Monday 13 July 2020

கொரானா (கொடூர) காலம்...

 1997 பிப்ரவரி. 

சென்னையில் முதன் முதலில் காலடி வைத்தது, அப்போதுதான். இன்று அளவுக்கு அன்றைய சென்னை கிடையாது. போக்குவரத்து நெரிசல், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமை மாதிரியான விஷயங்கள் எல்லாம் இல்லை. அண்ணா சாலையே மதிய நேர வெயிலில் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும்.

கண்ணெதிரிலேயே ஆனால் கண்ணுக்கு புலப்படாமல் சென்னையும் அதன் போக்குவரத்தும் வளர்ந்தது. நெரிசலில் பிதுங்கி பாரிமுனையில் இருந்து கோயம்பேடு ஓட்டம் பிடித்தன, வெளியூர் பேருந்துகள். வட சென்னையில் மின்ட் தொடங்கி மேம்பாலங்களின் ஆதிக்கம் ஒருபுறம். பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்என மறுபுறம். ஷேர் ஆட்டோ, டாக்சிகள் என ஒரு பக்கம். இந்த பெருந்தீனிக்கு முன் மாநகரின் போக்குவரத்து பசி அடங்கியதே இல்லை.

காலை நேரத்தில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இறங்கினால் கூட்ட நெரிசலே, தூக்கி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விட்டு விடும். 

இதை எல்லாம் 2020 பார்க்காமலேயே போய் விடுமோ?

நான்கு மாதங்களாகி விட்டது. சும்மா இருப்பது எத்தனை கஷ்டம்? அதை விட அந்த சும்மாவுக்கு பின்னால் பின் விளைவுகளின் கோரம்... பயங்கரம்... ஒவ்வொருவருக்கும் ஒரு வித அனுபவம். 

முதல் சில வாரங்களாக அலுவலகத்துக்கு கார் பயணம். பின் சில வாரங்களாக பைக் பயணம். தினமும் சராசரியாக இரு வழி பயணம் சுமார் 60 முதல் 65 கிலோ மீட்டர் இருக்கும். செவி வழியாக... செய்திகள் வழியாக...  வந்து சேரும் கொரோனா கால கொடுமைகள் ஒரு புறம் இருக்க... கண் வழி காட்சிகள் பல...

அவ்வப்போது தளர்வுகள் என அறிவித்தாலும் அதிகபட்சம் இரவு எட்டுக்குள் அடங்கி விடுகிறது சென்னை. எட்டுக்குள் அடங்கும் நகரமா இது?  30 கிலோ மீட்டர் தூர பயணத்தில் ஒரு மனிதரை கூட வழியில் காண முடியாத அத்துவான இரவுகளையும் பார்த்ததுண்டு.

காலை, மாலை, இரவு இப்படி எந்த வேளையில் வெளியில்  செல்லும்போதும் ஏதோ ஒன்றை தனக்குள்ளேயே முனகியபடி புழுங்கிக் கிடக்கிறது, நீண்டு வளைந்து கருத்துக் கிடக்கும்  சென்னையின் கொரானா ஊரடங்கு கார தார்ச் சாலைகள்.


No comments: