Friday 15 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -10


1967 தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதோடு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மாநில மற்றும் தேசிய அளவிலான மாற்று கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்தது. எமர்ஜென்சியை இந்திரா கொண்டு வந்ததும் 1977ல் பல கட்சிகள் இணைந்த ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்ததும் இதன் நீட்சியே. இந்த தருணத்தில் தற்போதைய இந்தியாவின் பிரதான கட்சியான பாஜக வளர்ச்சி பற்றி பார்க்கலாம்.



பாஜகவின் தாய்க் கட்சியின் பெயர் அகில பாரத ஜனசங்கம். இதன் முதல் தலைவரான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, 1947ல் சுதந்திரம் பெற்றதும் அமைக்கப்பட்ட தேசிய அரசின் தொழில்துறை அமைச்சர். நான் ஏற்கனவே கூறியபடி, இந்தியா குடியரசு நாடாக மாறி, 1951ல் முதலாவது தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியதும், தனிக்கட்சிகளை ஆரம்பித்த அம்பேத்கர் போன்ற தலைவர்களில் இவரும் ஒருவர்.

1951 தேர்தலில் 3 சதவீத ஓட்டுகளுடன் 3 இடங்களை ஜனசங்கம் பிடித்தது. அதன்பிறகு 1957ல் 4, 1962ல் 14, 1967ல் 35 என வளர்ச்சியடைந்த ஜனசங்கத்தின் வாக்கு வங்கியும் 1967 தேர்தலில் 10 சதவீதமாக அதிகரித்தது. அந்த தேர்தலில் உ.பி, ம.பி, அரியானா மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஜனசங்கம் பதிவு செய்தது. அப்போது ஜனசங்கத்தின் சின்னம் பூஜை விளக்கு.


பின்னர், 1971 தேர்தலில் 22 இடங்களை பிடித்திருந்த ஜனசங்கம் கட்சியின் தலைவர்கள் இந்திராவின் எமர்ஜென்சி கொடுமைகளையும் அனுபவித்தனர். இதன் விளைவாக இந்திராவுக்கு எதிராக பல கட்சிகளின் கூட்டு அமைப்பாக ஜனதா கட்சி உருவானது. அதில் காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, லோக்தளம் போன்றவை ஐக்கியமாகின. அவை போலவே,  ஜனசங்கமும் கலைக்கப்பட்டு ஜனதாவோடு இணைந்தது.

முக்கியமான இந்த காலகட்டங்களில் ஜனசங்கம் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் வாஜ்பாய் (1968 - 1972) மற்றும் அத்வானி (1973 - 1977). 1977 தேர்தலில் ஜனசங்கம் ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டு அமைப்பான ஜனதா கட்சி 298 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்க அவரது அமைச்சரவையில் மத்திய வெளியுறவு அமைச்சராக வாஜ்பாயும், மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக அத்வானியும் பொறுப்பேற்றனர்.

அதன்பிறகு, சரண்சிங்கால் ஜனதா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் இந்திராவின் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கூட்டு கலவையான ஜனதா கட்சி உடைந்தது. அதில் இருந்த பழைய ஜனசங்கம் கட்சியின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியது தான் இன்றைய பாஜக. 

1980 தேர்தலுக்கு பிறகு உருவான இந்த கட்சி, 1984ல் இந்திரா கொலையான 2 மாதத்தில் நடந்த தேர்தலில் 2 இடங்களை பாஜக பிடித்தது. வாக்கு சதவீதம் 8. பின்னர், 1989 தேர்தலில் 85 இடங்களை பிடித்த பாஜக, அப்போதைய விபி சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. மண்டல் கமிஷன் பிரச்சினையில் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. 



1991 தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோதும் கூட 20% வாக்குகளுடன் 120 இடங்களை பிடித்து எதிர்க்கட்சியாக வளர்ந்தது பாஜக. பின்னர், 1996ல் 161 இடங்களுடன் 13 நாட்கள் ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு 1998ல் 182, 1999ல் 182 என வெற்றி பெற்று ஏழு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது பாஜக. அப்போது அதன் வாக்கு சதவீதம் 25%.

2004 மற்றும் 2009 தேர்தல்களில் முறையே 138, 116 இடங்களுடன் 20% அளவுக்கு வாக்குவங்கி குறைந்த நிலையில் மோடியின் வருகைக்கு பின், 2014 தேர்தலில் 32% வாக்குகளுடன் 282 இடங்களை பிடித்து 1984க்கு பிறகு முதன் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 

காங்கிரஸ் மட்டுமே கோலோச்சிய இந்தியாவில் மிகப்பெரிய மாற்றுக் கட்சியாக ஜனசங்கம் டூ பாஜக வளர்ந்து நிற்கிறது. இதன் அடுத்த பரிமாணம் என்ன...? 

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: