Thursday, December 11, 2014

பாரதியின் வாழ்வில் புதுச்சேரி

‘உள்ள நிறைவிலோர்
கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? நன்னெஞ்சே,
தெள்ளிய தேனிலோர்
சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? நன்னெஞ்சே?’


சூரத்தில் 1907ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. திலகர், அரவிந்தர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் என புரட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து தனி அணியமைத்தனர். அவர்களின் வேகத்தின் முன்னால் ஆங்கிலேயரால் ஈடு கொடுக்க முடியவில்லை. சென்னையில் ‘இந்தியா‘ பத்திரிகை ஆசிரியராக இருந்த பாரதியின் புரட்சிகரமான கட்டுரைகளால் ஆக்ரோஷமடைந்த ஆங்கிலேயர், பாரதியை கைது செய்ய முடிவு செய்தபோது அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாடுகளுக்கு பதில் செக்கில் பூட்டப்பட்ட வ.உ.சிதம்பரனார், தொழுநோய்க்கு ஆளான சுப்பிரமணிய சிவா போன்றோரின் சிறைக் கொடுமைகளை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்ததால் பாரதியை சென்னையை விட்டு அனுப்ப தீர்மானித்தனர். அப்போது நினைவில் வந்த ஊர், புதுச்சேரி.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்கு அவர்கள் பாரதியை அனுப்பி வைத்தனர். நண்பர்களின் ஏற்பாட்டின்படி, புதுவைக்கு 1908ம் ஆண்டு ரயிலில் வந்திறங்கிய பாரதியின் கையில் குப்புசாமி அய்யங்கார் என்பவருக்கு நண்பர் ஒருவர் எழுதிக் கொடுத்த கடிதம் மட்டுமே இருந்தது. புதுவையில் அவருக்கு யாரையும் தெரியாது. அவரையும் யாருக்கும் தெரியாது. ஏனடா, இந்த புதுச்சேரிக்கு வந்த சோதனை? என அவர் நினைத்தபோது குவளைக் கண்ணன், சுந்தரேச அய்யங்கார் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலமாகவே தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தார்.

சில மாதங்களில் இந்தியா பத்திரிகையின் முதலாளி மண்டையம் ஸ்ரீனிவாச்சாரியும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவர், புதுவையில் படித்தவர் என்பதால் புதுச்சேரி நகரம் அவருக்கு நல்ல பரிச்சயமாக இருந்தது. எனவே,  ‘இந்தியா‘ பத்திரிகையை புதுவையில் தொடங்கினார். அதற்கு பாரதியை ஆசிரியராக நியமித்தார். பின்னர், புரட்சியாளர்களின் அடைக்கல பூமியானது, புதுவை. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், ‘இந்தியா‘ பத்திரிகையை இந்திய பகுதிக்குள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

அதன் பிறகு விஜயா, கர்மயோகி, தருமம், பாலபாரதம், சூரியோதயம் என பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக புதுவையில் பாரதியார் பணியாற்றினார். அத்துடன், சுதேசமித்திரனில் சுதந்திர வேட்கை ஊட்டும் கவிதைகளையும் எழுதினார். தமிழ் பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடும் வழக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர், பாரதியார். அந்த சாதனையை புதுவை மண்ணில் தான் அவர் ஆரம்பித்து வைத்தார். முழுநீள கார்ட்டூன் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், அது கனவாகவே போனது.

கொல்கத்தாவில் இருந்து 1910ம் ஆண்டு புதுவைசெட்டித் தெருவில் தங்கி இருந்த அரவிந்தருக்கு துணையாகவும் இருந்திருக்கிறார். அரவிந்தர் நடத்திய ஆர்யா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். அரவிந்தருக்கு தமிழ் கற்றுத் தந்தவர், பாரதியார். பாரதியாரிடம் தமிழ் பயின்ற அரவிந்தர், பின்னாளில் தமிழில் இருந்து திருக்குறள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பத்திரிகை, தேசப்பணி என இருந்த பாரதியை பாட்டுக்கொரு புலவனாக மாற்றியது, புதுவை மண். அதுவரை பாரதி எழுதி வைத்திருந்த கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சுதேச கீதங்கள் என்ற பெயரில் புத்தகமாக 1908ம் ஆண்டு புதுவையில் வெளியிடப்பட்டது. அதுவே, அவருடைய முதல் புத்தகத் தொகுதி. பின்னர், பாரதியின் கனவு, ஜன்ம பூமி, மாதா மணிவாசகம் என பாரதியின் எழுத்துப் பணி தொடர்ந்தது. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பகவத் கீதை மொழி பெயர்ப்பு என காலத்தால் அழியாத காவியங்கள் அனைத்தும் புதுவை மண்ணில்தான் கருத்தரித்தன. அவற்றை 1912ம் ஆண்டில் பாரதி எழுதினார். பின்னாளில், அவை தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளியாகின.

புதுவையில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், குயில் தோப்பு, மணக்குள விநாயகர் கோவில், உப்பளம் முத்துமாரியம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் ஆலயம் என அவர் பாடித் திரிந்த இடங்கள் ஏராளம். குறிப்பாக, குயில் தோப்பு தான் அவருடைய கவிதை வளத்துக்கு ஆதார சுருதியாக அமைந்தது. ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என பாட வைத்தது, குயில்தோப்பு. ‘சித்தானந்த சாமி திருக்கோயில் வாசலில் தீபவொளியுண்டாம் பெண்ணே’ என்றும் ‘நானும் ஒரு சித்தன் வந்தேனே, நான் சாகாமல் இருப்பேனே’ என்றும் சித்தானந்தர் கோவிலில் அமர்ந்து எழுதினார்.

1882ம் ஆண்டு பிறந்து 1921ம் ஆண்டு வரை 39 வயது வரை மட்டுமே வாழ்ந்த பாரதியாரை 10 ஆண்டு காலம் புதுச்சேரி மண் பாதுகாத்தது. வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை புதுவையில் தான் அந்த தேசியக்கவி வாழ்ந்தார். புதுவை மண்ணை விட்டு பிரிந்த 3 ஆண்டுக்குள் உலகை விட்டே பிரிந்த பாரதியின் நினைவு வாசத்தை குயில் தோப்பு இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

= புதுவையின் பழமை நூலில் இருந்து
    நூல் ஆசிரியர் வை.ரவீந்திரன்Post a Comment