Wednesday 20 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -11

மூத்த தலைவர்களுடனான கருத்து மோதல்களுடனே 1967 தேர்தலை சந்தித்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், பல மாநிலங்களில் சரிவை சந்தித்திருந்தது. தேர்தலுக்கு பிறகு துணை பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்ற போதும் இந்திராவின் போக்கில் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். விளைவு. 1969 நவம்பரில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார் இந்திரா. பிளவை நோக்கி காங்கிரஸ் பயணம் செய்தது.

காமராஜர், மொரார்ஜி, சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்களின் காங்கிரஸ் 'ஸ்தாபன காங்கிரஸ்' அல்லது சிண்டிகேட் என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் இண்டிகேட் அல்லது காங்கிரஸ் (ஆர்)என அழைக்கப்பட்டது. கட்சியின் உயர்மட்ட கமிட்டியில் இருந்த 705 உறுப்பினர்களில் 446 பேர் இந்திராவுக்கு ஆதரவளித்தனர்.



இதுபோல எம்பிக்களும் அதிக அளவில் இந்திராவின் பக்கம் இருந்தனர். அதே நேரத்தில் பீகார், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்தாபன காங்கிரசுக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. அதனால், அந்த மாநிலங்களில் எல்லாம் சிண்டிகேட் ஆட்சி அமைந்தது. அந்த சமயத்தில் கட்சி தாவல் தடை சட்டம், தகுதி இழப்பு எல்லாம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜர், மொரார்ஜி ஆகியோரின் காங்கிரஸ் பழைய காங்கிரசாகவே நீடிக்க, பிரிந்து வந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் புதிய கட்சியானது. அதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இந்திராவின் இண்டிகேட் காங்கிரசுக்கு  பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது.



இது போன்ற ஆளுங்கட்சியின் அரசியல் குழப்பம், மாற்றங்களுக்கிடையே இந்தியாவின் ஐந்தாவது பொதுத் தேர்தல் நெருங்கியது. 1971 மார்ச் மாதம் நடந்த அந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி முன்வைத்த தேர்தல் கோஷம் 'வறுமை ஒழிப்பு'. 

1971 தேர்தலில் இந்திராவின் காங்கிரசோடு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தன. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுடன் சோசலிஸ்ட் கட்சி, ஜனசங்கம் (பாஜக தாய் கட்சி) போன்ற கட்சிகள் கூட்டு சேர்ந்தன. இரண்டுபட்ட காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக மோதிக் கொண்ட 1971ன் தேர்தலில் இந்திராவின்  ஆளுங் காங்கிரஸ் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன். மிக மூத்த பழைய காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகளோடு இந்தியாவின் ஐந்தாவது தேர்தல் பத்தே நாட்களில் நடந்து முடிந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: