Monday, December 1, 2014

அழிந்து போன அளத்தல் அளவைகள்பள்ளிக்கூட பாடங்களில் மில்லி லிட்டர், லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவை பற்றி படித்திருப்போம். ஆனால் உழக்கு, படி, நாழி, மரக்கால் போன்ற அளவைகள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இவை எல்லாம் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் உபயோகப்படுத்திய அளவை முறை. அப்போதெல்லாம் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இவற்றைக் கொண்டு தான் அளந்தார்கள். இதற்காகவே அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்று 20 வகையான அளத்தல் அளவைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆழாக்கு அரிசிய போட்டு சோறு வடிக்கத் தெரியாதா?’ என்று கிராமங்களில் ஒரு  சொல்வடை உண்டு. அதாவது, ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆழாக்கு அளவு அரிசியை எடுத்து சோறு வடித்தால் போதும் என்பதே அதன் உள் அர்த்தம். இந்த ஆழாக்கு என்பது அளத்தல் அளவையில் ஒரு சிறிய அளவீடு. தோராயமாக 400 கிராம் அளவுக்கு இருக்கும்.

இதே மாதிரி, ‘படி’ என்பது ஆழாக்கை விட கொஞ்சம் பெரிய அளத்தல் கருவி. வயலில் விளைந்த நெல் மணிகளை கதிரடிக்கும் களத்தில் மொத்தமாக குவித்து வைத்து அங்கிருந்து மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்து வருவார்கள். அப்போது மூட்டைகளில் இருந்து நெல்லை அளந்து போடுவதற்கு படி என்ற அளத்தல் கருவியை பயன்படுத்தினர். மேலும், வயலில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கூலியாக நெல் வழங்கிய காலம், அது. அதனால், படியை வைத்து அளந்தே கூலியை வழங்கினர். இதில் இருந்து தான், ‘படியளத்தல்’ என்ற வார்த்தை தோன்றியது. இப்போதும் கூட, ‘ஏதோ, ஆண்டவன் படியளந்து கொண்டு இருக்கிறான்’ என்ற வார்த்தைகளை சிலர் கூறுவதை கேட்கலாம்.
  
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற அளவை கருவிகள் மிக பிரபலமாக இருந்துள்ளன. கி.பி.10ம் நூற்றாண்டில சோழ பேரரசர் ராஜராஜன் ஆட்சி புரிந்தபோது, நெல் மணிகளை அளப்பதற்கு ‘மரக்கால்’ என்ற அளவை கருவியை அதிகமாக பயன்படுத்தினர். இப்போது உள்ள மில்லி லிட்டர், லிட்டர் அளவை கருவி போலவே உருளை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு அளவைக்கு ஏற்ப அதன் வடிவமும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காணப்படும்.

மன்னராட்சி காலத்தில், பாசனத்துக்கு ஏரிகளை திறந்து விடும் பணியை கண்காணிக்க, ‘கலிங்கு வாரியம்’ என்ற ஒரு அமைப்பை ஒவ்வொரு ஊரிலும் சோழ மன்னர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வாரியம் முறையாக செயல்பட, அதற்கு பொருளாதார வசதி தேவை. எனவே, வரி வசூல் முறை அமலில் இருந்தது. அதன்படி, வயலில் விளையும் தானியங்களில் 250 மரக்கால் அளவுக்கு நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியத்தை கலிங்கு வாரியத்துக்கு விவசாயிகள் அளந்து வழங்க வேண்டும். அதைக் கொண்டு அந்த வாரியம் செயல்படும். மரக்கால் என்ற கருவியை ‘பக்கா’ என்றும் அழைப்பது உண்டு.

மரக்காலை விட சற்று சிறிய அளவிலான அளவை கருவியின் பெயர் நாழி. பொங்கல் திருநாள் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் நாழி கருவியில் நெல்மணிகளை நிறைத்து வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இதை, ‘நிறை நாழி’ என்று நமது முன்னோர் அழைத்தனர்.


ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட விவசாயிகளின் வீடுகளில் பயன்படுத்தி வந்த இந்த கருவிகள் அனைத்தும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சிறிது சிறிதாக காணாமல் போயின. இந்திய விடுதலைக்கு பிறகு அந்த அளவை முறைகளை சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பது போன்ற வார்த்தைகள் அனைத்தும் புத்தகங்களில் தான் இருக்கின்றன. ஒரு சில கிராமங்களில் மட்டும் விசேஷ தினங்களில், ‘நிறை நாழி’யை காண முடிகிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ.....?

இதுதவிர, தானியங்களை மொத்தமாக சேகரித்து வைப்பதற்கு அந்த காலத்தில் சரியான வசதிகள் கிடையாது. அதனால், வீடுகளிலேயே பெரிய சைஸ் மண் பானை போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அதன் பெயர், ‘குதிர்’. பெரும்பாலும் நெல் சேமித்து வைக்க பயன்படுத்தியதால், ‘நெல்லு குதிரு’ என்று கிராமங்களில் அதை அழைப்பது உண்டு. பழங்கால முதுமக்கள் தாழி போன்ற வடிவத்தில் ஒரு சராசரி மனிதன் உயரத்துக்கு தோற்றமளிக்கும் ‘குதிர்’ என்ற பெரிய சைஸ் பானையை குக்கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. 

= வை.ரவீந்திரன் 


Post a Comment