மாயி படத்தில் கோக்கு மாக்கு பண்ணி கோவை சரளாவுக்கும் வடிவேலுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் அந்த தாத்தாவை எளிதில் மறக்க முடியாது. உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கார்த்திக் தாத்தாவாக கவுண்டமணியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியும் சாதாரண ரகம் கிடையாது. அந்த தாத்தா காக்கா ராதாகிருஷ்ணன்.
அவரது திரையுலக பிரவேசம் 70 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆறேழு வயதிலேயே நாடகம் நடிக்கத் தொடங்கி, நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழு, என்எஸ் கிருஷ்ணன் நாடகக் குழு போன்றவற்றில் நடித்துக் கொண்டிருந்தார். ராதாகிருஷ்ணனின்முதல் திரைப்படம் 1949ல் வெளியான மங்கையர்க்கரசி. டேய் வேலை வேணும்னா காக்கா பிடிக்க தெரியணும்டான்னு அம்மா சொன்னதற்காக அப்பாவியாய் ஒரு காக்காவை மரத்தில் ஏறி பிடித்துக் கொண்டு வேலை கேட்க செல்லும் வேடம். அதில் இருந்து ராதாகிருஷ்ணன் என்ற பெயருக்கு முன்னால் "காக்கா" ஒட்டிக் கொண்டது.
மங்கையர்க்கரசிக்கு பிறகு, அண்ணா வசனத்தில் நல்ல தம்பி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, கருணாநிதி வசனத்தில் மனோகரா, எம்ஜிஆருடன் தாய்க்குப்பின் தாரம் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார், காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இவரது நெருங்கிய நண்பர், சினிமாவுக்கு முன்பே. சிவாஜியை நாடகக் குழுவில் அறிமுகம் செய்து வைத்தவரே இவர்தான்.
கண்ணடிப்பது போல ஒரு பக்கம் சுருங்கி இருக்கும் கண், இவரது ஸ்பெஷாலிட்டி. தமிழ், தெலுங்கு என 500க்கும் மேல் படங்களில் நடித்திருக்கும் காக்கா ராதாகிருஷ்ணன், 1962 வரை சுமார் 15 ஆண்டுகாலம் தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர்.
அண்ணா, கருணாநிதி இருவரின் வசனத்திலும் நடித்திருக்கும் இவரது படங்களில் உத்தம புத்திரன், ஆரவல்லி, வன சுந்தரி, மனோகரா, தாய்க்குப்பின் தாரம் போன்றவை பெயர் சொல்பவை. மனோகராவில் சிவாஜியின் தம்பி இவர்தான். மாலையிட்ட மங்கை (1958) படத்தில் இவரது ஜோடி மனோரமா. அதாவது ஆச்சி மனோரமாவின் முதல் திரை நாயகன் காக்கா ராதாகிருஷ்ணன்.
நடுவில் சுமார் கால் நூற்றாண்டு காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர். நடிகர் சங்கத் தேர்தலில் எம்ஜிஆரை எதிர்த்ததால் இந்த நிலைமை என்றும் கூறுவது உண்டு. இந்த அஞ்ஞான காலத்தில் தபால்காரன் தங்கை (1970) குறிப்பிடத்தக்கது.
குணா படத்தின் மூலம் வைல்ட் கார்டு ரவுண்ட் என்ட்ரி போல 1992 முதல் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். குணா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், காதலுக்கு மரியாதை, உன்னைத்தேடி என கலக்கிய காக்கா ராதாகிருஷ்ணன், தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு தம்பியாக நடித்ததை மறக்க முடியாது. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் இருந்தபடியே நாசருடன் இணைந்து மிரட்டும் வில்லத்தனம் ஆஸம்.
ஆனாலும் லூசு தாத்தாவாகவும் இன்னசண்ட் தாத்தாவாகவும் அவர் கலக்கியதுதான் செகண்ட் இன்னிங்ஸில் இக்கால ரசிகர்கள் மனதில் இருப்பவை. பிரபுதேவா, கார்த்திக், அஜித், விஜய், கவுண்டமணி, வடிவேலு என இந்த தலைமுறை நடிகர்களுடன் சிக்ஸரடித்த காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி நாகேஷ் சொன்ன வார்த்தைகள்...
"நேரம் மட்டும் சரியாக கூடி இருந்தால் இவன் எங்கள எல்லாம் மிஞ்சி எங்கோ போயிருப்பான்"
(பவளங்கள் ஜொலிக்கும்...)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment