாலம் எழுதி வைத்த நாட்குறிப்புகள் தான் இன்றளவும் புதுச்சேரியின் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவுகின்றன. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலுக்கு என தனியாக பிரத்தியேக ஆடையை வடிவமைத்ததோடு பிரெஞ்சிந்திய ராணுவ சிப்பாய்களுக்கும் சீருடை அறிமுகம் செய்தவர், துய்ப்ளக்ஸ்.  இந்தியாவில் கைம்பெண் திருமணம் என்ற வார்த்தையே கேள்விப்படாத காலத்தில் கைம்பெண் திருமணத்தை அறிமுகம் செய்தவரும் துய்ப்ளக்ஸ் தான். தனது நண்பன் ஆல்பர்ட் இறந்த பிறகு ஆதரவற்று நின்ற அவரது மனைவி ழான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சியை விரிவு படுத்தும் முயற்சிகள் தொடங்கி பல்வேறு வழிகளிலும் புகழ் பரப்பி நின்ற துய்ப்ளக்சின் இறுதி காலம் மிகக் கொடுமையானது. இந்தியாவில் சிம்மமாக உலவிய அவர், பிரான்ஸ் திரும்பியதும் தேச துரோக குற்றத்தை எதிர்நோக்கினார். நீதிமன்ற விசாரணையில், அவரது சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அவருக்கு முன்னதாகவே பிரான்சுக்கு திரும்பி இருந்த வதந்திகளே வெற்றி பெற்றன. அவரால், தீர்ப்பை மட்டுமே தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடிந்தது. அதற்குள், விதி முந்திக் கொண்டது. இந்தியாவில் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவடைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை  பின்னாளில் தான் பிரான்ஸ் அரசு அறிந்தது. 

ஆனால், தனது மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய குறிப்பில், “ஆசியாவில் எனது நாட்டை வளப்படுத்துவதற்காக எனது இளமை, செல்வம், வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்தேன். ஆனால், எனது பணிகள் அனைத்துமே வெறும் கட்டுக் கதைகளாக இங்கு (பிரான்ஸ்) கருதப்படுகின்றன. மனித இனத்திலேயே மிக மோசமானவனாக நடத்தப்படுகிறேன். எனது சிறிதளவு சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் கொடிய வறுமையில் வாடுகிறேன்” என குமுறி இருக்கிறார், துய்ப்ளக்ஸ். இத்தகைய மனக் குமுறலுடனேயே 1763ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். இன்றைய காலத்தை போல கணினி, மெயில் என தொழில்நுட்ப வசதிகள் பெருகாத சூழ்நிலையில் மிக வேகமாக பிரான்சுக்கு பறந்து சென்ற வதந்தி, துய்ப்ளக்சின் புகழை சிதைத்ததோடு அவரது உயிரையும் பறித்தது.

இந்தியாவில் ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் துய்ப்ளக்சின் பெருமைகளை பிரெஞ்சு கலாச்சாரத்தை கைவிடாமல் உள்ள புதுச்சேரி மாநிலம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அவரது சிலையை காணலாம். வாழும்போது அவதிப்பட்டு, வாழ்க்கைக்கு பிறகு கொண்டாடப்படுபவர்களில் துய்ப்ளக்சும் ஒருவர்.


(நவ.10  - 1763 துய்ப்ளக்ஸ் நினைவு தினம்)

= வை.ரவீந்திரன்  
(புதுவையின் பழமை - நூலாசிரியர்)
Post a Comment