Friday 31 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...6

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமண மகால்கள் காலம் துவங்கும் முன்பு, மணமாகி புகுந்த வீட்டுக்கு புது மணப்பெண் புறப்படும்போது ஒரு பாடல் கட்டாயமாக ஒலிக்கும். அது, "புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே, தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள சொல்லுறேன் கேளே முன்னே". அந்த குரலுக்குச் சொந்தக்காரர் திருச்சி லோகநாதன்.



ஊமைப்படங்களில் இருந்து பேசும் படமாக சினிமா உலகம் மாறிய புதிதில் எட்டு கட்டையில் பாடவும், சுருதி சுத்தமாக வசனம் பேசவும் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். இரவல் குரலுக்கு நிச்சயமாக சினிமாவில் இடம் கிடையாது. அதில் இருந்து டப்பிங் நுட்பத்துக்கு சினிமா மாறியபோது முதலில் ஒலித்த குரல் இவருடையது. 

1947ல் வெளியான ராஜகுமாரி படத்தில் எம்.என்.நம்பியாருக்கு குரல் கொடுத்திருந்தார், திருச்சி லோகநாதன். அதுதான் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி குரல். அதன்பிறகு, 1965 வரையிலும் சுமார் 20 ஆண்டுகளில் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் பலரின் பாடல்களுக்கு பாடி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் பாடல்களை பாடியிருக்கும்  திருச்சி லோகநாதனின் ஒவ்வொரு பாடலும் தனி ரகம். மந்திரி குமாரி (1950) படத்தில் வில்லன் நடராஜனுக்காக இவர் பாடிய "வாராய் நீ வாராய் புலி என்னை தொடர்ந்தே புள்ளி மான் நீயே வாராய்", "உலவும் தென்றல் காற்றினிலே" பாடல்கள் கிளாசிக்கல். 

டவுண் பஸ் படத்தில் "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் இதுதானா...", தை பிறந்தார் வழி பிறக்கும் படத்தில் "ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே..." வண்ணக்கிளி படத்தில் "அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்..இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கிற வாழ்வே இனிக்கும்..." பாடல்கள் எல்லாம் சோக ரகங்கள் என்றால்

ஆரவல்லி படத்தின் "சின்னக் குட்டி நாத்தனா, சில்லறைய மாத்தினா..." "ஏபிசிடி படிக்கிறேன், ஈஎப்ஜிஎச் எழுதுறேன்...", இரும்புத்திரை படத்தின் "கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல, என் காசு போன இடம் தெரியல..." என இவரது ஜாலி பாடல்கள் தனி ரகம்.

எவர்கிரீன் பாடலான "கல்யாண சமையல் சாதம், காய்கனிகளும் பிரமாதம், அந்த கவுரவர் பிரசாதம், இதுவே எனக்கு போதும்..." என அசாத்திய சிரிப்புடன் கடோத்கஜன் அரக்கன் போலவே பாடும் பாடல் இன்றைய தலைமுறையை கூட நின்று கேட்க வைக்கும்.

சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் படத்தில், "வெள்ளிப் பனி மலை மீதுலவுவோம், அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்..." கர்ணன் படத்தில் "நாணி சிவந்தன மாதரார் கண்கள்..." என அவரது குரல் ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு விதமாக ஜாலம் காட்டும். 

1950களில் பிரபல பின்னணி பாடகராக இருந்த திருச்சி லோகநாதன் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் தங்கம் விலை சவரனுக்கு 15 ரூபாய் என்றால் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சம்பள விஷயத்திலும் அவர் கறார் ரகம். 

1954ல் வெளியான சிவாஜியின் தூக்கு தூக்கி படத்தில் எட்டு பாடல்களுக்கு நான்காயிரம் கேட்டபோது தயாரிப்பாளர்கள் பேரம் பேசியதால், "மதுரையில் இருந்து ஒருத்தர் பாட வந்திருக்கிறார் அவரை பாடச் சொல்லுங்கள்" என கூறி விட்டு போய் விட்டாராம். அந்த மதுரைக்காரர் தான் டிஎம் சவுந்தரராஜன். 

எதை மனதில் வைத்து திருச்சி லோகநாதன் சொன்னாேரோ தெரியவில்லை. மந்திரி குமாரி (1950) படத்திலேயே "அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் வைத்தே" என்ற பாடலை பாடிய போதிலும் அதிக அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த டிஎம்எஸ்சுக்கு தூக்கு தூக்கி ஒரே படத்தில் எட்டு பாடல்கள் கிடைத்தது. அந்த படம் அவரை தூக்கி விட்டதால், அதன் பிறகு டிஎம்எஸ்சுக்கு ஏறுமுகம் தான்.

அதே நேரத்தில், 1960களுக்கு பின் முழுக்க முழுக்க பின்னணி பாடல்களே கோலோச்ச துவங்கியதோடு நடிகர்களின் குரலுடன் பாடலின் குரலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை கொண்ட ரசிகர்களும் அதிகரித்தனர். தனித்துவமாக ஒலிக்கும் திருச்சி லோகநாதனின் குரல் நடிகர்களின் குரலுக்கு ஒத்துப்போகாத நிலையில் 1965ல் அவரது இசை பயணம் முடிவுக்கு வந்தது.

தமிழின் முதல் நகைச்சுவை ஜோடியான காளி என்.ரத்னம் - சி.டி. ராஜகாந்தம் தம்பதியின் மருமகன்தான் திருச்சி லோகநாதன். இவரது வாரிசுகளும் பின்னணி பாடகர்கள் தான். 

நிழல்கள் படத்தின் "பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண் பாவாய்...", மெல்லப் பேசுங்கள் (1983) படத்தின் "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு, வெண்பஞ்சு மேகமே கோலம் போடு...", கோழி கூவுது "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே..." என 1980களில் பின்னணி பாடிய தீபன் சக்கரவர்த்தி, 

கமல் நடித்த நாயகன் படத்தில் "அந்தி மழை மேகம்" முதலாளியம்மா படத்தில் "ஆத்தோரம் ஆலமரம்" உள்ளிட்ட பாடல்களை பாடிய டிஎல் மகாராஜன் இருவரும் திருச்சி லோகநாதனின் இசை வாரிசுகளே...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: