Wednesday, 10 December 2014

கூத்து முடிந்த கொட்டகை


நதிக் கரையோர நாணல்கள்
நெட்டி முறித்துக் கொள்கின்றன
வௌ்ளம் வடிந்து விட்டாலும்

செவ்வரி பூசிய தண்ணீர்
நீர்ச் சூழலின் மிச்சம் கூறிச் செல்கிறது


கழனிகள் தத்தளிக்கின்றன
நெடுவயல்களில் நதியின்
கால் தடம் பதிந்து கிடக்கிறது
ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம்
கோரிக்கைகளும் அறிக்கைகளும்
 

அச்சில் ஏற பரபரத்து கிடக்கின்றன
வாய்க்கால் தூர்வாருவதில்
லாவணி கச்சேரி கூச்சல்
மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்தது
கூத்து முடிந்து கலைத்த
கீற்றுக் கொட்டகையாய் விளை நிலம்


= வை.ரவீந்திரன் 

Tuesday, 9 December 2014

வார்த்தைகளற்ற கவிதை....

கவிதை சொல் என்றாய்
நீயே கவிதை தானே என்றேன்
உன்னை ஓவியம்
வரையட்டுமா என கேட்டபோது
ஓவியமும் வரைவாயா..? என
விழி விரித்து வியந்தாய்
 

உன் பெயரை எழுதினாலே
ஒரு ஒவியம் தானே என்றேன்
எந்நேரமும் பொய் என
பொய் கோபம் கொண்டாய்


அப்படியே இரு
அழகான ஒரு ஓவியக் கவிதை
தீட்டுகிறேன் என கூறியபடி
உன் முகம் பார்த்தேன்

செல்ல சிணுங்கலுடன் என்
தலையில் தட்டி விட்டு
குதித்தோடிச் சென்றாய்
உன்னைத் தொடர்ந்து
வார்த்தைகளும் ஓடோடிச் சென்றன
எப்படி நான் கவிதை எழுதுவது...?

= வை.ரவீந்திரன் 

Monday, 1 December 2014

அழிந்து போன அளத்தல் அளவைகள்



பள்ளிக்கூட பாடங்களில் மில்லி லிட்டர், லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவை பற்றி படித்திருப்போம். ஆனால் உழக்கு, படி, நாழி, மரக்கால் போன்ற அளவைகள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இவை எல்லாம் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் உபயோகப்படுத்திய அளவை முறை. அப்போதெல்லாம் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இவற்றைக் கொண்டு தான் அளந்தார்கள். இதற்காகவே அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்று 20 வகையான அளத்தல் அளவைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆழாக்கு அரிசிய போட்டு சோறு வடிக்கத் தெரியாதா?’ என்று கிராமங்களில் ஒரு  சொல்வடை உண்டு. அதாவது, ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆழாக்கு அளவு அரிசியை எடுத்து சோறு வடித்தால் போதும் என்பதே அதன் உள் அர்த்தம். இந்த ஆழாக்கு என்பது அளத்தல் அளவையில் ஒரு சிறிய அளவீடு. தோராயமாக 400 கிராம் அளவுக்கு இருக்கும்.

இதே மாதிரி, ‘படி’ என்பது ஆழாக்கை விட கொஞ்சம் பெரிய அளத்தல் கருவி. வயலில் விளைந்த நெல் மணிகளை கதிரடிக்கும் களத்தில் மொத்தமாக குவித்து வைத்து அங்கிருந்து மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்து வருவார்கள். அப்போது மூட்டைகளில் இருந்து நெல்லை அளந்து போடுவதற்கு படி என்ற அளத்தல் கருவியை பயன்படுத்தினர். மேலும், வயலில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கூலியாக நெல் வழங்கிய காலம், அது. அதனால், படியை வைத்து அளந்தே கூலியை வழங்கினர். இதில் இருந்து தான், ‘படியளத்தல்’ என்ற வார்த்தை தோன்றியது. இப்போதும் கூட, ‘ஏதோ, ஆண்டவன் படியளந்து கொண்டு இருக்கிறான்’ என்ற வார்த்தைகளை சிலர் கூறுவதை கேட்கலாம்.
  
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற அளவை கருவிகள் மிக பிரபலமாக இருந்துள்ளன. கி.பி.10ம் நூற்றாண்டில சோழ பேரரசர் ராஜராஜன் ஆட்சி புரிந்தபோது, நெல் மணிகளை அளப்பதற்கு ‘மரக்கால்’ என்ற அளவை கருவியை அதிகமாக பயன்படுத்தினர். இப்போது உள்ள மில்லி லிட்டர், லிட்டர் அளவை கருவி போலவே உருளை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு அளவைக்கு ஏற்ப அதன் வடிவமும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காணப்படும்.

மன்னராட்சி காலத்தில், பாசனத்துக்கு ஏரிகளை திறந்து விடும் பணியை கண்காணிக்க, ‘கலிங்கு வாரியம்’ என்ற ஒரு அமைப்பை ஒவ்வொரு ஊரிலும் சோழ மன்னர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வாரியம் முறையாக செயல்பட, அதற்கு பொருளாதார வசதி தேவை. எனவே, வரி வசூல் முறை அமலில் இருந்தது. அதன்படி, வயலில் விளையும் தானியங்களில் 250 மரக்கால் அளவுக்கு நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியத்தை கலிங்கு வாரியத்துக்கு விவசாயிகள் அளந்து வழங்க வேண்டும். அதைக் கொண்டு அந்த வாரியம் செயல்படும். மரக்கால் என்ற கருவியை ‘பக்கா’ என்றும் அழைப்பது உண்டு.

மரக்காலை விட சற்று சிறிய அளவிலான அளவை கருவியின் பெயர் நாழி. பொங்கல் திருநாள் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் நாழி கருவியில் நெல்மணிகளை நிறைத்து வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இதை, ‘நிறை நாழி’ என்று நமது முன்னோர் அழைத்தனர்.


ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட விவசாயிகளின் வீடுகளில் பயன்படுத்தி வந்த இந்த கருவிகள் அனைத்தும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சிறிது சிறிதாக காணாமல் போயின. இந்திய விடுதலைக்கு பிறகு அந்த அளவை முறைகளை சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பது போன்ற வார்த்தைகள் அனைத்தும் புத்தகங்களில் தான் இருக்கின்றன. ஒரு சில கிராமங்களில் மட்டும் விசேஷ தினங்களில், ‘நிறை நாழி’யை காண முடிகிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ.....?

இதுதவிர, தானியங்களை மொத்தமாக சேகரித்து வைப்பதற்கு அந்த காலத்தில் சரியான வசதிகள் கிடையாது. அதனால், வீடுகளிலேயே பெரிய சைஸ் மண் பானை போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அதன் பெயர், ‘குதிர்’. பெரும்பாலும் நெல் சேமித்து வைக்க பயன்படுத்தியதால், ‘நெல்லு குதிரு’ என்று கிராமங்களில் அதை அழைப்பது உண்டு. பழங்கால முதுமக்கள் தாழி போன்ற வடிவத்தில் ஒரு சராசரி மனிதன் உயரத்துக்கு தோற்றமளிக்கும் ‘குதிர்’ என்ற பெரிய சைஸ் பானையை குக்கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. 

= வை.ரவீந்திரன் 






Thursday, 27 November 2014

மண்டல் கமிஷன் நாயகன்...

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இன்று நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) என்ற பிரிவை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அறிமுகம் செய்தவர். அதற்காக, மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற தனது பிரதமர் பதவியையே பணயம் வைத்தவர்.

இத்தனைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் பி.பி.மண்டல் அறிக்கை அளித்தும் 10 ஆண்டுகளாக பரணில் கிடந்தது. அந்த அறிக்கையை 10 ஆண்டுகள் கழித்தும் மறந்து விடாமல் தூசிதட்டி எடுத்து, அமல்படுத்தி சாமானிய மக்களுக்கு வாழ்வு அளித்தவர்.

இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா என நெருங்கவே இயலாத இரண்டு வெவ்வேறு துருவங்களின் ஆதரவோடு ஆட்சி நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். ராமர் கோயில் கோஷம் எழுந்தபோது ரத யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்ட துணிச்சல்காரர்.

ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பவர்புல் இலாகாவில் இருந்தாலும் பிரதமர் ராஜீவ் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டும் ஆமாம் சாமியாக இல்லாமல் தவறை துணிச்சலாக தட்டிக் கேட்டவர். போபர்ஸ் ஊழலை தோலுரித்த நேர்மையாளர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராஜ வம்சத்தில் பிறந்த போதிலும் ஏழை மக்களைப் பற்றியும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் சிந்தித்த சிந்தனையாளர். 

இந்தியாவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற உண்மையை தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி நிரூபித்து காட்டியவர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணியின் பிரதமராக பதவியேற்றபோது, தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களை அதிமுக=காங்கிரஸ் அணி கைப்பற்றி இருந்தது. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

அந்த சூழ்நிலையிலும், மந்திரிசபையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பதவியை அளித்து நகர்ப்புற வளர்ச்சி துறையை ஒதுக்கியவர்.

இப்படி, அவரின் பெயரைப் போலவே அவரது பெருமைகளும் சாதனைகளும் மிக நீளமானவை. அவர்
.
.
.
.
.
.
.
.

முன்னாள் பாரத பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இன்று அவரது நினைவு தினம் (27-11-2008)

= வை.ரவீந்திரன் 

மங்காத வீரம்... மண்டியிடாத மானம்

கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் இணையற்ற இனமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் இனம், தமிழ் இனம்.

உடலில் தொண்ணூற்று மூன்று விழுப்புண்களை பெற்று, மகன் ஆதித்த சோழனுக்கு மகுடம் சூட்டிய பிறகும் கூட முதிய வயதில் இரண்டு கால்களை இழந்த நிலையில் போர்க்களம் புகுந்த விஜயாலய சோழன் பிறந்தது, தமிழ் மரபு. இரண்டு வீரர்கள் தோளில் சுமந்து செல்ல இரண்டு கைகளிலும் வாள்களை ஏந்தி எதிரிகளின் தலைகளை பந்தாடியவன், விஜயாலய சோழன்.
எண் கொண்ட தொன்னூற்றின் மேலுமிரு மூன்று
புண் கொண்ட வெற்றிப் புரவலன்’

= என விஜயாலயச் சோழனை புலவர்கள் பாடி வைத்துள்ளனர்.

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட (சேர, சோழ, பாண்டிய) தமிழ் தேசத்தின் பெருமையை இமயமலையில் வில் கொடியை பதித்து பறை சாற்றினான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனது இந்த பெருமையை,
‘அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க....’

= என்று பதிற்றுப்பத்து இலக்கியம் பாடுகிறது.

18 வயது சிறுவனாக இருந்தபோதிலும் மிகப்பெரிய படைகளை தலையலங்கானம் என்ற இடத்தில் தன்னந்தனியனாக எதிர் நின்று வென்ற தலையலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பிறந்ததும், இந்த தமிழ் மரபில் தான்.

குடம் நிறைய ஆயர் குல பெண்டிர் சேமித்து வைத்திருக்கும் பாலுக்குள் துளி அளவு மோர் கலந்து அதை கலங்கச் செய்வது போல, எதிரியின் படைக்குள் புகுந்து கலங்கச் செய்பவன், என பண்டைய தமிழகத்தின் சாதாரண படை வீரர்களுக்குள் கூட மிகப்பெரிய அளவில் பராக்கிரமம் நிறைந்து கிடந்தது என்பதை,
‘குடப்பால் சில்லுறைப் போல படைக்கு
நோய் எல்லாம் தான் ஆயினவே’

= என்று புறநானூறு பாடல் விளக்கி கூறுகிறது.

வடநாட்டு மன்னர்கள் கனகர் மற்றும் விசயனை வென்று அவர்களுடைய தலை மீது கற்களை ஏற்றி சுமந்து வந்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை எடுத்தவர்கள், தமிழ் மன்னர்கள். இலங்கையை வென்று மீன் கொடி ஏற்றிய பாண்டியனும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று ஈழத்தை கைப்பற்றியதோடு முந்நீர் பழந்தீவு என அழைக்கப்பட்ட மாலத்தீவுக்கு கடல் கடந்து சென்று போர் முரசம் கொட்டிய ராச ராச சோழனும் தமிழரின் வீரம் செறிந்த மரபின் வரலாற்று உதாரணங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து மாபெரும் கடற்படையை திரட்டிச் சென்று மலேசியா எனப்படும் கடாரம் தீவை வெற்றி கொண்ட ராசேந்திர சோழனின் வீரத்தை என்னவென்று வியப்பது....?
தமிழ் மரபில் இந்த அளவுக்கு வீரமும் தீரமும் செறிந்தவர்கள் இருந்தார்களா...? மனதுக்குள் இதுபோன்ற ஒரு ஐயம் எழுந்ததும் அதை போக்கும் விதமாக பிறந்தவர், பிரபாகரன்.

நான்கு வகை படைகளை நடத்திய தமிழ் மன்னர்களை நினைவூட்டும் வகையில் இந்த நவீன விஞ்ஞான உலகில் ஆதரவு ஏதுமின்றி முப்படைகளை திறமாக நடத்தி வெற்றிகளை குவித்தவர். காய்த்தல், உவர்த்தல் இன்றி தனி மனிதனாக அவரை உற்று நோக்கினால் தமிழர் வீரத்தின் மிச்சம் அவர் என்பதை உணரலாம்.

நாகரீக உலகில் நாடு பிடிப்பதற்காக இதுபோன்று சண்டை போடுவதா? என்ற கேள்வி எழும்போது, அவரது அருமை தம்பி திலீபன் நடத்திய அறவழி போராட்டத்தினால் கிடைத்த பலன் பற்றி அறிந்தால் எழுந்த வேகத்திலேயே அந்த கேள்வி அடங்கி விடும்.

சொந்த மண்ணிலேயே அடிமைகளாக கிடந்து அடிப்படை உரிமைகளுக்கு கூட போராடி, வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலைக்காக வீறு கொண்டு எழுந்து,

பாரதி கூறிய, ‘ரவுத்திரம் பழகி’ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த வீரத் திருமகன் அவதரித்த தினத்தில் (நவம்பர் 26) தமிழ் இனத்தின் மங்காத வீரத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 




வீரனின் வாழ்வு...
வீழ்ந்து விடுவதில்லை...
விதைக்கப்படுகிறது....
வரலாறாய் மாறுகிறது

= வை.ரவீந்திரன் 

Tuesday, 25 November 2014

அமைதி நோக்கி பயணம்

ஆள் அரவமற்ற வெட்ட வெளி
அதிகாலை பனித் துளிகளை
தாங்கி நிற்கும் தாவரங்கள்
வேகமாக நடந்தால் கூட
தூரம் குறுகியதாக தெரியவில்லை
சமவெளியை கடந்தால்
ஆழமான பள்ளத்தாக்கும்
கூடவே அதி பயங்கர நீர் வீழ்ச்சியும்
நிச்சயமாக ஏற்ற இடம் தான்

இன்னும் கொஞ்சம் நடையை
எட்டிப் போட்டால் அடைந்து விடலாம்
மனது எண்ணியதை கால் செயல்படுத்தியது

அடையாளங்களை தொலைத்து
சாதாரண மனிதனாக வாழ தீர்மானித்து
தொடங்கிய பயணம் இது
அனைத்தையும் உதறி விட்டு
கால்கள் பரபரத்து ஓடின
சற்று தொலைவில் இருக்கும்
அடையாளம் ஏதுமற்ற அமைதி நோக்கி.... 


= வை.ரவீந்திரன்

Monday, 24 November 2014

அப்பிராணியும்.... அதானியும்....




வணக்கமுங்க... நடுத்தர வர்க்கமுன்னு சொல்றாங்கள... அந்த வர்க்கத்துல நானும் ஒருத்தன். என் பேரு... அது அவ்ளோ முக்கியமில்லீங்க... அப்பிராணின்னு வச்சிக்கோங்களேன். வந்தார வாழ வைக்கிற சென்னைக்கு குடியேறி 17 வருசம் ஓடிட்டு. சொன்னது போலவே, நல்லாவே சென்னை வாழ வச்சுதுங்க. புறநகர் பக்கமா 10 வருசத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு வூடு வாங்குனேங்க. அது ஒரு சென்டு இடம் இருக்குங்க... அப்போ பொழச்ச பொழப்புக்கு அதுவே பெரிய விஷயங்க.

அப்ப வூடு வாங்குறதுக்காக அரசாங்க பேங்குல 20 வருசத்துக்கு ரூ.3 லட்சம் கடன வாங்கினேங்க. மாச சம்பள வேல பாத்ததால லோன குடுத்தாங்க. மாசா மாசம் நான் கட்டுன தொகையில வட்டிக்கு தாங்க அதிகமா போய்கிட்டு இருந்துச்சு. எப்படியாச்சும் இந்த தொல்லைய ஒழிச்சு கட்டணுமின்னு ராப்பகலா யோசிச்சேங்க.. அதே சிந்தனையா இருந்ததால ஒரு வழியா 10 வருசத்துக்குள்ள அந்த கடன முழுசா அடைச்சிட்டேங்க.

இப்போ, வீட்ட சுத்தி பாத்தா நெறய வீடுங்க வளந்து நின்னுகிட்டு இருக்குங்க. அத பாத்ததும் இந்த மனசுக்குள்ள ஒரு ஆச வந்து ஆட்டிச்சு. அதுக்கு நாலே கால் லட்சம் வரை செலவாகுமுன்னு சொன்னாங்க. கடன தான் அடைச்சிட்டோமே... அதனால மாடிய கட்டதுக்கு அதே வங்கில போயி லோன கேட்டா என்ன? நம்ம வூட்டு பத்திரம் கூட பத்திரமா அங்க தான இருக்கு? இப்படி மனசுக்குள்ள கேள்வியோட மேனசர போய் பாத்தேங்க.

அவரும் சம்பளம் என்ன?ங்கிற விவரம் எல்லாம் கேட்டுட்டு... மாடி கட்ட பிளான மட்டும் வாங்கிட்டு வாங்கன்னாரு. இந்த 10 வருசத்துக்குள்ள மாநகராட்சிய விரிச்சிட்டாங்க. என் வீடும் மாநகராட்சிக்குள்ள வந்துட்டு. அதனால, மாடி கட்ட பிளான் கேட்டு மாநகராட்சிக்கு போனேங்க. அந்த நேரத்துல தான் மவுலிவாக்கங்கிற இடத்துல பெரிய கட்டிடம் ரெண்டு இடிஞ்சு விழுந்துடுச்சு.

உடனே, பிளான குடுக்குறதுல பயங்கரமா கெடுபுடி காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வழியா அறுபது ஆயிரம் ரூபா வரைக்கும் (சத்தியமாங்க... ஒரு சென்டு இடத்துல மாடி கட்டத்தான்) செலவு பண்ணி பிளான வாங்கிட்டேன். அதுவும் 5 மாசத்துக்கு மேல ஆயுடுச்சு. அத வாங்கிக்கிட்டு பேங்குக்கு போனா, அங்க புது மேனேசரு ஒக்காந்து இருக்காரு. மனசுக்குள்ள சின்னதா அதிர்ச்சி.

ஆனாலும், மனச திடப்படுத்திக்கிட்டு அவருகிட்ட போயி முழு விவரத்தையும் சொன்னேன். பழைய மேனேசர் சொன்னதையும் சொல்லி பிளானயும், பில்டரு கொடுத்த எஸ்டிமேட்டையும் என்னோட சம்பள பட்டியலயும் (இந்த பத்து வருசத்துல சம்பளமும் கணுசமா கூடிட்டுங்க.. அத நான் சொல்லியே ஆகணும்) கொடுத்தேங்க.. மாடிய கட்றதுக்கு எனக்கு 3 லட்சம் லோன் குடுங்க சார். மீதிய நானே பாத்துக்கறேன்னேன். 

அதுக்கு அந்த மேனேசரு சொன்னாரு பாருங்க. ‘வீட்டுக்கு ஒரு எவாலுயசன் ரிப்போர்ட்ட வாங்கிடுங்க. அப்படியே லீகல் ஒப்பினீயன் வாங்கிடுங்க. ஈசியும் போட்டு எடுத்துட்டு வாங்க. சீக்கிரமா லோன குடுத்துரலாம்’ இந்த பதில கேட்டதும் ஆடிப் போயிட்டேங்க. ஏன்னா, என்னோட வூட்டு பத்திரம் அந்த பேங்குலதாங்க இருக்கு.  

சரி. அது என்ன எவாலுயசன், லீகல் ஒப்பீனியன் அப்படின்னு விசாரிச்சேன். அந்த பேங்குக்குன்னு வக்கீலும் என்ஜீனீயரும் இருந்தாங்க. அவங்க கிட்ட போன போட்டு பேசுனா ஒரு 15 ஆயிரத்துக்கு பில்ல போடுறாங்க. நாலே கால் லட்சத்துல மாடிய  கட்டுறதுக்கு ஏற்கெனவே, பினானுக்கு 60 ஆயிரம் செலவழிச்ச நெலமையில இது என்னடா எக்ஸ்ட்ரா செலவுன்னு நொந்து போயிட்டேங்க.. ஒரு 3 லட்சம் லோனா தரதுக்கு இவ்ளோ பார்மாலிட்டியா...?

இவ்ளோத்துக்கும் இப்போ என்னோட வீட்டு சந்த மதிப்பு 15 லட்சத்த தாண்டிடுச்சுங்க. என்னோட சம்பளத்த மட்டும் வச்சே பர்சனல் லோனா தனியார் பேங்குங்கள்ல ரூ.3 லட்சம் வரை வாங்கலாங்கிறதையும் விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டேங்க. இப்பிடி இருக்கும்போது என்னோட வீட்டு பத்திரத்த வச்சிகிட்டே 3 லட்சம் தரதுக்கு பேங்கில இந்த அளவுக்கு யோசிக்கிறாங்களே...?ன்னு எனக்கு கோபம் கோபமா வந்துச்சுங்க.. அப்புறமா... பரவாயில்ல. நம்ம அரசாங்க பேங்குல்லாம் ரொம்பவும் உஷாரா இருக்காங்களே.. இந்த அளவுக்கு உஷாரா இருந்தா சீக்கிரமே இந்தியா ரொம் முன்னேறிருமுன்னு நெனச்சுகிட்டேன். இந்தியா முன்னேறிச்சுன்னா நல்லதுதாங்களே..

அதுக்கு பொறவு கொஞ்ச நாளுல பேப்பருங்கள்ல பார்த்தேங்க. ஆஸ்திரேலியாவுல இருக்குற அதானின்னு ஒருத்தருக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய இந்தியாவுல இருக்க ஸ்டேட் பேங்கு கடனா குடுக்கப் போவுதாம். என்னோட பத்துரத்த பேங்குல வச்சிக்கிட்டே 3 லட்சத்துக்கு இந்த பாடு படுத்துன அரசாங்க வங்கிங்க, அந்த அதானியா என்ன பாடு படுத்த போறாங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். என்னோட வீடாவது பேங்கு பக்கத்துலேயே இருக்குது. இந்த அதானி, ஆஸ்திரேலியாவுலல்லா கம்பெனி ஆரம்பிக்காறாம். அதுக்கு என்னென்ன பார்மாலிட்டியோ? எவாலுயசேனோ? லீகல் ஒப்பீனியனோ? அத அந்த மனுஷன் எப்படி சமாளிக்க போறாரோ?ன்னு நெனச்சுக்கிட்டேன். இத அப்படியே எங்க ஆபீசுல ஒண்ணா வேல பாக்குற ஒருத்தருகிட்ட சொன்னேன்.


என்னைய மேலயும் கீழயும் பார்த்துகிட்டு அவரு சொன்னாருங்க.. “இவ்ளோ அப்பிராணியா இருக்கியே... அந்த லோன குடுக்கதுக்கு பிரதமரே சிபாரிசு பண்ணிட்டாருப்பா... ஏற்கெனவே, இப்படித்தான் மல்லையான்னு ஒருத்தரு மூவாயிரம் கோடிக்கு மேல பேங்குல வாங்கிட்டு மஞ்ச கடுதாசி குடுத்துட்டாரு... இந்த அதானி எப்போ மஞ்ச கடுதாசி குடுக்க போறாரோ...?’ ன்னு சலிச்சுக்கிட்டே சொன்னாரு.

இப்போ எனக்கு ஒரு சின்ன கேள்விங்க.. உங்கள்ல யாருக்காவது பிரதமர நல்லா தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி எனக்கு 3 லட்சத்த வாங்கி குடுங்கங்க. மல்லையா, அதானி மாதிரி நான் மஞ்ச கடுதாசில்லாம் குடுக்க மாட்டேன். ஏற்கெனவே, என்னோட 20 வருஷத்து  லோன 10 வருசத்துக்குள்ள வேற கட்டி முடிச்சிருக்கேங்க. அதனால... கொஞ்சம் பிரதமருகிட்ட சொல்லி அதானிக்கு மாதிரி இந்த அப்பிராணிக்கும் சிபாரிசு பண்ணுங்களேன்.

= வை.ரவீந்திரன்.
 

Monday, 17 November 2014

தட்டழியும் தட்டச்சு இயந்திரங்கள்





கால் காசு உத்தியோகம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கணும். 40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த அறிவுரை இப்போதும் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அரசு வேலையை கைப்பற்ற 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய தகுதியாக கருதப்பட்டது, தட்டச்சு. இதனால், 1990களில் தட்டச்சு பயிற்சிக்கு இருந்த மவுசே தனி. சில பகுதிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலைமை எல்லாம் இருந்தது. மையங்களில் உள்ள தட்டச்சு இயந்திரங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசுகளும் கூட தேவைப்பட்ட காலம் அது. சில மையங்களில் டூடோரியலும் இணைந்து செயல்பட்டது.

இதனால், மினி கல்லூரி போல இயங்கிய தட்டச்சு மையங்களில் காதல் மலர்கள் மலர்ந்த அனுபவங்களையும் கல்லூரிகளுக்கு நிகரான காதல் கலாட்டாக்களையும்  நடுத்தர வயதை கடந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அப்போது 10வது தேர்ச்சி பெற்றால் மட்டுமே தட்டச்சு தேர்வு எழுத முடியும். இப்போது, 7வது முடித்தாலே ‘பிரி ஜூனியர்’ தேர்வை எழுதலாம். ஆனாலும், இன்றைய காலத்தில் தட்டச்சு வழக்கொழிந்து வருகிறது. மகாராஷ்டிராவில், 2015ம் ஆண்டு நவம்பருக்குள் தட்டச்சு மையங்களை முற்றிலுமாக நீக்கி விட்டு கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றுத் தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தட்டச்சு மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் தட்டச்சு மையங்களாக மாறி வருகின்றன. டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது அமலாகி விட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை என காரணம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும் தட்டச்சு மையங்கள் தட்டழிந்து தான் வருகின்றன.

இன்றைய தட்டச்சு மையங்களில் பெரும்பாலானவை, முந்தைய தலைமுறையால் விட்டு செல்லப்பட்டு வாரிசுகள் நடத்தி வருபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டச்சு மையங்களின் நிலைமை குறித்து அவற்றின் நிர்வாகிகளிடம் கேட்டால், ‘தந்தை நினைவாக இதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்’ என்ற பதிலே அதிகமாக கிடைக்கிறது. கம்ப்யூட்டர் கீ போர்டு பயிற்சிக்காகவே மாலை நேரங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அந்த காலத்தில் ஒவ்வொரு மணவருக்கும் மெஷின்களை ஒதுக்கி கால அட்டவணை போடுவதே தனி வேலையாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது.

இன்றைய அலுவலகங்களில் தனியாக நெட்வொர்க் என்ஜினீயர்கள் இருப்பது போன்று. முன்பெல்லாம் தட்டச்சு இயந்திரங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் தனி மெக்கானிக்குகள் இருந்தனர். ரெமிங்டன், கோத்ரேஜ், பாசிட் போன்ற முன்னணி தட்டச்சு இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் செலவிலேயே மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்தன. இது மட்டுமல்ல தட்டச்சு தேர்விலும் தட்டச்சு இயந்திர பராமரிப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மெக்கானிசம் வகுப்புகள் தனியாக உண்டு. அதற்காக, தட்டச்சு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் மெக்கானிக் ஒருவர் வந்து பயிற்சி அளிப்பது உண்டு.

தற்போது, தட்டச்சு  மையங்களே தத்தளிக்கும் நிலையில் அந்த இயந்திரங்களின் மெக்கானிக்குகளுக்கு வேலை இல்லை. பிளம்பிங், வயரிங் என வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். எனினும், 60 வயதை கடந்த ஒரு சிலர் மட்டும் ‘அந்த காலத்தில் ஓய்வே இல்லாமல் ஊர் ஊராக சென்று சர்வீஸ் செய்து வந்தோம்’ என்று வீட்டில் விட்டத்தை வெறித்தபடி நினைவலைகளை அசை போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில், ஒரு சிலர் இன்னமும் அந்த மெக்கானிக் பணியையே தொடருகின்றனர். தபால் அலுவலகங்களில் இருந்த தந்தி முறை வழக்கொழிந்து விட்டது போல, தட்டச்சும் முடிந்து விடுமோ என்ற நிலைமை உருவாகி உள்ள போதிலும், அப்படி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளுகின்றன, தட்டச்சு பள்ளிகள். நம்பிக்கை தானே வாழ்க்கை....!!!!

= வை.ரவீந்திரன் 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். 

இந்த பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பத்து என்ன என்று தெரியுமா?
.
.
.
.
.
1) தன்மான உணர்வு,
2) குடும்ப கவுரவம்,
3) கல்வி,
4) அழகு,
5) அறிவு,
6) இரக்க குணம்,
7) அற சிந்தனை,
8) உயர்ந்த பெருமை,
9) விடா முயற்சி அல்லது ஊக்கம்,
10) பெண் ஆசை அல்லது காம உணர்வு.


இதை நான் சொல்லலீங்க...
தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்லி வச்சிருக்காங்க... அவர் எழுதிய பாடல் இதோ.....
.
.
.
.
.
மானம்குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம். 


-  நல்வழி பாடல்

Monday, 10 November 2014

வதந்தியால் வீழ்ந்த துய்ப்ளக்ஸ்






 = வை.ரவீந்திரன்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றிய வரலாறு எழுதும்போது ராபர்ட் கிளைவ் பெயரை எழுதாமல் நிறைவு பெறாது. அதுபோல, பிரெஞ்சு ஆட்சி பற்றி எழுதினால் ஒருவரை தவிர்க்கவே முடியாது. அவர், துய்ப்ளக்ஸ். இந்தியாவுக்குள் இருந்த பிரெஞ்சு காலனி பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். இந்தியாவுக்குள் வணிக நோக்கில் நுழைந்த மேலை நாட்டவர்களில் பிரெஞ்சியரும் உண்டு. அதற்காக, ‘பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி’ என்ற வணிக நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதில் பணி புரிவதற்காக 1731ல் தனது 35வது வயதில் இந்தியாவுக்கு வந்தார் துய்ப்ளக்ஸ்.

தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்திர நாகூர் என்ற மாநகரம், அப்போது பிரெஞ்சியர் வசம் இருந்தது. அங்கு தான் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அதன் இயக்குநராக 10 ஆண்டு பணிபுரிந்த துய்ப்ளக்ஸ் திறமையை பார்த்து இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகளின் கவர்னர் ஜெனரலாக பிரான்ஸ் மன்னர் நியமித்தார். இதையடுத்து, காலனி ஆதிக்க தலைநகரான புதுச்சேரியில் 1942ம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றார்.

துய்ப்ளக்ஸ் பதவியேற்றபோது தற்போதைய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் செயின்ட் லூயி என்ற பிரமாண்டமான கோட்டை இருந்தது. அதுவரை கவர்னர் ஜெனரலின் ஆளுகை அலுவலகமாகவும் தங்கும் இடமாகவும் அந்த கோட்டை இருந்தது. துய்ப்ளக்ஸ் வந்த பிறகு, கவர்னருக்கென தனி மாளிகை உருவாக்கினார். அது தான், இன்றளவும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் மாளிகையாக செயல்படும் ராஜ்நிவாஸ். துய்ப்ளக்ஸ் காலத்துக்கு பிறகு சென்னையில் இருந்து வந்த ஆங்கிலேய படைகளால் அந்த கோட்டை சின்னா பின்னமாக்கப்பட்ட போதிலும், ஆளுநர் மாளிகை மட்டும் மீண்டும் எழுந்தது.

இந்தியா முழுவதையும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட துய்ப்ளக்ஸ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயருடன் அடிக்கடி போர் நேரிட்டது. அதில் முக்கியமான போராக சென்னை போரை கூறலாம். தளபதி மாகே லாபுர்தனே தலைமையில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட பெரிய கடற்படை ஒன்று 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று சென்னையை கைப்பற்றியது.  அப்போது பிரெஞ்சு படையிடம் அடி பணிந்த ஆங்கில படையின் தளபதியாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இது மட்டுமல்ல மேற்கில் செஞ்சி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, தக்காணம் என துய்ப்ளக்சின் வெற்றியால் பிரெஞ்சு ராஜ்ஜியம் மேற்கு நோக்கி விரிவடைய தொடங்கியது.

ஆனால், திருச்சி, ஸ்ரீரங்கம் என தெற்கு நோக்கி சென்ற அவருடைய படைகள் தோல்வியை ருசிக்க தொடங்கின. அதற்கு காரணமாக இருந்தவர், ராபர்ட் கிளைவ். இதற்கிடையே, துய்ப்ளக்ஸ் அடைந்த வெற்றிகள் குறித்த செய்திகளை விட தோல்வி பற்றிய செய்திகளும் அது தொடர்பான வதந்திகளும் மிக வேகமாக பிரான்சுக்கு இறக்கை கட்டி பறந்தன. இதனால், அவரை பதவியில் இருந்து பிரான்ஸ் அரசு 1754ம் ஆண்டு நீக்கியது. அவரையும் நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. இந்தியாவில் துய்ப்ளக்சின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ஆதிக்கப் பகுதிகளில் தனது புகழை நிலைநாட்டி விட்டு தனது 60வது வயதில் நாடு திரும்பினார்.

துய்ப்ளக்ஸ் ஆட்சி காலம் முழுவதும் அவருக்கு துபாசாகவும் (மொழிபெயர்ப்பாளர்) வர்த்தக ஆலோசகராகவும் இருந்தவர், அனந்தரங்க பிள்ளை(1709-1761). அவர், 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகாலம் எழுதி வைத்த நாட்குறிப்புகள் தான் இன்றளவும் புதுச்சேரியின் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவுகின்றன. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலுக்கு என தனியாக பிரத்தியேக ஆடையை வடிவமைத்ததோடு பிரெஞ்சிந்திய ராணுவ சிப்பாய்களுக்கும் சீருடை அறிமுகம் செய்தவர், துய்ப்ளக்ஸ்.  இந்தியாவில் கைம்பெண் திருமணம் என்ற வார்த்தையே கேள்விப்படாத காலத்தில் கைம்பெண் திருமணத்தை அறிமுகம் செய்தவரும் துய்ப்ளக்ஸ் தான். தனது நண்பன் ஆல்பர்ட் இறந்த பிறகு ஆதரவற்று நின்ற அவரது மனைவி ழான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சியை விரிவு படுத்தும் முயற்சிகள் தொடங்கி பல்வேறு வழிகளிலும் புகழ் பரப்பி நின்ற துய்ப்ளக்சின் இறுதி காலம் மிகக் கொடுமையானது. இந்தியாவில் சிம்மமாக உலவிய அவர், பிரான்ஸ் திரும்பியதும் தேச துரோக குற்றத்தை எதிர்நோக்கினார். நீதிமன்ற விசாரணையில், அவரது சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அவருக்கு முன்னதாகவே பிரான்சுக்கு திரும்பி இருந்த வதந்திகளே வெற்றி பெற்றன. அவரால், தீர்ப்பை மட்டுமே தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடிந்தது. அதற்குள், விதி முந்திக் கொண்டது. இந்தியாவில் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவடைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை  பின்னாளில் தான் பிரான்ஸ் அரசு அறிந்தது. 

ஆனால், தனது மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய குறிப்பில், “ஆசியாவில் எனது நாட்டை வளப்படுத்துவதற்காக எனது இளமை, செல்வம், வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்தேன். ஆனால், எனது பணிகள் அனைத்துமே வெறும் கட்டுக் கதைகளாக இங்கு (பிரான்ஸ்) கருதப்படுகின்றன. மனித இனத்திலேயே மிக மோசமானவனாக நடத்தப்படுகிறேன். எனது சிறிதளவு சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் கொடிய வறுமையில் வாடுகிறேன்” என குமுறி இருக்கிறார், துய்ப்ளக்ஸ். இத்தகைய மனக் குமுறலுடனேயே 1763ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்று இந்த உலகை விட்டு மறைந்தார். இன்றைய காலத்தை போல கணினி, மெயில் என தொழில்நுட்ப வசதிகள் பெருகாத சூழ்நிலையில் மிக வேகமாக பிரான்சுக்கு பறந்து சென்ற வதந்தி, துய்ப்ளக்சின் புகழை சிதைத்ததோடு அவரது உயிரையும் பறித்தது.

இந்தியாவில் ஆட்சி செய்த பிரெஞ்சு கவர்னர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் துய்ப்ளக்சின் பெருமைகளை பிரெஞ்சு கலாச்சாரத்தை கைவிடாமல் உள்ள புதுச்சேரி மாநிலம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அவரது சிலையை காணலாம். வாழும்போது அவதிப்பட்டு, வாழ்க்கைக்கு பிறகு கொண்டாடப்படுபவர்களில் துய்ப்ளக்சும் ஒருவர்.


(நவ.10  - 1763 துய்ப்ளக்ஸ் நினைவு தினம்)

= வை.ரவீந்திரன்  
(புதுவையின் பழமை - நூலாசிரியர்)