Wednesday, 24 December 2014

மடைமை ஒழித்த வெண்தாடியார்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச அறியார்
அறியாதோர் புத்தியில்
அறையும்படி கூறும் புலியார்

மூட பழக்கத்தின்
மாயையை சிறிதும் தெரியார்
பாரதிக்கு பின் மாதர் தம்
குரலாய் ஒலித்த ஒலியார்

திக்கற்ற தமிழருக்கு ஒளியாய்
திகழும் பேரொளியார்
சிறியோரையும் மரியாதையுடன்
விளிக்கும் பெரியார்

வாழ்க்கை நெறியை
வகுத்து தந்த எளியார்
மடைமையை ஒழித்து
தூய்மை படுத்திய வெண்தாடியார்

= வை.ரவீந்திரன்

Tuesday, 23 December 2014

ஊதா நிற நூல்

புத்தகக் கண்காட்சி
கடைகள் தோறும்
கேள்வி கணைகளால்
துளைத்தெடுத்தாய்
எந்த நூல் பிடிக்கும் என்று
பதிலெதும் கூறாமல்
மவுனமாக இருந்தேன்


உனக்கு தெரியுமா
முந்தைய சந்திப்பில்
உனது தாவணியில் இருந்து
உனக்கு தெரியாமல்
உருவி எடுத்த ஊதா நிற
நூல் மட்டுமே பிடிக்கும் என்று

= வை.ரவீந்திரன் 

Monday, 15 December 2014

மறதியை மறக்கலாம்

(காற்றுவெளி / இலக்கிய இணைய இதழில் வெளியான கட்டுரை)
 
வீட்டில் மூக்குக் கண்ணாடியை தேடுவது முதல் 10 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நண்பரின் பெயரை நினைவுபடுத்துவது வரை மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதில் மறதிக்கு முக்கிய இடம் உண்டு. ஆண்டுதோறும் வயது அதிகமாகும்போது மறதி குணமும் அதிகமாகி தொல்லை கொடுக்கிறது. வயதான காலத்தில் அல்சீமர் என்ற மறதி நோயால் அவதிப்படும் சிலரை கண் கூடாகவே நாம் காண்கிறோம்.

இதுபோன்ற மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டு பிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணு முணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த மிகச் சிறந்த பயிற்சி.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ண பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பஸ் பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவு படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.

மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

நினைவாற்றலை பெருக்குவதற்காக மேற்சொன்ன முறைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய தலைமுறையினரிடம் இத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்து வந்தன என்பதே அந்த உண்மை. பழைய பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களும் ஓய்வு நேரங்களில் புத்தகங்களை வாசிப்பவர்களும், குழந்தைகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் நினைவாற்றலும் நம்மை பிரமிக்கச் செய்பவையே. 

= வை.ரவீந்திரன் 





Saturday, 13 December 2014

இறைவன் தோட்டத்தின் பாத்திகள்

இறைவன் படைத்த  பூமி தோட்டத்தில்
மனிதர்கள் கட்டி வைக்கும்
பாத்திகள் எதுவும் எப்போதும்
நிரந்தரமாக இருப்பதில்லை

தூது சென்ற புறாக்கள்
மறைந்து விட்டன
தபால்காரனும் தந்தியும்
தேவையற்று போய் விட்டன

போகாமல் கெட்டது உறவு
என்ற வசனம் பொய்த்து போனது
நேரில் பார்க்காமலேயே
இணைய வழியில்
நட்பு சிறகு விரித்து
உறவு பாலம் பிணைக்க
இ மெயிலும் முக நூலும்
வாட்ஸ் அப்பும் வந்து விட்டன

= வை.ரவீந்திரன் 



Thursday, 11 December 2014

பாரதியின் வாழ்வில் புதுச்சேரி

‘உள்ள நிறைவிலோர்
கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? நன்னெஞ்சே,
தெள்ளிய தேனிலோர்
சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? நன்னெஞ்சே?’


சூரத்தில் 1907ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. திலகர், அரவிந்தர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் என புரட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து தனி அணியமைத்தனர். அவர்களின் வேகத்தின் முன்னால் ஆங்கிலேயரால் ஈடு கொடுக்க முடியவில்லை. சென்னையில் ‘இந்தியா‘ பத்திரிகை ஆசிரியராக இருந்த பாரதியின் புரட்சிகரமான கட்டுரைகளால் ஆக்ரோஷமடைந்த ஆங்கிலேயர், பாரதியை கைது செய்ய முடிவு செய்தபோது அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாடுகளுக்கு பதில் செக்கில் பூட்டப்பட்ட வ.உ.சிதம்பரனார், தொழுநோய்க்கு ஆளான சுப்பிரமணிய சிவா போன்றோரின் சிறைக் கொடுமைகளை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்ததால் பாரதியை சென்னையை விட்டு அனுப்ப தீர்மானித்தனர். அப்போது நினைவில் வந்த ஊர், புதுச்சேரி.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்கு அவர்கள் பாரதியை அனுப்பி வைத்தனர். நண்பர்களின் ஏற்பாட்டின்படி, புதுவைக்கு 1908ம் ஆண்டு ரயிலில் வந்திறங்கிய பாரதியின் கையில் குப்புசாமி அய்யங்கார் என்பவருக்கு நண்பர் ஒருவர் எழுதிக் கொடுத்த கடிதம் மட்டுமே இருந்தது. புதுவையில் அவருக்கு யாரையும் தெரியாது. அவரையும் யாருக்கும் தெரியாது. ஏனடா, இந்த புதுச்சேரிக்கு வந்த சோதனை? என அவர் நினைத்தபோது குவளைக் கண்ணன், சுந்தரேச அய்யங்கார் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலமாகவே தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தார்.

சில மாதங்களில் இந்தியா பத்திரிகையின் முதலாளி மண்டையம் ஸ்ரீனிவாச்சாரியும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவர், புதுவையில் படித்தவர் என்பதால் புதுச்சேரி நகரம் அவருக்கு நல்ல பரிச்சயமாக இருந்தது. எனவே,  ‘இந்தியா‘ பத்திரிகையை புதுவையில் தொடங்கினார். அதற்கு பாரதியை ஆசிரியராக நியமித்தார். பின்னர், புரட்சியாளர்களின் அடைக்கல பூமியானது, புதுவை. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், ‘இந்தியா‘ பத்திரிகையை இந்திய பகுதிக்குள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

அதன் பிறகு விஜயா, கர்மயோகி, தருமம், பாலபாரதம், சூரியோதயம் என பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக புதுவையில் பாரதியார் பணியாற்றினார். அத்துடன், சுதேசமித்திரனில் சுதந்திர வேட்கை ஊட்டும் கவிதைகளையும் எழுதினார். தமிழ் பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடும் வழக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர், பாரதியார். அந்த சாதனையை புதுவை மண்ணில் தான் அவர் ஆரம்பித்து வைத்தார். முழுநீள கார்ட்டூன் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், அது கனவாகவே போனது.

கொல்கத்தாவில் இருந்து 1910ம் ஆண்டு புதுவைசெட்டித் தெருவில் தங்கி இருந்த அரவிந்தருக்கு துணையாகவும் இருந்திருக்கிறார். அரவிந்தர் நடத்திய ஆர்யா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். அரவிந்தருக்கு தமிழ் கற்றுத் தந்தவர், பாரதியார். பாரதியாரிடம் தமிழ் பயின்ற அரவிந்தர், பின்னாளில் தமிழில் இருந்து திருக்குறள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பத்திரிகை, தேசப்பணி என இருந்த பாரதியை பாட்டுக்கொரு புலவனாக மாற்றியது, புதுவை மண். அதுவரை பாரதி எழுதி வைத்திருந்த கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சுதேச கீதங்கள் என்ற பெயரில் புத்தகமாக 1908ம் ஆண்டு புதுவையில் வெளியிடப்பட்டது. அதுவே, அவருடைய முதல் புத்தகத் தொகுதி. பின்னர், பாரதியின் கனவு, ஜன்ம பூமி, மாதா மணிவாசகம் என பாரதியின் எழுத்துப் பணி தொடர்ந்தது. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பகவத் கீதை மொழி பெயர்ப்பு என காலத்தால் அழியாத காவியங்கள் அனைத்தும் புதுவை மண்ணில்தான் கருத்தரித்தன. அவற்றை 1912ம் ஆண்டில் பாரதி எழுதினார். பின்னாளில், அவை தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளியாகின.

புதுவையில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், குயில் தோப்பு, மணக்குள விநாயகர் கோவில், உப்பளம் முத்துமாரியம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் ஆலயம் என அவர் பாடித் திரிந்த இடங்கள் ஏராளம். குறிப்பாக, குயில் தோப்பு தான் அவருடைய கவிதை வளத்துக்கு ஆதார சுருதியாக அமைந்தது. ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என பாட வைத்தது, குயில்தோப்பு. ‘சித்தானந்த சாமி திருக்கோயில் வாசலில் தீபவொளியுண்டாம் பெண்ணே’ என்றும் ‘நானும் ஒரு சித்தன் வந்தேனே, நான் சாகாமல் இருப்பேனே’ என்றும் சித்தானந்தர் கோவிலில் அமர்ந்து எழுதினார்.

1882ம் ஆண்டு பிறந்து 1921ம் ஆண்டு வரை 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த பாரதியாரை 10 ஆண்டு காலம் புதுச்சேரி மண் பாதுகாத்தது. வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை புதுவையில் தான் அந்த தேசியக்கவி வாழ்ந்தார். புதுவை மண்ணை விட்டு பிரிந்த 3 ஆண்டுக்குள் உலகை விட்டே பிரிந்த பாரதியின் நினைவு வாசத்தை குயில் தோப்பு இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

= புதுவையின் பழமை நூலில் இருந்து
    நூல் ஆசிரியர் வை.ரவீந்திரன்



ஆதாம் ஆப்பிளின் மிச்சம்

முன் பின் அறியாத
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது


= வை.ரவீந்திரன் 

Wednesday, 10 December 2014

பறவையின் சுயசரிதை

வானமே எல்லை என
பறக்கும் பறவை
காற்று வெளியின்
முற்றுப் பெறா பக்கங்களில்
எழுதிச் செல்கிறது
தனது சுய சரிதையை...
சிறகுகள் என்னும்
மெல்லிய தூரிகை கொண்டு

= வை.ரவீந்திரன் 


கூத்து முடிந்த கொட்டகை


நதிக் கரையோர நாணல்கள்
நெட்டி முறித்துக் கொள்கின்றன
வௌ்ளம் வடிந்து விட்டாலும்

செவ்வரி பூசிய தண்ணீர்
நீர்ச் சூழலின் மிச்சம் கூறிச் செல்கிறது


கழனிகள் தத்தளிக்கின்றன
நெடுவயல்களில் நதியின்
கால் தடம் பதிந்து கிடக்கிறது
ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம்
கோரிக்கைகளும் அறிக்கைகளும்
 

அச்சில் ஏற பரபரத்து கிடக்கின்றன
வாய்க்கால் தூர்வாருவதில்
லாவணி கச்சேரி கூச்சல்
மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்தது
கூத்து முடிந்து கலைத்த
கீற்றுக் கொட்டகையாய் விளை நிலம்


= வை.ரவீந்திரன் 

Tuesday, 9 December 2014

வார்த்தைகளற்ற கவிதை....

கவிதை சொல் என்றாய்
நீயே கவிதை தானே என்றேன்
உன்னை ஓவியம்
வரையட்டுமா என கேட்டபோது
ஓவியமும் வரைவாயா..? என
விழி விரித்து வியந்தாய்
 

உன் பெயரை எழுதினாலே
ஒரு ஒவியம் தானே என்றேன்
எந்நேரமும் பொய் என
பொய் கோபம் கொண்டாய்


அப்படியே இரு
அழகான ஒரு ஓவியக் கவிதை
தீட்டுகிறேன் என கூறியபடி
உன் முகம் பார்த்தேன்

செல்ல சிணுங்கலுடன் என்
தலையில் தட்டி விட்டு
குதித்தோடிச் சென்றாய்
உன்னைத் தொடர்ந்து
வார்த்தைகளும் ஓடோடிச் சென்றன
எப்படி நான் கவிதை எழுதுவது...?

= வை.ரவீந்திரன் 

Monday, 1 December 2014

அழிந்து போன அளத்தல் அளவைகள்



பள்ளிக்கூட பாடங்களில் மில்லி லிட்டர், லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவை பற்றி படித்திருப்போம். ஆனால் உழக்கு, படி, நாழி, மரக்கால் போன்ற அளவைகள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இவை எல்லாம் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் உபயோகப்படுத்திய அளவை முறை. அப்போதெல்லாம் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இவற்றைக் கொண்டு தான் அளந்தார்கள். இதற்காகவே அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்று 20 வகையான அளத்தல் அளவைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆழாக்கு அரிசிய போட்டு சோறு வடிக்கத் தெரியாதா?’ என்று கிராமங்களில் ஒரு  சொல்வடை உண்டு. அதாவது, ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆழாக்கு அளவு அரிசியை எடுத்து சோறு வடித்தால் போதும் என்பதே அதன் உள் அர்த்தம். இந்த ஆழாக்கு என்பது அளத்தல் அளவையில் ஒரு சிறிய அளவீடு. தோராயமாக 400 கிராம் அளவுக்கு இருக்கும்.

இதே மாதிரி, ‘படி’ என்பது ஆழாக்கை விட கொஞ்சம் பெரிய அளத்தல் கருவி. வயலில் விளைந்த நெல் மணிகளை கதிரடிக்கும் களத்தில் மொத்தமாக குவித்து வைத்து அங்கிருந்து மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்து வருவார்கள். அப்போது மூட்டைகளில் இருந்து நெல்லை அளந்து போடுவதற்கு படி என்ற அளத்தல் கருவியை பயன்படுத்தினர். மேலும், வயலில் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கூலியாக நெல் வழங்கிய காலம், அது. அதனால், படியை வைத்து அளந்தே கூலியை வழங்கினர். இதில் இருந்து தான், ‘படியளத்தல்’ என்ற வார்த்தை தோன்றியது. இப்போதும் கூட, ‘ஏதோ, ஆண்டவன் படியளந்து கொண்டு இருக்கிறான்’ என்ற வார்த்தைகளை சிலர் கூறுவதை கேட்கலாம்.
  
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற அளவை கருவிகள் மிக பிரபலமாக இருந்துள்ளன. கி.பி.10ம் நூற்றாண்டில சோழ பேரரசர் ராஜராஜன் ஆட்சி புரிந்தபோது, நெல் மணிகளை அளப்பதற்கு ‘மரக்கால்’ என்ற அளவை கருவியை அதிகமாக பயன்படுத்தினர். இப்போது உள்ள மில்லி லிட்டர், லிட்டர் அளவை கருவி போலவே உருளை வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு அளவைக்கு ஏற்ப அதன் வடிவமும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காணப்படும்.

மன்னராட்சி காலத்தில், பாசனத்துக்கு ஏரிகளை திறந்து விடும் பணியை கண்காணிக்க, ‘கலிங்கு வாரியம்’ என்ற ஒரு அமைப்பை ஒவ்வொரு ஊரிலும் சோழ மன்னர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வாரியம் முறையாக செயல்பட, அதற்கு பொருளாதார வசதி தேவை. எனவே, வரி வசூல் முறை அமலில் இருந்தது. அதன்படி, வயலில் விளையும் தானியங்களில் 250 மரக்கால் அளவுக்கு நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியத்தை கலிங்கு வாரியத்துக்கு விவசாயிகள் அளந்து வழங்க வேண்டும். அதைக் கொண்டு அந்த வாரியம் செயல்படும். மரக்கால் என்ற கருவியை ‘பக்கா’ என்றும் அழைப்பது உண்டு.

மரக்காலை விட சற்று சிறிய அளவிலான அளவை கருவியின் பெயர் நாழி. பொங்கல் திருநாள் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் நாழி கருவியில் நெல்மணிகளை நிறைத்து வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இதை, ‘நிறை நாழி’ என்று நமது முன்னோர் அழைத்தனர்.


ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கூட விவசாயிகளின் வீடுகளில் பயன்படுத்தி வந்த இந்த கருவிகள் அனைத்தும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சிறிது சிறிதாக காணாமல் போயின. இந்திய விடுதலைக்கு பிறகு அந்த அளவை முறைகளை சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பது போன்ற வார்த்தைகள் அனைத்தும் புத்தகங்களில் தான் இருக்கின்றன. ஒரு சில கிராமங்களில் மட்டும் விசேஷ தினங்களில், ‘நிறை நாழி’யை காண முடிகிறது. அதுவும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ.....?

இதுதவிர, தானியங்களை மொத்தமாக சேகரித்து வைப்பதற்கு அந்த காலத்தில் சரியான வசதிகள் கிடையாது. அதனால், வீடுகளிலேயே பெரிய சைஸ் மண் பானை போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அதன் பெயர், ‘குதிர்’. பெரும்பாலும் நெல் சேமித்து வைக்க பயன்படுத்தியதால், ‘நெல்லு குதிரு’ என்று கிராமங்களில் அதை அழைப்பது உண்டு. பழங்கால முதுமக்கள் தாழி போன்ற வடிவத்தில் ஒரு சராசரி மனிதன் உயரத்துக்கு தோற்றமளிக்கும் ‘குதிர்’ என்ற பெரிய சைஸ் பானையை குக்கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை. 

= வை.ரவீந்திரன்